Published:Updated:

25 சதங்கள்... `வெறித்தனம்' காட்டும் ஸ்மித்.... கோலிக்கு கிடைத்த `போட்டியாளன்'!

ராம் பிரசாத்

‘ஆஷஸ்’தொடருக்கு ஒரு நூற்றாண்டு பாரம்பர்யம் இருக்கிறது. இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதும் இந்த தொடர் குறித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித்... ஒரு ஃபீனிக்ஸ் பறவையை போல எழுந்து வருகிறார். இந்த ஆஷஸ் தொடரில் தனது கிரிக்கெட்டை மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறார். பந்து சேதப்படுத்திய புகாரில் ஸ்மித்-க்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. ஸ்மித் கண்ணீருடன் செய்தியாளர்களை சந்தித்தது இன்றும் நிழலாடுகிறது. ‘இது எனது தவறு அதனால் ஏற்பட்ட சேதத்தை ஈடுசெய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ என அந்த சந்திப்பில் பேசினார். தடைக்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகளில் ஸ்மித் பெரிய ஃபார்மில் இல்லை. ஆனாலும் உலகக்கோப்பை தொடரில் பயிற்சி ஆட்டத்தில் சதமடித்து தனது ஃபார்மை நிருபித்தார். உலகக்கோப்பை தொடரில் தன்னால் முடிந்த பங்களிப்பை அளித்தார்.

ஸ்மித்
ஸ்மித்

தற்போது ஆஷஸ் தொடரிலும் பங்கேற்றுள்ளார். ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. ஸ்லெட்ஜிங் செய்வதில் ஆஸ்திரேலியர்களுக்கு எந்த அளவிலும் குறைந்தவர்கள் இல்லை இங்கிலாந்துக்காரர்கள். உலகக்கோப்பை தொடரிலே ஸ்மித், வார்னரை வறுத்து எடுத்தனர். ஆஷஸ் தொடரில் சொல்லவா வேண்டும். ஆஷஸ் தொடர் பிர்மிங்காம்மில் உள்ள எட்பக்ஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டை தாரை வார்த்தனர்.

ஸ்மித் களமிறங்கிய போது இங்கிலாந்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஸ்மித மன்னிப்பு கோரும்போது அழுத முகத்தை முகமூடியாக அணிந்து வந்திருந்த இங்கிலாந்து ரசிகர்கள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தினர். ஆனாலும் மனம் தளரவில்லை ஸ்மித்... அந்த ப்ரஸ் மீட்டில் தான் சொன்னதை இந்த இன்னிங்ஸில் செய்து காட்டினர். 122 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்த ஆஸ்திரேலியாவை 284 ரன்களுக்கு அழைத்து சென்றார். பீட்டர் சிடிலுடன் சேர்ந்து 88 ரன்கள் பார்ட்னர்ஷிப், லயனுடன் சேர்ந்து 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மிரட்டிய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார்.

ஸ்மித்
ஸ்மித்

இரண்டாவது இன்னிங்ஸில் வார்னர், பான்கிராப்ட் விரைவிலே வெளியேற உஷ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், வெயிட் ஆகியோருடன் இணைந்து அற்புதமான இன்னிங்ஸை ஆடினார். இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த ஸ்மித் 142 ரன்களுக்கு அவுட்டானர். இது அவரது 25 வது டெஸ்ட் சதமாக அமைந்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 25 சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஸ்மித் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவர் 119 இன்னிங்ஸில் இதனை நிகழ்த்தியுள்ளார்.

முதல் இடத்தில் அரியணை போட்டு அமர்ந்திருப்பவர் டான் பிராட்மேன். அவர் 66 இன்னிங்ஸில் 25 சதங்களை விளாசியுள்ளார். இந்தப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் கோலி உள்ளார். கோலி 127-வது இன்னிங்ஸில் இதனை செய்துள்ளார். இதன்மூலம் கோலியின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.

ஸ்மித்
ஸ்மித்

அதற்குள் ரசிகர்கள் கோலியா- ஸ்மித் இதில் யார் பெரியவர்கள் என மல்லுக்கட்டத் தொடங்கிவிட்டனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராபர்ட் கீ தான் இந்த சண்டையை தொடங்கி வைத்தார். ‘இது அதிகாரப்பூர்வமானது. கோஹ்லியை விட ஸ்டீவ் ஸ்மித் சிறந்தவர்’ என ட்வீட் செய்தார். போட்டி இங்கிலாந்துக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் ராபர்ட் ஏன் விராட்டை சீண்டினார் என தெரியவில்லை. ஸ்மித் தனது கடினமான காலங்களில் இருந்து மீண்டு வந்துள்ளார். சம பலமிக்க எதிராளி இருந்தால் தானே சண்டை செய்ய நல்லாயிருக்கும். ஆம்... இனி போட்டி போட கோலிக்கு சரியான போட்டியாளர் கிடைத்துள்ளார்.