Published:Updated:

SA vs IND: 2018-ல் இந்தியா தோல்வி அடைந்தது எதனால்? தவறுகளைக் களைய, தற்போது கோலி என்ன செய்ய வேண்டும்?

கேப்டன் கோலி, துணை கேப்டன் கே எல் ராகுல் | SA vs IND

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து என அத்தனை மண்ணிலும் ஆதிக்கம் செலுத்திவிட்ட இந்தியாவுக்கு, தென்னாப்பிரிக்க மண்ணில் வெற்றி என்பது, 90-களில் இருந்து இன்னமும் கனவாகவே இருக்கிறது.

SA vs IND: 2018-ல் இந்தியா தோல்வி அடைந்தது எதனால்? தவறுகளைக் களைய, தற்போது கோலி என்ன செய்ய வேண்டும்?

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து என அத்தனை மண்ணிலும் ஆதிக்கம் செலுத்திவிட்ட இந்தியாவுக்கு, தென்னாப்பிரிக்க மண்ணில் வெற்றி என்பது, 90-களில் இருந்து இன்னமும் கனவாகவே இருக்கிறது.

Published:Updated:
கேப்டன் கோலி, துணை கேப்டன் கே எல் ராகுல் | SA vs IND
அயல்நாட்டு மண்ணில் சமீப காலமாக தொடர்களை வெல்வதை வழக்கமான பழக்கமாக்கிக் கொண்டிருக்கும் இந்தியா, போட்டிகளை மட்டுமே வென்று கொண்டிருந்த 2018 காலகட்டம்.

டெஸ்டில் நம்பர் 1 அணி என்ற மகுடத்தோடும், மிடுக்கோடும், தென்னாப்ரிக்காவை அடைந்த இந்தியாவை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமே அதிர்ச்சித் தோல்வி அடைய வைத்தது தென்னாப்ரிக்கா. 2015-ல், டெஸ்ட் தொடரில், இந்தியாவில் கிட்டிய 3-0 தோல்விக்கு, தென்னாப்பிரிக்கா பழிதீர்த்துக் கொண்டதோடு, 2-1 என்ற கணக்கில், தொடரைக் கைப்பற்றியது.

அத்தொடரின் தோல்வி பற்றி பேசியிருந்த கேப்டன் கோலி, "இத்தகைய கடினமான போட்டிகளில் தங்களுக்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ளும் இந்தியாவால் அதனை பரிபூரணமடைய வைத்து, வெற்றியைச் சுவைக்க முடியவில்லை" என தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார்.

எங்கே தவறியது இந்தியா? அந்தத் தவறுகள் களையப்பட்டு, தற்போதைய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்துக்கு முழுமையாகத் தயாராகிவிட்டதா? நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் நிலையில் இதைப் பற்றிக் கொஞ்சம் அலசுவோம்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகுல் டிராவிட் தலைமையில் பயிற்சியில் இந்திய அணி | SA vs IND
ராகுல் டிராவிட் தலைமையில் பயிற்சியில் இந்திய அணி | SA vs IND

சொந்த மண்ணே சொர்க்கம்:

2016-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த டெஸ்ட் தொடர், 2017-ல் இலங்கையில் நடந்த தொடர் என இந்த இருதொடர்களைத் தவிர்த்து, அந்த இரு ஆண்டுகளில் வேறு எந்த வெளிநாட்டிலும் இந்தியா ஆடவில்லை. அதுவும், SENA நாடுகளில் ஆடியே ஆண்டுக்கணக்காகிவிட்ட வீரர்களைக் கொண்ட அணியால் எப்படி இந்தியாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, பந்துகள் ஸ்விங் ஆகும், ஸ்பிரிங் போல் பவுன்ஸ் ஆகும் மைதானத்தில் தங்களை நிரூபிக்க முடியும்?!

பயிற்சி ஆட்டங்களுக்கு 'நோ':

ஜெட் லாக்கில் இருந்து மீண்டு, அந்த டைம் ஜோனுக்கு ஏற்ப நமது பயாலஜிக்கல் கடிகாரத்தை ஒத்திசைவு செய்து கொள்ளும் சூட்சுமம் போன்றவைதான் பயிற்சி ஆட்டங்கள். அத்தகைய வார்ம் அப் போட்டிகள்தான் புதிய கள சூழ்நிலைக்கு ஏற்ப வீரர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ள உதவும். ஆனால் இந்தியா, தனது வீரர்களுக்கு அவற்றிற்கு பதிலாக நெட் பயிற்சியே போதும் என முடிவெடுத்தது. இதுவும் வீழ்ச்சிக்கான அஸ்திவாரத்தை இடத் தொடங்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அணித் தேர்வு:

குளறுபடிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்ட அணி நிர்வாகமும், கோலி - ரவி சாஸ்திரியும் வீரர்கள் தேர்வில் பிளேயிங் லெவனில் பல்லாங்குழி ஆடினர். `ரஹானே வெளியே, ரோஹித் உள்ளே', `தவான் வெளியே, ராகுல் உள்ளே' என மாற்றிக் கொண்டே இருந்தனர். எதிரணியின் பலம், பலவீனமறிந்து, அதற்கேற்ற அணியை உருவாக்கவில்லை. களம் எப்படி, நாம் தேர்ந்தெடுத்துள்ள வீரர்கள், அதனைச் சமாளிக்கக் கூடியவர்களாக என யோசிக்கவேயில்லை. உச்சகட்டமாக, ஃபார்மில் இருந்த புவனேஷ்வரை, இரண்டாவது போட்டியில் வெளியே அமர்த்தியதெல்லாம் அவர்களின் மாபெரும் தவறுகள்.

ஃபீல்டிங் சொதப்பல்கள்:

டெஸ்ட் போட்டிகளின் உயிர்நாதமே விக்கெட்டுகள்தான். அத்தகைய விக்கெட்டுகளுக்கான உழைப்பு, பௌலர்களிடமிருந்து மட்டுமே வருவதில்லை. அதில் ஃபீல்டர்களின் பங்கும் கணிசமானதுதான். இத்தொடரில், பார்த்திவ் படேல், கோலி, புஜாரா எனப் பலரும் கேட்ச்களைக் கோட்டை விட்டனர். அதுவும் போட்டியின் போக்கையே மாற்றியது.

புஜாரா | SA vs IND
புஜாரா | SA vs IND

ரன் அவுட்டுகள்:

சுழல் பந்து வீச்சில், நோ பால்கள் எத்தனை பெருங்குற்றமோ, அதே போலத்தான் டெஸ்ட் போட்டிகளில் ரன்அவுட் என்பதுவும். ரன்களை ஓடி எடுக்கவே தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டு, பல சந்தர்ப்பங்களில் புஜாராவைத் தாக்கி இருந்தாலும், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடவே பயிற்சி தேவையோ என எண்ண வைத்தது புஜாரா இரண்டாவது டெஸ்டில் ஆட்டமிழந்த விதம். இரண்டு இன்னிங்ஸ்களிலுமே ரன்அவுட்டாகி இருந்தார் புஜாரா. டெஸ்ட் மேட்ச் ஒன்றில், 2 இன்னிங்ஸ்களிலும் ரன்அவுட் ஆன முதல் இந்தியர் என்ற விரும்பத்தகாத சாதனையைப் படைத்தார். அதே டெஸ்டில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த விதம் இன்னமும் மோசமாக இருந்தது. கோலியுடனான செட் ஆன பார்ட்னர்ஷிப்பை பொறுப்பே இல்லாமல் ரன்அவுட் ஆகி உடைத்துச் சென்றார். இந்த விக்கெட்டுகளால் விளைந்த சேதத்தை கோலியின் 153 விளாசலால்கூட நேர்ப்படுத்த முடியவில்லை.

டாப் ஆர்டரும் மிடில் ஆர்டரும்:

இந்தியாவின் டாப் ஆர்டர் மிகச் சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தது. தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எடுத்ததில் (944 ரன்கள்), கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ரன்களையே (685 ரன்கள்) இந்தியத் தரப்பு எடுத்தது. இவ்வளவுக்கும், தென்னாப்பிரிக்காவின் லோயர் ஆர்டரை விட (375 ரன்கள்), இந்திய லோயர் ஆர்டர் (464 ரன்கள்) சற்றே அதிக ரன்களைச் சேர்ந்திருந்தது. ஆனாலும், மிடில் ஆர்டரின் மோசமான ஆட்டம்தான் இந்தியாவின் ரன்குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டது.

கோலி மீதான அழுத்தம்:

கோலியின் 153 மற்றும் 54 ரன்கள் ஆகிய ஹை ஸ்கோர்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியத் தரப்பிலிருந்து, பாண்டியாவின் 93 ரன்கள், புஜாரா அடித்த 50 ரன்கள் ஆகியவை மட்டுமே, ஆறுதலான இன்னிங்ஸ்களாக இருந்தன. மற்றவை எல்லாம், 50-ஐ தாண்டவே இல்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள், ஓரளவு சிறப்பாகவே துவங்கினர், ஆனாலும், அதனை பெரிய ஸ்கோராக மாற்றத் தவறினர். விளைவு, அதிக அழுத்தம், கோலியின் தலையில் ஏறியது.

வேகப்பந்து வீச்சுப் படை:

உண்மையில், இந்திய பௌலிங் முற்றிலுமாகச் சோடை போகவில்லை. உதாரணமாக, தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் எடுக்கும் ஸ்ட்ரைக் ரேட் சராசரியாக 37 பந்துகள் என்றால், இந்தியத் தரப்பு சராசரியாக 38 பந்துகளுக்கு ஒருமுறை விக்கெட் எடுத்தது. அதேபோல் அவர்களது ஆவரேஜ் 26-க்குக் கீழே என்றால் இந்தியர்கள் பக்கமும் அனைவரது ஆவரேஜும் 26-க்குக் கீழேதான் இருந்தது. ஆகமொத்தம் இந்தியா வீழத் தொடங்கியது இங்கல்ல, வேறிடத்தில்! டெய்ல் எண்டர்களைக் காலி செய்ய இந்தியா தடுமாறியதும், அதற்கான திட்டமிடல் அவர்களிடம் இல்லாததும்தான் இந்தியாவிற்குப் பின்னடைவானது. கேப் டவுன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளை 45 ஓவர்களில் எடுத்துவிட்ட இந்திய பௌலர்கள், மீதமிருந்த விக்கெட்டுகளுக்கு மேலும் 28 ஓவர்களை எடுத்துக் கொண்டனர். இங்கேதான் இந்தியா சறுக்கியது.

தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் | SA vs IND
தற்போதைய வேகப்பந்து வீச்சாளர்கள் | SA vs IND

ஷாட் செலக்சன் தடுமாற்றம்:

கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில், எல்பிடபிள்யூவுக்கே, தங்களை அர்ப்பணித்து, ஃபுட் வொர்க்கின் விலை கேட்டு இந்திய பேட்ஸ்மேன்கள் வெளியேறியது போல், 2018 தென்னாப்பிரிக்கத் தொடரில், ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகள்தான், இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளுக்கு உலை வைத்தன. குட் லெந்த்தில் வீசப்பட்ட பந்துகளைப் போலவே, அவுட்சைட் த ஆஃப் ஸ்டம்பில் வீசப்படும் பந்துகளும் சமயங்களில் அவுட் ஆஃப் த சிலபஸ் என சாய்ஸிஸ் விடப்பட வேண்டியவையே! அதைச் செய்யத் தவறிய இந்திய பேட்ஸ்மேன்கள், குறைந்தபட்சம் நிதானித்து, களத்தைக் கணித்து ஆடியிருந்தால் பின்னர் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் அதற்கு முயலவே இல்லை.

இதைத் தவிர்த்தும், மிக மெதுவாக ரன்களைச் சேர்த்தது, ஸ்லிப்பில் ரஹானேவுக்கு மாற்று வீரர் இல்லாதது, ஜெயிக்க வேண்டும் என்ற உயிர்ப்பின்றி ஆடியது, பிலண்டரின் அபார ஃபார்ம், இரண்டாவது டெஸ்டில் இளம்வீரர் எங்கிடியின் அபார ஆறு விக்கெட்கள் எனப் பல காரணங்கள் இந்தியாவுக்குக் குழி பறித்தன.

சரி! `பழையன களையட்டும்' என கடந்த காலக் காயங்களிலிருந்து மீண்டு, இம்முறை எந்தளவு இந்தியா தயாராகி உள்ளது, தென் ஆப்பிரிக்காவை வெல்ல என்ன செய்யலாம்?! அதையும் பார்க்கலாம்.

* ஓப்பனர்கள் ஸ்லாட்டை, ராகுல் - மயாங்க் ஆக்கிரமிப்பார்கள். ரோஹித் இல்லாத நிலையில், இக்கூட்டணி, அணிக்கான ஆணிவேராக, செஷன் கணக்கில் நிற்க வேண்டிய அவசியமுள்ளது.

* இந்தியா, ஐந்து பிரதான பௌலர்களோடு களமிறங்கும் என இந்தியத் துணைக் கேப்டனான கே எல் ராகுல் கூறியுள்ளார். இது வெற்றிக்கான மிக முக்கியமான முடிவு. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு பௌலரையும் ஒவ்வொரு வகையில் வில்லியம்சன் பந்துவீச வைத்ததைப் போல், வெவ்வேறு வேரியேஷன்களை ஒவ்வொருவரை வைத்துப் போட வைக்கவும், பௌலர்கள் சோர்வடையாமல் இருக்க சுழற்சி முறையில் பயன்படுத்தவும் இது உதவும்.

பயிற்சியில் ஷமி, டிராவிட்டுடன்... | SA vs IND
பயிற்சியில் ஷமி, டிராவிட்டுடன்... | SA vs IND

* டீன் எல்கர், டீ காக், டெம்ப பவுமா, வான் டர் டஸன் ஆகியோர் கீ பிளேயர்கள் என்பதால் அவர்களைக் குறிவைத்து, சிறப்புத் திட்டமிடல்கள் கண்டிப்பாக இந்தியாவின் வசம் வேண்டும்.

* ஐந்தாவது இடத்திற்காக அடித்துக் கொள்ளும் ரஹானே, ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸுக்கு நடுவில், முதல் போட்டியில் ஹனுமாவிற்கு அந்த இடம் கொடுக்கப்பட வேண்டும். தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக அவர் ஆடிய விதமும், அவரது முன்அனுபவமும், இந்த முக்கியப் போட்டியில் கைகொடுக்கும். அவர் சோபிக்காத பட்சத்தில் வேண்டுமானால், இரண்டாவது போட்டியில் ஸ்ரேயாஸின் பக்கம் திரும்பலாம்‌.

* ரபாடா, எங்கிடியின் வேகம் இந்திய மண்ணிலேயே அச்சுறுத்தும் எனும்போது, உத்தேசிக்க முடியாதபடி பந்து எகிறும் தென்னாப்பிரிக்கா பிட்சில் கேட்கவே வேண்டியதில்லை. கடந்த தொடரில், மூன்றாவது போட்டியில் அடிக்கடி பிஸியோவை அழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளி, அபாயகரமானதாக ஜோகன்னஸ்பர்க் களம் மாற, போட்டி பலமுறை தடைபட்டது. இதற்காக இத்தொடரில் மனதளவில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

* தற்காத்துக் கொள்வது -> தாக்குப்பிடிப்பது -> திரும்பித் தாக்குவது இதுவே இந்திய பேட்ஸ்மேன்கள் கடைபிடிக்க வேண்டிய வரிசையாக இருக்க வேண்டும். அதேநேரத்தில், வாய்ப்புக் கிடைக்கும் போது, சுமாரான பந்துகளில் ரன்களைக் குவிக்கவும் தவறக்கூடாது. புஜாரா தனது டிஃபெண்டிங் கிரிக்கெட்டின் எல்லையைக் காண்பதை நிறுத்தி, அவரின் அணுகுமுறையை மாற்ற வேண்டும்.

* தாக்கூர் அணியில் இடம்பெறுவது, அணியின் பலத்தை பலமடங்காக்கும். பல சமயங்களில், மற்ற பௌலர்கள் சோபிக்கத் தவறிய போதுகூட, தாக்கூர் அதிரடியாக விக்கெட்டுகளை வீழ்த்தி மாயம் செய்துள்ளார் என்பதால் அவர் இருப்பது அணிக்குச் சாதகமாகும். அதே நேரத்தில், எட்டாவது இடம் வரை பேட்ஸ்மேன்கள் இருப்பதை இவர் உறுதி செய்வார்.

விராட் கோலி | SA vs IND
விராட் கோலி | SA vs IND

* ரெட்பால் கிரிக்கெட் கேப்டனாக மட்டும் தொடரும் கோலிக்கு, இத்தொடர் தன்மீது மற்றவர்கள் இழந்த நம்பிக்கையை கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மீட்டெடுக்க வேண்டிய வாழ்வா சாவா என்பது போன்ற தொடர் என்பதால், அவர் எழுச்சி பெறுவதற்கான சரியான தருணம் இது.

* பயிற்சியாளராகப் பங்கேற்ற பின், டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் டிராவிட்டின் முதல் வெளிநாட்டுத் தொடர் என்பதால் முழு முனைப்பை 100 சதவிகிதம் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

எத்தனை கேம் பிளான்களோடு போனாலும், ஹோம் அட்வான்டேஜ் என்னும் மிகப் பெரிய பலம் தென்னாப்பிரிக்கா வசமுள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து என அத்தனை மண்ணிலும் ஆதிக்கம் செலுத்திவிட்ட இந்தியாவுக்கு, தென்னாப்பிரிக்க மண்ணில் வெற்றி என்பது, 90-களில் இருந்து இன்னமும் கனவாகவே இருக்கிறது.

சரித்திரம் திரும்புமா அல்லது யூ டர்ன் அடிக்குமா?! நாளைய போட்டிக்கான உங்களின் கணிப்புகளை கமென்ட்டில் சொல்லுங்கள்.