Election bannerElection banner
Published:Updated:

3 ஓவரில் கதகளி ஆடிய தரங்கா... ஒரே ஸ்பெல்லில் மேட்சை முடித்த தில்ஷன்... லெஜண்ட்ஸ் இலங்கையின் மாஸ்!

இலங்கை லெஜண்ட்ஸ் vs வங்கதேச லெஜண்ட்ஸ்
இலங்கை லெஜண்ட்ஸ் vs வங்கதேச லெஜண்ட்ஸ்

எப்படியிருந்த அணி... இப்படி சொதப்பிக்கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கமே இலங்கை ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது. இந்த லெஜண்ட்ஸை மீண்டும் அழைத்து வந்து இலங்கை அணியை பழைய பன்னீர் செல்வமாக மாற்றிவிட முடியாதா என்கிற ஏக்கத்துடனேயே இந்தப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சாலை பாதுகாப்பு தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியும், வங்கதேச லெஜண்ட்ஸ் அணியும் மோதின. இதில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியின் சார்பாக தரங்கா 99 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார். பௌலிங்கில் தில்ஷன் ஒரே ஸ்பெல்லில் 3 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தையே மாற்றிவிட்டார்.
இலங்கை லெஜண்ட்ஸ்
இலங்கை லெஜண்ட்ஸ்

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தில்ஷன் பேட்டிங்கை தேர்வு செய்தார். தில்ஷன், ஜெயசூர்யா, உபுல் தரங்கா, சமர சில்வா, குலசேகரா என இலங்கை லெஜண்ட்ஸ் அணி செம லைன் அப்பை வைத்திருந்தது. இலங்கை அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்றுதான் தொடங்கியது. இலங்கை ரசிகர்கள் அந்தப் போட்டியை பார்ப்பதைவிட முன்னாள் வீரர்கள் ஆடும் இந்த லெஜண்ட்ஸ் மேட்ச்சை பார்ப்பதற்கே அதிக ஆர்வம் காட்டினர். 'எப்படியிருந்த அணி... இப்படி இப்போது வாழ்ந்து கெட்ட குடும்பமாக' சொதப்பிக்கொண்டிருக்கிறதே என்கிற ஆதங்கமே இலங்கை ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது. இந்த லெஜண்ட்ஸை மீண்டும் அழைத்து வந்து இலங்கை அணியை பழைய பன்னீர் செல்வமாக மாற்றிவிட முடியாதா என்கிற ஏக்கத்துடனேயே இந்தப் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இலங்கையின் நடப்பு அணி ரசிகர்களை ஏமாற்றினாலும் லெஜண்ட்ஸ் அணி ஏமாற்றவில்லை. தில்ஷனும் ஜெயசூர்யாவும் ஓப்பனர்களாக இறங்க, தில்ஷன் தனது வழக்கமான பாணியிலேயே பவுண்டரிகளாக அடித்து அதிரடி காட்டினார். 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில் தில்ஷன் அவுட் ஆக ஜெயசூர்யாவும் ரிட்டையர்ட் ஹர்ட் ஆகிக்கொண்டு வெளியேறினார். இதன்பிறகு, சமரசில்வாவும் தரங்காவும் கூட்டணி போட்டனர். தரங்கா வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிக்கெதிரான முந்தைய போட்டியிலும் அரைசதம் அடித்து நல்ல ஃபார்மிலேயே இருந்தார்.

இலங்கை லெஜண்ட்ஸ் vs வங்கதேச லெஜண்ட்ஸ்
இலங்கை லெஜண்ட்ஸ் vs வங்கதேச லெஜண்ட்ஸ்

சமரசில்வா சிங்கிள் தட்டி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து தரங்காவிடம் கொடுக்க அவர் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கள் அடித்து ரன்ரேட்டை குறையவிடாமல் ஆடிக்கொண்டிருந்தார். 17 ஓவர்கள் வரை நிலைமை இப்படித்தான் சென்று கொண்டிருந்தது. அரைசதம் கடந்த பிறகு கடைசி 3 ஓவரில் வங்கதேசத்தின் பௌலிங்கை வெளுத்துவாங்கிவிட்டார் தரங்கா. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 50 ரன்கள் வந்தது. கபீர், ஷரீஃப், முஷ்ஃபிகர் ரஹீம் வீசிய இந்த 3 ஓவர்களிலும் க்ரீஸை விட்டு இறங்கி வந்து பௌலர்களின் தலைக்கு மேல் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். சதம் அடிக்க கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பவுண்டரி அடிக்க முடியாமக கவர்ஸில் தட்டிவிட்டு இரண்டு ரன்னுக்கு முயற்சிக்க குலசேகரா ரன் அவுட் ஆக தரங்கா 99 ரன்களில் நாட் அவுட் ஆக இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 180 ரன்களை எடுத்தது.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச லெஜண்ட்ஸ் அணி களமிறங்கியது. ஓப்பனர்களான நஷீமுதினும் மெஹ்ரப் ஹொசைனும் சிறப்பாக ஆடினர். குலசேகரா வீசிய முதல் ஓவரிலேயே நஷீமுதின் சிக்சரை பறக்கவிட்டார். இந்தக் கூட்டணி சிறப்பாக ஆடி செட்டில் ஆக முதல் 7 ஓவர்களில் 57 ரன்கள் வந்தது.

இலங்கை லெஜண்ட்ஸ்
இலங்கை லெஜண்ட்ஸ்

ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை அணியின் கையை விட்டு செல்ல இருந்த நேரத்தில் கேப்டன் தில்ஷன் பந்து வீச வந்தார். தில்ஷன் இந்த ஸ்பெல்லில் வீசிய மூன்று ஓவர்கள்தான் ஆட்டத்தை மாற்றியது. ஸ்டம்ப் டு ஸ்டம்பாகவும், ஆஃப் சைடிலும் மாற்றி மாற்றி வீசிய தில்ஷன் இந்த மூன்று ஓவர்களில் வங்கதேச டாப் 3 பேட்ஸ்மேன்கள் மூவரையும் காலி செய்தார். தில்ஷன் கொடுத்த இந்த ஷாக்குக்குப் பிறகு வங்கதேச அணியால் மீண்டு வரவே முடியவில்லை. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை லெஜண்ட்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

தற்போதைய இலங்கை அணிக்குப் பதிலாக இந்த லெஜண்ட்ஸ் அணியையே மீண்டும் அழைத்து வந்துவிடலாம் என இலங்கை ரசிகர்கள் ஆதங்கப்படுவதற்கான நியாமான காரணத்தை நேற்று உணர முடிந்தது. ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களாக இருந்தாலும் முழு ஈடுபாட்டோடு இலங்கை வீரர்கள் ஆடினர். ஃபீல்டிங்கில் அவ்வளவு சிறப்பாக ஈடுபாட்டோடு பவுண்டரி லைனில் பாய்ந்துக்கொண்டிருந்தனர். முன்னோர்களிடமிருந்து கொஞ்சம் கத்துக்கங்க ஸ்ரீலங்கன்ஸ்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு