கட்டுரைகள்
Published:Updated:

போட்டி எண் 1000: கிரிக்கெட்டின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறதா ஐ.பி.எல்?

ஐ.பி.எல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.பி.எல்

ஐ.பி.எல் தொடர் இந்த 1000-மாவது போட்டியை எட்டும் தறுவாயில் அப்படி ஒரு அபரிமித வளர்ச்சியைத்தான் பெற்றிருக்கிறது

`ஐ.பி.எல் போட்டிகளை டி.வி-யில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகப் பாருங்கள்' என விராட் கோலி ஒரு விளம்பரப்படத்தில் நடனமாடிக்கொண்டே சொல்கிறார். இன்னொரு பக்கம் தோனியோ, ‘டி.வி-யில் பார்ப்பதெல்லாம் பழைய ஸ்டைல். மொபைலில் பார்ப்பதுதான் இப்போதைய டிரெண்ட்' என அவர் ஒப்பந்தம் செய்திருக்கும் நிறுவனத்திற்காகக் குரல் கொடுக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் இருபெரும் சூப்பர் ஸ்டார்கள் இப்படி ஒரு ப்ரீமியர் லீக் போட்டிக்காக விளம்பர நிறுவனங்களால் எதிரெதிர் திசையில் நிற்க வைக்கப்படுவார்கள் என எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருப்போமா? இதெல்லாம் எப்படி சாத்தியப்பட்டது? ஐ.பி.எல் தொடரின் 1000-மாவது போட்டியை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், கிரிக்கெட்டில் ஐ.பி.எல் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பற்றி விரிவாகவே பேசவேண்டும்.

2007-ல் தோனி தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்ற சமயத்தில்தான், வளர்ந்து வந்த அந்தப் புதிய கிரிக்கெட் வடிவத்தின் மதிப்பை இந்திய கிரிக்கெட் சமூகம் புரிந்துகொள்ளத் தொடங்கியது. இந்திய கிரிக்கெட் வாரியம் ஏதும் செய்வதற்கு முன்பாகவே சில தொழிலதிபர்களின் உதவியுடனும் டீன் ஜோன்ஸ், டோனி க்ரெய்க், கபில்தேவ் ஆகியோரின் ஆலோசனையுடனும் ‘இந்தியன் கிரிக்கெட் லீக்' என்றொரு தொடர் தொடங்கப்பட்டது. கிரிக்கெட் வாரியத்தின் கடுமையால், அது உடனே முடித்தும் வைக்கப்பட்டது. 2008-ம் ஆண்டிலிருந்துதான் இந்தியன் ப்ரீமியர் லீக் என்ற பெயரில் பி.சி.சி.ஐ புதிதாக ஒரு தொடரைத் தொடங்கியது.

2008, ஏப்ரல் 18 அன்று ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி ஆடப்பட்டபோது அது இவ்வளவு நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் என்றோ கிரிக்கெட் உலகில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றோ யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதிய அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி வென்றது. அந்த அணியின் சார்பில் பிரண்டன் மெக்கல்லம் சுழன்றடித்து 158 ரன்களை எடுத்திருந்தார். அத்தனை பேரையும் மிரள வைத்த மெக்கல்லமை நோக்கி கொல்கத்தா அணியின் கேப்டன் கங்குலி விரைந்தார். ஆரத்தழுவி தோளில் தட்டிக் கொடுத்து ‘உன் வாழ்க்கையையே இந்த ஒரு இன்னிங்ஸ் மூலம் மாற்றிவிட்டாய்' எனப் பேருவகையோடு வாழ்த்தினார். கங்குலியின் வார்த்தைகள் மெக்கல்லமிற்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடருக்குமானது. மெக்கல்லம் சரவெடியில் அதிரடியாகத் தொடங்கிய ஐ.பி.எல் அடுத்தடுத்து எடுத்து வைத்ததெல்லாம் அசுரப் பாய்ச்சல்தான்.

ஐ.பி.எல் கோப்பை
ஐ.பி.எல் கோப்பை

ஒரு திரைப்படத்தைவிட சற்றே அதிகமான நேரம், மூன்றரை மணி நேரத்தில் மொத்த ஆட்டமும் முடிந்துவிடும். அதுவரை பார்த்திடாத சேர்க்கையில் வெளிநாட்டு வீரர்களையும் உள்நாட்டு வீரர்களையும் ஒரே அணியில் கொண்டிருத்தல், ஐ.பி.எல்-க்கே உரிய வண்ணமயத்தன்மை, பிரமாண்ட விளம்பரங்கள், சினிமாக்காரர்களின் கிரிக்கெட் என்ட்ரி என இந்த ப்ரீமியர் லீக் மூலம் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுத்து அவர்களின் பிரியத்தைக் கொள்ளைகொண்டனர். அதன்பிறகு, கோடைக்காலம் என்றால் வெயில் இல்லாமல்கூட இருக்கலாம். ஐ.பி.எல் இல்லாமல் இருக்க முடியாது எனும் நிலைக்கு ரசிகர்கள் பித்துப் பிடித்துப்போயினர். விளைவு, ஐ.பி.எல்-லின் சந்தை மதிப்பும் எகிறிக்கொண்டே சென்றது.

‘15 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.பி.எல் தொடங்கப்பட்டபோது இதில் இவ்வளவு பெரிய வர்த்தகம் நடக்கும் எனக் கற்பனைகூட செய்து பார்த்ததில்லை' எனச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தனது வியப்பை வெளிப் படுத்தியிருந்தார். கவாஸ்கரின் வியப்பில் எந்த அதீதமும் இல்லை. ஏனெனில், ஐ.பி.எல் தொடர் இந்த 1000-மாவது போட்டியை எட்டும் தறுவாயில் அப்படி ஒரு அபரிமித வளர்ச்சியைத்தான் பெற்றிருக்கிறது. 2008-2017 ஐ.பி.எல் தொடரின் முதல் 10 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமை ரூ.8,200 கோடிக்கு விற்பனையாகியிருந்தது. 2018-22 வரையிலான ஐந்தாண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமை (தொலைக்காட்சி + டிஜிட்டல்) ரூ.16347.50 கோடிக்கு விற்பனையாகியிருந்தது. ஒப்பந்த ஆண்டுகள் குறைந்து குறைந்து விற்பனைத் தொகை மட்டும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. சமீபத்தில் விற்பனையான 2023 - 2027 வரையிலான ஐந்தாண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமை இன்னும் மலைக்க வைத்தது. டிஜிட்டல் உரிமை மட்டும் ரூ.23,758 கோடி, தொலைக்காட்சி உரிமை ரூ.23,575 கோடிக்கு வர்த்தகமானது. கிரிக்கெட்டைக் கடந்து தொழில்நுட்பரீதியாக உலகம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதையும் இதன்மூலம் புரிந்துகொள்ள முடியும். தொலைக்காட்சியைவிட இணையதளத்துக்கான டிமாண்ட் அதிகமாகியிருக்கிறது. ஒளிபரப்பின் போதுமே தொலைக்காட்சியைவிட பலரும் இணைய தளத்திலேயே போட்டிகளை விரும்பிப் பார்க்கிறார்கள்.

ஐ.பி.எல்
ஐ.பி.எல்

வெறும் ஒளிபரப்பு உரிமைக்கான வியாபாரம் என்பதாக இவற்றை ஒதுக்கிவிட முடியாது. உலகளவில் ஐ.பி.எல்-க்கான மதிப்பு என்னவாக இருக்கிறது என்பதற்கான அளவீடுமே இதுதான். இன்றைய தேதிக்கு ஒரு ஐ.பி.எல் போட்டியின் மதிப்பு 107 கோடி ரூபாய். ஐ.பி.எல் போன்றே மற்ற நாடுகளில் ஆரம்பிக்கப்பட்ட வேறெந்த டி20 லீகுக்குமே இந்த மதிப்பு கிடையாது. கிரிக்கெட் என்பதைத் தாண்டி ஒட்டுமொத்தமாக வியாபாரரீதியாக அதிக மதிப்புமிக்க லீகுகளில் அமெரிக்காவின் NFL தொடருக்கு அடுத்த இடம் ஐ.பி.எல்-லுக்குதான். ஐரோப்பாவின் பிரபலமான கால்பந்து லீகுகள்கூட ஐ.பி.எல்-லுக்குப் பிந்தைய இடத்தில்தான் இருக்கின்றன.

‘2040-க்குள் பொருளாதாரரீதியாக அமெரிக்கா இப்போது எட்டியிருக்கும் வளர்ச்சியை இந்தியா எட்டிவிடும். அந்தச் சமயத்தில் ஐ.பி.எல்-லின் வளர்ச்சியும் அபாரமாக இருக்கும். இப்போது இருப்பதைவிட 6 மடங்கு அதிக வளர்ச்சியை எட்டி, உலகின் வேறெந்த விளையாட்டு லீகுகளோடும் ஒப்பிடவே முடியாத ஒரு இடத்தில் ஐ.பி.எல் இருக்கும்.’ இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் லார்ட்ஸில் ஒரு விரிவுரையில் இவ்வாறு பேசியிருந்தார்.

சந்தை மதிப்பைத் தாண்டி இது பல எளிய வீரர்களுக்குப் புது வெளிச்சம் கொடுத்திருக்கிறது. நடராஜன், ரிங்கு சிங், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் என விளிம்பு நிலையிலிருந்து இந்த ப்ரீமியர் லீகால் பொருளாதார ஸ்திரத் தன்மையைப் பெற்ற வீரர்களும் பலர் உண்டு. வெறுமென தேசிய அணி கனவோடு மட்டுமே சுற்றித் திரிய வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு வெளிச்சமோ, வாய்ப்புகளோ கிடைத்திருக்காது.

ஐ.பி.எல்
ஐ.பி.எல்

இவையெல்லாம் வியாபாரம் சார்ந்த பார்வைகள். இவற்றைக் கடந்து கிரிக்கெட்டிற்கு ஐ.பி.எல் என்ன செய்திருக்கிறது என்பதையும் இதற்கு முன் இருந்த கிரிக்கெட் சூழலை ஐ.பி.எல் இப்போது என்னவாக மாற்றியிருக்கிறது என்பதைப் பற்றியும் பேசியாக வேண்டும். ஐ.பி.எல் போன்ற ப்ரீமியர் லீகுகளின் வளர்ச்சியினால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படுமோ, குறிப்பாக வீரர்கள் தேசிய அணிக்கு ஆடுவதைவிட லீக் அணிகளுக்கு ஆடுவதை அதிகம் விரும்பி விடுவார்களோ எனும் அச்சம் எழுந்திருக்கிறது. அதற்கு நியாயமான காரணங்களும் இருக்கவே செய்கிறது. இந்திய அணியின் தேர்விலுமேகூட பல சமயங்களில் உள்ளூர்ப் போட்டிகளுக்குக் கொடுக் கப்படும் மதிப்பைவிட ஐ.பி.எல் போட்டிகளுக்குக் கொடுக் கப்படும் மதிப்பு அதிகமாக இருப்பதைப் பார்த்திருப்போம். 2021 டி20 உலகக்கோப்பைத் தோல்வி யெல்லாம், வீரர்களின் ஐ.பி.எல் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அணியைத் தேர்வு செய்ததன் விளைவுதான். வீரர்களுமேகூட தேசிய அணிகளைவிட லீக் அணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. ஐ.பி.எல் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்களே மற்ற நாடுகளில் நடைபெறும் லீகுகளிலும் அணிகளை வாங்கிப் போட ஆரம்பித்திருக்கின்றனர். ஒரு வீரரை ஒரு வருடத்திற்கென மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து தங்கள் அணி ஆடும் அத்தனை நாடுகளின் லீகுகளிலும் ஆட வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகின்றனர். டிரெண்ட் போல்ட் போன்ற பிரபல வீரர்களுமே இதேமாதிரியான ஒப்பந்தத்திற்குத் தயாராகிவருகின்றனர்.

இது வெற்றிபெறும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் என்பதே கேள்விக்குறியாகும். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வளமிக்க கிரிக்கெட் போர்டுகள் சமாளித்துக் கொள்வார்கள். ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருக்கும் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளெல்லாம் வீரர்களைத் தக்கவைக்க முடியாமல் கையறு நிலைக்கும்கூட செல்லக்கூடும். கால்பந்திலுமே லீக் போட்டிகளில்தான் வீரர்கள் அதிகமாக ஆடுகிறார்கள். ஆனால், உலகக்கோப்பையில் 32 தேசிய அணிகளை வைத்து முழுமையாக சுவாரஸ்யமான ஒரு தொடரை அவர்களால் கொடுக்க முடிகிறது. ஆனால், இங்கே இந்த லீகுகளைத் தாண்டிய சுவாரஸ்யத்தை உலகக்கோப்பை தொடர்களால் வழங்கவே முடியவில்லை. இதற்கு எக்கச்சக்க காரணங்கள் உண்டு.

ஐ.பி.எல்
ஐ.பி.எல்

ஐ.பி.எல்-லுமே தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வேலையில் இறங்கியிருப்பதை கவனிக்க முடிகிறது. அதற்கான உதாரணம்தான் நடப்பு தொடரில் அறிமுகமான ‘இம்பாக்ட் ப்ளேயர்' விதிமுறை. முன்பு மூன்றரை மணி நேர ஆட்டமே படுசுவாரஸ்யமாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போதைய ரசிகர்களுக்கு இந்த நேரமே அயர்ச்சி தருகிறது. அதனால்தான், ‘The Hundred', ‘T10’ என இந்த லீகுகளும் வெவ்வேறு வடிவங்களை எடுக்கத் தொடங்கியுள்ளன. ஐ.பி.எல்-லில் அறிமுகப் படுத்தப்படும் புதிய விதிமுறைகளும் இந்த சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்கான முனைப்புதான். பிரமாண்ட இயக்குநர்களின் படங்களில் கதைக்கு சம்பந்தமே இல்லையெனினும் ஒவ்வொரு 10-15 நிமிடத்திற்கும் வாயைப் பிளக்க வைக்கும் வகையில் ஏதாவது சர்க்கஸ்தனங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கச் செய்வார்கள். கிட்டத்தட்ட ஐ.பி.எல்-லும் தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள அதையேதான் இங்கே செய்துகொண்டிருக்கிறது.

ஐ.பி.எல் தொடர்பான சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. அதை ஆரம்பித்த லலித் மோடியே வெளிநாட்டில் தஞ்சமடையும் அளவுக்குப் பல முறைகேடுகள் வெளியாகின. உண்மையில், ஆயிரமாவது ஐ.பி.எல் போட்டி இதுதானா என்பதுமே சர்ச்சையாகும் அளவுக்குத்தான் ஐ.பி.எல் இருக்கிறது.

சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் அந்த 1000-மாவது ஐ.பி.எல் போட்டி ஒரு மாபெரும் மைல்கல்தான். இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட பண்டம் ஒன்று விற்பனையில் கலக்கி உலகம் முழுவதும் தன்னைப் போன்ற கிளைகளைப் பரப்பிக் கொண்டிருப்பது ஒருவகையில் மகிழ்ச்சிதான். ஆனால், இந்தப் பண்டம் இந்த கிரிக்கெட் சூழலின் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடக்கூடாது.