Published:Updated:

SA vs IND: கேப்டன் ராகுலின் நிதானம்; சொதப்பல் மோடில் புஜாரா; கைகொடுத்த அஷ்வின்! இன்று என்ன நடக்கும்?

SA vs IND

தசைப்பிடிப்பு காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியிலிருந்து விலகவே அவருக்கு பதில் ஹனுமா விஹாரி அணியில் இணைந்தார்.

SA vs IND: கேப்டன் ராகுலின் நிதானம்; சொதப்பல் மோடில் புஜாரா; கைகொடுத்த அஷ்வின்! இன்று என்ன நடக்கும்?

தசைப்பிடிப்பு காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியிலிருந்து விலகவே அவருக்கு பதில் ஹனுமா விஹாரி அணியில் இணைந்தார்.

Published:Updated:
SA vs IND
இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று ஜோஹன்னஸ்பெர்க் நகரின் வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சுரியனை தரைமட்டமாக்கிய இந்திய வீரர்கள் இப்போட்டியை வென்று தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கினர்.
SA vs IND
SA vs IND

இந்திய அணி வெளிநாடு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதெல்லாம் சமீபத்திய ஆண்டுகளில்தான். ஆனால், வாண்டரர்ஸ் மைதானத்தை பொறுத்தவரையில் போன நூற்றாண்டில் இருந்தே இந்திய அணியின் ஆதிக்கம்தான் இருந்து வருகிறது. ஆம், தென்னாப்பிரிக்கா அணியுடன் இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளை இம்மைதானத்தில் விளையாடியுள்ள இந்தியா ஒன்றில் கூட தோற்றதில்லை. அதில் இரண்டு போட்டிகளில் வெற்றியும், மூன்று போட்டிகளை டிரா செய்தும் ஜோஹன்னஸ்பெர்க்கில் மினி கோட்டையே கட்டியுள்ளது இந்தியா.

ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியிலிருந்து விலகவே அவருக்கு பதில் ஹனுமா விஹாரி அணியில் இணைந்தார். கேப்டனாக கே.எல்.ராகுல் முதல் முறையாக டெஸ்ட் ப்ளேசரை அணிந்தார். தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரையில் சென்ற ஆட்டத்தில் ஓய்வை அறிவித்த டி காகிற்கு பதில் கைல் வெர்யேனும், மல்டருக்குப் பதில் ஆலிவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

KL Rahul
KL Rahul

டாஸை வென்ற இந்தியா இம்முறையும் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஒப்பனர்களாக மயங்க்கும் ராகுலும் களமிறங்கினர். முதல் போட்டியை போலவே ஒருபுறம் மயங்க் அட்டாக் செய்து அவ்வப்போது பவுண்டரிகளை அடிக்க மறுபுறம் தன் டிஃபன்சிவ் ஆட்டத்தை ராகுலும் மிக நேர்த்தியாகச் செய்துவந்தனர். குறிப்பாக ராகுலின் தேவையில்லா பந்துகளைத் தொடவே மாட்டேன் என்கிற அணுகுமுறையை இன்றும் மிக சிறப்பாக செயல்படுத்தினார். நன்றாக ஆடிவந்த இக்கூட்டணியை பதினைந்தாவது ஓவரில் பிரித்தார் யான்சன். அவர் வீசிய ஃபுல் லென்த் பந்தை டிரைவ் ஆட மயங்க் முற்படவே, பந்து அவுட்சைட் எட்ஜாகி கீப்பரிடம் கேட்சானார். அப்போது அணியின் ஸ்கோர் 36. அடுத்து களமிறங்கியவர் புஜாரா. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் சீறி வரும் பவுன்சர்களை பல்வேறு வகையில் சமாளித்து ஆடினாலும் அவற்றிற்கு எதிராக புஜாரா ரொம்பவும் தடுமாறினார் என்றே சொல்லவேண்டும். கடைசியில் 33 பந்துகளைச் சந்தித்து அவர் வெறும் 3 ரன்களில் பவுமாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆலிவரின் அந்த ஓவரில் அதற்கடுத்த பந்திலேயே ரஹானேவும் ஆட்டமிழந்து மேலும் அதிர்ச்சி தந்தார்.

முதல் போட்டியில் புஜாரா கோல்டன் டக் ஆனது போல இன்று மற்றொரு மிடில் ஆர்டர் பேட்டரான ரஹானே தன் முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். சென்ற ஆட்டத்தின்முதல் இன்னிங்ஸில் மிக பாசிடிவ்வாக ஆடிய விதத்தில் தன் பழைய ஃபார்மிற்குத் திரும்பி விட்டார் ரஹானே என்று அனைவரும் நினைத்தவேளையில் மீண்டுமொரு முறை சொதப்பியுள்ளார். அடுத்த போட்டியில் ரஹானேவின் இடம் என்பது சந்தேகமே. இதே நிலைதான் புஜாராவிற்கும்.

SA vs IND
SA vs IND

அடுத்து களமிறங்கிய விஹாரி, ராகுலுடன் சேர்ந்து நேர்த்தியாக ஆடினாலும் 20 ரன்களுக்கு ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் போய்கொண்டிருக்க மறுமுனையில் நங்கூரமாய் நின்ற ராகுல் 128 பந்துகளில் கேப்டனாக தன் முதல் அரைசதத்தைக் கடந்தார். இத்தனை நேரம் மிகுந்த கவனத்தோடு தன் இன்னிங்சை கட்டமைத்த ராகுல் அடுத்த சில பந்துகளில் ஓர் சிறிய கவனச்சிதறலால் ஆடிய புல் ஷாட் ஒன்றை ரபாடா அற்புதமாக கேட்ச் பிடிக்க அவரும் பெவிலியன் திரும்பினார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 116-5.

ராகுலுக்குப் பிறகு இந்திய அணியில் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியவர் அஷ்வின் மட்டுமே. பண்ட், தாகூர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, தான் சந்தித்த ஒவ்வொரு பந்திலும் ரன் சேர்க்க தொடங்கினார் அஷ்வின். 50 பந்துகளை சந்தித்து அவர் அடித்த 46 ரன்கள் இந்திய அணியின் ஸ்கோர் உயர்விற்கு பெரும் பங்காற்றியது. கடைசியில் பும்ரா தன் பங்கிற்கு ரபாடாவின் ஒரே ஓவரில் ஒரு சிக்சர் இரண்டு பவுண்டரிகள் அடிக்க 200 ரன்களைக் கடந்த இந்திய அணி இறுதியில் 202 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா சார்பாக யான்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்த, ஆலிவர் மற்றும் ரபாடா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

SA vs IND
SA vs IND

அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் முதல் விக்கெட்டை நான்காவது ஓவரிலேயே வீழ்த்தினார் ஷமி. ஓப்பனிங் பேட்டரான மார்கரம் ஒற்றை இலக்க ரன்னில் lbw முறையில் வெளியேறினார். புதிதாக களமிறங்கிய பீட்டர்சனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் எல்கர் கடைசி வரை விக்கெட் விழாமல் பார்த்துகொண்டாலும் இந்திய பௌலர்கள் மிக அருமையாக பந்துவீசினர். குறிப்பாக எல்கருக்கு சிராஜ் வீசிய 15-வது ஓவர் இங்கிலாந்து சுற்றுபயணத்தில் மொய்ன் அலிக்கு பந்தை வெளியே எடுத்து செல்வதே போலவே இருந்தது. ஆனால் எதிர்பாரதவிதமாக சிராஜுக்கு திடீர் தசைப்பிடிப்பு ஒன்று ஏற்பட்டது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாபிரிக்காவின் ஸ்கோர் 35-1.

இரண்டாம் நாளான இன்று சிராஜ் பந்துவீச திரும்பவில்லை என்றாலும் மற்ற பௌலர்களாக ஷமி, பும்ரா, தாக்கூர் ஆகியோருக்கு முழு ஒத்துழைப்பையும் ஆடுகளம் அளிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. தென்னாபிரிக்க பேட்டர்கள், இந்த இந்திய பௌலிங்கை படையைத் திறம்பட சமாளித்து அவர்கள் அணியை முன்னிலை அடையசெய்ய முயல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்போம்.