கட்டுரைகள்
Published:Updated:

மைக்கும் தோனியும்!

தோனி
பிரீமியம் ஸ்டோரி
News
தோனி

நெஞ்சம் மறப்பதில்லை-10

ஊடகவியலாளர்களைச் சந்தித்தல் என்பது ஒரு கலை. எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பிரபலமாக இருக்கும்பட்சத்தில் ஊடகவியலாளர் சந்திப்புகளை நிகழ்த்தும்போது அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதுவுமே அவர்களுடைய கரியரின் அடுத்தகட்டத்தைத் தீர்மானிக்கும் முக்கிய விஷயமாக இருக்கும். ஏனெனில், ஊடகவியலாளர் சந்திப்பு என்பது, மக்களுடைய பிரதிநிதிகளாக கூடியிருப்பவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதாகும். ஆக, பிரபலங்கள் ஊடகவியலாளர்களை எதிர்கொள்தல் என்பது மக்களை நேரடியாக எதிர் கொள்தலுக்கு சமம். இதைப் புரிந்துகொள்ளாமல் ஊடகவியலாளர் சந்திப்புகளைக் கேலிக்கூத்தாக்கி மீம் மெட்டீரியல் ஆனவர்களும் இருக்கிறார்கள். தரக்குறைவாகப் பேசி மக்களிடம் எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். எதற்கு வம்பென ஊடகவியலாளர் சந்திப்புகளையே நிகழ்த்தாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த ஊடக வியலாளர்களையும் தன்வயப்படுத்தி அசத்துபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் விளையாட்டுத்துறைப் பக்கம் வந்தால்... அதிலும் கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால், தோனியின் ஊடகவியலாளர் சந்திப்புகளைச் சிலாகிக்காத ஆட்களே இருக்கமாட்டார்கள்.

தோனி
தோனி

கேள்விகளுக்கு தோனி கூறும் பதில்களில் மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். ஆனால், கேள்விகளை அவர் எதிர்கொள்ளும் விதமும் அதற்கு எதிர்வினையாற்றும் விதமும் எப்போதுமே ஒருவித சுவாரஸ்யத்தையும் முதிர்ச்சியையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கும். சமீபத்தில், உலகக்கோப்பையை வென்று 12 ஆண்டு ஆனதற்காக ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகக் குறைவான நபர்கள் மட்டுமே பங்கேற்றிருந்த சந்திப்பு அது. ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸியுடன் அமர்ந்து தன்னுடைய உலகக்கோப்பை நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் தோனி. நிகழ்வு முடிந்தவுடன் விருந்தினர்கள் விடைபெறத் தொடங்கினர். தோனிக்குமே அடுத்ததாக ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சிக்காக சேப்பாக்கம் செல்ல வேண்டியிருந்தது. விழா ஏற்பாட்டாளர்களுக்கும் தோனியை சரியான நேரத்தில் அனுப்பி வைக்க வேண்டிய டென்ஷன். இந்த அவசரத்தில் விருந்தினர்கள் பரபரப்பாக குழுப் புகைப்படத்திற்காக போஸ் கொடுத்தனர். ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த புகைப்படக்காரர், புகைப்படம் சரியாக விழவில்லை என மீண்டும் ஒரு போஸ் கேட்க, எல்லோருக்கும் பதற்றம். தோனி மட்டும் கூலாக அந்தப் புகைப்படக்காரரைப் பார்த்து ஜாலியாக ஒரு கமெண்ட் அடித்தார். அந்தப் புகைப்படக்காரர் உட்பட, அந்த இடத்தில் கூடியிருந்த அனைவரையும் நொடிப்பொழுதில் கலகலப்பாக்கிவிட்ட தோனி, மீண்டும் போஸ் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

மைக்கும் தோனியும்!

இந்த மாதிரியான குட்டி குட்டி விஷயங்கள்தான் தோனி ஊடகவி யலாளர்களைச் சந்திக்கும்போது அதிக கவனத்தைப் பெறுகிறது. 2016ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையின் அரை யிறுதியில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று, தொடரிலிருந்து வெளியேறியது. அந்தப் போட்டிக்குப் பிறகு, ஊடகவியலாளர் சந்திப்புக்கு வந்தார் தோனி. வழக்கமாக உலகக்கோப்பையில் ஓர் அணி தோற்கும்போது அதன் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதையும் ஓய்வு பெறுவதையும் பல சமயங்களில் பார்த்திருப்போம். தோனிக்கு அடுத்ததாக விராட் கோலியும் பெரிய நட்சத்திரமாக வளர்ந்துவிட்டதால், தோனி எப்போது ஓய்வு பெறுவார் எனும் கேள்வி அவரைத் துரத்திக்கொண்டே இருந்தது. உலகக் கோப்பைத் தோல்விக்கு அடுத்து நடந்த அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாம் ஃபெரிஸ் எனும் ஊடகவியலாளர், தோனியிடமே ஓய்வு பெறுவதைப் பற்றியும் கேள்வி கேட்டார். தோனி என்ன சொன்னாலுமே தலைப்புச் செய்திதான். ஆனால், தோனியால் எதையுமே வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை. அணியில் அவரது இடம் அப்படியானதாக இருந்தது. மேலும், இப்படி ஒரு கேள்வி தோனியை நிச்சயமாக உஷ்ணப்படுத்தவும் செய்திருக்கலாம். ஆனால், அந்தச் சூழலிலும் தோனி நிலை தடுமாறவில்லை. அந்த ஊடகவியலாளரைத் தன் அருகே அழைத்துத் தோள்மீது கை போட்டபடியே, ‘நான் நன்றாக கேட்ச் பிடிக்கிறேனா, ரன்கள் எடுக்க நன்றாக ஓடுகிறேனா?' எனக் கேள்விகளை அடுக்கினார். அதற்கு சாமும், ‘ஆமாம்... ஆமாம்' என மிரட்சியோடு பதிலளித்தார். ‘எனில், 2019 உலகக்கோப்பை வரை நான் ஆடலாமா?' எனக் கேட்க, ‘தாராளமாக' என சாம் பதிலளித்தார். 'உங்களுடைய கேள்விக்கு இதுதான் பதில்' என சாமை வழியனுப்பி வைத்தார் தோனி. அந்த மொத்த அறையுமே கலகலப்பின் உச்சத்துக்குச் சென்றது.

தோனி
தோனி

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தச் சம்பவம், இன்று வரைக்குமே பல சமயங்களில் இணையதளத்தில் பேசுபொருளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு இடையில், ‘இந்தக் கேள்வியை இந்திய ஊடகவியலாளர் ஒருவர் கேட்பார் என நினைத்தேன்' என சாமிடம் இரண்டு மூன்று முறை கூறினார் தோனி. இந்த ஊடகவியலாளர் சந்திப்பு முடிந்த பிறகு இந்த நிகழ்வைப் பற்றி சாம் ஃபெரிஸ் எழுதிய ஒரு கட்டுரையில்... தோனியின் செய்கையில் கொஞ்சம் அதிருப்தியாகவே இப்படிக் குறிப்பிட்டார்,

‘இந்தியாவைச் சேர்ந்த என்னுடைய சக ஊடகவியலாளர்கள்மீது பாய வேண்டிய தோட்டாவை நான் என் நெஞ்சில் வாங்கிக் கொண்டேன்.'

தோனி
தோனி

ஒரு காலகட்டத்தில் இந்திய அணிக்குள் வீரர்களுக்கிடையே கடுமையான முரண் களும் மோதல்களும் இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, சேவாக், தோனி இருவரும் கடுமையாக முட்டி மோதிக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. அந்தச் சமயத்தில் வரலாற்றில் அதற்கு முன்பு இல்லாத வகையில் அணியின் வீரர்கள் அனைவரையும் ஒருசேர ஊடகவியலாளர் சந்திப்பிற்கு அழைத்து தோனி விளக்கம் அளித்தார்.

அதேமாதிரி, ஊடகவியலாளர் சந்திப்புகளுக்கு வீரர்களை தோனி அனுப்பும்போது அதற்குப் பின்னால் ஒரு பெரும் செய்தி ஒளிந்திருப்பதைப் பார்க்க முடியும். இப்போது சென்னை அணி ஐ.பி.எல்-இல் ஆடி வருகிறதே. அதில் சென்னை அணி தோற்கும் போட்டிகளிலெல்லாம் பயிற்சியாளர் ஃப்ளெம்மிங்கை ஊடக வியலாளர் சந்திப்பிற்கு அனுப்பி வைக்கிறார். அதேசமயம், இந்த சீசனில் சென்னை அணி முதல் போட்டியில் வென்ற சமயத்தில் இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டேவை ஊடகவியலாளர் சந்திப்புக்கு அனுப்பினார் தோனி. இதில் ஒளிந்திருக்கும் தலைமைத்துவம் குறித்துத் தனியாகவெல்லாம் விளக்கத் தேவையில்லை!

ஊடகவியலாளர்கள், மக்களின் பிரதி நிதிகள். அவர்களைச் சரியாகக் கையாளத் தெரிந்த பிரபலங்கள்தான் தலைவர்களாக உயர்கிறார்கள்... தோனியைப் போல!