Published:Updated:

David Warner: `மக்கள் மனதை ஆள்பவனே அரசன்!' - டேவிட் வார்னரின் ஆக்ரோஷமும் ரசிகர்களின் பேரன்பும்!

David Warner

வார்னரின் கொண்டாட்டத்தில் அத்தனை ஆக்ரோஷம் இருந்தது. பெரும் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் அந்தக் கொண்டாட்டம் தெரிந்தது. அவரின் அந்தக் கோபத்துக்கான பின்னணிதான் என்ன?

Published:Updated:

David Warner: `மக்கள் மனதை ஆள்பவனே அரசன்!' - டேவிட் வார்னரின் ஆக்ரோஷமும் ரசிகர்களின் பேரன்பும்!

வார்னரின் கொண்டாட்டத்தில் அத்தனை ஆக்ரோஷம் இருந்தது. பெரும் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் அந்தக் கொண்டாட்டம் தெரிந்தது. அவரின் அந்தக் கோபத்துக்கான பின்னணிதான் என்ன?

David Warner

டெல்லி மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. அது ஒரு சுமாரான போட்டி. போட்டியில் ஹைலைட் எனச் சொல்லிக்கொள்ள பெரிதாக எந்த விஷயமும் இல்லாத போட்டி. ஆனால், அந்தப் போட்டி முடிந்த பிறகு டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விதம் கவனிக்க வேண்டியதாக இருந்தது. வார்னரின் கொண்டாட்டத்தில் அத்தனை ஆக்ரோஷம் இருந்தது. பெரும் கோபத்தின் வெளிப்பாடாகத்தான் அந்தக் கொண்டாட்டம் தெரிந்தது. அவரின் அந்தக் கோபத்திற்கான பின்னணிதான் என்ன?

ஆஸ்திரேலிய வீரர்கள் எப்போதுமே ஒரு துடிப்போடுதான் எல்லா விஷயங்களையும் செய்வார்கள். அதில் வார்னரும் விதிவிலக்கல்ல. ஆனால், வார்னரிடம் நேற்று கொஞ்சம் கூடுதல் டெசிபலிலேயே ஆக்ரோஷம் வெளிப்பட்டிருந்தது. காரணம், அது சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டி என்பதுதான்.

சன்ரைசர்ஸூக்கும் வார்னருக்கும் இடையேயான பந்தத்தை அறிய ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பயணிக்க வேண்டும்.

டெல்லி அணிக்காக ஆடி வந்த வார்னரை 2014 மெகா ஏலத்தில் 5.5 கோடி ரூபாய் கொடுத்து சன்ரைசர்ஸ் அணி வாங்கியது. டேவிட் வார்னரை சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி அப்போது `சூப்பர் ஸ்டார்' என வர்ணித்து அணிக்குள் அழைத்து வந்தார்.
David Warner
David Warner

எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் ஏற்ப வார்னரும் சன்ரைசர்ஸ் அணிக்காக மிரட்டலான பெர்ஃபார்மென்ஸ்களைக் கொடுத்தார். 2015-ம் ஆண்டில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும் ஆக்கப்பட்டார். அந்த 2015 சீசனில் 562 ரன்களை 156 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்றிருந்தார். ஆனால், அந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி அவ்வளவாக சாதிக்கவில்லை. 14 போட்டிகளில் 7 இல் வென்று நூலிழையில் ப்ளே ஆப்ஸ் வாய்ப்பைத் தவறவிட்டது. அடுத்த சீசன் கொஞ்சம் வித்தியாசமாக அமைந்தது.

அந்த 2016 சீசனில் வார்னரும் சாதித்தார். அணியும் சாதித்தது. 150+ ஸ்ட்ரைக் ரேட்டில் வார்னர் மட்டும் 848 ரன்களை இந்த சீசனில் அடித்திருந்தார். ஆரஞ்சு கேப்புக்கான ரேஸில் கோலிக்கு அடுத்து 2வது இடத்திலும் இருந்தார். இறுதிப்போட்டியில் பெங்களூருவும் சன்ரைசர்ஸூம்தான் மோதியிருந்தது. பெங்களூவை வீழ்த்தி சன்ரைசர்ஸ் அணியும் சாம்பியன் ஆனது.
ஐ.பி.எல்-ஐ பொறுத்தவரைக்கும் பெரிதாக ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற அணிகள் அன்றி வேறு அணி இத்தனை சிறப்பாக ஆடி சாம்பியன் பட்டத்தை வென்றது ஆச்சர்யமாக இருந்தது. டேவிட் வார்னரை ஏன் டாம் மூடி `சூப்பர் ஸ்டார்' என அழைத்தார் என்பதற்கான காரணம் இதன்பிறகுதான் பலருக்குமே புரிய வந்தது. அடுத்த 2017 சீசனில் வார்னர்தான் ஆரஞ்சு தொப்பியை வென்றிருந்தார்.

ஆனால், இதன்பிறகான காலகட்டங்கள் வார்னருக்கு அத்தனை எளிதானதாக அமையவில்லை. 'Ball Tampering' பிரச்னையில் சிக்கி தடைபெற்று அவதியுற்றார். தடையையெல்லாம் முடிந்தபிறகு 2019 சீசனில் மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு வந்தார். எங்கே விட்டுவிட்டு சென்றாரோ அதே இடத்திலிருந்து தொடங்கியதை போல 2019 சீசனிலும் அந்த ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார். ஆனால், இந்த முறை அணிக்கு கேப்டன் கேன் வில்லியம்சன். வார்னர் தன்னை மீண்டும் நிரூபித்துவிட 2020 சீசனுக்காக சன்ரைசர்ஸ் அணிக்கான கேப்டனாக வார்னர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆப்ஸ் வரை முன்னேறியிருந்தது. சன்ரைசர்ஸ் அணியில் அதிக ரன்கள் அடித்த வீரராக வார்னரே இருந்தார். மோசமான காலகட்டத்திலிருந்து மீண்டு வந்தவரை மீண்டும் ஒரு அணிக்கு கேப்டனாக்கியதால் சன்ரைசர்ஸ் நிர்வாகத்தின் மீதுமே ரசிகர்களுக்கு பெரிய மரியாதை எழுந்தது. இந்தச் சமயத்தில்தான் ஹைதரபாத் ரசிகர்களுடனும் டேவிட் வார்னர் அதிகமாக ஒன்றிப்போக ஆரம்பித்தார்.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்
`புட்ட பொம்மா...' ரீல்ஸ்... `பாகுபலி' கெட்டப் என லோக்கல் ஃப்ளேவரோடு இறங்கி அடித்தார். ரசிகர்களின் அன்பாலும் ஆதரவாலும் சன்ரைசர்ஸ் அணியின் முழு முகமாக மாறிப்போனார் வார்னர். ஆனால், அதையெல்லாம் அடுத்த சீசனிலேயே சுக்கு நூறாக்கிப் போட்டது சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம்.

2021 சீசன் ஒட்டுமொத்த சன்ரைசர்ஸ் அணிக்குமே மோசமானதாக அமைந்திருந்தது. ஆடிய 14 போட்டிகளில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே அவர்கள் வென்றிருந்தனர். வார்னரும் ஃபார்மிலேயே இல்லை. வார்னர் ஃபார்மில் இல்லாதது சன்ரைசர்ஸின் சொதப்புலுக்கு ஒரு முக்கிய காரணம். ஆனால், அதுமட்டுமே அவர்களின் தோல்விக்குக் காரணமில்லை. மோசமான அணிக்கட்டமைப்பு, அனுபவமின்மை, பொறுப்பேற்று ஆடாத இளம் வீரர்கள் என எக்கச்சக்க காரணங்கள் இருந்தன.

ஆனால், சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் வார்னரை மட்டும்தான் பிரச்னையாக பார்த்தது. இத்தனைக்கும் வார்னர் அணியின் பிரச்னை என்ன என்பதை கண்டறிந்து அதை சரி செய்யும் வேலையில் இறங்கிவிட்டார். டாப் 3 வலுவாக இருக்கிறது, அதன்பிறகு அனுபவமற்ற மிடில் ஆர்டர் இருக்கிறது. இதுதான் பிரச்னையா, எனில் நானே மிடில் ஆர்டரில் இறங்குகிறேன் என முடிவெடுத்து ஓப்பனரான வார்னர், நம்பர் 4, நம்பர் 5-ல் இறங்க ஆரம்பித்தார். தனக்கு தோதுவான இடத்தை விட்டுவிட்டு சௌகரியமற்ற ஒரு இடத்தில் அவர் இறங்கினார். இது ஆஸ்திரேலிய அணிக்காக கூட வார்னர் செய்யாதது. இப்படி அணிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்த வார்னரை சன்ரைசர்ஸ் நிர்வாகம் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது. அதோடு நில்லாமல் ப்ளேயிங் லெவனிலிருந்தும் தூக்கப்பட்டார்.

David Warner
David Warner
அணியிலேயே இல்லாவிட்டாலும் அணிக்காக உழைப்பேன் என களத்தில் ஆடும் வீரர்களுக்குத் தண்ணீர் பாட்டில் தூக்கி கொண்டு வாட்டர் பாயாக ஓடினார். நிர்வாகத்தால் இதையும் பொறுக்க முடியவில்லை.

கொரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி வார்னரை ட்ரெஸ்ஸிங் ரூமிற்கே வரவிடாமல் செய்தது. அப்போதும் வார்னர் விடவில்லை.

அணிக்காக கேலரியில் வந்து அமர்ந்து அணியின் கொடியை ஆட்டிக் கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

சூப்பர் ஸ்டார் என அணிக்குள் அழைத்து வந்தவரை எப்படியெல்லாம் நடத்தக்கூடாதோ அப்படியெல்லாம் நடத்தி அணியை விட்டு வெளியேற்றியது சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம். அதன்பிறகுதான், அப்படியே டெல்லிக்கு வந்து இப்போது கேப்டனும் ஆகி சன்ரைசர்ஸ் அணியின் சொந்த மைதானத்தில் வைத்தே அவர்களை வீழ்த்தியிருக்கிறார். வார்னரின் ஆக்ரோஷமான கொண்டாட்டத்திற்குப் பின்னால் இருக்கும் கதை இதுதான். வார்னர் அத்தனை கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அது எதுவுமே ஹைதரபாத்தில் கூடியிருந்த அந்த ரசிகர்களுக்கு எதிரானது அல்ல.

"இந்த இடம் எனக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது. இந்த ரசிகர்கள் எப்போதுமே பெருமளவில் திரண்டு வந்து எனக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். அவர்களின் அன்பிற்கு நன்றி!" என டெல்லியின் கேப்டனாக டேவிட் வார்னர் ஹைதரபாத் ரசிகர்களுக்கு நன்றி கூறினார்.
மக்கள் மனதை ஆள்பவனே அரசன்!