Published:Updated:

கோலியின் எதிர்காலம் என்ன?

விராட் கோலி
பிரீமியம் ஸ்டோரி
விராட் கோலி

டி-20, ஒருநாள் போட்டிகளில் இன்னும் கோலியின் தலைமையில் இந்தியா கோப்பை வெல்லவில்லை. தலைமைப் பண்பு கோப்பைகளால் கணக்கிடப்படும் காலகட்டம் இது.

கோலியின் எதிர்காலம் என்ன?

டி-20, ஒருநாள் போட்டிகளில் இன்னும் கோலியின் தலைமையில் இந்தியா கோப்பை வெல்லவில்லை. தலைமைப் பண்பு கோப்பைகளால் கணக்கிடப்படும் காலகட்டம் இது.

Published:Updated:
விராட் கோலி
பிரீமியம் ஸ்டோரி
விராட் கோலி

விராட் கோலியை இனி இந்திய கிரிக்கெட் கேப்டன் என்று குறிப்பிட முடியாது. `டெஸ்ட் அணி கேப்டன்' என்றுதான் குறிப்பிட்டாகவேண்டும். கிரிக்கெட் உலகின் சக்திவாய்ந்த வீரராக விளங்கியவரிடமிருந்து ஒருநாள் கேப்டன் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் ஒரு இந்திய கேப்டனின் பதவி ‘பறிக்கப்பட்டிருக்கிறது!’

சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பைக்குப் பிறகு டி-20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் விராட். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் இனி வழிநடத்தப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். அப்போதிருந்தே ‘ஒருநாள் அணிக்கு ரோஹித்தைக் கேப்டனாக்கவேண்டும்’ என்கிற வாதம் மீண்டும் வலுப்பெற்றது. இந்நிலையில்தான், பி.சி.சி.ஐ, ரோஹித் ஷர்மாவை ஒருநாள் அணியின் கேப்டனாக அறிவித்திருக்கிறது.

கோலியின் எதிர்காலம் என்ன?

இந்த அறிவிப்பு வெளியானதில் ஆச்சர்யமில்லை. டி-20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் சுற்றில் வெளியேறியபோதே ‘ஒருநாள் கேப்டன் பதவியிலும் விராட் நீண்டகாலம் இருக்கமுடியாது’ எனப் பேச்சு எழுந்தது. அறிவிப்பு வெளியான விதம்தான் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. விராட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகப் பொங்குகிறார்கள் அவர் ரசிகர்கள். கங்குலியின் கேப்டன் பதவி பறிக்கப் பட்டதோடு இதை ஒப்பிடுகிறார்கள். பொதுவான ரசிகர்கள் சிலரும்கூட, `இந்த விதத்தில் நீக்கியிருக்கவேண்டாம்' என்று வருந்தினார்கள்.

டி-20, ஒருநாள் போட்டிகளில் இன்னும் கோலியின் தலைமையில் இந்தியா கோப்பை வெல்லவில்லை. தலைமைப் பண்பு கோப்பைகளால் கணக்கிடப்படும் காலகட்டம் இது. எனவே, 5 ஐ.பி.எல் கோப்பைகள் வென்ற ரோஹித் பெட்டர் கேப்டனாகத் தெரிவது இயல்புதான். ஆனால், கோப்பைகள் மட்டுமே கோலியின் நீக்கத்திற்குக் காரணமில்லை.

அணித்தேர்வில் செய்த முடிவுகள், களத்தில் எடுத்த முடிவுகள் என கோலியைச் சுற்றிப் பல சர்ச்சைகள். அவரின் அணுகுமுறையால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதகமான முடிவுகள் கிடைத்துக்கொண்டிருந்தாலும், ஷார்ட் ஃபார்மட்டில் எதிர்பார்த்த பலன்கள் இல்லை. அட்டகாசமான தனி நபர்களைக் கொண்ட அணியாக இந்திய அணி இருந்ததே தவிர, ஒரு அட்டகாசமான அணியாக உருவெடுக்கவில்லை. ‘கோலியால் அப்படி ஓர் அணியை ஒருங்கிணைக்க முடியவில்லை’ எனச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். இதுதான் பலமான பிளேயர்கள் இருந்தும் முக்கியமான போட்டிகளில் நாம் தோல்வியைச் சந்திக்க மிகமுக்கியமான காரணம்.

``விராட் கோலியை டி-20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. இரண்டு ஒயிட் பால் ஃபார்மட்களுக்கு இரண்டு கேப்டன்களைக் கொண்டிருக்க முடியாது. அதனால், ரோஹித்தையே இரண்டு ஃபார்மட்டுக்கும் கேப்டனாக்க முடிவு செய்தோம். கோலியும் அதற்கு ஒப்புக்கொண்டார்’’ என கோலி நீக்கம் குறித்து விளக்கியுள்ளார் பி.சி.சி.ஐ தலைவர் செளரவ் கங்குலி.

இந்திய மகளிர் ஒருநாள் அணிக்கு மிதாலி ராஜும், டி-20 அணிக்கு ஹர்மன்ப்ரீத் கௌரும் கேப்டனாக இருக்கிறார்கள். இதை ‘கோலி திட்டமிட்டுக் கட்டம் கட்டப்படுகிறார்’ என எடுத்துக்கொள்வதா, அல்லது, ‘மகளிர் அணிக்கு பி.சி.சி.ஐ போதுமான கவனம் செலுத்துவதில்லை’ என எடுத்துக்கொள்வதா?

இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடக்கவிருக்கும் நிலையில் கோலியை நீக்கியிருப்பது நிச்சயம் அவரின் ஈகோவைக் காயப்படுத்தியிருக்கும். தாய்மண்ணில் அணியைக் கோப்பையை நோக்கி வழிநடத்தத்தானே எந்தக் கேப்டனும் விரும்பியிருப்பார். அதனால் அணி உருவாக்கத்தில் ஒரு சீனியராய் ரோஹித்துக்கு அவர் எவ்வளவு தூரம் ஒத்துழைப்பார் என்பது கேள்விக்குறியே.

டெஸ்ட் பார்மட்டிலும் கோலிக்கு முன்போல முழுச் சுதந்திரம் இருக்குமா, பயிற்சியாளர் டிராவிட்டுக்கும் கோலிக்குமான கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதெல்லாமும் மில்லியன் டாலர் கேள்விகள்தான். ஏனெனில் கோலி களத்தில் ஆக்ரோஷமானவர், டிராவிட்டோ அப்படியே நேரெதிர். கடந்தகாலத்தில் வெளிப்படையாகவே கோலியின் ஆட்டிட்யூட்டை விமர்சித்தவர் டிராவிட். கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது கடைசியாக விளையாடிய ஜெயந்த் யாதவ் இப்போது மீண்டும் அணிக்குள். இதுவே அணித் தேர்வில் கோலியின் ஆதிக்கம் குறைவதைக் காட்டுகிறது.

கோலியின் எதிர்காலம் என்ன?

அதேசமயம், கோலி ஒரு பேட்ஸ்மேனாக ஒருநாள் போட்டிகளில் இனி நெருக்கடி இல்லாமல் விளையாடலாம். சதம் பற்றிய விமர்சனங்களைத் தோளில் சுமக்கத் தேவையில்லை. மறுபுறம் டி-20 அணியில் தன் இடத்தைத் தக்கவைக்க ஜூனியர் வீரர்களோடு போட்டி போட்டுத்தான் ஆகவேண்டும். அதனால், அடுத்த ஐ.பி.எல் அவருக்கு மிகமிக முக்கியமான ஒன்று.

எப்படிப் பார்த்தாலும், இனி கோலியை தினமும் விமர்சனங்கள் துரத்தப்போவதில்லை. பழையபடி பேட்டிங் ஃபார்மை மீட்டு, மீண்டும் கிங் கோலியாக, ஒரு பேட்டராக அவர் கிரிக்கெட் உலகை ஆளலாம், அரசியல் தலையீடுகள் இல்லாவிட்டால். கிரிக்கெட்டில் அரசியல் தவிர்க்க முடியாததுதான். ஆனால் அது ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேனை, ஒரு தலைசிறந்த அணியை பாதிக்கக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு ரசிகனின் எதிர்பார்ப்பும்.