Published:Updated:

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் நூதனப் போராட்டம்... 'அன்ஃபாலோ' ட்ரெண்டின் பின்னணி என்ன?

இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை கிரிக்கெட் அணி ( AP )

இந்த வருடம் அரபு நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் நேரடியாக விளையாட இலங்கை அணி தகுதிபெறவில்லை. தகுதிச் சுற்றில் ஓமன், அயர்லாந்து போன்ற அணிகளுடன் மோத வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற கத்துக்குட்டி அணிகளெல்லாம், கற்றத்தேர்ந்த அணிகளாக மாற முயன்றுக் கொண்டிருக்க, மிகப்பெரிய ஆளுமைகள் கட்டியாண்ட இலங்கை கிரிக்கெட், இன்று இலக்கின்றி தத்தளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் விளைவாக, தங்களது எதிர்ப்பைப் பதிவிட, சரியாக விளையாடாத வீரர்களின் சமூக ஊடகக் கணக்குகளை அன்ஃபாலோ செய்யும் ஒரு புதுமையான போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர் இலங்கை ரசிகர்கள்.

கிரிக்கெட் போர்டின் தவறான அணுகுமுறை, அதற்குள் நிலவும் அரசியல், வீரர்களுக்கும் போர்டுக்குமான சம்பளப் பிரச்னைகள், வீரர்கள் தேர்வில் குழப்பம், அதிகமான புதிய வீரர்கள் வருகையால், ஒரு கோர் அணியாக உருவாவதில் இருக்கும் சிக்கல்கள் - இவையெல்லாம் எப்போதாவது, ஏதாவது ஒரு நாடு, கிரிக்கெட்டில் சந்திக்கும் பிரச்னைதான். ஆனால், இவை எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் பல ஆண்டுகளாக இலங்கை சந்தித்து வருவதுதான் வேதனையான உண்மை.

1990-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில், ஒரு சராசரி அணியாக இருந்த இலங்கை அணி, ரணதுங்கா, அரவிந்தா டி சில்வா, முரளிதரன், சங்ககாரா, ஜெயவர்தனே என மிகச்சிறந்த வீரர்களின் வருகையால் மகாபலம் பொருந்தியதாக மாறத் தொடங்கியது. போட்டிகளை, தொடர்களை, பின் கோப்பைகளை என வெற்றி மேல் வெற்றியைக் குவிக்கத் தொடங்கியது. 1996-ல் வென்ற உலகக் கோப்பை, சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் அவர்களை மேலே உயர்த்தியது. இன்னும் சொல்லப் போனால், கிரிக்கெட் இலங்கைக்கான முக்கிய அடையாளமாக மாறியது.

இலங்கை vs இங்கிலாந்து தொடர்
இலங்கை vs இங்கிலாந்து தொடர்
twitter.com/ICC

2002 சாம்பியன்ஸ் டிராபிக்கான இணை சாம்பியன்களான பின், பலமுறை, ஐசிசி நடத்தும் தொடர்களில், இறுதிப் போட்டிக்கோ, குறைந்தபட்சம் அரையிறுதிக்கோ, காலிறுதிக்கோ முன்னேறுவதென சிறப்பாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது இலங்கை. அதன் உச்சகட்டமாக, 2014-ல் டி20 உலகக் கோப்பையை இந்தியாவை வீழ்த்தி வென்றது. ஆனால், அந்த உச்சத்திற்குப் பிறகு, கிடுகிடுவென பள்ளத்தில் சரிந்து விழுந்திருக்கிறது இலங்கை கிரிக்கெட்.

இந்த வருடம் அரபு நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12-ல் விளையாட, தகுதிச் சுற்றில் ஓமன், அயர்லாந்து போன்ற அணிகளுடன் மோத வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது இலங்கை.
இதற்கு முக்கிய காரணம், தாங்கிப் பிடித்த தூண்களாக இருந்த சங்ககரா உள்ளிட்ட சகாப்தங்கள், ஒருவரின் பின் ஒருவராக விடைபெற்றதுதான். இதன்பிறகு, 2016 டி20 உலகக் கோப்பையிலாகட்டும், 2019 உலகக் கோப்பை ஆகட்டும், குரூப் ஸ்டேஜோடே விடைபெற்றது இலங்கை. சாம்பியன்கள், ரன்னர் அப் என்பதெல்லாம் பழங்கதை என்பது போல் ஆகி விட்டது அவர்களது நிலை.

எந்த ஓர் அணியாக இருந்தாலும், சீனியர் வீரர்கள் ஒட்டுமொத்தமாக விடைபெறும் போது, ஒரு வெற்றிடம் உருவாகத்தான் செய்யும். அதனை எப்படி அந்த அணி கடந்து வந்து, அடுத்த தலைமுறை வீரர்களைக் கண்டறிந்து அணியைக் கட்டமைக்கிறது என்பதில்தான், ஓர் அணியின் வெற்றியே அடங்கி இருக்கிறது. இதனை முழுமையாகச் செய்யத் தவறிவிட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம். விளைவு, ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் கோலோச்சிய இலங்கை, தற்போது மூன்று ஃபார்மேட்களிலும், தரவரிசைப் பட்டியலில் 8, 9 இடங்களில் தரைதொட்டு, ரசிகர்களின் ஆசைகளைத் தரைமட்டமாக்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை கிரிக்கெட் அணி
AP
இதற்கு பல காரணங்கள் இருப்பினும், பிரச்னையின் ஆணிவேர், இலங்கை கிரிக்கெட் வாரியம்தான். உள்ளூர் கிரிக்கெட் அமைப்பை இலங்கை 2016-ல் மாற்றியதில் தொடங்கியது குழப்பம். 10 ஆக இருந்த உள்ளூர் அணிகளின் எண்ணிக்கையை 24 ஆக உயர்த்தியது. இதன் மூலமாக, போட்டி மனப்பான்மை அதிகரிக்கும், நிறைய திறமைசாலிகள் வெளிவருவார்கள் என எண்ணியது இலங்கை. ஆனால், இங்கேயும் தவறுகள் நடந்தன.

லோக்கல் பிட்சில் நடைபெறும் போட்டிகளில் வென்றால் போதும் என்ற எண்ணத்தோடு, ஸ்பின்னர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தன உள்ளூர் அணிகள். விளைவு, மலிங்கா போன்ற உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு பெளலர்களை உருவாக்கிய அந்த அணியின் வசம், தற்போது ஒரு திறன் மிகுந்த வேகப்பந்து வீச்சாளர்கூட இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கெதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய துஷ்மந்தா ஷமீராவைத் தவிர, தொடரின் டாப் 6 பௌலர்களில் யாருமே இடம்பெறவில்லை. இலங்கை பௌலர்களது எக்கானமியும் 6-க்கும் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக, உடானா 9.17 எக்கானமியோடு மோசமாக வீசியிருந்தார். மூன்று டி20-க்கும் சேர்த்தே, 13 இங்கிலாந்து விக்கெட்டுகளை மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது.

உண்மையில் இந்திய ஐபிஎல் தொடரை ஆரம்பித்த அதே நோக்கத்திற்காகத்தான் லங்கா பிரீமியர் லீகையும் இலங்கை தொடங்கியது. ஆனால், அதிலும் எதற்காகத் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கம் முழுவதுமாக நிறைவேறவில்லை.

அடுத்ததாக, இலங்கை கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்த அதே தவற்றை செய்து வருகிறது. அதுதான் கேப்டன்களை மாற்றிக் கொண்டே இருப்பது! கடந்த ஆறு வருடத்தில், ஒன்பது கேப்டன்களை மாற்றியிருக்கின்றனர். ஒவ்வொரு கேப்டனும், அணியை தனது போக்கிற்கேற்றாற் போல் மாற்ற, இதுவே அணியில் ஒரு நிலையற்றதன்மையைக் கொண்டு வந்துவிட்டது.

கேப்டன்களுக்குத்தான் இந்நிலையென்றால், வீரர்களின் நிலை இன்னமும் பரிதாபம். வீரர்களின் திறமையை வெளிக்கொணர போதுமான வாய்ப்பும், ஆதரவும் வழங்கப்படுவதில்லை. அதை மீறி, ஒரு வீரர் தன் சொந்தத் திறமையால் ஜொலித்தாலும், அவருக்குரிய அங்கீகாரமும் கிடைப்பதில்லை.

இலங்கை vs இங்கிலாந்து தொடர்
இலங்கை vs இங்கிலாந்து தொடர்
AP

இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன், 24 வீரர்களின் சம்பள ஒப்பந்த விஷயத்திலும் இலங்கை கிரிக்கெட் வாரியம் பிரச்னையை உருவாக்கியது. இதன் அடிப்படையில், பல வீரர்களின் சம்பளத்தில் 40 சதவிகிதத்திற்கு மேல் குறைக்கப்படும் என்பதும் வீரர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுவோம் என இலங்கை வீரர்கள் மிரட்ட, ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால், மூன்று வருடம் தடை விதிக்கப்படும் என மிரட்டிப் பணிய வைக்க முயன்றது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட இரண்டு நாள்களிலேயே, சமிந்தா வாஸ் சம்பளக் காரணங்களுக்காகத்தான் பொறுப்பிலிருந்து விலகினார். ஏற்கெனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்த மோதல் போக்கு, அவர்களது அணுகுமுறை பற்றிய அதிருப்தியால்தான், சங்ககரா உள்ளிட்ட வீரர்கள்கூட இலங்கை அணியோடு பணியாற்ற தயக்கம் காட்டுகிறார்கள். டாம் மூடி உள்ளிட்ட வெளிநாட்டு பயிற்சியாளர்களுக்கு அள்ளிக் கொடுக்கத் தயாராக இருக்கும் கிரிக்கெட் வாரியம், விளையாடும் வீரர்களுக்குத் தர வேண்டிய நியாயமான சம்பளத்தைக் கூடத் தர மறுப்பதும், அவர்களிடையே கடும் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த எல்லா காரணங்களும் சேர்ந்துதான், இலங்கை அணியின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. இலங்கையின் பிரமிப்பு ஏற்படுத்தும் ஆட்டத்தைப் பார்த்து ஒருகாலத்தில் ரசித்த மற்ற நாட்டு ரசிகர்கள் கூட, அதன் தற்போதைய நிலைகண்டு வருத்தப்படுகிறார்கள். ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியம், இன்னமும் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகிறது.

வீரர்கள் தேர்வு, சரியான தலைமை, முறையான பயிற்சி, அணியை ஒருங்கமைத்தல், பலவீனங்களைக் கண்டறிந்து அதைக் களைந்தறியும் வழிதேடல் என எதையுமே சரியான வகையில் செய்யத் தவறிக் கொண்டே இருக்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

இதன் பலனாக, 2018-ல் இருந்து விளையாடிய பத்து டி20 தொடர்களில், ஒன்றே ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது இலங்கை. தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் 3-0 என இழந்துள்ளது இலங்கை. இது அவர்களது தொடர்ச்சியான ஐந்தாவது டி20 தொடர் தோல்வி. அதுவும் குஸால் பெரேரா, முழுநேர ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனான பின் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில், இலங்கை தோல்வியைத் தழுவியிருந்தது. இது ரசிகர்களின் மனதை, வேதனையில் ஆழ்த்தியிருந்தது.

இலங்கை vs இங்கிலாந்து தொடர்
இலங்கை vs இங்கிலாந்து தொடர்
AP
இந்தச் சமயத்தில், அடுத்துவரும் உலகக் கோப்பை தொடர்களை, மனதில் வைத்து, இளம் வீரர்களைக் கண்டறிகிறேன் என்னும் டாம் மூடியின் முடிவினால், இங்கிலாந்துடன் 3-0 என்னும் தோல்வியை இலங்கை பெற்றுள்ளது. இது, ரசிகர்களை கோபத்தின் எல்லைக்கே எடுத்துச் சென்றுள்ளது.

ஏனெனில், 2016-க்குப் பின் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாகத்தான் இருந்து வருகிறது. 18 ஒருநாள் தொடர்களில் இந்தக் கால கட்டத்தில் ஆடியுள்ள இலங்கை, அதில் ஐந்தில் மட்டுமே வென்று, ஒன்றை டையாக்கி இருந்தது. அந்த ஐந்தில், ஸ்காட்லாந்து, அயர்லாந்துக்கு எதிரான இரண்டு தொடர்களும் அடக்கம். அதையும் தாண்டி, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் ஒரு போட்டியைக் கூட வெல்லாமல் வாஷ் அவுட் ஆனதும் அதிகம். இதே காலகட்டத்தில், டெஸ்ட்டிலும் விளையாடிய 22 தொடர்களில், எட்டில் மட்டுமே வெற்றி பெற்று, நான்கில் டிரா செய்திருக்கிறது.

நிவேதன் ராதாகிருஷ்ணன் எனும் 'Ambidextrous' ஸ்பின்னர்… தமிழனை அடையாளம் கண்ட ரிக்கி பான்ட்டிங்!

இந்தத் தோல்விகளை எல்லாம் இளம் வீரர்கள் அனுபவத்தில் முதிர்ந்த வீரர்களாக மாறுவதற்கான காலகட்டமாகத்தான், இலங்கை ரசிகர்கள் முதலில் எடுத்துக் கொண்டனர், அதனை ஏற்றும் கொண்டனர். ஆனால், ஐந்து ஆண்டுகள் முடிந்தும், இன்னமும் அது தொடர்கதையாக மாறி, முன்பிலும் மோசமானதாக அணியின் செயல்பாடு இருப்பதால், சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய குமுறல், இப்போது சத்தமாகவே கேட்கத் தொடங்கியுள்ளது‌.

இலங்கை vs இங்கிலாந்து தொடர்
இலங்கை vs இங்கிலாந்து தொடர்
AP

இங்கிலாந்துக்கு எதிரான 3-0 தோல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதன் காரணமாக தங்களது கடுமையான எதிர்ப்பையும், கோபத்தையும் பதிவு செய்யும் விதமாக போட்டியில் மோசமாக விளையாடிய குஸால் மென்டிஸ், தனுஷ்கா குணதிலகா உள்ளிட்ட இலங்கை வீரர்களுடைய ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளை அன்ஃபாலோ செய்யத் தொடங்கியுள்ளனர். 'அன்ஃபாலோ கிரிக்கெட்டர்ஸ்' என்னும் ஹேஷ்டேகின் வாயிலாக, அக்கருத்தை பரவச் செய்து, மௌன யுத்தத்தைச் சத்தமில்லாது அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த வித்தியாசமான அமைதிப் போராட்டம், வீரர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு எதிரானதும்தான். தற்போதாவது விழித்துக் கொண்டு, வாரியம், விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால், அது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடுமென்பதே நிதர்சனம். அந்த வகையில், அடுத்து வர இருக்கும், இங்கிலாந்து இந்தியா உடனான ஒருநாள் தொடர்களும், இலங்கைக்கான அக்னிப் பரிட்சையாகத்தான் இருக்கப் போகிறது.
அடுத்த கட்டுரைக்கு