Published:Updated:

எப்படி இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப்
பிரீமியம் ஸ்டோரி
News
டெஸ்ட் சாம்பியன்ஷிப்

நியூசிலாந்துக்கு இந்தக் கோப்பை எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிடப் பல மடங்கு கோலிக்கு இந்த வெற்றி முக்கியம். இதுவரை ஒரு பெரிய தொடரைக்கூட அவர் தலைமையில் இந்தியா வெல்லவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... 12 ஆண்டுகளுக்கு முன்பு விவாதிக்கப்பட்ட, ஒவ்வொரு முறையும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்த அந்த ஐடியா ஒருவழியாக இப்போது உயிர்பெறப்போகிறது. வரும் 18-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது கோலி தலைமையிலான இந்திய அணி.

முதன்முதலில் 2009-ம் ஆண்டு ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தவேண்டும் என்று பேச்சு எழுந்தது. டி-20 என்ற கிரிக்கெட்டின் நவீன ஃபார்மட்டுக்குக் காரணகர்த்தாவாக இருந்த முன்னாள் நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ் இந்தப் புதிய அஸ்திவாரத்தையும் அமைத்தார். ஆனால், மோசமான திட்டமிடல், ஸ்பான்சர் காரணங்கள் எனப் பல்வேறு விஷயங்களால் தடைப்பட்டுக்கொண்டே இருந்தது. 2013, 2017 தொடர்கள் தடைப்பட்டாலும், ஒருவழியாக 2019-ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கிவிட்டது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அணிகளுக்கு இடையே போட்டி வைத்து, அதில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதுமாறுதான் இந்தத் தொடர் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை நேரடியாக முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய சாம்பியன்ஷிப் ஒருகட்டத்தில் மிகவும் பரபரப்பான நிலைக்கு வந்தது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என நான்கு அணிகளுமே அந்த டாப் 2 இடங்களுக்குப் போட்டியிட்டன. கொரோனா காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் தடைப்பட, முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்தது பிளேக் கேப்ஸ். பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவைச் சாய்த்து வரலாறு படைத்த இந்திய அணி, சொந்த ஊரில் இங்கிலாந்தை வென்று பைனல் இடத்தை உறுதி செய்தது.

கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த போட்டி, இரு அணிகளும் பயோ பபுளில் இருக்க வசதியாக சௌதாம்ப்டனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. குறைந்த அளவு ரசிகர்களாவது அனுமதிக்கப்படுவார்கள் என்பதால், ஒரு ஐ.சி.சி பைனலுக்கான ஆரவாரத்தை ஓரளவுக்காவது எதிர்பார்க்கலாம்.

இந்தியா, நியூசிலாந்து இரண்டு அணிகளுக்குமே இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐ.சி.சி நாக் அவுட் டிராபி வென்ற நியூசிலாந்து, அதன்பிறகு அரையிறுதி, இறுதியில் தோற்பதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு பெரிய தொடர் அவர்களுக்கு வசப்படவில்லை. இதே இங்கிலாந்து மண்ணில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை வெல்லும் மகத்தானதொரு வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டனர். அதனால், இந்தத் தொடர் / போட்டி பல தலைமுறை நியூசிலாந்து ரசிகர்களுக்கும் ஒரு மிகப்பெரிய கனவாகவே மாறியிருக்கிறது.

எப்படி இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்?

நியூசிலாந்துக்கு இந்தக் கோப்பை எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிடப் பல மடங்கு கோலிக்கு இந்த வெற்றி முக்கியம். இதுவரை ஒரு பெரிய தொடரைக்கூட அவர் தலைமையில் இந்தியா வெல்லவில்லை. ஐ.பி.எல்... சொல்வதற்கு ஏதுமில்லை. போதாக்குறைக்கு கிடைக்கும் கேப்பில் எல்லாம் ‘ரோஹித்தை கேப்டனாக்கவேண்டும்’ என்ற கோஷங்களை மும்பை வாலாக்கள் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இது டெஸ்ட் ஃபார்மட் என்றாலும், இதிலும் வெல்லத் தவறுவது கோலிக்கே மிகப்பெரிய அவநம்பிக்கையாக அமையக்கூடும்.

இந்தத் தொடருக்கு முன்பாக இந்திய கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் சொல்லியிருப்பது, “இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் இத்தனை ஆண்டு உழைப்பை மதிப்பிட்டுவிட முடியாது” என்பதுதான். எடுத்ததுமே நெகட்டிவான ஸ்டேட்மென்ட் போலத்தான் தெரியும். ஆனால், அதை மறுக்க முடியாது என்பதுதான் உண்மை.

இந்திய அணி வெளிநாட்டு மைதானத்தில் ஒரு போட்டியிலாவது வென்றுவிடாதா என்று எண்ணிய நாள்கள் இன்னும் கண்முன்தான் நிற்கின்றன. ஆறு, ஏழு ஆண்டுகள் முன்பு வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என ஒவ்வொரு நாட்டிலும் படுதோல்வி அடைந்த அணி, இப்போது போராடுகிறது. வெல்லத் தொடங்கியிருக்கிறது. உலகின் மிகச் சிறந்த அணிக்கான குணங்களை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் இங்கிலாந்திலோ, தென்னாப்பிரிக்காவிலோ இந்தியா டெஸ்ட் தொடரை வென்றுவிடவில்லை. ஆனால், இதற்கு முன்பு ஆடியதைவிட மிகச் சிறப்பாகப் போராடியிருக்கிறது.

இந்திய அணியின் உழைப்பை எப்படி இந்த ஒரு போட்டியால் நிர்ணயித்துவிட முடியாதோ, அதேபோல் கோலியின் தாக்கத்தையும் வெற்றி தோல்வியால் நிர்ணயித்துவிட முடியாது. இந்திய அணியை அவர் கட்டமைத்த விதம் அபாரமானது. இதுவரை இல்லாத அளவுக்கு வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். மீம் மெட்டீரியல்களாக இருந்த இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் போன்றவர்கள் இன்று அணியின் முக்கிய அங்கமாக மாறியிருக்கிறார்கள். ரிசப் பன்ட் மீது வைத்த நம்பிக்கை இப்போது மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உருவாக உதவி புரிந்திருக்கிறது.

இந்த வெற்றி அணிக்கும் கோலிக்கும் மிகவும் முக்கியம். டி-20 மீதான மோகம் அதிகமாகிவிட்ட நாட்டில், இந்த வெற்றி டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை மீண்டும் அதிகரிக்கலாம். இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் நோக்கமே அதுதான். அந்த நோக்கம் நிறைவேற, கிரிக்கெட் உலகின் மையமான இந்தியாவில் மாற்றம் நிகழ்வது மிகமுக்கியமானது.

இந்தியாவுக்கு இருக்கும் ஒரு பாதகம், ஐ.பி.எல் தொடர் தடைப்பட்டதற்குப் பிறகு அவர்கள் எந்தப் போட்டியிலும் ஆடவில்லை. ஆனால், இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டுக் களமிறங்கப்போகிறது நியூசிலாந்து.

இந்தப் போட்டியின் அற்புதம் என்னவெனில், இதுவரை ஐ.சி.சி டிராபி வென்றிடாத... ஏன் ஐ.பி.எல் கோப்பையையும்கூட வென்றிடாத, ‘சோக்கர்ஸ்’ என்று வர்ணிக்கப்பட்ட இரண்டு கேப்டன்கள் தங்கள் அணிகளை வழிநடத்தப்போகிறார்கள். விராட் கோலி, கேன் வில்லியம்சன் இருவரில் ஒருவர் ஒரு மிகப்பெரிய கோப்பையில் கைவைக்கப்போகிறார்கள். டிரா ஆனால், இருவருமே கூட கோப்பையை ஏந்தலாம். இங்கு சூப்பர் ஓவர்கள் இல்லை!