ஐபிஎல் 16ஆவது சீசன் 47ஆவது லீக் போட்டியை எட்டிவிட்டோம் . இன்னும் ஒவ்வொரு அணிகளுக்கும் தலா 4 முதல் 5 போட்டிகளே மிதமுள்ளது. இந்த நிலையில் எந்த ஒரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு இதுவரை தகுதி பெறவுமில்லை, வெளியேறவில்லை என்று பரபரப்பாகப் போய் கொண்டிருகிறது.

இப்போட்டியும் அதே போல கடைசி பால் திரில்லர் வெற்றி, மழை என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றது. முன்றைய தோல்விக்குப் பழி தீர்க்குமா எனும் கேள்வியுடன் கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணியும், ஹோம் கிரவுண்டில் தொடர் தோல்விகள் எனும் மோசமான ரெக்கார்டை மாற்றவேண்டும் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சையில் இறங்கின. ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக குர்பாஸும் ராயும் களமிறங்க முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். ஜேசன் ராய் இரண்டு பவுண்டர்களை விரட்ட அட்டகாசமான தொடக்கம் என்று நினைக்க, காத்திருந்தது அதிர்ச்சி! 2வது ஓவரின் முதல் பந்திலே மார்க்கோ ஜென்சன் குர்பாஸை 'கோல்டன் டக்' ஆக்கி வெளியேற்றினார். அவர் மிட்விக்கெட் திசையில் பந்தைத் தட்டிவிட நினைக்கையில் டாப் எட்ஜாக மாறி ப்ரூக்கிடம் கேட்ச் ஆனார். அடுத்து மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய வெங்கடேஷ் ஐயர் களமிறங்கி 4 பந்தில் 7 ரன்களையே எடுத்து அதே ஓவரில் பெவிலியனுக்கு நடையைக்கட்டினார்.

பவர் ப்ளேயில் இப்படி தடுமாறிக் கொண்டிருந்த KKRஅணிக்கு மேலும் ஒரு இடியாக ஐந்தாவது ஓவரில் இன்னொரு விக்கெட் விழுந்தது. இந்த சீசனில் தனது முதல் ஓவரை வீசிய கார்த்திக் தியாகியின் பந்தில் ஷார்ட் மென் திசையில் கேட்ச் கொடுத்து 20 ரன்களில் வெளியேறினார் ஜேசன் ராய். இந்த விக்கெட்டுடன் பவர்பிளேயின் முடிவில் 49/3 என்ற பரிதாபமான நிலையில் இருந்தது KKR.

பின்பு ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா சீராக பட்னர்ஷிப்பை உருவாக்கினார். குறிப்பாக கார்த்திக் தியாகி வீசிய 10வது ஓவரில் 4,6,6 என டிரில் எடுத்தார் நிதிஷ் ராணா. ஆட்டம் சுடுபிடித்த அந்த இடத்தில் திருப்புமுனையாக அட்டகாசமான டைவிங் கேட்ச் பிடித்தார் மார்க்கம். அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் வழக்கம்போல எதற்கும் கவலைப்படாமல் 2 சிக்ஸர், 1 ஃபோர் என அதிரடியாக ஆடி 25(14) என்ற நிலையில் நடராஜனின் கையில் பிடிபட்டார். அடுத்து வந்த சுனில் நரேன் 1(2), ஷர்துல் தாக்கூர் 8(6) வந்த வேகத்திற்கு பெவிலியன் திரும்பினார்.

இந்த சீசனை பொறுத்தவரையில் சுனில் நரேனின் பேட்டிங் மற்றும் பௌலிங் பார்மில் உள்ளது. நானும் ரவுடி தான் படத்தில் வரும் "இவர பாத்தா பயப்படுறீங்க" என KKR நிர்வாகம் புலம்பும் அளவுக்கு செயல்பட்டு கொண்டிருக்கிறார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் ரிங்கு சிங் அடிக்க வேண்டிய பந்துகளை பௌண்டரிகளுக்கு விரட்டி 35 பந்தில் 46 ரன்களை எடுத்து, டெத் ஓவர் ஸ்பஷலிஸ்ட் நடராஜனிடம் விக்கெட்டை இழந்தார். கடைசி ஓவரில் ரின்குவின் விக்கெட் , ஒரு ரன் அவுட் , மூன்று யார்க்கர் சொறுவல் என 3 ரன்களை மட்டுமே கொடுத்து அசத்தினார் நட்டு. 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது KKR.
இப்போது தான் KKR நிர்வாகம் தனது பேட்ஸ்மேன்களை நம்பியுள்ளது என சொல்லலாம். இதுநாள் வரை ஷர்துல் தாக்கூரை முன்னால் இறக்கி விட்டு பேட்ஸ்மேன்களை பின்னால் இறக்கிக் கொண்டிருந்தது. அந்த தவறை இப்போது திருத்திக் கொண்டிருக்கிறது. இது பாதி தூரம் கடந்த ட்ரெயினுக்கு, டிக்கெட் வாங்கிட்டேன் என்று PLATFORMக்கு ஓடி வந்து "ப்ளே ஆப்ஃ"க்கு போற ட்ரெயின் எங்க நிக்குது" என்று கேட்பது போல தான் உள்ளது

அடுத்து 172 அடித்தால் வெற்றி என்ற இழக்கை நோக்கி மயங்க் அகர்வாலும், அபிஷேக் ஷர்மாவும் களம் இறங்கினர். ஹர்ஷித் ராணா வீசிய முதல் பந்திலே பவுண்டரியோடு தொடங்கிய அபிஷேக் மறுமுனையில் 2 ஃபோர், 1 சிக்ஸர் விலாசும் அகர்வால் என அதிரடியாக ஆரம்பித்த ஆட்டத்தை ஆரம்பத்திலே முடித்து வைத்தார் ஹர்ஷித் ராணா. மயங்க் அகர்வால் 18(11) என்று ஆட்டமிழக்க அடுத்த ஓவரில் "லார்டு" தாக்கூரின் பந்தில் காலியானார் அபிஷேக் 9(10).

அடுத்து நடராஜனுக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார் ராகுல் திரிபாதி. பவர் பிளேயின் இறுதி ஓவரை வீச வந்த ரசலின் பந்தை 4,6,4 என விரட்டி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கையில், ரசலின் வேகம் குறைந்த பந்தை கணிக்க தவறி விக்கெட்டை இழந்தார். பவர் பிளே முடிந்து ஆரம்பித்த அடுத்த ஓவரிலேயே KKR உடனான சென்ற போட்டியில் சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட ஹாரி புரூக் அங்குள் ராயின் சூழலில் 'டக்' அவுட் ஆகி வெளியேறினார். 69-4 என்னும் மோசமான நிலையில் இருந்தது.

30 பந்துகள் 38 ரன்கள் அடிக்க வேண்டும். 'எளிய இலக்கு' என்று நினைக்கும் போது "அந்த ஸீன் இங்க இல்ல" என்று வருண் சக்கரவர்த்தியின் பந்து பேச ஆரம்பித்தது. முதல் ஓவரில் 12 ரன்கள் விட்டுக் கொடுத்தவர், தேர்ந்த யுக்தியோடு கம் பேக் கொடுத்தார். பந்தை ஷார்ட் பிட்சாக குத்தி அதிக தூரமான பவுண்டரி பக்கம் மட்டுமே கிளியர் செய்யும் அளவுக்கு பந்தை வீசி ரிஸ்க் எடுத்தார். அது ரன்களை கட்டுப்படுத்தியது. இதனை தொடர்ந்து கேப்டன் மார்க்ரம் 41(40), ஜென்சன் 1(4) அடுத்தடுத்து அரோரா பந்தில் அவுட் ஆகினர். இறுதியாக கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது .

கடைசி ஓவரை வீச வந்த வருண் சக்ரவர்த்தி அதே யுக்தியை பயன்படுத்தினார். கொட்டும் மழையும் பொருட்படுத்தாது ஒரு விக்கெட் வீழ்த்தி, 3 ரன்களை மட்டுமே கொடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் KKR அணியை வெற்றிபெறச் செய்தார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த வெற்றியின் முடிவில் இரு அணிகளும், 96 படத்தின் ஜானு “ ரொம்ப தூரம் போயிட்டியா ராம் “ என்று கேட்கும் கேள்விக்கு “, “நீ விட்டுட்டு போன அதே இடத்துல தான் நிக்குறேன் ஜானு” என்று சொல்லும் ராமின் பதிலை போல ஏற்றமும் இரக்கமும் இல்லாமல் அதே 8 மற்றும் 9ஆம் இடத்திலே நீடிக்கின்றனர்.