Published:Updated:

`அந்த மண்ணில் விளையாட முடியாது'- கொடிபிடித்த இலங்கை வீரர்களும்.. பாக்., அமைச்சரின் சர்ச்சை பேச்சும்!

மலையரசு

பாதுகாப்பு குறைபாடுகளையும்.. கடந்த 2009ல் நடந்த தாக்குதல்களையும் சுட்டிக்காட்டி மூத்த வீரர் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், சுரங்கா லக்மல், தினேஷ் சண்டிமால் உள்ளிட்ட 10 வீரர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

sri lankan cricket team
sri lankan cricket team

கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தை இலங்கை வீரர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டார்கள். டெஸ்ட் தொடருக்காக வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடிக் கொண்டிருக்கும்போது இலங்கை அணி வீரர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், இலங்கை அணி வீரர்கள் சிலர் காயமடைந்ததோடு, காவல்துறையினர் ஆறு பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செல்வதை அநேக கிரிக்கெட் அணிகள் தவிர்த்தன. ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மட்டும் பாகிஸ்தான் சென்று விளையாடின. பின்னர் ஏழு வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணி பாகிஸ்தான் நாட்டில் நடந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுவிளையாடியது.

2009 attack
2009 attack

இந்நிலையில் இந்தமாதம் 27ம் தேதி முதல் அக்டோபர் 19ம் தேதி வரை பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருந்தது இலங்கை அணி. இதற்கான வீரர்களும் அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் அணியில் இடம்பிடித்திருந்த 10 வீரர்கள் திடீர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர். ஆம்.. பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளையும்.. கடந்த 2009ல் நடந்த தாக்குதல்களையும் சுட்டிக்காட்டி மூத்த வீரர் மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், சுரங்கா லக்மல், தினேஷ் சண்டிமால் உள்ளிட்ட 10 வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் விளையாட முடியாது தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

`இது என் படை; இவர்களே என் வீரர்கள்!' - கத்தார் போட்டியும் இந்தியக் கேப்டனின் நெகிழ்ச்சியும் #QATIND

வீரர்களைச் சமாதானப்படுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் முயன்றும் பயனில்லை. `பாகிஸ்தானில் விளையாட முடியாது' எனப் பத்து வீரர்களும் திட்டவட்டமாக அறிவிக்க.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. `தீவிரவாதத்தை ஒடுக்கும்வரையில் பாகிஸ்தானுடன் போட்டிகள் கிடையாது' எனக் கூறி இந்திய அணி போட்டிகளை தவிர்த்துவரும் நிலையில் இலங்கை வீரர்களும் போர்க்கொடி தூக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் ஹுசைன் சவுத்ரி, ``பாகிஸ்தானுக்கு இலங்கை வர மறுக்கும் பின்னணியில் இந்தியா இருக்கிறது.

pakistan minister
pakistan minister

பாகிஸ்தான் சென்று விளையாடினால், ஐபிஎல் போட்டித் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று இந்தியா மிரட்டியதால்தான் இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தான் வர மறுக்கிறார்கள். இந்த விவகாரத்தில் இந்தியா பின்புலத்தில் இருந்து செயல்படுகிறது'' எனக் குற்றச்சாட்டுகளை அடுக்க சர்ச்சையாக மாறியது. சவுத்ரிக்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வரும்வேளையில் அவரின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ. பெர்ணான்டோ பேசியது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஐஏஎன்எஸ், ``பாகிஸ்தான் அமைச்சரின் குற்றச்சாட்டு தவறு. வீரர்களின் விலகலுக்குப் பின்னால் இந்தியா இல்லை.

2009-ல் நடந்த தாக்குதலின் அச்சம் காரணமாகவே பத்து வீரர்களும் பாகிஸ்தானுக்குச் செல்ல மறுப்பு தெரிவித்தனர். அவர்களின் முடிவுக்கு கிரிக்கெட் வாரியம் மதிப்பளிக்கும். அதேநேரம் பாகிஸ்தான் தொடரும் நடைபெறும். தொடருக்கு வர விரும்பும் வீரர்களை மட்டும் தேர்வு செய்ய உள்ளோம். வலிமையான அணியை நாங்கள் கொண்டுள்ளோம். எனவே பாகிஸ்தானை வீழ்த்துவோம்" எனப் பேசியுள்ளார்.

`தடை... ஊதியம்... குமுறும் வீரர்கள்!'- ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலம் என்னவாகும்?