கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

எப்படை வெல்லும்?

 IPL 2022
பிரீமியம் ஸ்டோரி
News
IPL 2022

IPL 2022

புதிய அணிகள், புதிய வீரர்கள் எனப் புதுப்பொலிவோடு தொடங்கப்போகிறது ஐ.பி.எல் 2022. லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் என்ட்ரி கொடுக்க, ஒட்டுமொத்தமாக வீரர்களைக் கலைத்துப் போட்டு மெகா ஏலம் நடத்தப்பட்டது. பல ஆண்டுகள் ஓர் அணியின் அங்கமாக இருந்த வீரர்கள் இப்போது வேறு அணிகளுக்கு மாறியிருக்கிறார்கள். அதிக நாள்கள், அதிக போட்டிகள் என எல்லா வகையிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குத் தீனி போடக் காத்திருக்கிறது இந்தப் புதிய சீசன். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனம் என்ன? எந்த வீரர் அவர்களுக்கு டிரம்ப் கார்டாக இருக்கப்போகிறார்... அலசுவோம்.

எப்படை வெல்லும்?

சென்னை சூப்பர் கிங்ஸ்

டுப்ளெஸ்ஸி, ஷர்துல் தாக்கூர் போன்ற சில வீரர்களை இழந்திருந்தாலும், பெரும்பாலான முன்னாள் வீரர்களை மீண்டும் ஒன்றிணைத்துவிட்டது சி.எஸ்.கே. டி-20 ஃபார்மட்டில் பட்டையைக் கிளப்பும் வீரர்கள் இல்லையென்றாலும், எப்போதும்போல் அனுபம் கொண்ட கன்சிஸ்டென்ட் பெர்ஃபாமர்களை வாங்கியிருக்கிறார்கள். இதுவே அணியின் மிகப்பெரிய பலம். சூப்பர் கிங்ஸின் டெம்ப்ளேட்டுக்குள் அந்த வீரர்கள் பொருந்திப்போய்விடுவார்கள் என்பதால், நிச்சயம் பழைய சூப்பர் கிங்ஸின் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். ஷிவம் தூபே, ராஜ்வர்த்தன் ஹங்கர்கேக்கர் போன்ற வீரர்கள் அணியின் எதிர்காலப் பயணத்தில் முக்கிய அங்கமாக இருப்பார்கள். தீபக் சஹார், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் ஃபிட்னஸ் மட்டும்தான் இப்போதைக்கு சென்னைக்கு இருக்கும் பெரும் அச்சுறுத்தல். தோனி எப்படியான ஃபார்மில் இருக்கப்போகிறார் என்பதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், ஜடேஜாவின் பேட்டிங்கை அதிகம் நம்பவேண்டியிருக்கும். முதல்முறையாக சுரேஷ் ரெய்னா இல்லாமல் சூப்பர் கிங்ஸைப் பார்ப்பது ரசிகர்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும்.

எப்படை வெல்லும்?

மும்பை இந்தியன்ஸ்

கடந்த 10 ஆண்டுகளாக ஐ.பி.எல் அரங்கைக் கோலோச்சிய பழைய மும்பை இந்தியன்ஸ் இப்போது இல்லை. இஷன் கிஷனை வாங்கக் காத்திருந்து பல முன்னாள் வீரர்களை இழந்துவிட்டனர். இருந்தாலும் ஜோஃப்ரா ஆர்ச்சர், டிம் டேவிட் போன்ற அச்சுறுத்தும் வீரர்களை வாங்கியிருப்பது நம்பிக்கை தருகிறது. ரோஹித் ஷர்மா, இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட், டிம் டேவிட் என்ற பலமான பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. அம்பதி ராயுடு, சூர்யகுமார் வரிசையில் திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் பட்டறையில் தீட்டப்படும் அடுத்த வைரமாக இருப்பார். பேட்டிங் பலமாக இருந்தாலும், பந்துவீச்சு பிரச்னையாக இருக்கலாம். ஆர்ச்சர் வரும் வரை பும்ரா மீது நெருக்கடி பல மடங்கு அதிகரிக்கும். ஐ.பி.எல் அனுபவம் கொண்ட ஸ்பின்னர்கள் இருந்தாலும், மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுப்பார்களா என்பது கேள்விக்குறிதான். அரையிறுதி வாய்ப்பு பும்ரா கையில்தான்.

எப்படை வெல்லும்?

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

தங்கள் பழைய வீரர்கள் பலரையும் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், புதிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கப்போகிறது. வெங்கடேஷ் ஐயர், நித்திஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர், ரஸல் அடங்கிய பேட்டிங் குழு நிச்சயம் பெரிய ஸ்கோர்களை எடுத்துவிடும். பல புதிய வீரர்களை வாங்கியிருந்தாலும், பழைய பிரச்னைகள் சரிசெய்யப்பட்டதுபோல் தெரியவில்லை. மிடில் ஆர்டர் மீண்டும் ரஸலை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. அதேபோல், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களும் நம்பிக்கை தருவதுபோல் இல்லை. விக்கெட் கீப்பர் ஸ்லாட்டுக்கும் நிரந்தரமாக ஆடக்கூடியவர் என்று சொல்லும்படியான வீரர்கள் இல்லை. அதனால், ஒன்றிரண்டு பொசிஷன்களுக்கு யாரைத் தேர்வு செய்வது என்ற குழப்பம் வரலாம். என்னதான் சில இடங்களில் பிரச்னைகள் இருந்தாலும், மற்ற இடங்களை நிரப்பும் அனைவருமே மேட்ச் வின்னர்கள் என்பதால், போட்டியின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம்.

எப்படை வெல்லும்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இந்த ஐ.பி.எல் ஏலத்தில் மிகமோசமாக செயல்பட்ட அணி நிச்சயம் சன்ரைசர்ஸ் தான். தங்களின் ‘வேகப்பந்துவீச்சு’ அடையாளத்தைத் தக்கவைக்க நினைத்தார்களோ என்னவோ, அணி முழுவதும் வேகப்பந்துவீச்சாளர்களாக வாங்கி வைத்திருக்கிறார்கள். புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி, நடராஜன் என 4 இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள். இவர்கள் அனைவருமே பிளேயிங் லெவனில் ஆடக்கூடியவர்கள். அப்படியிருக்கையில் மார்கோ யான்சன், சான் அபாட், ஃபசல்ஹக் ஃபரூகி என 3 வெளிநாட்டு ஃபாஸ்ட் பௌலர்கள் வேறு. வில்லியம்சன், மார்க்ரம், பூரண் என 3 வெளிநாட்டு பேட்டர்கள் இருக்க, அவர்களுக்கு பேக் அப் ஆக கிளென் ஃபிளிப்ஸ் என ஒரேயொரு வெளிநாட்டு வீரர் மட்டுமே. இளம் ஆல்ரவுண்டர் அபிஷேக் ஷர்மாவை 6.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். பஞ்சாப் அணிக்காக ஓப்பனிங்கில் சிறப்பாக செயல்பட்ட இவரை, மார்க்ரம் உடன் தொடக்க வீரராக இறக்குவது நல்லது. பௌலிங்கும் செய்வார் என்பதால், அணியின் ஒட்டுமொத்த பேலன்ஸுக்குமே அபிஷேக் ஷர்மா மிகவும் முக்கியம்.

எப்படை வெல்லும்?

ராஜஸ்தான் ராயல்ஸ்

பழைய அடையாளத்தை விட்டுவிட்டு, அனுபவமிக்க இந்திய வீரர்களை வாங்கி அணியை பலப்படுத்தியிருக்கிறார்கள். ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சஹால், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், நாதன் கூல்டர்நைல் என அந்த பௌலிங் படையைப் பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் என டாப் ஆர்டர் பேட்டிங்கும் சிறப்பாக இருக்கிறது. இன்றைய பெரும்பாலான அணிகளுக்கு இருக்கும் மிடில் ஆர்டர் சிக்கல் இந்த அணிக்கும் இருக்கிறது. யஷஷ்வி ஜெய்ஸ்வாலை தக்கவைத்துவிட்டு, படிக்கலை வாங்கியதும் சிக்கலை உண்டாக்கியிருக்கிறது. ஆனால், பட்லர் மிடில் ஆர்டரில் களமிறங்கி, ஃபினிஷர் ரோலை ஏற்றுக்கொண்டால் அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். அப்படி நடந்தால், இந்த சீசனின் சிறந்த பிளேயிங் லெவனாக இது அமையலாம். இல்லையெனில், ஒரு முன்னணி பௌலரை வெளியே அமரவைத்து ஒரு பேட்டரை அல்லது ஆல் ரவுண்டரைச் சேர்க்கவேண்டும். வேன் டெர் டுசன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம் போன்றவர்களே பேக் அப் என்பது இந்த அணியின் பலத்தைக் காட்டுகிறது.

எப்படை வெல்லும்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய கேப்டனோடு களமிறங்குகிறது ஆர்.சி.பி. டுப்ளெஸியின் தலைமையில் இந்த முறையாவது அந்தக் கோப்பையை வென்றுவிடவேண்டும் என்ற வேட்கையோடு அந்த அணி களமிறங்கும். பல காலமாக இருந்துவந்த சில பிரச்னைகளைச் சரிசெய்திருக்கிறார்கள். பல ஓட்டைகளை அடைக்காமல் விட்டிருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக்கை எடுத்து கீப்பிங் பிரச்னையைச் சரிசெய்திருக்கிறது அந்த அணி. ஆனால், ஃபினிஷிங் ரோல், கொல்கத்தாவில் இருந்த நெருக்கடியை இங்கும் கொடுக்கலாம். ஹேசில்வுட் போன்ற அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர் இருப்பது பந்துவீச்சை பலப்படுத்துகிறது. ஆனால், பேட்டிங்கில் இருக்கும் ஓட்டையை அடைக்க, ஒரு வெளிநாட்டு பேட்டரைக் களமிறக்க முடியாத சூழ்நிலையை அது ஏற்படுத்தியிருக்கிறது. டி வில்லியர்ஸ் இல்லாததால் மேக்ஸ்வெல் மீதான நெருக்கடி அதிகமாகும்.வழக்கமாக பிளேயிங் லெவனில் சொதப்பும் பெங்களூரு, இந்த முறை ஏலத்திலேயே தடுமாறியிருக்கிறது.

எப்படை வெல்லும்?

டெல்லி கேப்பிட்டலஸ்

மும்பை இந்தியன்ஸைப் போலத்தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் நிலையும். பல முன்னணி இந்திய வீரர்களைக் கொண்டிருந்த அந்த அணியால், அவர்களைத் தக்கவைக்க முடியவில்லை. இருந்தாலும், ஓரளவுக்குச் சிறப்பான அணியைக் கட்டமைத்திருக்கிறார்கள். டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷர்துல் தாக்கூர் எனப் பல பெரிய பெயர்களை இந்த ஏலத்தில் வாங்கியிருக்கிறார்கள். பிரித்வி ஷா தொடங்கி ரிசப் பன்ட் வரையிலான பேட்டிங் ஆர்டர் அட்டகாசமாக இருக்கிறது. ஆனால், கடந்த சீசன்களில் தொடர்ந்த அந்த ஃபினிஷிங் பிரச்னை இப்போதும் தொடர்கிறது. வெஸ்ட் இண்டீஸ் ஃபினிஷர் ரோவ்மன் பவல், ஐ.பி.எல் தொடரில் சிறப்பாகச் செயல்படுவாரா, தெரியவில்லை. இது பன்ட் மீதான நெருக்கடியை அதிகரிக்கும். அதேபோல், டெத் பௌலிங், சுழல் ஏரியாக்களும் கொஞ்சம் பலவீனமாகியிருக்கின்றன. அஷ்வின், மிஷ்ரா போன்றவர்கள் இருந்த இடத்தில் ஃபார்மில் இல்லாத குல்தீப் யாதவ். ரபாடாவின் இடத்தை யாரைக் கொண்டும் நிரப்ப முடியாது என்பது ஒருபுறம் இருக்க, சரியான டெத் பௌலரை இவர்கள் வாங்கவேயில்லை என்பது பிரச்னை. முஸ்தாஃபிசுர் ரஹ்மான் இருந்தாலும், அவரை பிளேயிங் லெவனில் ஆடவைப்பது கடினம்.

எப்படை வெல்லும்?

பஞ்சாப் கிங்ஸ்

முன்பைவிட ஓர் அணி பலமாகியிருக்கிறது என்றால் பஞ்சாப் கிங்ஸ்தான். ஐ.பி.எல் தொடரில் நிரூபித்த வீரர்கள், டி-20 ஃபார்மட்டில் பட்டையைக் கிளப்பும் வீரர்கள் எனக் கலந்துகட்டி வாங்கியிருக்கிறார்கள். சரியான பிளேயிங் லெவனைத் தேர்வு செய்து, அதை மாற்றாமல் தொடர்ந்தால் நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறலாம். அப்படிப்பட்ட அணியாக இருக்கிறது பஞ்சாப். தவான், பேர்ஸ்டோ, மயாங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டன், ஷாரூக் கான் என பேட்டிங் யூனிட் மிரட்டுகிறது. பந்துவீச்சில் ஆர்ஷ்தீப் சிங், ரபாடா, ராகுல் சஹார் போன்றவர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். இரண்டையும் இணைக்கும் ஆல் ரவுண்டராக ஒடியன் ஸ்மித் - இந்தியாவுக்கு எதிராகச் சிறப்பாகவே செயல்பட்டார். அதை இங்கும் தொடர்ந்தால் நிச்சயம் எதிரணிகளுக்குப் பிரச்னைதான். தமிழக வீரர் ஷாரூக் கான் இந்திய அணிக்குள் நுழைவதற்கு இது சரியான தொடர்.

எப்படை வெல்லும்?

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்

ஐ.பி.எல் வரலாற்றின் மிகவும் காஸ்ட்லியான அணி என்ற அடையாளத்தோடு தொடங்குகிறது லக்னோ. ஒரு நல்ல அணியை உருவாக்குவதற்கான அடித்தளமாக கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, குருனால் பாண்டியா, அவேஷ் கான், ரவி பிஷ்னாய் என நம்பிக்கை தரக்கூடிய இந்திய வீரர்கள் பலரையும் தங்கள் அணியில் இணைத்திருக்கிறார்கள். டி காக், ஸ்டாய்னிஸ், ஜேசன் ஹோல்டர் போன்ற உலகத்தர வெளிநாட்டு வீரர்கள், அவர்கள் பிளேயிங் லெவனை சிறப்பாக்குகிறார்கள். அதிக ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் பௌலிங் ஆப்ஷன்களுக்குப் பிரச்னை இல்லை. மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா போன்றவர்கள் சீராக விளையாடினால் நிச்சயம் பிளே ஆஃப் போட்டியில் லக்னோ இருக்கும். மார்க் வுட் அடிக்கடி காயத்தால் அவதிப்படக்கூடியவர் என்பதுதான் பிரச்னை. ஹோல்டர், வுட் இருவருக்கும் சேர்த்தே துஷமன்த்தா சமீரா மட்டும்தான் பேக் அப் ஆப்ஷனாக இருக்கிறார். நல்ல மாற்று வீரர்தான் என்றாலும், குறைவான ஆப்ஷன்கள் இருப்பது பாதிக்கலாம்.

எப்படை வெல்லும்?

குஜராத் டைட்டன்ஸ்

ரஷீத் கான், ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், முகமது ஷமி, லாகி ஃபெர்குசன் என நிறைய சூப்பர் ஸ்டார் பிளேயர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான்கைந்து சூப்பர் ஸ்டார் வீரர்களால் ஒரு அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாதே! ஏலத்தில் மோசமாகச் செயல்பட்ட அணிக்கான போட்டியில் சன்ரைசர்ஸோடு மல்லுக்கட்டக்கூடிய அணி குஜராத் டைட்டன்ஸ் தான். ரஷீத் கான் இருக்கும்போது ராகுல் தெவேதியாவை 9 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். பிளேயிங் லெவன் காம்பினேஷன் பற்றி யோசிக்காதது, ஒட்டுமொத்தமாக இந்த அணியைப் பின்தங்கவைத்திருக்கிறது. ஏலத்தில் வாங்கப்பட்ட ஜேசன் ராய் விலகியிருப்பது, பேட்டிங்கை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது. சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா மீது முதல் போட்டியிலிருந்தே பெரும் நெருக்கடி ஏற்படும். கடந்த சில ஆண்டுகளாக சன்ரைசர்ஸ் எப்படி ஆடியதோ அப்படித்தான் இந்த அணி ஆடப்போகிறது - ரஷீத் கானை மட்டும் நம்பி.