உலகக் கோப்பை வரலாற்றின் இரண்டு மிகப்பெரும் 'சோக்கர்ஸ்' மோதும் போட்டி. உலகக் கோப்பையின் முதல் போட்டி. எதிர்பார்த்ததைப் போலவே 300+ ஸ்கோரும் அடித்து, பெரிய வெற்றியையும் பெற்று உலகக் கோப்பையைத் தொடங்கியிருக்கிறது இங்கிலாந்து. தென்னாப்பிரிக்காவும் எதிர்பார்த்த ஒரு மோசமான பேட்டிங் பெர்ஃபாமன்ஸைக் கொடுத்திருக்கிறது. பரபரப்பும் ஆச்சர்யமும் பெரிதாக இல்லாத போட்டி என்றாலும், ரசிப்பதற்கு நிறையவே விஷயங்கள் இருந்தன. சொல்லப்போனால் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக் கனவை, இரண்டு 'ராயல்' வீரர்கள் முன்நின்று களைத்துள்ளனர். #ENGvSA
பதில் சொல்வதென்பது சாதாரண விஷயம் கிடையாது. ஏனெனில், அந்தப் பதிலானது, கேள்வியைச் சுமக்கும் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கவேண்டும். அவர்களுக்குள் படர்ந்துகிடக்கும் அந்தக் கேள்வியின் கிளைகளை உடைப்பதாகவும் இருக்கவேண்டும்.

அப்படியொரு பதிலை, மிகப்பெரிய மேடையில், முதல் வாய்ப்பிலேயே சொல்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஜோஃப்ரா ஆர்ச்சர் அந்த அசாதாரண செயலைச் செய்திருக்கிறார். நேற்றைய போட்டியில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்று ஏரியாக்களிலும் ஸ்டோக்ஸ் கலக்கினாலும், இங்கிலாந்து வெற்றியில் இவரது பங்கும் சரிபாதி இருக்கிறது!
312 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்குகிறது தென்னாப்பிரிக்கா. பேட்டிங் போகப்போகக் கடினமாகிக்கொண்டிருந்த அந்த ஆடுகளத்தில், தொடக்கத்திலிருந்தே ரன்ரேட்டை சீராக வைத்துக்கொள்ளவேண்டிய தேவை இருந்தது. கொஞ்சம் டைமிங் கிடைத்தாலும் டி காக் வெளுத்துவிடுவார். தன் வழக்கமான அதிரடியால், முதல் 10 ஓவர்களில் நல்ல ஸ்கோர் கொண்டுவந்துவிடுவார். அவரை அடக்கிவைக்கவேண்டும். இல்லை வீழ்த்தவேண்டும். ஆர்ச்சர் - வோக்ஸ் ஜோடி அவரை அடக்கியே வைத்திருந்தது.
சுமார் 145 கிலோமீட்டர் வேகத்தில்தான் ஒவ்வொரு பந்தும் பயணிக்கிறது. அதுவும் ஃபுல் லென்த்தில் பிட்சாகி, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துகள் என்றாலும் பரவாயில்லை, எளிதாக டிரைவ் செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றும் ஷார்ட் லென்த்தில் பிட்சாகி, நெஞ்சுக்கும் மேலே உயரும் பந்துகள். வேகமும் பௌன்ஸும் ஒன்றுகூடி வரும் இடத்தில், 100 சதவிகித பெர்ஃபெக்ஷனோடுதான் அதைக் கையாளவேண்டும். ஆனால், தென்னாப்பிரிக்கா அந்த இடத்தில் சறுக்கியது.
ஒரு மிரட்டல் பௌன்சர் அம்லாவின் ஹெல்மட்டைத் தாக்க, களத்திலிருந்து வெளியேறினார் அந்த சீனியர் பேட்ஸ்மேன். விக்கெட் எடுக்கவில்லை. ஆனால், ஒரு நெருக்கடியை ஏற்படுத்தினார் ஆர்ச்சர். நான்காவது ஓவரிலேயே களத்தில் புதிய பேட்ஸ்மேன். "அம்லா வெளியேறியது ஒருவகையான நெருக்கடியை ஏற்படுத்தியது. எங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை" என்று போட்டிக்குப் பின் கூறினார் தென்னாப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸ்ஸி. உண்மைதான். அந்த அணியின் எந்த திட்டத்தையும் செயல்படுத்த விடவில்லை ஆர்ச்சரும் ஸ்டோக்ஸும்.

ஒரு மிரட்டல் பௌன்சர் அம்லாவின் ஹெல்மட்டைத் தாக்க, களத்திலிருந்து வெளியேறினார் அந்த சீனியர் பேட்ஸ்மேன். விக்கெட் எடுக்கவில்லை. ஆனால், ஒரு நெருக்கடியை ஏற்படுத்தினார் ஆர்ச்சர். நான்காவது ஓவரிலேயே களத்தில் புதிய பேட்ஸ்மேன்.
புதிய பேட்ஸ்மேன் மார்க்ரம். அவருக்கும் அதே பிளான்தான். ஷார்ட் லென்த்தில், உடலை நோக்கி வரும் பௌன்சர்கள்..! ஷார்ட் லென்த்தில் பந்தை பிட்ச் செய்வது விஷயம் அல்ல. எந்த லைனில் வீசப்படுகிறது என்பதும் முக்கியம். ஆஃப் ஸ்டம்புக்கு மிகவும் வெளியே செல்லும் பந்தாக இருந்தால், பந்தை கட் செய்வது எளிதாக இருக்கும். அதேசமயம் தோள்பட்டை அளவு உயரும் பந்தாக இருந்தால் புல் செய்வது எளிதாக இருக்கும். ஆர்ச்சர் இரண்டுக்குமே இடம் தரவில்லை.
பெரும்பாலான பந்துகளை மார்பளவு உயரும் வகையிலேயே வீசினார். அதை அடிப்பதற்கு, பேட்ஸ்மேன்களுக்குப் போதுமான 'விட்த்' கிடைக்கவில்லை. மார்க்ரம் அவுட்டாவதற்கு முந்தைய பந்து (ஓவர் : 7.3) அதுவரை ஆர்ச்சர் வீசாதது. நன்றாக டைமிங் கிடைத்திருக்கும். பௌண்டரி அடித்திருப்பார் மார்க்ரம். ஆனால், அடுத்த பந்தின் வேரியேஷன், அவரது விக்கெட்டை வீழ்த்தியிருக்கும். முந்தைய பந்துக்குக் (அந்தப் படத்தில் மஞ்சள் நிறப் பந்து) கொஞ்சம் பின்னாலேயே நான்காவது பந்தை (வெள்ளை) பிட்ச் செய்திருப்பார். கூடுதல் பௌன்ஸ் வேறு. பௌன்ஸை எதிர்பாராத மார்க்ரம் எட்ஜாகி ஸ்லிப்பில் கேட்சானார்.
இந்த விக்கெட்டைக் கொண்டாடிய இங்கிலாந்து வீரர்களே, அடுத்த ஓவரில் அடுத்த விக்கெட் விழும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். டி காக் - டுப்ளெஸ்ஸி கூட்டணி. தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் இதயம். அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாத கூட்டணியை, 11-வது பந்திலேயே காலி செய்தார் ஆர்ச்சர். ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் தேவைப்படும் நேரத்தில், அணியின் ரன்ரேட் ஐந்துக்கும் குறைவாகச் சென்றுகொண்டிருக்கிறது எனும்போது பேட்ஸ்மேன்களுக்கு அதிக நெருக்கடி ஏற்படும். அதிலும் மிடில் ஆர்டர் சுமாராக இருக்கும் ஒரு அணியின் கேப்டனுக்கு..? சொல்லவே தேவையில்லை. அந்த நெருக்கடியை தன் மீதான பொறுப்பாக தோளில் சுமந்துகொண்டிருந்த டுப்ளெஸிக்கு, ஆர்ச்சரின் ஓவர் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

10-வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஆர்ச்சரைச் சந்திக்கிறார் டுப்ளெஸ்ஸி. மணிக்கு 143 கிலோமீட்டர் வேகத்தில், ஆஃப் ஸ்டம்புக்குக் கொஞ்சம் வெளியே, இடப்பளவு உயர்ந்து வருகிறது. தடுத்தாடுகிறார். அடுத்த பந்து... லைன், லென்த், வேகம் எல்லாம் மாறுகிறது. தென்னாப்பிரிக்காவின் நிலையும், ஆட்டத்தின் போக்கும் மொத்தமாக மாறுகிறது. லெக் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட மிரட்டல் பௌன்சர். புல் செய்ய முற்பட்ட டுப்ளெஸ்ஸி, 149 கிலோமீட்டர் வேகத்தில் ஏமாந்துவிடுகிறார். கொஞ்சம் தாமதமாக அவர் விளையாட, எட்ஜாகி கேட்ச் ஆகிறார். தென்னாப்பிரிக்காவின் கேப்டனையும், வெற்றி வாய்ப்பையும் ஒருசேர பெவிலியனுக்கு அனுப்பியது ஆர்ச்சரின் வேரியேஷன்.
டுப்ளெஸ்ஸியை வீழ்த்திவிட்டு, ரிலாக்ஸாக ஃபீல்டிங் செய்யச் சென்றார். சரியான இடைவெளியில் டி காக், டுமினி, பிரிடோரியஸ் மூவரும் வெளியேற, வெற்றி வாய்ப்பு பிரகாசமானது. ஆனால், ஃபெலுக்வாயோவுடன் ஜோடி சேர்ந்து கண்கட்டி வித்தை காட்டிக்கொண்டிருந்தார் வான் டெர் டூசன். முதல் இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ் காட்டிய ஸ்விட்ச், ரிவர்ஸ், பேடில் வித்தைகளையெல்லாம் அவரும் காட்டி அரைசதத்தை நெருங்க, மீண்டும் ஆர்ச்சரை அழைத்தார் மோர்கன். முதல் நான்கு பந்துகளும் ஓரளவு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேதான் வீசினார். எதுவும் இடுப்புயரத்தைத் தாண்டவில்லை. ஆனால், 4 டாட் பால்கள். மீண்டும் டென்ஷன் கூட, அடுத்த பந்தை அடிக்க ஆயத்தமானார்.
அதுவரை 115, 121, 141, 118 என ஆஃப் கட்டர்களாக வீசிக்கொண்டிருந்த ஆர்ச்சர், மீண்டும் அனைத்தையும் மாற்றினார். 144 கிலோமீட்டர் வேகத்தில் ( பச்சை நிற பந்து) ஒரு முரட்டு பௌன்சர். டுப்ளெஸ்ஸிக்குப் போட்ட திட்டத்தின் ரீப்ளே. அவர் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்சாக, டூசன் மிட் ஆன் ஃபீல்டரிடம் கேட்சாகி வெளியேறினார். இவரோடு வெளியேறியது தென்னாப்பிரிக்காவின் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும். அடுத்த பந்தையும் டாட் பாலாக்கி, 2019 உலகக் கோப்பையின் முதல் மெய்டன் ஓவரை முடித்துச் சென்றார் ஆர்ச்சர்.
இங்கிலாந்து பேட்டிங் செய்தபோது, எந்த தென்னாப்பிரிக்க பௌலரும் தங்களின் லைன், லென்த்தில் அச்சுறத்தவில்லை. ஷார்ட் லென்த், குட் லென்த், ஃபுல் லென்த், ஃபுல் டாஸ் என எல்லா வகையிலும் பந்துவீசினார். அதனால், அவர்களால் எந்த வகையிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை. ஆர்ச்சர் இதில் ரொம்பவும் ஸ்மார்ட். யார்க்கர் வீசுவதில் கில்லாடிதான். ஆனால், ஒரு பந்துகூட யார்க்கர் வீச முயற்சிக்கவில்லை. ஏன், ஃபுல் லென்த் பந்துகள்கூட இல்லை. அவர் வீசிய 42 பந்துகளில் 4 பந்துகள் தவிர எதுவுமே 'குட் லென்த்' தாண்டி பிட்சாகவில்லை. அதில் 29 டாட் பால்கள் வேறு!
உலகக் கோப்பையின் உத்தேச வீரர்களை இங்கிலாந்து அணி அறிவிக்கும் முன்பிருந்தே ஆர்ச்சர் மீது எக்கச்சக்க கேள்விகள் இருந்தன. "மற்ற வீரர்கள் இங்கிலாந்துக்காக இத்தனை வருடங்கள் ஆடியிருக்கும்போது, இப்போது வந்த வீரர் எதற்காக?" என்று சிலர் கேள்வி எழுப்பினர். "நல்ல திறமைசாலிதான். ஆனால் உலகக் கோப்பைக்கான அனுபவம் இருக்குமா?" என்றார்கள் சிலர். "நல்ல டி-20 பிளேயர்தான். ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு?", "உலகக் கோப்பையில் இவரால் என்ன தாக்கம் ஏற்படுத்த முடியும்?" எனப் பல கேள்விகள். சில சமயங்களில், மிகத் திறமையானவர்களால் பல கேள்விகளுக்கும் சேர்ந்து ஒரே பதிலைச் சொல்ல முடியும். ஆர்ச்சர், நேற்று வீசிய 7 ஓவர்களில் மொத்தக் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். தான் யார் என்பதை நிரூபித்துள்ளார்.
இதற்கு மேலும் களத்தில் ஒரு வீரனால் தன் அணிக்குப் பங்காற்றிட முடியாது. ஜேசன் ராய், ரூட், மோர்கன் மூவரும் அரைசதம் கடந்திருந்தாலும், ஸ்டோக்ஸ் ஆடிய இன்னிங்ஸ் இன்னும் அற்புதமானது. இரண்டு விக்கெட்டுகள் அடுத்தடுத்த விழுந்தவுடன். மோர்கனுடன் அவர் அமைத்து கூட்டணி ஆட்டத்தை அவர்கள் பக்கம் எடுத்துச்சென்றது. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தாலே, ஆட்டத்தின் போக்கு திசை மாறத் தொடங்கும். ஆனால், இவர்கள் அதற்கு வழிவிடவில்லை. இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் என பார்ட் டைம் ஸ்பின்னர்களைக் களமிறக்கினார் ஃபாஃப். ஸ்வீப் ஆடிய அவர்களை ஸ்வீப் செய்தார் ஸ்டோக்ஸ்.

உலகக் கோப்பையின் வரலாற்றில், இதுவரை எந்த தொடரிலுமே இரண்டு செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை இங்கிலாந்து அமைத்ததில்லை. ஒரு உலகக் கோப்பைக்கு ஒன்றுதான். நேற்று அந்த சென்டிமென்ட்டையும் உடைத்துத் தள்ளியது அந்தக் கூட்டணி. ரிவர்ஸ் ஸ்வீப், ரிவர்ஸ் பேடில் என்று டி வில்லியர்ஸ் காட்டும் ஆட்டத்தைத் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவே காட்டினார். ஆனால், அதுவே ஓவராகப் போய்தான் வெளியேறவும் நேரிட்டது. கடைசி ஓவர்வரை நின்றிருந்தால் சதமடிக்க முயற்சி செய்திருக்கலாம்.
"இங்கெல்லாம் நல்லா ஆடுறாரு. ஆனால், ஐ.பி.எல்-ல பெர்ஃபார்ம் பண்ண மாட்டேன்றாரே" என இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் புலம்பிக்கொண்டிருக்க, அந்த நெருப்பில் ஆசிட்டையே ஊற்றி ஜோராக எரியவைத்தார் ஸ்டோக்ஸ். மின்னலென ஓடிவந்து, ஒற்றைக் கையில் பந்தை எடுத்து அதே வேகத்தில் த்ரோ செய்து, பிரிடோரியஸை ரன் அவுட் ஆக்கினார். அதன்பிறகுதான் அந்த ஆட்டத்தின் பெஸ்ட் மொமென்ட். ஃபெலுக்வாயா அடித்த பந்தை, தன் இடதுபுறம் ஓடி, பின் நோக்கிக் குதித்து, வலது கையால் பிடித்த அவரது அந்த கேட்ச், நிச்சயம் உலகக் கோப்பை முடியும்வரை பேசப்படும்.
இப்படி பேட்டிங், ஃபீல்டிங் இரண்டிலும் கலக்கியவர், பந்துவீச்சிலும் கடைசியில் கை கொடுத்தார். கடைசி 2 விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து வெளியேற்றி ஆட்டத்தையும் முடித்து வைத்தார். ஒவ்வொரு ஐ.பி.எல் சீசனிலும் இவர் மீது ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு போட்டி சான்று.
104 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமர்க்களமாக உலகக் கோப்பையைத் தொடங்கியிருக்கிறது இங்கிலாந்து. அடுத்த போட்டியில் (திங்கள் கிழமை) அந்த அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா, வங்கதேசத்தை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறது.