Published:Updated:

ஐ.பி.எல் 2021 : அணிகள் தயார்... ஆரம்பிக்கலாங்களா?

ஐ.பி.எல் 2021
பிரீமியம் ஸ்டோரி
ஐ.பி.எல் 2021

கடந்த முறை தன்னை நிரூபிக்கத் தவறிய கேப்டன் கூல் தோனியின் ஃபார்ம்தான் அணியின் வெற்றிப் பயணத்தைத் தீர்மானிக்கும்.

ஐ.பி.எல் 2021 : அணிகள் தயார்... ஆரம்பிக்கலாங்களா?

கடந்த முறை தன்னை நிரூபிக்கத் தவறிய கேப்டன் கூல் தோனியின் ஃபார்ம்தான் அணியின் வெற்றிப் பயணத்தைத் தீர்மானிக்கும்.

Published:Updated:
ஐ.பி.எல் 2021
பிரீமியம் ஸ்டோரி
ஐ.பி.எல் 2021
ஐ.பி.எல் 2021 : அணிகள் தயார்... ஆரம்பிக்கலாங்களா?

சென்னை சூப்பர் கிங்ஸ்

கடந்த ஐ.பி.எல் தொடரில், அதுவரை சந்திக்காத வீழ்ச்சியைச் சந்தித்தது சூப்பர் கிங்ஸ். தொடர் சொதப்பல்களால், முதல் முறையாக பிளே ஆஃப் வாய்ப்பைத் தவறவிட்டது யெல்லோ ஆர்மி. அதனால் இம்முறை மீண்டும் தங்கள் பலத்தை நிரூபிக்க தோனியின் படை காத்திருக்கிறது. அடிபட்ட சிங்கத்தின் மூச்சுக்காற்றுதான் கர்ஜனையைவிட பலமாக இருக்குமே!

சுரேஷ் ரெய்னா, பிராவோ ஆகியோர் திரும்ப வந்திருப்பது, ஷர்துல் தாக்கூர், சாம் கரண், உத்தப்பா ஆகியோர் ஃபார்மில் இருப்பது சென்னைக்கு மிகப்பெரிய பலம். மொயீன் அலி இருப்பதால் ஹிட்டருக்கான இடத்தை அவர் நிரப்பலாம். ஸ்பின்னுக்குச் சாதகமான மைதானங்கள் அதிகம் இருக்கும்போது, நல்ல ஆஃப் ஸ்பின்னர் இல்லாதது பின்னடைவாக அமையலாம். கடந்த முறை தன்னை நிரூபிக்கத் தவறிய கேப்டன் கூல் தோனியின் ஃபார்ம்தான் அணியின் வெற்றிப் பயணத்தைத் தீர்மானிக்கும்.

ஐ.பி.எல் 2021 : அணிகள் தயார்... ஆரம்பிக்கலாங்களா?

டெல்லி கேப்பிடல்ஸ்

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியிருப்பதால், ரிசப் பன்ட் டெல்லி அணியை வழிநடத்தவிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பேட்ஸ்மேனாக பட்டையைக் கிளப்பிவரும் ரிசப் பன்ட் இந்தப் பொறுப்பை எப்படிக் கையாளப்போகிறார் என்பது அந்த அணியின் வெற்றி வாய்ப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது பலமாகவும் அமையலாம், பலவீனமாகவும் அமையலாம்.

கடந்த சீசனில் சொதப்பிய பிரித்வி ஷா, விஜய் ஹசாரே தொடரில் ஒரு இரட்டைச் சதம், மூன்று சதங்கள் என வேற லெவல் ஃபார்மில் இருக்கிறார். அவரோடு தவான், பன்ட், ரஹானே, ஹிட்மேயர், ஸ்டாய்னிஸ், பில்லிங்ஸ், ஸ்மித் என மிகப்பெரிய பட்டாளமே இருக்கிறது. பேட்டிங்குக்கு இணையாக பந்துவீச்சும் முன்னணி வீரர்கள் நிரம்பிய குழுவாகவே இருக்கிறது. ரபாடா, நார்கியா, கிறிஸ் வோக்ஸ், அஷ்வின், அக்‌ஷர், அமித் மிஷ்ரா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் என சர்வதேச அனுபவம் கொண்டவர்கள் இருப்பது அவர்களுக்கு மாபெரும் சாதகம். கடந்த முறை தவறிய கோப்பையை டெல்லி அணி இம்முறை கைப்பற்றக்கூடும்!

ஐ.பி.எல் 2021 : அணிகள் தயார்... ஆரம்பிக்கலாங்களா?

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதற்குத் தகுதியான ஓர் அணியாகக் காட்சியளிக்கிறது நைட்ரைடர்ஸ். ஷகிப் அல் ஹசன், பென் கட்டிங், ஹர்பஜன் சிங் என அனுபவ வீரர்களை இந்த ஏலத்தில் வாங்கியிருப்பது அவர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும். ரஸல், நரைன் போன்றவர்கள் ஃபார்மில் இல்லையென்றாலும், அவர்கள் இடத்தை நிரப்ப சரியான ஆட்கள் இருப்பது முந்தைய சிக்கல்களை சரிசெய்துவிடும்.

கம்மின்ஸ், லாகி ஃபெர்குசன், நரைன், ஷகிப், குல்தீப், வருண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா, ஷிவம் மாவி, ஹர்பஜன், பவன் நெகி என அவர்கள் பந்துவீச்சில் ஃபயருக்குப் பஞ்சமே இல்லை. எப்படியான காம்பினேஷனோடும் களம் காணலாம். வீரர்களின் ஃபிட்னஸ்தான் இவர்களுக்குப் பெரிய எதிரியாக இருக்கும். ரஸல், வருண் சக்ரவர்த்தி, நாகர்கோட்டி போன்றவர்கள் ஓயாமல் காயமடையக்கூடியவர்கள். வீரர்களை மோர்கன் எப்படிக் கையாள்கிறார் என்பதே அவர்களின் வாய்ப்பை நிர்ணயிக்கப்போகிறது.

ஐ.பி.எல் 2021 : அணிகள் தயார்... ஆரம்பிக்கலாங்களா?

மும்பை இந்தியன்ஸ்

ஹாட்ரிக் ஐ.பி.எல் கோப்பை வென்ற முதல் அணி என்ற மகத்தான சாதனையைப் படைக்கக் காத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ். ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் பலமடைந்து கொண்டிருக்கிறது ரோஹித்தின் அணி. இம்முறை தங்கள் ஜாம்பவான் மலிங்காவை இழந்தாலும் ஆடம் மில்னேவை வாங்கி அந்த இடத்தை ஈடுகட்ட முயன்றிருக்கிறார்கள். டிரென்ட் போல்ட், கூல்டர்நைல் போன்ற அட்டகாச பௌலர்கள் இருப்பதால் எந்த பிரச்னையும் இருக்காது.

சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன், பாண்டியா பிரதர்ஸ் என எல்லோரும் சர்வதேச அரங்கில் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார்கள். அது அணிக்கு நம்பிக்கையை அதிகரிக்கும். கொஞ்சம் பலவீனமாக இருந்த சுழற்பந்துவீச்சை பியூஷ் சாவ்லாவின் வருகை பலமாக்கும். பும்ரா, ஹர்திக், ரோஹித் போன்றவர்கள் ஃபிட்டாக இருப்பது மும்பை இந்தியன்ஸுக்கும் முக்கியம், இந்தியன்ஸுக்கும் முக்கியம்!

ஐ.பி.எல் 2021 : அணிகள் தயார்... ஆரம்பிக்கலாங்களா?

பஞ்சாப் கிங்ஸ்

தங்களின் மோசமான வரலாற்றை மாற்றும் முயற்சியின் முதல் அடியாக அணியின் பெயரை மாற்றியிருக்கிறது பஞ்சாப் நிர்வாகம். கிங்ஸ் லெவன் பஞ்சாப் இப்போது பஞ்சாப் கிங்ஸ் ஆகியிருக்கிறது. பெயரை மாற்றிய கையோடு கோடிகளைக் கொட்டி ஜை ரிச்சர்ட்சன், ரைலி மெரிடித், ஷாரூக் கான் என இளம் வீரர்களை வாங்கியிருக்கிறார்கள். இதற்கு முன்பு அந்த அணியில் விளையாடிய காஸ்ட்லி வீரர்களைப்போல் இல்லாமல், இவர்கள் மிளிரவேண்டியது அவசியம்.

முருகன் அஷ்வின், ரவி பிஷ்னாய் தவிர்த்து முன்னணி ஸ்பின்னர்கள் இல்லாதது ஒரு பலவீனம். கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், டேவிட் மலான், நிகோலஸ் பூரண் என இவர்களின் டாப் ஆர்டர் ஏலியன் லெவலில் இருக்கிறது. இவர்கள் ஒருசேர கிளிக் ஆனால், எந்த எதிரணியும் ஆட்டம் கண்டுவிடும். புதிய மிடில் ஆர்டரும், பந்துவீச்சாளர்களும் கைகொடுத்தால் எதிர்பார்த்த மாற்றம் பஞ்சாப்புக்குக் கிடைக்கும்.

ஐ.பி.எல் 2021 : அணிகள் தயார்... ஆரம்பிக்கலாங்களா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஈ சாலாவாவது கப் அடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கப்போகிறது கோலியின் படை. கோலி, டி வில்லியர்ஸ் என்ற மாஸ் பேட்டிங் காம்போவில் இப்போது மேக்ஸ்வெல் இணைந்திருக்கிறார். அவர் நன்றாக ஆடினால், ஆர்.சி.பி பேட்டிங் வேறு லெவலில் இருக்கும். ஆனால், அவரது ஐ.பி.எல் ரெக்கார்டுதான் அந்த நம்பிக்கையைக் குலைக்கிறது.

4 வெளிநாட்டு வீரர்கள் யார், மிடில் ஆர்டரில் ஆடப்போகும் இந்திய வீரர் யார், எத்தனை வேகப்பந்துவீச்சாளர்கள் ஆடப்போகிறார்கள் என்பதுபோன்ற கேள்விகளுக்கு கோலி சரியான பதிலைத் தேடவேண்டும். 15 கோடி ரூபாய் கொட்டி வாங்கப்பட்டிருக்கும் ஜேமீசன் இன்னும் இந்தியாவில் நிரூபிக்கவில்லை. அவர்மீதும் பெரிய நெருக்கடி இருக்கும். சுருக்கமாகச் சொன்னால், இவர்களின் வெற்றி வாய்ப்பு கோலி, மேக்ஸ்வெல் ஆகியோர் கையில்தான். கோலி கேப்டன்சியிலும், மேக்ஸ்வெல் பேட்டிங்கிலும் புதிதாக, சரியாக ஏதேனும் செய்தால் மட்டுமே கனவு காணலாம்.

ஐ.பி.எல் 2021 : அணிகள் தயார்... ஆரம்பிக்கலாங்களா?

ராஜஸ்தான் ராயல்ஸ்

புதிய கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையில் முதல் முறையாகக் களமிறங்கவுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். ஸ்டீவ் ஸ்மித்தைக் கழற்றிவிட்டது, மோரிஸ், முஸ்தாஃபிசுர் போன்றவர்களை வாங்கியது என ஏலத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள். களத்திலும் முடிவுகள் சரியாக அமைந்தால், மீண்டும் ஒரு முறை ராஜஸ்தான் சாம்பியன் ஆகலாம்.

ஆர்ச்சர் காயத்தால் பெரும்பாலான போட்டிகளில் ஆடமுடியாது. அது அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பாக அமையும். இளம் இந்திய பேட்ஸ்மேன்கள், குறிப்பாக கேப்டன் சஞ்சு சாம்சன் சீராக விளையாடவேண்டியது அவசியம். தெவேதியா வரை பேட்டிங், 7 பௌலிங் ஆப்ஷன் என அட்டகாசமான பிளேயிங் லெவனை அவர்களால் களமிறக்க முடியும். இதுவே அவர்களின் மிகப்பெரிய பலமும்கூட.

ஐ.பி.எல் 2021 : அணிகள் தயார்... ஆரம்பிக்கலாங்களா?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

வெளிநாட்டு வீரர்களில் யாரைக் களமிறக்குவது என்பதே ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். கேப்டன் வார்னர், ரஷீத் கான் விளையாடுவது உறுதி. மீதமிருக்கும் 2 இடங்களுக்கு ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், ஜேசன் ஹோல்டர், முகமது நபி, முஜுபுர் ரஹ்மான் என முரட்டுத்தனமாக 6 வீரர்கள் இருக்கிறார்கள். யாரைத் தேர்வு செய்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

புவி, விஜய் சங்கர் இருவரும் மீண்டும் வந்திருப்பதால் அணி வழக்கம்போல் பலமாகவே இருக்கிறது. யார்க்கர் மன்னன் நடராஜன், சந்தீப் ஷர்மா, சித்தார்த் கௌல், கலீல் அஹ்மது, பசில் தம்பி என இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிகம் இருந்தாலும், முன்னணி இந்திய ஸ்பின்னர்கள் இல்லாதது ஒரு குறை. ஷபாஸ் நதீம் சிறப்பாகச் செயல்படாவிட்டால், டீம் காம்பினேஷனில் நிறைய மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும். வீரர்களின் ஃபிட்னஸ் அணிக்கு மிகப்பெரிய சவால்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism