
நெஞ்சம் மறப்பதில்லை-15
நடப்பு ஐ.பி.எல் சீசன்... ஏறக்குறைய க்ளைமாக்ஸை எட்டிவிட்டது. மே 23-ம் தேதியிலிருந்து ப்ளே ஆஃப்ஸ். பல அணிகளும் அந்த ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பைப் பெற முட்டி மோதிக்கொண்டிருந்த சமயத்தில், குஜராத் அணி ரொம்பவே சௌகரியமாக முதல் அணியாக ப்ளே ஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது. மற்ற அணிகளெல்லாம் வெந்து நொந்து சிரமப்பட்டு கால்குலேட்டரும் கையுமாகச் சுற்றிக்கொண்டிருந்த சமயத்தில் குஜராத் மட்டும் எப்படி சாதித்தது?
குஜராத்தின் மீதான இந்த ஆச்சர்யத்திற்கு இந்த சீசன் மட்டுமே காரணம் இல்லை. கடந்த சீசனிலும் அந்த அணிதான் சாம்பியன். ஐ.பி.எல் மாதிரியான ஒரு பெரும் தொடரில் புதிதாக ஓர் அணியைக் கட்டமைத்து முதல் சீசனிலேயே சாம்பியன் அணியாக மாற்றுவது அத்தனை சுலபமான காரியமில்லை. அதைவிட முக்கியமானது, அந்த சாம்பியன் அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் அடுத்த சீசனிலும் செயல்படுவது. இரண்டையுமே கச்சிதமாகச் செய்திருக்கிறது, குஜராத்.

முதன்முதலாக குஜராத் என்கிற அணி ஐ.பி.எல்-லுக்குள் வந்து ஏல மேசையில் தங்களுக்கென ஓர் அணியை உருவாக்கி, கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவையும் பயிற்சியாளராக நெஹ்ராவையும் அறிவித்தபோது அந்த அணியின் மீது யாருக்குமே பெரிதாக நம்பிக்கை இல்லை. காகிதத்திலேயே அவ்வளவு சோடை போன அணியாகத்தான் குஜராத் தெரிந்தது. டாப் ஆர்டர் வீரர்கள் உண்டு. பினிஷர்கள் உண்டு. ஆனால், மிடில் ஆர்டர்... இல்லவே இல்லை. இப்படிப் பல ஓட்டைகளைக் கொண்ட அணியாகத்தான் குஜராத் அணியைப் பலரும் பார்த்தனர். ஆனால், களத்தில் இறங்கியபோது குஜராத்தின் வேறொரு ரூபத்தைப் பார்க்க முடிந்தது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேசுகையில், `சிறந்த வீரர்களைக் கொண்ட சிறந்த அணியைக் கட்டமைத்து வெல்வது ஒரு விதம். மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் அதைத்தான் செய்கின்றன. அதேசமயம், திறனுள்ள வீரர்களை வைத்துக்கொண்டு அணிக்குள் ஒரு நற்சூழலை உருவாக்கி, அவர்களிடமிருந்து சிறப்பான செயல்பாட்டை வெளிக்கொணர்ந்து வெல்வது இன்னொரு விதம். சென்னை போன்ற அணிகள் அதைத்தான் செய்கின்றன. எனக்கும் அதில்தான் விருப்பம்' எனப் பேசியிருந்தார்.
ஹர்திக்கிற்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ... அவர் சென்னையின் பாணியைப் பின்பற்றியே ஆகவேண்டிய சூழல்தான் இருந்தது. இருக்கிற வாய்ப்புகளை வைத்து சிறப்பான செயல்பாட்டை வெளிக்கொணர சில அபரிமிதமான முயற்சிகளையும் எடுத்தாக வேண்டும். அந்தவகையில்தான் பினிஷர் ரோலில் ஆடும் ஹர்திக், தன்னை மிடில் ஆர்டர் வீரராக புரமோட் செய்துகொண்டு ஆடத் தொடங்கினார். மும்பை அணிக்காக பினிஷர் ரோலில் ஆடியதை விடவும் குஜராத் அணிக்காக அந்தப் புதிய பொறுப்பில் ஹர்திக் ரொம்பவே சிறப்பாக ஆடினார். எல்லாவிதத்திலுமே ஹர்திக்கின் சிறந்த ஐ.பி.எல் சீசன், கடந்த சீசன்தான். ரிஸ்க் எடுத்து தன்னுடைய கதாபாத்திரத்தை மொத்தமாக மாற்றிக் கொண்டு வேறொரு பரிமாணத்தில் ஆடியதற்கான தகுந்த பரிசு அவருக்குக் கிடைத்தது.

ஹர்திக் போல அணியின் ஒவ்வொரு வீரருமே ஒவ்வொரு விதத்தில் ரிஸ்க் எடுத்து வெல்வதற்குத் தயாராகவே இருக்கின்றனர். டி20 போட்டிகளில் மேட்ச் வின்னர்களாகத் திகழ்வதற்குத் தேவையான அடிப்படை குணாதிசயமே இதுதான். ஒவ்வொரு பந்திலும் ரிஸ்க் எடுத்து பெரிய சிக்ஸர்களை அடிக்க முயலவேண்டும். குஜராத்தைப் பொறுத்தவரைக்கும் அந்தக் குணாதிசயம் இயல்பாகவே ஊறிப்போயிருக்கிறது.
தனியொரு வீரரை நம்பி அந்த அணி ஒருபோதும் இருந்ததில்லை. ஒவ்வொருவருமே அங்கே மேட்ச் வின்னராகத் திகழ்கின்றனர். ஒரு போட்டியில் கில் அடித்தால், இன்னொரு போட்டியில் சாய் சுதர்சன் அடிக்கிறார். ஒரு போட்டியை ஹர்திக் வென்று கொடுத்தால், இன்னொரு போட்டியை மில்லர் வென்று கொடுக்கிறார். இவர்களால் முடியவில்லையா... ராகுல் திவேதியா செவ்வெனச் செய்துகொடுத்துவிடுவார். நடப்பு சீசனில் குஜராத் அணியின் பேட்டர்கள் லீக் சுற்றில் அடித்திருக்கும் ரன்களை வைத்தே இதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். சுப்மன் கில் மட்டும்தான் 500+ ரன்களை இந்த சீசனில் அடித்திருக்கிறார். அவரைத் தாண்டி வேறெந்த வீரருமே இந்த அளவுக்கு ஸ்கோர் செய்யவில்லை. ஹர்திக், சஹா, மில்லர், விஜய் சங்கர், சாய் சுதர்சன் என 5 வீரர்கள் இப்போது வரை 200-300 ரன்களையே அடித்திருக்கின்றனர். மற்ற அணிகளில் பெரிதாக இதேபோன்ற சூழலைப் பார்க்க முடியாது. அந்த அணிகளில் குறைந்தபட்சமாக 2 வீரர்களாவது 400+ ரன்களுக்கு மேல் எடுத்திருப்பார்கள். இந்த விஷயத்தில் குஜராத் எங்கே வேறுபடுகிறதெனில், மேலே நாம் 200-300 ரன்கள் அடித்த வீரர்கள் எனக் குறிப்பிட்டவர்களெல்லாம் ஒன்றிரண்டு போட்டிகளை கட்டாயம் வென்று கொடுத்திருப்பார்கள். ராகுல் திவேதியா 100-ஐ சுற்றிதான் ரன்னே அளித்திருக்கிறார். ஆனால், அவருமே கடைசி ஓவரில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும்போது துணிச்சலாக ஆடி வென்று கொடுத்த போட்டிகளைப் பார்த்திருப்போம்.

பேட்டர்கள் இப்படியெனில், பௌலிங்கில் திடகாத்திரமான மூன்று வீரர்களைக் கையில் வைத்திருக்கிறார்கள். மூன்று பேருமே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி 23 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கின்றனர். சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இப்படி விக்கெட் வேட்டையாடும் மூன்று பௌலர்கள் ஒரு போட்டியில் 10-12 ஓவர்களை வீசினால் எதிரணியின் நிலைமை?
போட்டியில் ஆடுகிற 11 பேரில் 7-8 பேர் ஆட்டத்தை வென்று கொடுக்கக்கூடிய திராணியுடைய மேட்ச் வின்னர்களாக இருப்பதுதான் குஜராத் அணியின் வெற்றிக்குக் காரணம். அத்துடன், ஹர்திக் பாண்ட்யா ஊட்டும் ஆக்ரோஷம் மற்றும் தில்... குஜராத்தின் வெற்றிநடைக்குப் பேருதவியாக இருக்கின்றன.