1. ஹனுமா விஹாரி என்னும் போராளி!
2021 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் போட்டி ஒன்றில் ஹனுமா விஹாரிக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இருப்பினும் தசைப் பிடிப்புடன் போராடி அந்த ஆட்டத்தைச் சமன் செய்தார் விஹாரி. அதேபோல், தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை போட்டி ஒன்றிலும் ஆந்திரா அணியின் கேப்டன் விஹாரி, மணிக்கட்டில் காயம் ஏற்பட்ட பின்னரும், இடது கை பேட்ஸ்மேனாக மாறி, ஒற்றைக் கையில் தொடர்ந்து விளையாடி, 57 பந்துகளில் 27 ரன்களை எடுத்தார்.

2. சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா
நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது T20 ஆட்டத்தில், 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மாபெரும் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த ஆட்டத்தில் கேப்டனாக கவனத்தை ஈர்த்தார் ஹர்திக் பாண்டியா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 17 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார். இது குறித்து போட்டி முடிந்த பின்னர் பேசிய அவர், இது போலவே தான் எப்பொழுதும் ஆட்டங்களை விளையாட எண்ணியதாகக் குறிப்பிட்டார்.
3. கௌரவித்த சச்சின்!
U 19 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ சார்பில் நரேந்திர மோடி மைதானத்தில் பாராட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட சச்சின் "இந்த மாபெரும் வெற்றிக்கு உங்களை பாராட்டுகிறேன், இனி வரும் ஆண்டுகளில் இந்த தேசம் நிச்சயம் உங்கள் வெற்றியைக் கொண்டாடும்" என இந்திய மகளிர் அணியை வாழ்த்தினார். பரிசுத் தொகையான ஐந்து கோடி ரூபாய் பிசிசிஐ சார்பில் வழங்கப்பட்டது.

4. தசைக் கிழிவுடன் விளையாடிய ஜோகோவிச்
நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், தொடையில் மூன்று சென்டிமீட்டர் தசைக் கிழிவுடன் விளையாடி, பட்டத்தை வென்றார் ஜோகோவிச். இது உண்மையான இல்லையா எனப் பல கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில், "சந்தேகப்படுபவர்கள் படட்டும், இதில் நான் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை இப்படியான பேச்சுக்கள் எனக்குப் பழகிவிட்டது மேலும் இவை எனக்கு உத்வேகத்தை அளிக்கிறது" எனப் பதிலடி கொடுத்துள்ளார் ஜோகொவிச்.

5. கோலியின் சாதனையை முறியடித்த கில்.
நியூசிலாந்துக்கு எதிரான T20 போட்டி இறுதி ஆட்டத்தில் சதம் விளாசி அசத்தினார் சுப்மன் கில். இதன் மூலம் சர்வதேச இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். 126 ரன்கள் எடுத்த கில், T20I போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் (122) என்ற கோலியின் சாதனையை முறியடித்தார்.