கிரிக்கெட்
ஆசிரியர் பக்கம்
Published:Updated:

தென்னாப்ரிக்கா வீழ்ந்துவிடக்கூடாது!

டிவில்லியர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டிவில்லியர்ஸ்

பத்மநாபன் நாகராஜ்

தென்னாப்ரிக்கா ஒவ்வொரு முறையும், உலகக்கோப்பைக்கு வந்தப்பின்னர்தான் அதிர்ச்சி கொடுக்கும். வழக்கத்திற்கு மாறாக, உலகக்கோப்பைக்கு ஒரு வருடம் முன்னமே, அந்த அணியின் நட்சித்திர வீரர்களில் ஒருவரான, டிவில்லியர்ஸ், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தது தான் தென்னாப்பிரிக்காவின் சரிவின் தொடக்கம்.இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில், ஒவ்வொரு முறையும், இந்தியாவின் கை ஓங்கும்போதெல்லாம், பதிலுக்கு ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றியைத் தேடித்தந்ததுவிட்டு, சென்ற வருடம் ஐபிஎல் தொடரிலும் வான வேடிக்கை காட்டிய பின்பு, டிவில்லியர்ஸ் இப்படி சொன்னது, அணியின் மிடில் ஆர்டரை மிகவும் பாதித்தது. அவரின் இழப்பைச் சரிக்கட்ட குறைந்தது இரண்டு வீரர்களின் ஆற்றல் தேவை. அதை நோக்கி பயணப்படுகையில், தென் ஆப்பிரிக்கா நிர்வாகம் மிகவும் குழம்பவே செய்தது.

தென்னாப்ரிக்கா வீழ்ந்துவிடக்கூடாது!

கோல்பாக் டீல்:

தென் ஆப்பரிக்கா நிதி நிலைமை பல வருடங்களாக கவலைக்கிடமாக இருக்கிறது. சர்வதேச அணியில் நிச்சயம் கறுப்பின மக்களின் பங்களிப்பும் அவசியம் என்பது அந்நிர்வாகத்தின் விதியும் கூட. இதை மேற்கோள்காட்டி, நிறைய வீரர்கள், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் ஆடச் சென்றுவிடுகிறார்கள். `கோல்பாக் டீல்’ என்பது பிரிட்டன், அதனின் நேச நாடுகளான ஆப்பரிக்கா, மேற்கிந்திய தீவுகள் போன்ற கிட்டத்தட்ட நூறு நாடுகளின் வீரர்களை அந்நிய வீரர்களாக கருதாமல், உள்ளூர் போட்டிகளில் (county cricket clubs) அவர்களைப் பிராந்திய வீரர்களாகவே ஆடவைக்கலாம். ரைலி ரூஸோவ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் கோல்பாக் பக்கம் சாய்ந்தது தென் ஆப்பிரிக்காவுக்கு பெரிய இழப்பு. 2017-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்ட் போட்டிகளில் அடியெடுத்து வைத்த, டுவான் ஆலிவர் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும், தங்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தாய்நாட்டைக் கைவிட்டது ஈடுசெய்ய முடியாத இழப்பு.

சரி, இவர்கள் எல்லோரும் இங்கிலாந்துக்குச் சென்று, அங்கு நன்றாக ஆடி, இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியுமா என்றால், அதற்கும் பெரிதாக வாய்ப்பில்லை. ஏனென்றால், கோல்பாக் டீல் படி, வெளியூரிலிருந்து வருபவர் மினிமம் 7 வருடங்கள் ஆடினால்தான், இங்கிலாந்து அணிக்காக தேர்வாகும் நிலைக்காவது வர முடியம். இப்படி உலகக்கோப்பை ஆரம்பிக்கும் முன்னரே, டிவில்லியர்ஸின் அதிர்ச்சிகரமான ஓய்வு, வீரர்கள் கோல்பாக் டீல் கையெழுத்திடுவது என்று பல்வேறு பிரச்னைகளோடு தொடரை அணுகினாலும், டிப்ளெஸ்ஸியின் அணி, கோப்பையை வெல்லக்கூடும் அணியாகத் தான் கிரிக்கெட் ரசிகர்கள் அணுகினார்கள்.

தென்னாப்ரிக்கா வீழ்ந்துவிடக்கூடாது!

சென்ற முறை, கையில் இருந்த அரை இறுதிப்போட்டியை, எவ்வாறெல்லாம் நினைத்தேப் பார்க்க முடியாத அளவுக்கு உடைக்க முடியுமோ, அப்படியெல்லாம் தவறிழைத்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல், நாடு திரும்பிய சோகம் இன்னும் எல்லோருக்கும் நியாபகம் இருக்கும். 2015 ஆண்டு தென் ஆப்பரிக்கா செய்த தவறுகளை திருத்திக்கொள்ளலாம் என்று நினைத்தால் கூட, அனுபவம் நிறைந்த வீரர்களை ஒரு கையின் விரல்களைக் கொண்டு எண்ணி விடலாம் என்கிற வகையில்தான் முதல் போட்டியில் இங்கிலாந்தோடு மோதியது.

உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே, இறுதிப் போட்டியில் நான்தான் ஆட்ட நாயகனாக இருப்பேன் என்கிற வகையில், ஸ்டோக்ஸ் அன்று அடித்த ரன்களும், பவுண்டரியில் டைவ் அடித்து பிடித்த கேட்சும், தென் ஆப்பரிக்காவின் முதல் தோல்வியானது. இரண்டாவது போட்டியில், காயம் காரணமாக லுங்கி நிகிடி வெறும் நான்கு ஓவர்கள் மட்டும் வீசி வெளியேறியது வங்கதேசத்துக்குச் சாதகமாக அமைந்தது, இவ்வாறு நடப்பது முதன்முறை அல்ல. பல்வேறு போட்டிகளில் ஸ்டெயின், மோர்க்கல் போன்ற வீரர்கள் காயம் காரணமாக அவ்வப்போது ஆட்டத்தின் நடுவே விலகி, தென் ஆப்பிரிக்காவின் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள். ஏற்கனவே ஒருமுறை வங்கதேசம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக உலகக்கோப்பையில் வென்று சாதனைப் படைத்துள்ளார்கள். ஷாகிப், முஷ்ஃபிகுர் மற்றும் மஹ்மதுல்லா அடித்து ஆடி, 330 ரன்கள் எடுக்க, ஆட்டத்தின் பாதியிலேயே முடிவு தெரிந்து விட்டது.

தென்னாப்ரிக்கா வீழ்ந்துவிடக்கூடாது!

மூன்றாவது போட்டியில், இந்தியாவிடம் போராடித் தோற்றது. மேலோட்டமாக ஸ்கோரை மட்டுமே பார்த்தால் அவ்வாறு தெரியாது. ஆனால், ரோஹித் ஷர்மாவின் கதகளி ஆட்டத்தில் ஒரேயொரு பந்து மட்டும் ஃபீல்டர் இருக்குமிடத்தில் சென்றிருந்தால், ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும். மாறாக, காகிஸோ ரபாடா, தன்னுடைய வித்தைகளை மொத்தமாக இறக்கினாலும், அவருக்கு உறுதுணையாக இன்னொரு பக்கம் பயம் காட்டி பந்து வீச ஆளில்லாத காரணத்தினால், இந்தியா தன்னுடைய முதல் வெற்றியையும், தென்னாப்ரிக்கா அவர்களின் ஹாட் ட்ரிக் தோல்வியையும் பெற்றது. உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய முதல் கட்ட அணிகளில் ஒன்றாக வீழ்ந்தது தென்னாப்ரிக்கா.

இதனிடையே, தென்னாப்ரிக்கா நடத்தும் ஐபிஎல் போன்ற பெரிய தொடர் இந்த வருடம் எவ்வித தடையுமின்றி நடுக்குமென்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பணம் கொஞ்சம் சேர்த்து, முதலில், உள்ளூர் வீரர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டும். முக்கியமாக கோல்பாக் பக்கம் சாயும் வீரர்களை எப்பாடு பட்டாவது பிடித்து நிறுத்த வேண்டும்.

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும், டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதே இலக்காக இருக்க வேண்டும். Mnzai T20, CPL, BBL, BPL. PPL & IPL... இப்படி பல்வேறு போட்டித்தொடர்கள் அவர்களின் வீரர்களை தயார்படுத்த உதவும். மேலும், இதனிடையே, அடுத்த நான்கு வருடங்களுக்கான வரைவை உருவாக்குதல் வேண்டும். அடுத்த உலகக்கோப்பை இந்தியாவில் மட்டுமே நடக்கப்போவதால், தாஹிரைத் தாண்டி நல்ல சுழற்பந்து வீச்சாளர் மற்றும் 3-4 ஆல் ரவுண்டர்களை உருவாக்கினால் மட்டுமே, தென்னாப்ரிக்காவால் உலகக்கோப்பையின் கனவுக்கு உயிர் கொடுக்க முடியும்.

தென்னாப்ரிக்கா வீழ்ந்துவிடக்கூடாது!

கிட்டத்தட்ட அணியின் பிரதான வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் பங்குபெறுவதால், அடுத்த மூன்று வருடங்களில் இந்திய ஆடுகளங்களை நன்றாக புரிந்துக்கொள்ள பெரிய வாய்ப்பாக அமையும். மேலும், இந்தியாவை எதிர்கொள்ள, இந்திய ஆடுகளங்களில் விளையாடி, சம்பாதித்து, அவர்களையே வெற்றிக்கொள்ள இதை விடச் சிறந்த வாய்ப்பு இனிமேலும் அமையாது.

டுப்ளெஸ்ஸி ஏற்கனவே 35 வயதில் இருப்பதால், அடுத்தத் தலைவரை உருவாக்கும் நேரமிது. உலகுக்கே 21 வயதில் ஸ்மித்தை கேப்டனாக்கி, இளம் வீரர்களும் அணியை வழிநடத்த முடியுமென்று எடுத்துக்காட்டாக விளங்கிய போர்ட் தென் ஆப்பிரிக்கா. அப்படியிருக்க அவர்கள் மீண்டும் ஒருமுறை எழுச்சியடைவார்கள் என்கிற நம்பிக்கை ரசிகர்களின் மனதில் இருக்கிறது. ஆனால், இது, அணியின் நிர்வாகத்திடமும், ஊசலாடும் வீரர்களின் மனத்திலும் இருக்குமா என்பது தான் பெரிய கேள்வி.

இந்த விஷயங்களையெல்லாம் தென் ஆப்பரிக்கா கடந்து வர வேண்டும். பத்து அணிகளில் ஏற்கனவே இரண்டு அணிகள் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி ஆடாத நிலையில், தென்னாப்ரிக்காவின் வீழ்ச்சி என்பது, சர்வதேச கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு நிச்சயம் வழிவகுக்கும். அது நடக்கக்கூடாது... நடந்துவிடாது என்று நம்புவோமாக!