கட்டுரைகள்
Published:Updated:

ஆர்ப்பாட்டமில்லாத வரலாற்றுத் தருணம்!

சேப்பாக்கம் மைதானம்
பிரீமியம் ஸ்டோரி
News
சேப்பாக்கம் மைதானம்

நெஞ்சம் மறப்பதில்லை-7

`ஷாம்பைன் இல்லை... செலிபிரேஷன் இல்லை...'

கடந்த வாரம் முழுவதுமே அந்த விக்டோரியா ஹாஸ்டல் ரோடு மற்றும் வாலாஜா ரோடு எல்லாமே திருவிழாக்கோலம் பூண்டிருந்தன. காரணம், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த அந்த சர்வதேசப் போட்டிதான்.

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய அந்த ஒரு நாள் போட்டியைக் காண ஆயிரக்கணக்கில் கூடிய ரசிகர்கள் மைதானத்தை முழுமையாக நிரப்பியிருந்தனர். இந்தியாவை ஆஸ்திரேலியா 21 ரன் வித்தியாசத்தில் வென்றது என்றாலும், பெரும் உற்சாகத்துடனும் கொண்டாட்டத்துடனும் அந்தப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது.

இந்தியாவில் எந்த மைதானத்தில் போட்டி நடந்தாலும் இதே நிலைதான். இதே கொண்டாட்டத்தையும் உற்சாகத்தையும் எல்லா மைதானங்களிலும் நம்மால் உணர முடியும். எனில், சேப்பாக்கம் மைதானத்திற்கென்று ஒரு தனித்துவமே இல்லையா என்றால், நிச்சயமாக இருக்கிறது. சேப்பாக்கம் மைதானம் தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் வரலாற்றுச் சுவடுகள்தான் அதன் தனித்துவம்.

1916-ல் திறக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானம், இன்றைய தேதிக்கு 107 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே பழைமையான இரண்டாவது மைதானம் சேப்பாக்கம்தான். டெஸ்ட் வரலாற்றிலேயே இதுவரை இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகள்தான் 'டை' ஆகியிருக்கின்றன. அவற்றில் ஒன்று, சேப்பாக்கத்தில் நடந்த இந்தியா-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டிதான்.

வெறுப்பரசியல் வெகுவாக ஊறியிருந்த காலத்தில் பாகிஸ்தான் அணிக்காக எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டு தெரிவித்தது இதே சேப்பாக்கம்தான். சச்சினுக்குப் பிடித்த மைதானம் சேப்பாக்கம்தான். தோனிக்கு சேப்பாக்கம் இன்னொரு தாய் வீடு போன்றது. இப்படி சேப்பாக்கம் பற்றிய மதிப்புமிக்க அம்சங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இங்கே இவற்றைத் தவிர்த்து வேறொன்றைப் பற்றிப் பேசியாக வேண்டும்.

சேப்பாக்கம் மைதானம்
சேப்பாக்கம் மைதானம்

இந்திய கிரிக்கெட் அணி இன்றைக்கு டெஸ்ட் அரங்கில் எக்கச்சக்க சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவில் வைத்தே அடுத்தடுத்து வீழ்த்தியிருக்கிறது. இங்கிலாந்தை, அந்நாட்டின் லார்ட்ஸ் மைதானத்திலேயே தோற்கடித்து மிரட்டியிருக்கிறது. தொடர்ச்சியாக இரண்டு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குவேறு தகுதிபெற்றிருக்கிறது. இத்தனை வெற்றிகளையும் சாதனைகளையும் செய்திருக்கும் இந்திய அணி பெற்ற முதல் வெற்றி எது தெரியுமா? 1952-ல் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியை வென்றது. அதுதான் டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் முதல் வெற்றி. இந்திய அணி 1932 முதலே டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. ஆயினும் 20 ஆண்டுகள் கழித்துதான் இந்த வெற்றியைப் பதிவு செய்தது.

சேப்பாக்கத்தில் நடந்த அந்தப் போட்டியில் இந்திய அணி விஜய் ஹசாரேவின் தலைமையில் களமிறங்கியது. டொனால்டு கேர் தலைமையில் இங்கிலாந்து அணி களமிறங்கியது. லாலா அமர்நாத், பாலி உம்ரிகர், முஷ்டாக் அலி, வினு மாங்கட் என இந்திய அணி இந்த முறை கொஞ்சம் பலமிக்கதாகவே இருந்தது.

முதல் மூன்று போட்டிகள் டிராவிலேயே முடிந்தன. கான்பூரில் நடைபெற்ற நான்காவது போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி. கடைசிப் போட்டி... இங்கிலாந்து அணி டிரா செய்தாலே போதும் என்ற சூழலில்தான் சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி தொடங்கியது.

ஆர்ப்பாட்டமில்லாத வரலாற்றுத் தருணம்!

இங்கிலாந்து கேப்டன் டொனால்டு கேரே, டாஸ் வென்று பேட்டிங் செய்வதெனத் தீர்மானித்தார். ஃப்ராங்க் லோசனும் டிக் ஸ்பூனரும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். வெறும் 1 ரன்னில் ஃப்ராங்க் லோசனை போல்டாக்கி வெளியேற்றினார், தத்து பத்கர். பிறகு, டிக் ஸ்பூனருடன் டாம் க்ரவேனி கூட்டணி சேர்ந்தார். இ்க்கூட்டணி சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. அரைசதம் கடந்த டிக் ஸ்பூனரை, இந்திய கேப்டன் விஜய் ஹசாரே வீழ்த்தினார். நம்பர் 4-ல் வந்த ராபர்ட்சனும் அரைசதம் அடிக்க, இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 244/5 என்ற நிலையில் வலுவாக இருந்தது. இடக்கை ஸ்பின்னரான வினு மாங்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து மன்னர் இறந்ததால், இரண்டாம் நாள் ஆட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டது. மூன்றாவது நாளில் இங்கிலாந்து அணி தொடர்ந்து பேட்டிங் செய்து, 244 ரன்களிலிருந்து அடுத்த 22 ரன்களைச் சேர்ப்பதற்குள்ளாகவே ஆல் அவுட் ஆனது. வினு மாங்கட் அட்டகாசமாக வீசி மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மொத்தமாக முதல் இன்னிங்ஸில் மட்டும் 8 விக்கெட்டுகள் எடுத்து, மிகச்சாதாரணமான ஆக்‌ஷன் உடைய ஸ்பின்னரான வினு மாங்கட், தனது ஃப்ளைட்டட் டெலிவரிக்கள் மூலம் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்.

இந்திய அணியின் முதல் இன்னிங்க்ஸ்... முஷ்டாக் அலியும், பங்கஜ் ராயும் ஓப்பனர்களாகக் களமிறங்கினர். முஷ்டாக் அலி 22 ரன்களில் அவுட் ஆக, பங்கஜ் ராய் நின்று நிதானமாக ஆடினார். இன்னொரு எண்ட்டில் அமர்நாத், விஜய் ஹசாரே, வினு மாங்கட் ஆகியோர் 20, 30 ரன்களில் கொஞ்ச நேரம் நின்றுவிட்டு விக்கெட் விட, பங்கஜ் ராய் மட்டும் இங்கிலாந்து பௌலிங்கை நன்றாக எதிர்கொண்டு சிறப்பாக ஆடினார். பங்கஜ் ராய் சதமடித்து 111 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்குப் பிறகு, தத்து பத்கரும் பாலி உம்ரிகரும் நல்ல பார்ட்னர்ஷிப் போட்டனர். பத்கர் அரைசதம் அடித்து அவுட் ஆக, கோயம்புத்தூர் துரைக்கண்ணு கோபிநாத் எனும் தமிழக வீரரின் உதவியுடன் உம்ரிகர் சதத்தைக் கடந்தார்.

Iவிஜய் ஹசாரே- Iவினு மாங்கட்
Iவிஜய் ஹசாரே- Iவினு மாங்கட்

கோபிநாத் - உம்ரிகர் கூட்டணி 93 ரன்களைச் சேர்த்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 457/9 என்ற நிலையில் இருக்கும்போது, கேப்டன் விஜய் ஹசாரே டிக்ளேர் செய்தார். இந்திய அணி 191 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் வீழ்த்தியிருந்த வினு மாங்கட், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரோடு குலாம் அஹமது சேர்ந்துகொண்டு, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து சார்பில் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ராபர்ட்சன் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்ப, இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 8 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இந்திய அணியின் வெற்றி வரலாற்றின் தொடக்கப்புள்ளி அதுதான். விலைமதிப்பற்ற அந்த வெற்றித் தருணம் இந்தியாவிற்கு சேப்பாக்கத்தில் வைத்தே கிடைத்தது.

‘‘ஷாம்பைன்கள்... செலிப்ரேஷன்கள் என எதுவும் இல்லை. நாங்கள் கைகளைக் குலுக்கி வாழ்த்து தெரிவித்துவிட்டு விடைபெற்றுக்கொண்டோம்'' என அந்த வெற்றி குறித்து ஒரு பேட்டியில் தமிழக வீரரான கோபிநாத் கூறியிருக்கிறார்.

அடுத்த முறை சேப்பாக்கம் மைதானத்தைக் கடக்கும்போது உங்களுக்கு இந்த ஆர்ப்பாட்டம் இல்லாத வரலாற்று வெற்றியும் நினைவுக்கு வரட்டும்!