வெற்றிகள் தரும் போதை எப்போதுமே அலாதியானது தான். ஆனால், தோல்விகள்தான் நம்மைத் தூசி தட்டிக் கொள்ள உதவும். 'ரெட்பால் புரட்சி' என ராக்கெட் வேகத்தில் பயணித்த இங்கிலாந்துக்கு சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலை வந்திருக்கிறது.
பேட், பாலினை விட 'BazzBall' மீதுதான் சில மாதங்களாக இங்கிலாந்தின் மொத்த நம்பிக்கையும் படிந்திருந்தது. ஆஷஸ் படுதோல்வியால் பதுங்கி இருந்தவர்களுக்கு நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி மட்டுமல்ல, ஓராண்டு காத்திருப்புக்கு மதிப்பூட்டுவதாக இந்தியாவுடன் தொடரைச் சமன் செய்ததும் அவர்களுக்கு இந்த வியூகத்துக்கான தரச் சான்றிதழைத் தர வைத்தது. ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்னிங்ஸ் தோல்வி, இங்கிலாந்தை நிகழுலகத்திற்கு நகர வைத்ததுள்ளதோடு "நினைவேந்தல் நடத்த வேண்டிய முறைதானோ இது?" என்ற விவாதத்திற்கும் வித்திட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு அதிரடி ஆட்டமுறை ஒன்றும் புதிதல்ல; 2015-ல் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய பின் அவர்கள் கவனம் செலுத்தியது ஃப்ளாட் டிராக்குகளிலும் அதில் கோலோச்சும் அதிரடி பேட்ஸ்மேன்களை உருவாக்குவதிலும்தான். அதற்குப் பரிசுதான் 2019 உலகக் கோப்பை. ஆனால், இது அவர்களது டெஸ்ட் தரத்தைச் சரியச் செய்தது. அதனை மீண்டும் மேம்படுத்தவே லிமிடெட் ஃபார்மேட்டின் அட்டாக்கிங் பாணி ஆட்டத்தை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் உட்புகுத்தியது மெக்கல்லம் மற்றும் ஸ்டோக்ஸ் இணை.

அப்போதிருந்தே இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கோஷங்கள் கிரிக்கெட் உலகின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் எழுந்தன. "இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று பார்க்கலாம். புற்கள் நிறைந்த தரையில் கம்மின்ஸும் ஸ்டார்க்கும் பந்துகளை வீசும் போது, இதே தாக்கத்தை அவர்களுக்கு எதிராகவும் அரங்கேற்ற முடியுமா?" என ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கேட்டிருந்தார். அவர் மட்டுமல்ல, இன்னமும் பல கிரிக்கெட் பிரபலங்களும் விமர்சகர்களும் இதே கருத்தைக் கூறியதோடு, இது எந்தளவு டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆன்மாவைக் கருகச் செய்யும் என்றும் தெளிவுபடுத்தி இருந்தனர்.
இவ்வளவு எதிர்க் கருத்துகள் கிளம்பக் காரணம், இங்கிலாந்து வென்ற அந்த நான்கு போட்டிகளும் பயணித்திருந்த பாதைதான். 'நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதான் BazzBall-ம்' என்பதனை அதுதான் புலப்பட வைத்திருந்தது.
பாரதியார் கேட்ட 'வேண்டும்' பட்டியல் போல், இதற்குத் தேவையான விதிமுறைகளும், நிபந்தனைகளும் நிரம்பவே உண்டு...
"ஃப்ளாட் டிராக் வேண்டும் - அதிலும்
சேஸ் செய்ய வேண்டும்,
வேகத்தில் அச்சுறுத்தாத
எதிரணி பெளலர்கள் வேண்டும்,
ஓப்பனர்களும், டெய்ல் எண்டர்களும் சொதப்புவார்கள் என்பதால்,
மத்திய வரிசை,
எதையும் எதிர்கொள்ள வேண்டும்..."
என இவை எல்லாம் சேர்ந்துதான் வெற்றியைக் கடந்த நான்கு போட்டிகளிலும் உறுதி செய்தன. ஆனால், தென்னாப்பிரிக்காவுடனான முதல் போட்டியே அவர்களது அந்த நிகழ்ச்சி நிரலிலிருந்து மாறிப் பயணித்து, அவர்களைக் குழியில் தள்ளியிருக்கிறது.

"Paper over the cracks" என்பது இங்கிலாந்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சொற்றொடர். இதற்குத் தவறுகள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுவது என்பது பொருள். நியூசிலாந்து, இந்தியாவுக்கு எதிரான வெற்றிகள் மிகப் பெரியவைதான், சிறப்பானவைதான்; ஆனாலும் அந்த வெற்றிகள் தந்த கண் கூசும் வெளிச்சத்தில் அவர்களது குறைகள் மீது இருள் படிந்து இருந்தது என்பதே உண்மை. அந்தக் குறைகளின் மீதே குதிரைச் சவாரி செய்துதான் தென்னாப்பிரிக்கா தற்போதைய வெற்றியை எய்தியுள்ளது.
அதுவும் சாதாரண வெற்றி இல்லை, 2015-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்து, தனது மண்ணில் வைத்து எந்த டெஸ்ட் போட்டியையும் இன்னிங்ஸ் கணக்கில் இழந்தது இல்லை. குறிப்பாக லார்ட்ஸ் மைதானத்தில் 2003-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவால் கிடைத்த தோல்விக்குப் பின், அந்த மைதானத்தில் இன்னிங்ஸ் தோல்வி என்பது அவர்களது டிராக் ரெக்கார்டுகளிலேயே இல்லாத ஒன்று. எனவே, இது இங்கிலாந்து சற்றும் எதிர்பாராதது.
அதுவும் இத்தொடருக்கு முந்தைய வார்ம் அப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி இதே Baz Ball டெக்னிக்கினால் 117 ஓவர்களில் 672 ரன்களைக் குவித்து, தென்னாப்பிரிக்காவையே மிரளச் செய்திருந்தது. இங்கிலாந்தின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்படும் ஹாரி ப்ரூக் மற்றும் டக்கெட் முறையே, 140 மற்றும் 145 ரன்களைக் குவித்திருந்தனர். தென்னாப்பிரிக்காவின் வேகப் பந்து வீச்சுப் படை முக்கிய வீரர்களுடன் களமிறங்காததும் ஒரு காரணம் என்றாலும், அப்போட்டியின் முடிவில் இன்னிங்ஸ் மற்றும் 56 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த வெற்றி, இங்கிலாந்து லயன்ஸை மட்டுமல்ல இங்கிலாந்து அணியையும் கூட கொஞ்சம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வைத்திருந்தது.

நடப்புத் தொடருக்கு முன்னதாகவே BazzBall குறித்து தங்களுக்குக் கவலை இல்லை என்றும், அதைச் சமாளிப்பதற்கான பௌலர்கள் தங்களிடத்தில் இருப்பதாகவும் தென்னாப்பிரிக்காவின் கேப்டன் டீன் எல்கர் கூறியிருந்தார். அதேசமயம் இங்கிலாந்தின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகனோ, இங்கிலாந்தின் அட்டாக்கிங் முறைக்கு எதிராகச் சரி சமமாகத் தென்னாப்பிரிக்காவும் அதிரடி காட்டா விட்டால் இங்கிலாந்து அவர்களை ஊதித் தள்ளி விடும் என்றும் கூறியிருந்தார். உண்மையில் BazzBall-ஐ பஞ்சராக்கிவிட்டது தென்னாப்பிரிக்காவின் அச்சுறுத்தும் வேகம்.
முதல் நாளிலேயே 50 ஓவர்கள் வரை மழை களவாடி இருப்பினும், போட்டி மூன்றாவது நாளின் முடிவைக் கூடப் பார்க்கவில்லை. இரண்டு இன்னிங்ஸுகளுக்கும் சேர்த்து 85 ஓவர்கள் கூட இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் தென்னாப்பிரிக்க பௌலிங்கைச் சமாளிக்க முடியவில்லை. ஓப்பனர்களான லீஸ் மற்றும் க்ராவ்லியின் பார்ட்னர்ஷிப்பின் இரு இன்னிங்ஸ் சராசரி 13 ரன்கள் மட்டுமே. அதிலும், கன்சிஸ்டன்ஸி என்பது க்ராவ்லியின் கரியரில் எப்போதுமே கேள்விக்குறியாக மட்டுமே உள்ளது. பர்ன்ஸ், சிப்லி என மாற்று வீரரைத் தேட வைப்பதற்கான அவசியத்தை அவர் அவ்வப்போது உணர்த்துகிறார். மற்ற பேட்ஸ்மேன்களின் ஆட்டமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
ஓப்பனர்கள் மட்டுமல்ல, ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்த முறைகூட அப்படித்தான் இருந்தது. போப்பின் முதல் இன்னிங்ஸ் ஆட்டமும் அரைசதமும் மட்டுமே அவர்களுக்கு ஒரே ஆறுதல். மற்றபடி, மிக முக்கிய மூவரான ரூட், பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்ஸ் இணைந்து இரு இன்னிங்ஸ்களுக்கும் சேர்த்து எடுத்த ரன்களே 72 மட்டும்தான். ஃபோக்ஸோ இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்கங்களோடுதான் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்ஸில் ப்ராட் சமாளித்து ஆடியிருந்தாலும் அவரைத் தவிர வேறு எந்த டெய்ல் எண்டர்களும் சோபிக்கவில்லை.

பேட்டிங் பரிதாபங்கள் மட்டுமல்ல, பௌலிங்கிலும் இங்கிலாந்து பெரிதாக எந்தத் திட்டத்தோடும் வந்ததாகத் தெரியவில்லை. தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சில் பெரும்பாலான பந்துகள் மணிக்கு 140கிமீ வேகத்தில் வீசப்பட, மறுபுறமோ அதில் பத்து சதவிகிதம் பந்துகள்கூட அந்த வேகத்தை எட்டவில்லை. அங்கேயே பின்தங்கத் தொடங்கிவிட்டது இங்கிலாந்து. அதிலும் தென்னாப்பிரிக்காவின் பின்வரிசை வீரர்களுக்கு எந்த வித மாற்றமும் இன்றி, வெறும் ஷார்ட் பால்களை மட்டுமே வீசியது இங்கிலாந்து தரப்பு. விளைவு, மார்கோ ஜென்சன் மற்றும் கேசவ் மகாராஜ் கூட்டணி ஏழாவது விக்கெட்டுக்கு 72 ரன்களைச் சேர்த்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு பெரிய லீட் கொடுத்தது இதுதான். ஷார்ட் பாலைத் தவிர யார்க்கரைக் கூட முயற்சி செய்து பார்க்காத இங்கிலாந்தின் அணுகுமுறைதான் BazzBall-ஐ போல 'ஒரு பரிமாண பௌலிங்' என்னும் புதிய விமர்சனத்தை ஒரு இன்னிங்ஸிலேயே இங்கிலாந்து பெற்றுள்ளது.

மறுபுறம், தென்னாப்பிரிக்காவின் பௌலிங் மிரட்டியதோடு 80-களின் மேற்கிந்தியத் தீவுகளின் பௌலிங் படையை நினைவூட்டியது. வேகம்தான் முக்கிய ரெசிபி என்றாலும் அதில் வெற்றிக்காகச் சேர்க்கப்பட வேண்டிய டாப்பிங்குகளான சீம், ஸ்விங், பவுன்ஸ் என எதிலும் தென்னாப்பிரிக்கா சமரசம் செய்து கொள்ளவில்லை.
ரபாடாவின் வேகம் மட்டுமல்ல, குழப்பத்தில் ஆழ்த்தும் ஸ்லோ பால், மரண பயம் காட்டும் பவுன்சர்கள் என இரண்டுமே அவரது ஐந்து விக்கெட் ஹாலுக்குக் காரணமாகின. நார்க்கியாவுக்கோ அதிவேகத்திலும் இருந்த துல்லியம் அச்சுறுத்தியது. மார்கோ யான்செனுக்கு இன்ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங்கர் கலவைகள் கைகொடுத்தன. எங்கிடிக்கு ஒரு விக்கெட் மட்டுமே விழுந்திருந்தாலும் அவரும் தனது பந்துகள் டார்கெட் செய்யப்பட அனுமதிக்கவில்லை. எட்டாவது ஓவரிலேயே நம்பி இறக்கப்பட்ட கேசவ் மகராஜ் கூட இரண்டு அடுத்தடுத்த விக்கெட்டுகளால் அதகளப்படுத்தினார். இங்கிலாந்தோ ஓர் இடத்தில்கூட தடுத்து ஆட முயலவே இல்லை.
இந்தியாவின் சிறந்த ஓப்பனராக வலம் வந்த விஜய் மெர்சண்டின் வார்த்தைகள் இவை...
"விக்கெட்டைத் தூக்கி எறியும் அளவு எந்த ரன்னும் முக்கியமில்லை. எந்தப் பந்தை அடிக்க வேண்டும், எதை விட வேண்டுமென்ற தெளிவு வேண்டும். அரைமணி நேரமாவது களத்தில் தாக்குப் பிடிக்காமல், லேட்கட் ஆட முயற்சி செய்யாதீர்கள். 'டிஃபென்ஸ், டிஃபென்ஸ்' என்பதே நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய வார்த்தை, அதைச் செய்தாலே ரன்கள் தானாக வந்துசேரும்!"விஜய் மெர்சண்ட்

இதே இங்கிலாந்து மண்ணில், பத்து ஆண்டுகள் இடைவெளி கழித்து (உலகப் போர் காரணமாக) சர்வதேசக் கிரிக்கெட்டிற்காக அவர் காலடி வைத்த போதும் ரன்களைக் குவிக்க வைத்தது இதே அணுகுமுறைதான்.
டி20 யுகத்தில் வாழ்ந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிநாதம் இதுதான். அதன் நாடித் துடிப்பை மாற்றித் துடிக்க வைத்த இங்கிலாந்தின் முயற்சி முதலில் வெல்வது போல் தோற்றமளித்தாலும் தற்சமயம் தோல்வியில் முடிந்துள்ளது.
"இது அபாய மணி அல்ல" எனச் சொல்லி இன்னமும் தங்களது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளும் நோக்கமில்லை என பென் ஸ்டோக்ஸ் சூசகமாகக் கூறியுள்ளார்.
தோல்விகள் தொடருமா அல்லது BazzBall, அதிவேகத்தின் தாக்குதலையும் தாக்குப் பிடிக்குமாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளுமா? இத்தொடரின் முடிவுக்குள் விடை தெரிந்துவிடும்.