இலங்கைக்குச் சாதகமாக டாஸ் முடிய, ஆகச்சிறந்த பேட்டிங் பிட்ச் என்பதால், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் இலங்கை கேப்டன் ஷனகா. எந்த மாற்றமுமின்றி இந்தியா களமிறங்க, இலங்கையோ உடானாவின் இடத்தில், ரஜிதாவைச் சேர்ந்திருந்தது.
ஓப்பனர்களாக இறங்கினர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் மினோட்டும். போன போட்டியைப் போலவே, நிதானமான, வலுவான அடித்தளம் அமைக்கத் தொடங்கியது இந்த இருவரணி. டெய்ல் எண்டர்களை முடிக்கத் திணறும் இந்திய பௌலர்கள், சமீபகாலமாக, பவர் பிளே ஓவர்களில், விக்கெட்டுகளை வீழ்த்தத் திணறுகின்றனர். கூடுதலாக, மைதானமும் பெரிதாக வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை. அதையும் மீறி விக்கெட் வீழ்த்தக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளை, இரண்டு முறையுமே கேட்சைத் தவறவிட்டு, மனீஷ் கோட்டை விட்டார்.
சஹாரைப் பார்த்தாலே அடிப்போம் என்பதைப் போல், அவரை நையப் புடைத்தது இக்கூட்டணி. 8-வது ஓவரிலேயே, 'சுழலோடு தொடரலாம்' என சாஹலைக் கொண்டு வந்து, ஓப்பனர்களை அனுப்ப முயன்றார் தவான். அங்கொன்றும் இங்கொன்றுமாக பவுண்டரிகளினால் ரன்களைச் சேர்த்துக் கொண்ட இக்கூட்டணி, ரிஸ்க் எடுத்தெல்லாம் ஆடவில்லை, அதற்கு அவசியமுமில்லை. உதிரிகளிலேயே, ஒன்பது ரன்களைக் கொடுத்து, கட்டுக்கோப்பாக, பந்து வீசத் தவறியது இந்தியா. பவர்பிளேயில், 59 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்திருந்தது, இலங்கை.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஒரு விக்கெட்டுக்காக தவியாய்த் தவித்த இந்தியாவுக்கு, போன போட்டியில் குல்தீப் செய்ததைப் போல, ஒரே ஓவரில், மாற்றத்தைக் கொண்டு வந்தார் சஹால். போட்டியின் 14-வது ஓவரில், தான் வீசிய இரண்டே பந்துகளில், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நன்றாக செட்டில் ஆகி அரைசதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த மினோட் முதலில் தனது விக்கெட்டை தாரைவார்த்து வெளியேற, அதற்கடுத்த பந்திலேயே, பனுகா ராஜபக்ஷவை, ஒரு அற்புதமான டாப் ஸ்பின்னால் வந்த வேகத்தில், காலி செய்தார் சஹால்.
இதன்பிறகு இணைந்தது ஃபெர்னாண்டோ - தனஞ்செயா கூட்டணி. மத்திய ஓவர்களுக்குரிய இலக்கணம் மாறாமல், நிதானமாக ரன்களைக் குவித்து, விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் ஆடியது. எனினும் அவர்களது அளவுக்கு அதிகமான டிஃபென்ஸிவ் அணுகுமுறையால், ரன்களே ஏறவில்லை. 70 பந்துகளில், அரைசதம் அடித்தார், ஃபெர்னாண்டோ. 69 பந்துகள் தாக்குப்பிடித்த இக்கூட்டணி, 47 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅரைசதம் அடித்த உற்சாகத்தில், புவனேஷ்வர் வீசிய பந்தை, ஃபெர்னாண்டோ புல் ஷாட் ஆட முயல, பந்து டாப் எட்ஜாக, அதனை மிட்விக்கெட்டில் நின்று கேட்ச் ஆக்கினார் க்ருணால். தனஞ்செயாவும் வெகுநேரம் நீடிக்கவில்லை. இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்த சஹார், அருமையான ஒரு நக்குல் பாலினால், தனஞ்செயாவை ஆட்டமிழக்கச் செய்தார். 32 ரன்களோடு வெளியேறினார், தனஞ்செயா.
கிட்டத்தட்ட பாதி ஓவர்களே வீசப்பட்ட நிலையில், போட்டியின் மிச்சக் கரையைக் கடக்கும் பொறுப்பு, கேப்டன் ஷனகா மற்றும் அசலங்காவின் தோளில் விழ, எட்டு ஓவர்கள் இணைந்திருந்த இருவரும், 38 ரன்களைச் சேர்த்தனர். இதன்பிறகு, ஷனகா மற்றும் ஹசரங்காவினை, முறையே, சஹால் மற்றும் சஹார் வெளியேற்ற, 11 ஓவர்கள் மிச்சமிருந்த நிலையில், 194 ரன்களைச் சேர்த்திருந்தது, இலங்கை.
ஒருபுறம், கருணரத்னே போன போட்டியில், விட்டதில் இருந்து தொடர்வதைப் போல், கவனத்தோடு ரன்களைச் சேர்க்க ஆரம்பித்தார். இன்னொருபக்கம் அரைசதம் கடந்த அசலங்காவின் பொறுப்பான ஆட்டம் தொடர்ந்தது. போன போட்டியைப் போல, டெத் ஓவர்களில், இலங்கை ரன்களைக் குவித்து விடுமோ என்ற எண்ணம் எழ, புவனேஷ்வர், ஒரு ஆஃப் கட்டரை வீசி, அசலங்காவினை வெளியேற்றினார்.

புவனேஷ்வர் வீசிய இறுதி ஓவரிலும், இன்னொரு ஸ்லோ பாலினால், சமீராவின் விக்கெட் விழ, இஷான் செய்த அதிவேக ரன்அவுட்டால், சண்டகன் வெளியேறினார். எனினும், கடைசிவரை ஆட்டமிழக்காமல், 33 பந்துகளில், 44 ரன்களைச் சேர்த்த கருணரத்னேயால், 275 ரன்களைக் குவித்தது இலங்கை.
இரண்டு பேட்ஸ்மேன்கள் அரைசதமடிக்க, மேலும் மூன்று பேட்ஸ்மேன்கள், 30+ ஸ்கோரைச் சேர்ந்திருக்க, 275 ரன்களோடு முடித்தது இலங்கை. இந்தியாவோ, 2019-க்கு பிறகு, பவர்பிளே ஓவர்களில், விக்கெட் எடுக்கத் தவறுவதையும், டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதையும், பகுதி நேர வேலையாகச் செய்து வருகிறது.
287 ரன்களை இதற்கு முன்னதாக இந்தியாவே இங்கே வெற்றிகரமாக சேஸ் செய்துள்ளதால், அதையே இன்றும் இந்தியா நிகழ்த்திக் காட்டி, பதிலடி கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு, தொடங்கியது போட்டியின் இரண்டாவது பாதி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஓப்பனர்கள் ப்ரித்வியும், தவானும் முதல் இரு ஓவர்களில், தலா மூன்று பவுண்டரிகளை அடித்து நொறுக்கி படையெடுப்பைத் தொடங்கினர். சுதாரித்த ஷனகா, ப்ரித்வியின் பலவீனமான ஸ்பின்னைக் கொண்டுவர முடிவு செய்து, ஹசரங்காவை மூன்றாவது ஓவரிலேயே இறக்கினார். எதிர்பார்த்தது உடனே நடந்தது. போன போட்டியைப் போலவே, ப்ரித்வி ஷா விஷயத்தில், சுழல்பந்து, தனது காரியத்தை பக்குவமாய்ச் செய்தது. இஷான் உள்ளே வந்தார்.
கடந்த போட்டியில் அடக்கி வாசித்த தவான், இம்முறை போட்டியை, தன் கையில் எடுத்துக் கொண்டு, அடித்தாடிக் கொண்டிருக்க, பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷானோ, நான்காவது பந்திலேயே போல்டாகி வெளியேறினார். டி20 ஆடும் அணுகுமுறையோடே, ப்ரித்வியும், இஷானும் ஆடுவது எல்லாப் போட்டிகளிலும் கைகொடுக்காது என்னும் உண்மையை உரக்கச் சொன்னது போல இருந்தது அவர்களது விக்கெட்டுகள். ஃபியர்லெஸ் கிரிக்கெட் ஆடலாம். ஆனால், கேர்லெஸ் கிரிக்கெட் கூடவே கூடாது என்பதை இந்தியா புரிந்து கொண்டாலும், அதற்கு விலையாக, இரண்டு விக்கெட்டுகளை, ஐந்தே ஓவர்களுக்குள் பறிகொடுத்திருந்தது.

தவான் - மனீஷ் கூட்டணி, விக்கெட்டுக்கு மட்டுமே முன்னுரிமை, ரன்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஆமை வேகத்தில் ஆடத் தொடங்க, பவர்பிளே முடிவில், 60 ரன்கள் வந்திருந்தது. எனினும், ஹசரங்கா மற்றும் சண்டகனைக் கொண்டு இருபுறமும் ஷனகா தாக்குதலைத் தொடங்க, அதில் முதலில் சிக்கியது தவான். ஸ்டம்ப் லைனில், துல்லியமாக வீசப்பட்ட பந்தை, தடுத்தாட முயன்ற தவான் எல்பிடபிள்யூவில் வெளியேற, 12 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை இந்தியாவின் மீது அழுத்தத்தை ஏற்றியது.
அந்த கனத்தை சற்றே குறைக்க முயன்றது, மனீஷ் - சூர்யக்குமார் கூட்டணி. ஏபிடி வில்லியர்ஸின் பிரதி பிம்பமாக சூர்யக்குமார் ஆடத் தொடங்க, மனீஷும் போன போட்டியைப்போல, பந்துகளை வீணடிக்காமல் தனது ஆட்டத்தின் வேகத்தை சற்றே கூட்டினார். நீடித்தது 32 பந்துகளேதான் என்றாலும், 50 ரன்களைக் குவித்த இந்த பார்ட்னர்ஷிப், இந்திய ரசிகர்களை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவியது. குறிப்பாக, சூர்யகுமாரின் ஒவ்வொரு ஷாட்டும், மிகச் சிறப்பாக இருந்தது.
இப்படியே நகர்ந்தால், வெற்றி எட்டக்கூடியது என நினைத்த இந்தியத் தரப்பின் ஆசைக்கு அணை கட்ட, ஷனகா கேப்டன் ஸ்பெல்லை வீசினார். ஒரே ஓவரில், அடுத்தடுத்த விக்கெட்டுகளாக, செட்டில் ஆன மனீஷ் மற்றும் ஆபத்தான ஹர்திக் பாண்டியாவையும் வெளியேற்றினார்.
ஐந்து விக்கெட்டை இழந்திருந்தாலும், அச்சமயம் கூட, 32 ஓவர்களில், 160 ரன்கள் தேவை என இந்தியாவுக்கு நெருங்கி விடக் கூடியதாகவே இருக்க, சூர்யக்குமாரும், க்ருணால் பாண்டியாவும் இணைந்து, பொறுப்பாக ஆடினர். ஒன்பது ஓவர்களில் 44 ரன்களைச் சேர்த்த இந்தக் கூட்டணிதான், இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக இருக்க, சூர்யக்குமாரின் விக்கெட்டை வீழ்த்திய சண்டகன், இலங்கையின் பக்கம் போட்டியை மறுபடி திசை திருப்பினார்.

அடுத்து இணைந்த க்ருணாலும் - சஹாரும் விடுவதாக இல்லை. 9 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்து ஆடிய இந்தக் கூட்டணியை, க்ருணாலின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், ஹசரங்கா முறிக்க, இலங்கையின் வெற்றி ஏறத்தாழ உறுதி ஆனதாக, 'கேம் ஓவர்' என்று ஆனந்தக் கூத்தாடியது இலங்கை.
ஆனால், அது இந்தியாவின் தோல்வியின் தொடக்கப்புள்ளி அல்ல, வெற்றியின் ஆரம்பம். பத்து ஓவர்களில், 67 ரன்கள் தேவை என வந்து நின்றது போட்டி. எட்டக்கூடிய ஸ்கோர்தான் எனினும், விக்கெட்கள் இல்லை இந்தியாவின் வசம். எப்படி நகரப் போகிறது தொடரும் ஓவர்கள் என நினைக்கையில், கொஞ்சமும் தளராமல் ஆடத் தொடங்கினர், சஹாரும், புவனேஷ்வரும். 'எதுவும் முடிந்து விடவில்லை' என சொல்லாமல் சொன்னது, அவர்களது அணுகுமுறை.
இலங்கையும் விட்டுத் தருவதாக இவ்லை, இவர்களும் விடுவதாக இல்லை. குறிப்பாக, சஹார்ர், இமாலயப் பொறுமையோடு ஆடி, அரைசதம் கடந்ததோடு, இலங்கைக்கு நெருக்கடி தந்து கொண்டே இருந்தார்.
இறுதியாக, 5 ஓவர்களில், 31 ரன்கள்தான் தேவை என்றாலும், ஒரு விக்கெட் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்றும் என்பதால், பதற்றம் அதிகரிக்க, எந்தப் பக்கமும் திரும்பும் நிலையிலேயே போட்டி இருந்தது. ஹசரங்கா இரண்டு ரன்களைத் தந்து, இந்தியாவை இக்கட்டுக்கு நகர்த்த, அடுத்து வந்த சமீராவின் ஓவரில் வட்டியும் முதலுமாக, 13 ரன்களை இந்தியா சேர்க்க, மறுபடியும் ஹசரங்காவினைக் கொண்டு, விட்டதைப் பிடிக்க முயன்றது இலங்கை... பதிலடி தந்தது இந்தியா!

7 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில், புவனேஷ்வர் அடித்த ஒரு பவுண்டரி, இந்தியாவின் வெற்றியை, கிட்டத்தட்ட உறுதி செய்து விட, கடைசி ஓவரின் முதல் பந்திலேயே, பவுண்டரியாக வின்னிங் ஷாட் அடித்த சஹார், மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வெல்ல வைத்தார். 2-0 என தொடரை வென்றது இந்தியா. இலங்கைக்கு எதிராக இது இந்தியாவின் தொடர்ச்சியான ஒன்பதாவது ஒருநாள் தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அனுபவம் கைகொடுக்க, சஹாரின் அற்புதமான ஆட்டத்தால், முடிந்தது கதை என நினைத்த இடத்திலிருந்து, விடாது போராடி, வெற்றியைச் சுவைத்திருக்கிறது இந்தியா. 'ஆஸ்திரேலியா தொடரின் பார்ட் 2' என்பது போல், கடைசித் துளி நம்பிக்கை மிச்சமிருக்கும் வரை, இயலாதது எதுவுமில்லை என நிரூபித்திருக்கிறது இந்திய அணி.