தென்னாப்பிரிக்கா அணியில் லுங்கி எங்கிடிக்கு பதிலாக ட்வேன் பிரிட்டோரியஸ் இடம்பிடித்தார். அதாவது அந்த அணியின் ப்ரீமியம் பெளலருக்குப் பதிலாக இடம்பிடிக்கிறார். “எங்களுக்கு 70% பேட்டிங், 30% பெளலிங் செய்யும் ஆல்ரவுண்டர்தான் தேவை. அந்த தேவையை பிரிட்டோரியஸ் பூர்த்திசெய்கிறார்” என உலகக் கோப்பைக்கான அணியில் பிரிட்டோரியஸ் இடம்பிடித்தது குறித்து கருத்து சொன்னார் தென்னாப்பிரிக்கா கேப்டன் டூ ப்ளெஸ்ஸி. இலங்கைக்கு எதிரான போட்டியில் அந்த 30% பெளலர்தான் 30% விக்கெட்டை வீழ்த்தி (மூன்று விக்கெட்டுகள்), இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ய 70% காரணமாக இருந்தார்.

உண்மையில் அவர் 30 சதவீத பெளலர் மாதிரி பந்து வீசவில்லை. ஒரு ரெகுலர் பெளலருக்கு பதிலாக தான் சேர்க்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து 100% பெர்பெக்ட் பெளலராக பந்துவீசினார். பிட்ச் ஸ்லோவாக இருந்தது. ஸ்லோ பிட்சில் பேக் ஆஃப் தி லென்த் அல்லது ஷார்ட் பால்களை சரியாக டைமிங் செய்வது பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். அதோடு போட்டி நடந்த டர்ஹம் மைதானத்தில் பவுண்டரிகளின் எல்லையும் பெரியது. அதனால், நல்ல டைமிங் கிடைத்தால் மட்டுமே பந்து பவுண்டரியைக் க்ளியர் செய்யும். பிரிட்டோரியஸ் அதைத் தெளிவாக உணர்ந்து பிட்சின் உதவியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். 99 சதவிகித பந்துகளை லென்த் அல்லது ஷார்ட் பாலாக வீசினார். பிரிட்டோரியஸிடம் வேகம் பெரிதும் இருக்காது. ஏற்கெனவே பிட்ச் ‘ஸ்லோ’ என்பதால் அவரின் மீடியம் பேஸ் அந்த பிட்ச்சில் பக்காவாக அவருக்கு செட்டானது.

அவரின் பந்துகளில் சரியாக டைமிங் கிடைக்காமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினர். அவர் வீசிய 60 பந்துகளில் 46 பந்துகள் டாட் பால்கள் ( இந்த உலகக் கோப்பையில் இதுதான் அதிகம்). ரன்களை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் மூன்று முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். பிரிட்டோரியஸ் என்கிற 30% பெளலர்தான் (டூ ப்ளெஸ்சிஸின் கனக்குப்படி) தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 70 சதவிகிதம் காரணமாக இருந்தார்.
187 டாட் பால்கள்!
அவர் மட்டுமல்ல மற்ற பெளலர்களும் சிறப்பாக பந்து வீசினர். பிட்ச்சின் தன்மையை உணர்ந்து, 140 கி.மீ வேகத்திற்கு குறையாமல் பந்துவீசும் ரபாடாவும், நேற்று சராசரியாக 135 கி.மீ வேகத்தில்தான் வீசினார். முக்கியமாக எல்லா பெளலர்களும் எதிரணியினரை டாட் பால்கள் ஆடச்செய்தனர். டாட் பால்கள் மூலம் எப்படி விக்கெட் வீழ்த்தலாம் என்பதை அழகாக எல்லா அணிக்கும் கற்றுக்கொடுத்தது தென்னாப்பிரிக்கா.

தென்னாப்பிரிக்கா பெளலர்களின் டாட் பால் பிரஷருக்கு பலியாகினர் இலங்கை வீரர்கள். மொத்தம் 187 டாட் பால்கள். ஒருநாள் போட்டிகளில் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வதுதான் எல்லாவற்றையும் விட மிக முக்கியம். ஆனால், அதைச் செய்யாமல் முக்கால்வாசி பந்துகளை டாட் பால்கள் ஆடி, நெருக்கடியை ஏற்படுத்திக்கொண்டு, அதைச் சரிக்கட்ட ஸ்லாக் ஷாட்கள் ஆடி அவுட்டாகினர் இலங்கை பேட்ஸ்மேன்கள்.
ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலியே இலங்கை கேப்டன் டிமுத் கருணாரத்னே ரபாடாவின் பந்தை சரியாக கணிக்காமல், ஒரு டிஃபென்சிவ் ஷாட் ஆட, அது எட்ஜாகி ஸ்லிப்பில் இருந்த டூ ப்ளெஸ்ஸியிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், அந்த நெருக்கடியைச் சற்றும் தங்கள் மேல் ஏற்றிக்கொள்ளாமல் மிக அற்புதமாக ஸ்கோர் செய்தனர் ஃபெர்ணான்டோ - குசல் பெரேரா ஜோடி. பவர்பிளேவில் ரன்ரேட்டை ஆறுக்கும் அதிகமாக வைத்திருந்தனர்.
பவர்பிளே முடிவில் பெர்ணான்டோ ஒரு மிஸ் டைமிங் ஷாட் அடிக்க, அங்கே தொடங்கியது இலங்கையின் சொதப்பல். முதல் 10 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்த இலங்கை 10 - 30 ஓவர்களில் 96 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஓவருக்கு ஓவர் எக்கச்சக்கமான டாட் பால்கள். இலங்கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களில் ஒருவரது ஸ்ட்ரைக் ரேட்டு கூட 60-க்கு மேல் இல்லை. மூன்று பேருக்கு 50-க்கும் குறைவு. இலங்கை பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய சிரமப்படுகிறார்கள் என அறிந்து மற்றுமொரு ஃபீல்டரை 30 யார்டு வட்டத்துக்குள் நிறுத்தி, இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தினார் டூ ப்ளெஸ்ஸி.

டாட் பால் நெருக்கடி!
1. குசல் பெரேரா அவுட்டானதற்கும் மேத்யூஸ் அவுட்டானதற்கும் இடையில் 10 ஓவர்கள் வீசப்பட்டது. அதில் 46 டாட் பால்கள். மேத்யூஸ், குசல் மெண்டீஸ் இருவரும் போட்டிப்போட்டு டாட் பால்கள் ஆடினர். வர்ணனையில் இருந்த சங்கக்கரா “ஒரு டெஸ்ட் மேட்ச் இன்னிங்ஸ் எப்படி ஆட வேண்டும் என ஒருநாள் போட்டிகளில் கற்றுக்கொடுக்கின்றனர்” என கிண்டல் செய்தார். அந்த டாட் பால்கள் தந்த நெருக்கடியை சமாளிக்க, மேத்யூஸ் பெரிய ஷாட் ஆட முயற்சி செய்து அவுட்டானார்.
2. மேத்யூஸ் அவுட் ஆனதற்கும் குசல் மெண்டீஸ் அவுட் ஆனதற்கும் இடையில் 6 ஓவர்கள் வீசப்பட்டது. அதில் மெண்டீஸ் – தனஞ்சயா ஜோடி 24 டாட் பால்கள் ஆடியது. குசல் மெண்டீஸ், அநியாயத்துக்குப் பொறுமையாக விளையாடினார். ஒரு கட்டத்தில் 34 பந்துகளில் வெறும் நான்கு ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அடித்து ஆட வேண்டிய நெருக்கடியில் விக்கெட்டை பறிகொடுத்தார். இப்படி இலங்கை பேட்ஸ்மேன்கள் சிட்டி ரோபோட்டைப் போல தனக்குத்தானே ‘டிஸ்மாண்டில்’ செய்துகொண்டனர். கடந்த போட்டியில் இங்கிலாந்தை சுருட்டியது போல் தென்னாப்பிரிக்காவையும் சுருட்டிவிடலாம் என குறைந்த ஸ்கோரை மனதில் வைத்து ஆடியது போலவே தோன்றியது. இறுதியில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி தரத் தவறியது இலங்கை.
இலங்கை அணியின் வெற்றிக்கு மீண்டுமொரு மலிங்கா மேஜிக் தேவைப்பட்டது. தன்னுடைய மூன்றாவது ஓவரில் மலிங்கா, டி காக்கை அற்புதமான யார்க்கரால் வெளியேற்ற, இலங்கை ரசிகர்கள் குஷியாகினர். ஆனால், அதன்பிறகு ஜோடி சேர்ந்த அம்லா – டூ ப்ளெஸ்ஸி ஜோடி 174 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, எளிதாக வெற்றிக்கோட்டை அடைந்தனர். டூ ப்ளெஸ்ஸி 96 ரன்களும், அம்லா 80 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென்னாப்பிரிகாவுக்கு இந்தப் போட்டியினால் இழப்பதற்கு எதுவுமில்லை. எந்த நெருக்கடியும் இல்லாமல் கூலாக ஆடினர். இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் (`பைலேட்டரல் சீரீஸில்) எப்படி மற்ற அணியிடம் ஆதிக்கம் செலுத்துமோ, அப்படி ஆடியது தென்னாப்பிரிக்கா. பெளலிங், பேட்டிங், ஃபீல்டிங், கேப்டன்சி என நான்கு டைமன்ஷனிலும் அசத்தினர். இதைத்தானே, உலகக் கோப்பை தொடங்கும்போது எதிர்பார்த்தோம். பாவத்த!

தென்னாப்பிரிக்கா வெற்றியடைந்ததும் “ஞாயிற்றுக்கிழமை 1.2 பில்லியன் இந்தியர்களுடன் சேர்த்து, 200 மில்லியன் பாகிஸ்தானியர்கள், 150 மில்லியன் வங்கதேசத்தினர், 25 மில்லியன் இலங்கைவாசிகள், இந்தியா, இங்கிலாந்தை வெல்ல வேண்டும் என பிராத்திப்பர்” என சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வரத்தொடங்கிவிட்டது. ஆமாம். எல்லா ஆசிய நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவு தரும் சரித்திர நிகழ்வை ஏற்படுத்திவிட்டது தென்னாப்பிரிக்காவின் இந்த வெற்றி!