Published:Updated:

`ஸ்மித்தின் இன்னிங்ஸ் வேற லெவல்; வீழ்த்துவது சவால்தான்!'- ஜஸ்டின் லாங்கர் புகழாரம்

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஆடியது சிறப்பான இன்னிங்ஸ் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் புகழாரம் சூட்டியுள்ளார். உலகக்கோப்பைத் தொடர் முடிந்த சில நாள்களில் ஆஷஸ் தொடர் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து தற்போது உலகச் சாம்பியன். ஆஷஸ் டெஸ்ட் தற்போது இங்கிலாந்தில் நடந்துவருகிறது. கடந்த ஆண்டு ஸ்மித் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒருவருட தடை முடிந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கிற்குள் 16 மாதங்களுக்குப் பிறகு ஸ்மித் கால்பதித்தார். ஸ்மித் மைதானத்துக்குள் இறங்கும்போதே இங்கிலாந்து ரசிகர்கள் தங்களது வேலையைக் காண்பித்தனர். ஸ்மித் அழுத முகத்துடன் பேட்டி அளித்த மாஸ்கை அணிந்து அவரை சீண்டினர். இத்தனை அழுத்தங்களுக்கு இடையில்தான் ஸ்மித் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசினார். ஸ்மித் அதிரடியால் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஸ்மித்
ஸ்மித்

இந்த மகத்தான வெற்றிக்கு காரணமான ஸ்மித்தை ஆஸ்திரேலிய ரசிகர்கள், சக வீரர்கள் எனப் புகழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேசுகையில்,``விராட் கோலியைப் போன்ற வீரரை நான் பார்த்ததில்லை எனக் கோடைக்காலத்தில் கூறியிருந்தேன். ஆனால், ஸ்மித் இங்கு ஆடியது வேற லெவல் இன்னிங்ஸ். வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு அணிகள் சிறந்த வீரர்களைக் கொண்டிருக்கும். ஸ்மித் போன்ற வீரர் இத்தனை அழுத்தங்களுக்கு இடையில் விளையாடுவது வேற லெவல்தான். தைரியம், நம்பமுடியாத மனவலிமை, நம்பமுடியாத உடல் வலிமை எனச் சிறந்த வீரரின் அனைத்துப் பண்புகளும் அவரிடம் இருக்கிறது.

இந்தத் தொடரில் ஸ்மித்தை வெளியேற்றுவது என்பது இங்கிலாந்து வீரர்களுக்கு கடினமான பணியாக இருக்கும். ஸ்மித் நெட் ப்ராக்டிஸில் ஈடுபடும்போது அவரை வீழ்த்த முடியாத அளவுக்கு விளையாடி வருகிறார். மில்லியன் பந்துகளை அவருக்கு எதிராக வீசியும் விடை தெரியாமல்தான் நிற்கிறோம். இங்கிலாந்து பயிற்சியாளராக இருக்கும் Trevor Bayliss ஸ்மித்தை சிறுவயதில் இருந்தே பார்த்துவருகிறார். ஸ்மித்தை வீழ்த்துவது அவர்களுக்குச் சவாலாகத்தான் இருக்கும். ஸ்மித் சிக்கலை தீர்க்கக்கூடிய வீரராக இருக்கிறார்.

ஆஸ்திரேலியா வீரர்கள்
ஆஸ்திரேலியா வீரர்கள்

ஸ்மித் ஒரு லெக் ஸ்பின்னராகதான் எனக்கு அறிமுகமானார். அதன்பின்னர் தன்னை ஒரு பேட்ஸ்மேனாக உருவாக்கிக்கொண்டார். தற்போது உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவராக உள்ளார். நாங்கள் தற்போது ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். எங்களுக்கு நல்ல கேப்டன் கிடைத்துள்ளார். அவர் மிகச்சிறந்த விக்கெட் கீப்பரும் கூட. இந்தத் தொடரில் மிகவும் கவனம் செலுத்துகிறார். இந்த வாய்ப்பை நாங்கள் நழுவ விட மாட்டோம் அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” எனக் கூறினார்.