
இந்திய ஆண்கள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியக் கொடியைத் தூக்கிச் சுமந்த நாயகர் ஒருவர் இருக்கிறார்.
மிதாலி ராஜ் - இந்திய மகளிர் கிரிக்கெட்டின் மீது வெளிச்சம் பாய்ச்சிய துருவ நட்சத்திரம், இப்போது ஓய்வை அறிவித்திருக்கிறார். 20-ம் நூற்றாண்டில் தொடங்கிய ஒரு மகத்தான பயணம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது.
மிகப்பெரிய அரங்கில் சாதிக்கும் ஒரு பெண்ணை, அதே துறையில் சாதித்த ஆணோடு ஒப்பிடுவது இச்சமூகத்தின் வழக்கம். அதை அவர்களுக்கான மிக உயரிய அங்கீகாரமாகவும் இச்சமூகம் கருதுவதுதான் மிகப்பெரிய அவலம். ஆண்களோடு ஒப்பிடப்பட்ட பல லட்சம் சாதனைப் பெண்களுள் மிதாலியும் அடக்கம். ஆனால், அந்த ஒப்பீடுகள் சரியாக இருக்கவில்லை.

‘லேடி சச்சின்’ என்பதுதான் பெரும்பாலானவர்கள் மிதாலிக்குக் கொடுத்த அடைமொழி. ரன் மெஷினாக வலம் வந்ததால், சாதனைகளைத் தன் மகுடத்தில் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் சச்சினோடு ஒப்பிடப்பட்டார் அவர். ஆனால், தொடர் ஓட்டத்தின் மூன்றாவது சுற்றில் ஓடியவரை, மூன்று சுற்றும் ஓடிய ஒருவரோடு எப்படி ஒப்பிட முடியும்? மகளிர் கிரிக்கெட் எனும் ரிலே ஓட்டத்தில், இந்தியாவுக்காக முதல் மூன்று சுற்றுக்களையுமே ஓடியவர் மிதாலி ராஜ்! அவரை சச்சினோடு மட்டும் ஒப்பிடுவது அவருக்கு நியாயம் சேர்ப்பதாக இருக்காது.
இந்திய ஆண்கள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியக் கொடியைத் தூக்கிச் சுமந்த நாயகர் ஒருவர் இருக்கிறார்.

ஏழாவது பெரிய தேசமாய் இருந்தாலும், உலக கிரிக்கெட் வரைபடத்தில் இந்தியாவுக்கு இடம் இல்லாமல்தான் இருந்தது. யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த இந்திய கிரிக்கெட்டுக்குச் செய்தித்தாள்கள் இடம்கொடுக்கக் காரணமாக இருந்தவர் கவாஸ்கர். தன்மானத்துக்குப் போராடியவர்கள் அதன்பிறகு உலக சாம்பியன் ஆனார்கள். பாடல்கள் கேட்கும் கருவியாக இருந்த ரேடியோவில், கிரிக்கெட் வர்ணனைக்கு இடம் கொடுத்தவர் கபில் தேவ். ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிக்கான தேவையை ஏற்படுத்தியவர் சச்சின் டெண்டுல்கர். இவர்களுக்குப் பிறகு சமூக வலைதள சண்டைகளின் அங்கமாக தோனியும் கோலியும் ரோஹித்தும்.
யோசித்துப் பாருங்கள், இதில் சச்சின் என்பவர் மூன்றாவது சுற்றை ஆக்கிரமித்தவர் மட்டுமே. கவாஸ்கர் விதைக்க, கபில் நீரூற்ற, சச்சின் பாய்ச்சிய வெளிச்சத்தில் வளர்ந்ததுதான் இந்திய ஆண்கள் கிரிக்கெட். முதல் இரண்டும் இல்லையேல் மூன்றாவது இருந்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் இந்திய ஆண்கள் கிரிக்கெட். பெண்கள் கிரிக்கெட்டில் அப்படியில்லை. விதையும் மிதாலி, உயிர்நீரும் மிதாலி, பாய்ந்த ஒளியும் மிதாலி!

ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஐ.பி.எல் ஒளிபரப்பு உரிமத்தை விற்றும், பெண்களுக்கு ஒரு தொடரை நடத்த யோசித்துக்கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இப்போதே இந்த நிலை எனில், 1999-ல் எவ்வளவு பிற்போக்காக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடிகிறதா! இவர்களுக்கு மத்தியில்தான் 23 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார் மிதாலி ராஜ் - இளம் நட்சத்திரமாக, ஒற்றை நம்பிக்கையாக, கேப்டனாக, அரணாக, ஜாம்பவானாக... அத்தனையுமாக விளங்கியிருக்கிறார்.
இன்னொரு முக்கியமான விஷயம். அந்தத் தொடர் ஓட்டத்தில் கபிலும் கவாஸ்கரும் சச்சினும் ஓட மட்டுமே செய்தார்கள். ஆனால், எதையுமே ஆண்களோடு ஒப்பிடும், ஆண்களையே முன்னிறுத்தும் இந்தச் சமூகத்தில், இந்தத் தேசத்தில் பெண்களுக்கான பாதைகள் எளிதாக அமைந்துவிடுவதில்லையே. மூவர்ணக் கொடி ஏந்தி மூன்று சுற்றுகள் ஓடியது மட்டுமல்ல, நாளை ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா போன்றவர்கள் ஓடப்போகும் அந்த டிராக்கை அமைத்ததும் மிதாலி துரை ராஜ்தான்!