Published:Updated:

2016-க்குப் பின்னர் முதல்முறை! - சொந்தமண்ணில் ஸ்மித்துக்கு நேர்ந்த சோகம்

`நிஜமாதான் சொல்றியா' என்று கேட்பார்கள். அதுதான் ஸ்மித். பால் டேம்பரிங் முறைகேட்டில் சிக்கி ஒருவருடம் 'பேட்' பிடிக்காத ஸ்மித், ஐசிசி உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை. ஆனால், ஆஷஸ் தொடரில் விஸ்வரூபம் எடுத்தார்.

ஸ்மித்
ஸ்மித்

ஸ்மித் டக் அவுட். ஆமாம் டக் அவுட்தான். உங்களைப் போலத்தான் என்னாலும் நம்ப முடியவில்லை.`ரெட் பால்' கிரிக்கெட்டின் அசுரன் டக்அவுட் என்றால் யார்தான் நம்புவார்கள். `நிஜமாதான் சொல்றியா' என்று கேட்பார்கள். அதுதான் ஸ்மித். பால் டேம்பரிங் முறைகேட்டில் சிக்கி ஒருவருடம் 'பேட்' பிடிக்காத ஸ்மித், ஐசிசி உலகக்கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை என்றாலும், ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களைப் பிரித்தெடுத்தார். ஸ்மித் ஆடியது 5 இன்னிங்ஸ் 1,594 நிமிடங்கள், 774 ரன்கள் அதில் இரண்டு சதங்கள், ஒரு இரட்டை சதம், மூன்று அரைசதங்கள்.

ஸ்மித் விக்கெட்
ஸ்மித் விக்கெட்

ஆஷஸ் தொடருக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் தொடரான 'ஷெஃபீல்ட் ஷீல்ட்' தொடர் நேற்று தொடங்கியது. ஆறு அணிகள் பங்கேற்கும் அந்தத் தொடரில், ஸ்மித் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். குயின்ஸ்லாந்து அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த குயின்ஸ்லாந்து 153 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆக, நியூ சவுத் வேல்ஸ் ஓப்பனர் வார்னரும், டேனியல் ஹியூஸ் பேட்டிங்கை தொடங்கினர். ஹியூஸ் 6 ரன்னில் வெளியேற, ஸ்மித் களமிறங்கினார்.

ஸ்மித் பேட்டிங் வந்ததும், ஆஷஸ் தொடர்தான் கண்முன் தோன்றியது. ஆஷஸ் தொடரில் களமிறங்கிய முதல் இன்னிங்ஸில் 144 ரன்கள் எடுத்த அவர், தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்தினார். எந்த பந்தை அடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். ஆப்சைடு பந்துகளைத் தொடவே இல்லை. இவர் அடிக்காமல் விட்ட பந்துகூட ரசிக்கும்படி இருந்தது. ஃபோர்த் ஸ்டம்ப் லைனில் வரும் பந்தை தொடவே இல்லை. `தீர்க்கமான மனம்தான் ஸ்மித்தை தனித்துக் காட்டுகிறது' என்று ஆஷஸ் தொடரின்போது சச்சின் ட்வீட் செய்திருந்தார்.

'ஷெஃபீல்ட் ஷீல்ட்
'ஷெஃபீல்ட் ஷீல்ட்

ஆனால், இங்கு கதையே வேறு. இன்றோ, பொறுமையான‌, தீர்க்கமான முடிவுகளை எடுத்த ஸ்மித் இல்லை. சொந்த மண் என்ற தைரியமா என்று தெரியவில்லை. வைட் ஆப்சைடில் கேமரூன் கேனன் வீசிய பந்தை, ஸ்மித் விடவில்லை, பேக்புட் டிரைவ் ஆடினார். அதிர்ஷ்டம் இல்லை ஸ்மித்திற்கு, பந்து எட்ஜ் எடுத்து இரண்டாவது ஸ்லிப் ஜோ ஃபர்ன்ஸிடம் சிக்கியது. ஸ்மித் டக் அவுட். தான் சந்தித்த 5வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார் ஸ்மித்.

இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு பெர்த் மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் டக்-அவுட் ஆகியிருந்தார். இங்கிலாந்து பௌலர்களால் செய்ய முடியாததை கேமரூன் செய்துள்ளார். 123 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித், 40 சதங்கள் உட்பட 11,221 ரன்கள் எடுத்திருக்கிறார். அதிகபட்ச ஸ்கோர் 239. இதில் அவரது சராசரி, 59.05. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வந்த ரசிகர்களுக்கு, ஸ்மித் டக் அவுட் ஆகி வெளியேறியது ஏமாற்றத்தையே கொடுத்தது. ஸ்மித்தின் பேட்டிங்கைக் காண ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். ஆஷஸ் தொடரில் ஜொலிக்காத வார்னர், இந்தப் போட்டியில் சதமடித்து ஃபார்முக்குத் திரும்பினார். உள்ளூர் தொடரில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பருக்குப் பின்னர் வார்னர் அடிக்கும் முதல் சதம் இதுவாகும்.