Published:Updated:

IND vs SA: 13 வெற்றிகள் என்பதைக் கனவாக்கிய மில்லர் - வான் டர் டஸன் இணை; பண்ட் & கோ தவறியது எங்கே?

IND vs SA

தொடர்ந்து 12 போட்டிகளாக வீழாமல் தொடர்ந்த இந்திய டி20 சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது மில்லர் - வான் டர் டஸன் ஜோடி. 200-க்கும் அதிகமான ரன்களைக் குவித்தும் முதல் டி20-ல் தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா.

IND vs SA: 13 வெற்றிகள் என்பதைக் கனவாக்கிய மில்லர் - வான் டர் டஸன் இணை; பண்ட் & கோ தவறியது எங்கே?

தொடர்ந்து 12 போட்டிகளாக வீழாமல் தொடர்ந்த இந்திய டி20 சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது மில்லர் - வான் டர் டஸன் ஜோடி. 200-க்கும் அதிகமான ரன்களைக் குவித்தும் முதல் டி20-ல் தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா.

Published:Updated:
IND vs SA
ஸ்லோ பிட்ச், ஸ்பின்னுக்குக் கை கொடுக்கலாம் என்பதெல்லாம்தான் இக்களம் குறித்த முந்தைய கணிப்புகள். அதனாலேயே கேசவ் மகராஜுடன்தான் கேப்டன் பாவுமாவும் முதல் ஓவரைக்கூடத் துவங்கினார். ஆனால், தொடக்கத்தில் களத்தில் ஸ்பின்னர்களுக்கு மட்டுமல்ல, வேகப்பந்து வீச்சாளர்களுக்குமான விஷயமுமிருந்தது. பவுன்ஸும், சீம் மூமெண்டும் பாவுமாவை பவர்பிளேயின் மீதம் ஐந்து ஓவர்களையும் வேகப்பந்து வீச்சாளர்களிடமே கொடுக்க வைத்தது.

இந்தியாவின் அடுத்த தலைமுறை ஓப்பனர்களான இஷான் - கெய்க்வாட் இணை, சற்றே தடுமாறினாலும் ஷார்ட் பவுண்டரியை சாதகமாகப் பயன்படுத்தி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பந்துகளை பவுண்டரிகளாக்கினர். ஒன் ஹாண்டட் ஃபோரெல்லாம் அடித்து குதூகலப்படுத்தினார் இஷான். பவர்பிளேவுக்குள் 20 பந்துகள் டாட் பால் ஆகியும்கூட, ஸ்கோர் 51-ஐ எட்டியது.

IND vs SA
IND vs SA

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூன்று சிக்ஸர்களோடு சிறப்பாகத் தொடங்கினாலும், அதை பெரிய ஸ்கோராக, கெய்க்வாட் மாற்றவில்லை. தனது முதல் மூன்று டி20 போட்டிகளில், 21-தான் அவரது அதிகபட்ச ஸ்கோரே! அதை மட்டும் இப்போட்டியில் 23 ஆக மாற்றிய கையோடு விடைபெற்றார். முந்தைய பந்தை, சிக்ஸருக்கு அனுப்பிய குஷியில், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பார்னெல் வீசிய பந்தை, மிட் விக்கெட்டில் புல் செய்ய முயன்று, பாவுமாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஒன்டவுனில் ஸ்ரேயாஸ் உள்ளே வந்த பிறகுதான், களத்தில் அனல் பறந்தது. இந்தியாவின் ஸ்கோர் சடாரென அதிகரித்ததும் இதற்குப் பிறகுதான். மிடில் ஓவர்களிலும் ரன்களை ஏற்ற வேண்டுமென்ற உத்தியோடு, சந்தித்த முதல் ஓவரிலிருந்தே அதிரடியைத் தொடங்கினார் ஸ்ரேயாஸ். ஸ்பின் பந்துகளை ரன்களாக மாற்றும் அவருக்குக் கைவந்த அக்கலை, மீண்டும் கைகொடுத்தது. மறுமுனையிலோ அதுவரை வெறும் 113 ஸ்ட்ரைக்ரேட்டோடு ஆடிக் கொண்டிருந்த இஷானும், ஸ்ரேயாஸிடமிருந்து இன்ஸ்பிரேஷன் எடுத்துக் கொண்டதைப் போல் அடித்து ஆடத் தொடங்கினார். 37 பந்துகளில் அரைசதம் கடந்தபின் அவரது ஆட்டத்தில் காட்டம் கூடியது. கேசவ் மகராஜ் வீசிய ஓவரில் இரண்டு சிக்ஸர்களையும், இரண்டு பவுண்டரிகளையும் விளாசியதுதான் 158.3 என அவரது ஸ்ட்ரைக்ரேட்டை எகிற வைத்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த ஓவரின் முடிவில் கிடைத்த இஷானின் விக்கெட் மட்டுமே கேசவ்வுக்குக் கிடைத்த ஒரே ஆறுதல். எனினும், இஷான் மொத்தமாக அடித்திருந்த 3 சிக்ஸர்களும், 11 பவுண்டரிகளும், பாவுமா படைக்கான சேதாரத்தைச் சிறப்பாகவே செய்திருந்தன. ஷம்சியின் ஓவரை ஸ்ரேயாஸ் கவனித்துக் கொள்ளும்படி தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டதாக இஷான் போட்டிக்குப் பின் கூறியிருந்தார். ஸ்ரேயாஸ் அடித்த மூன்று சிக்ஸர்களுமே அவருக்கு எதிராகத்தான் வந்திருந்தன. இந்தப் புரிந்துணர்வால் பிணைக்கப்பட்ட பார்னர்ஷிப்தான் 40 ஓவர்களில் 80 ரன்களைக் குவிக்க வைத்து இந்தியாவை முன்னிலைப்படுத்தியது.

தென்னாப்ரிக்காவின் பக்கமும் ஃபீல்டிங் பெருங்குற்றங்கள் நிரம்பி வழிந்தன. டீ காக், ஸ்ரேயாஸின் ஸ்டெம்பிங் வாய்ப்பைத் தவற விட்டதிலிருந்து ரன்அவுட், கேட்ச் டிராப் எனத் தங்களின் வீழ்ச்சிக்குத் தாங்களே உதவிக் கொண்டிருந்தனர். அப்படி தென்னாப்பிரிக்காவால் தவறவிடப்பட்ட வாய்ப்புகளின் முதுகிலோ இந்திய பேட்ஸ்மென்கள் அசுரவேகத்தில் பயணித்தனர்.

IND vs SA
IND vs SA

இஷான் - ஸ்ரேயாஸ் இணை மிடில் ஓவரில் மரண பயத்தைக் காட்டியதென்றால், டெத் ஓவர்களில் 18 பந்துகள்தான் ஆயுட்காலம் என்றாலும் ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்தது பண்ட் - பாண்டியா கூட்டணி. 'கிட்டத்தட்ட நான்கு ஓவர்கள், ஏழு விக்கெட்டுகள் கைவசமிருக்க கவலையெதற்கு?!' என முந்தைய கூட்டணி அமைத்துத் தந்த அடித்தளத்தில், தங்களது பார்ட்னர்ஷிப்பை அதிவேகமாகக் கட்டமைத்தனர் இந்த இரட்டையர். பிரிட்டோரியஸ் ஓவரில் பந்துகளை, பண்ட் பஞ்சர் செய்தார் என்றால் நார்க்கியா, ரபாடா, பார்னெல் என அனைவரது ஓவர்களிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு பழைய பாண்டியாவாக ஆர்ப்பரித்தார் ஹர்திக் பாண்டியா. ஸ்லோ பால்களால்கூட சிக்ஸர்களைத் தடுக்க முடியவில்லை. ஐபிஎல்லில் குஜராத்தின் சார்பாக ஆடியபோதே அவரது பழைய அடையாளங்கள் வெளிவரத் தொடங்கயதுதான் என்றாலும் இந்திய ஜெர்ஸியில் அதுவும் ஃபினிஷராக அது இன்னமும் ஆக்ரோஷத்தோடு வெளிப்பட்டு 258 ஸ்ட்ரைக்ரேட்டோடு ரன்களைக் குவிக்க வைத்தது.

இறுதி ஓவரில் வந்து சேர்ந்த தினேஷ் கார்த்திக்கிற்குப் பெரிதாக வேலை எதையும் வைக்காமல் 200 ரன்களை இந்த இளைஞர் படையே கடக்க வைத்துவிட்டது. 212 என்னும் சவாலான இலக்கையும் நிர்ணயித்தது இந்தியா. தென்னாப்பிரிக்க பௌலர்களில் மூவரது எக்கானமி பத்தையும், மூவரது எக்கானமி எட்டையும் தாண்டி எல்லோருக்குமே இது ஆஃப் டே ஆனதைக் காட்டியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பனிப்பொழிவு வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கப் போவதில்லை. போதாக்குறைக்கு டர்ன் ஆகும் பந்துகளும், சஹால் - அக்ஸருக்கான விக்கெட்டுகளுக்கு உத்தரவாதம் தரும் என்பதால் முதல் பாதியின் முடிவில் தோல்வியின் நிழல் தென்னாப்பிரிக்காவின் மேல் அடர்த்தியாகப் படிவதைப் போல்தான் இருந்தது. ஆனால், பவர்பிளேயிலேயே பயமுறுத்தியது தென்னாப்பிரிக்கா.

வெரைட்டியின் நாயகனாக புவனேஷ்வர், தனது ஆயுதங்களான இன்ஸ்விங்கர், கட்டர்களால் மிரட்டினார். அவர் வீசிய லெக் கட்டரில் தான் பிடித்த அற்புதமான கேட்சினால் பாவுமாவை வெறும் எட்டு ரன்களுக்கு வெளியேற்றினார் பண்ட். அடுத்ததாக உள்ளே வந்த பிரிட்டோரியஸ், பவர்பிளேயைச் சிறப்பிக்க வந்ததைப் போல எல்லா பௌலர்களையும் நையப் புடைக்கத் தொடங்கினார்.

IND vs SA
IND vs SA
முன்னதாக ஒன்பது டி20 போட்டிகளில் ஆறில், டீ காக்கின் விக்கெட்டை சஹால் எடுத்திருப்பதால் அவரை பண்ட் உள்ளே கொண்டுவர, அது காஸ்ட்லி ஓவராக முடிந்தது. ஹர்திக் பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் மூன்று சிக்ஸர்களை விளாசி வெறித்தனம் காட்டினார் பிரிட்டோரியஸ். ஐந்து ஓவர்களுக்குள்ளாகவே 60 ரன்களைச் சேர்த்து, பயமுறுத்தியது இக்கூட்டணி.

ஆனால், புவனேஷ்வரைப் போலவே ஹர்சலும் கேம் சேஞ்சர் அவதாரமெடுத்தார். ஃபுல் டாஸ் பந்தைக் குறைந்த வேகத்தில் அவர் ஸ்லோ மோஷனில் அனுப்ப, அது பிரிட்டோரியஸின் விக்கெட்டைத் தூக்கியது. பவர்பிளேயில் மற்ற பௌலர்கள் மூன்று ஓவர்களில் 49 ரன்களைத் தந்திருக்க, புவனேஷ்வர் - ஹர்சல் மொத்தமாக மூன்று ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். அந்த அழுத்தம்தானே ஹை ஸ்கோர் போட்டிகளில் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் சாவி?! போக வேண்டிய தூரம் பயமுறுத்த, துணிந்து அக்ஸரின் பந்தை ஏரியல் ஷாட்டாக்கினார் டீ காக். ஆனால், அது இஷானின் கையில் கேட்சாக செட்டில் ஆகியிருந்த பேட்ஸ்மேனை இழந்து தள்ளாடியது தென்னாப்பிரிக்கா. இத்தருணத்திலேயே 12-ஐ சுற்றி வந்து கொண்டிருந்தது தேவைப்படும் ரன்ரேட்.

பெரிய இலக்கைத் துரத்துகையில் விக்கெட்டுகள் வேகத்தடை மட்டுமல்ல, அதி அபாய வளைவும்கூட. ஆனால், எதிர்ப்பதமாக நங்கூரம் பாய்ச்சும் பார்ட்னர்ஷிப்கள்தான் அணியை மேடேற வைக்கும் முக்கியக் காரணி. வான் டர் டஸன் - மில்லர் இணை, இதைத்தான் செய்தது. சரியாக மூன்று ஓவர்கள், தங்களை நிலைநிறுத்த எடுத்துக் கொண்டனர். அந்த இடைவெளியில் 15 ரன்கள் மட்டுமே சேர்ந்தன. முடிவில் ஹர்சல் ஓவரில் (12), யார்க்கரை பவுண்டரியாக்கி மில்லர் ஆரம்பித்தார். அங்கிருந்து எந்த பௌலரைப் பார்த்தாலும் அடிப்போம் என்ற மைண்ட் செட்டுக்கு மாறிவிட்டனர் இவ்விருவரும். 22 பந்துகளில் மில்லரின் அரைசதம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வந்து சேர்ந்து, அவரது ஐபிஎல் ஃபார்ம் அப்படியே தொடர்வதைக் காட்டியது.

IND vs SA
IND vs SA

அவருக்குத் துணையாக இன்னொரு முனையில் இருந்த வான் டர் டஸனும் மெதுவாகத் தொடங்கினாலும், போகப் போக கியரை மாற்றி ரன் வேட்டையாடி 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களைத் திறம்பட எதிர்கொண்டார். வெறும் 29 பந்துகளில் 28 ரன்களை எடுத்திருந்தவர், அடுத்த 17 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். 16-வது ஓவரில் ஸ்ரேயாஸ் கோட்டைவிட்ட அவரது கேட்ச்தான் மேட்சையே மாற்றியது.

இவர்களது இந்த இரண்டு அரைசதங்கள் மட்டுமல்ல, டெத் ஓவரில் ஹர்சல் ஒரே ஓவரில் தந்த 22 ரன்களும் போட்டியைக் கிட்டத்தட்ட முடித்து வைத்தன. அதற்கு முன்னதாக 14-ஆக இருந்த தேவைப்படும் ரன்ரேட், அந்த ஓவர் முடிவில் 18 பந்துகளில் 34 ரன்களே தேவை எனச் சுலபமாக வந்து நின்றுவிட்டது. வேறெந்த அதிசயத்தையும் இந்திய பௌலர்களால் இறுதியில் நிகழ்த்த முடியாமல் போக ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா.

ஃப்ளாட் பிட்ச், செட்டில் ஆகிவிட்ட பேட்ஸ்மென்கள், அதிலும் ஸ்பெஷலிஸ்ட் ஃபினிஷர்கள் என எல்லாமே, தென்னாப்பிரிக்காவுக்குச் சாதகமாகவே நகர்ந்தது. பிரிட்டோரியஸ் பவர்பிளேயில் ஏற்றிய ரன்ரேட்டும், மில்லர் - வான் டர் டஸனின் அதிரடி ரன்வேட்டையும் இந்த வெற்றியை தென்னாப்பிரிக்காவுக்குப் பரிசளித்தது. இந்தியாவுக்கு எதிராக ஓர் அணியின் அதிகபட்ச டி20 ரன் சேஸும் இதுதான். தங்களது பவர்பிளேயில் வந்த டாட் பால்களையும் ரன்களாக்கி 240 ரன்களைத் தாண்டியிருந்தால் இந்தியா வெற்றியைச் சுவைத்திருக்கலாம்.

IND vs SA
IND vs SA

தொடர்ந்து 12 டி20 போட்டிகளில் வெற்றி பெற்றதோடு, 13-வது போட்டியையும் வென்று சாதனை படைக்க வேண்டுமென்று கனவு கண்ட இந்திய அணி தோற்றிருக்கிறது. தென்னாப்பிரிக்கா அந்தத் தொடர் வெற்றிப் பயணத்தை முடித்து வைத்துள்ளது.

1-0 என ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது தென்னாப்பிரிக்கா. புதிய கேப்டனான் பண்ட் தோல்வியோடு தொடங்கியுள்ளார். இதனை ஈடுகட்ட, அடுத்த போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் வருமா, தவறுகளைத் திருத்திக் கொண்டு இன்னமும் பல புதிய யுக்திகளுடன் பண்ட் - டிராவிட் கூட்டணி மீண்டு வருமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism