Published:Updated:

"கோபம் என்ன ஆஸ்திரேலியாவின் அப்பன் வீட்டு சொத்தா?"- ஆஃப்சைட் ஆண்டவரின் மாஸ் மொமன்ட்! #AUSvIND

#AUSvIND கங்குலி
#AUSvIND கங்குலி

2001-ம் ஆண்டு காலகட்டம் வரை, தனது பேட்டிங் சராசரியை 50 என்ற அளவில் வைத்திருந்த கங்குலிக்கு, அதற்கடுத்த ஒன்றரை ஆண்டுகள் சிறப்பாக அமையாமல் போனது. பிரிஸ்பேன் போட்டிக்கு முன் அவரது சராசரி 41.45 என வீழ்ந்திருந்தது.

கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்குக்கு எதிரே பல ஆக்ரோஷ சம்பவங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் கோபக்கார கேப்டன் கோலி. ஆனால், அவருக்கு முன்பாகவே, இந்தியக் கிரிக்கெட்டின் அணுகுமுறையையே மாற்றி, தம்மை தொடைநடுங்கிகளாய் நினைத்தவர்களின் படையையே, நடுங்கச் செய்த பெருமை தாதா கங்குலியையே சாரும்.

ஆஸ்திரேலியாவின் ராஜதந்திரங்களில் ஒன்று, எதிரிக்கெதிரான முதல் தாக்குதலை, தொடரின் முதல் போட்டியிலேயே நிகழ்த்தி விடுவது. அதன் மூலமாய் அவர்களை எழ விடாமல் முழுவதுமாய் மண்ணில் போட்டு மிதித்து, குழிதோண்டிப் புதைத்து, அந்தக் கல்லறை மேல் தங்கள் வெற்றிச் சரித்திரத்தை எழுதுவது அவர்களது பாணி. அதிலும் அவர்களது முதல் குறி, எதிரணியின் கேப்டன்தான். காரணம், தலைமையை பலவீனப்படுத்திவிட்டால், ஒட்டுமொத்த அணியும் வலுவிழக்கும் என்ற போர்த்தந்திரம்தான் இது. இதனை வெற்றிகரமாய் முறியடித்து, 2003/2004-ம் ஆண்டு, இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே, தனது 144 ரன்கள் மூலமாக, அவர்களது வெற்றிக்கு‌ 144 தடை போட்டு, போட்டியை டிரா செய்து கங்குலி கர்ஜித்தப்போட்டி பிரிஸ்பேனில் நடந்தது.

கங்குலி
கங்குலி

2001-ம் ஆண்டு காலகட்டம் வரை, தனது பேட்டிங் சராசரியை 50 என்ற அளவில் வைத்திருந்த கங்குலிக்கு, அதற்கடுத்த ஒன்றரை ஆண்டுகள் சிறப்பாக அமையாமல் போனது. பிரிஸ்பேன் போட்டிக்கு முன் அவரது சராசரி 41.45 என வீழ்ந்திருந்தது. கேப்டனாய் ஏற்பட்ட கூடுதல் அழுத்தம் காரணமாக, பேட்டிங்கில் ஏற்பட்ட சில குறைபாடுகளை அவரால் சரி செய்ய முடியவில்லை. 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், தனது 128 ரன்கள் மூலமாக, அவர் தனது திறமையை நிரூபித்து இருந்தாலும், ஷாட் பால்களை எதிர் கொள்வதில் அவர் தொடர்ந்து திணறி வந்தார். போதாக்குறைக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, இதற்கு முன்பு கங்குலியின் சராசரி வெறும் 29.64 என்ற அளவிலே இருந்தது. ஆனாலும் அதற்கு முந்தைய ஆண்டு நடைபெற்ற லார்ட்ஸ் சம்பவம், 2003-ல் உலகக்கோப்பைக்கு இறுதிப் போட்டி வரை தன் அணியை நடத்திச் சென்றது என எல்லாம் சேர்ந்து, இந்தக் குறிப்பிட்ட தொடரில் கங்குலி என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுக்க, ஜாகிர்கான் அபாரமாய் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியும், 323 ரன்களைக் குவித்தனர் ஆஸ்திரேலியர்கள். இதனைத் தொடர்ந்து வந்த இந்தியாவை, ஆஸ்திரேலியா தொடக்கத்திலேயே முடக்கிப் போட்டது‌. டிராவிட் ஒரு ரன்னுடன் வெளியேற, சச்சினுக்கோ வில்லனானார் நடுவர் பக்னர். தவறான எல்பிடபிள்யு சச்சினுக்குக் கொடுக்கப்பட, சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தையாய் சடசடவென சரிந்தன விக்கெட்டுகள். 60 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி சிறப்பாய்த் தொடங்கிய இந்தியா, 62 ரன்களை எட்டுவதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து மூச்சு வாங்க, இக்கட்டான நிலையில் உள்ளே வந்தார் கங்குலி.

கங்குலி
கங்குலி

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, "ஆஸ்திரேலிய பெளலிங் சவாலை எதிர்கொள்ளத் தயங்கும் கங்குலி, ஆறாவது பேட்ஸ்மேனாய் இறங்குவார்" என ஆஸ்திரேலியப் பத்திரிகைகள் எழுதியிருந்தன. இதைப் பொய்யாக்குவதற்காகவே ஐந்தாவது பேட்ஸ்மேனாகக் களம் கண்டார் கங்குலி. 'சச்சினையும் டிராவிட்டையும் அனுப்பியாகி விட்டது, இன்னும் கங்கூலியையும் லட்சுமணனையும் அனுப்பி விட்டால், இந்தியாவை ஃபாலோ ஆன் ஆக்கி, இன்னிங்ஸ் வெற்றியையே காணலாம்' எனக் கனவு கண்டது ஆஸ்திரேலியா.

கல்லி மற்றும் தேர்டு ஸ்லிப்புக்கு நடுவே பந்தை பாயச் செய்து, மூன்று ரன்களை எடுத்து, தனது கணக்கைத் தொடங்கிய கங்குலி, அன்று அடித்து ஆடும் மைண்ட் செட்டில் இருந்தார். "எதிரி உங்களைத் தாக்க நினைக்கும் முன்பே தாக்குப்பிடிப்பதைப் பற்றி சிந்திக்காமல், நீங்கள் தாக்குதலைத் தொடங்கி விட வேண்டும். இக்கட்டான நிலையில் இறங்கி இருந்தாலும், நான் அன்று மூன்றாவது பந்திலேயே அதனைச் செய்யத் தொடங்கிவிட்டேன்" என்று இந்தப் போட்டி பற்றி பின்னொரு நாளில் குறிப்பிட்டிருந்தார் கங்குலி.

அன்றைய தினம், அவருடைய தினம்! சிக்கிய பெளலர்கள் எல்லாம் சிறப்பாய் சம்பவம் செய்யப்பட்டனர். அந்த வருட உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் 7 விக்கெட்டுகளை இரக்கமில்லாமல் வீழ்த்திய பிட்சல்லின் பெளலிங்கை கொஞ்சமும் மதிக்காமல், கவர் மற்றும் மிட் ஆஃப் திசைகளுக்கு நடுவில் அனுப்பி நான்கு ரன்களை சேர்த்துக்கொண்டார் இந்த 'ஆஃப் சைடின் ஆண்டவர்'. ஃபிளையிங் கிஸ்ஸாய், பவுண்டரியாக மாற்றப்பட்ட பால்கள் ஒவ்வொன்றும், அவரது தன்னம்பிக்கை மீட்டரை ஏறுமுகம் காணச் செய்ய, ஆஸ்திரேலியர்கள் கலக்கமடையத் தொடங்கினர்.

தனது முந்தைய 128 ரன்களில் நிறைய அன்ஆர்தடாக்ஸ் ஷாட்களை ஆடியிருந்த கங்குலி, இந்த இன்னிங்சிலோ தனது கிளாசிக்கல் பேட்டிங் மூலம் கிளாஸ் எடுத்தார். பாலோடு சேர்ந்து பெளலர்களும் அடி வாங்கினர். சரி, கடைசியில் பிரம்மாஸ்திரமாய் அவருக்கு ஷாட் பால் என்னும் பாயாசத்தைப் போட்டுவிட வேண்டியதுதான் என அதனை ஆஸ்திரேலியா கையிலெடுக்க, அதனைத் தொடாமல் விட்டோ, சரியான டைமிங் மற்றும் ப்ளேஸ்மென்ட் மூலமாகவோ லாவகமாய்க் கையாண்டு வெறும் 74 பந்துகளில் அவர் அரைச்சதம் தொட, மளமளவென உயர்ந்தது இந்தியாவின் ஸ்கோர்.

கங்குலி
கங்குலி

ஆகாஷ் சோப்ராவுடன் போட்ட பார்ட்னர்ஷிப் பத்தாதென அடுத்து வந்த லட்சுமணனுடனும் கை கோத்துக் கொண்டு ஆஸ்திரேலிய பெளலர்களை அரளச் செய்து, இந்திய இன்னிங்ஸை இவர் கட்டமைக்க, என்ன செய்து இவர்கள் கூட்டணியை உடைப்பதென குழம்பிப் போனது ஆஸ்திரேலியா. இந்த 'கவர் டிரைவ் கதாநாயகனின்' ருத்ர கதகளியைப் பார்த்து, கைகட்டி நிற்க மட்டுமே முடிந்தது ஆஸ்திரேலிய கேப்டனால்! 'என் டிரேட்மார்க்கான மிட் விக்கெட் சிக்ஸை நான் அடிக்கவில்லையே என ஆறுதல்படுத்திக் கொள்ளுங்கள்' என, 71-வது ஓவரில், மேக் கில் வீசிய பந்தில் சதத்தைத் தொட்டு, காற்றில் கைகளை உயர்த்தி, குதித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் டெஸ்ட் சதத்தை அவர்களது மண்ணிலேயே அடித்ததை எண்ணி, அவர் பூரிக்க, ஒட்டுமொத்த இந்திய கேம்ப்பும் எழுந்து நின்று கைதட்டியது. சில ஆஸ்திரேலியர்களும் கூட! இந்திய ரசிகர்களின் புல்லரிப்பு மாஸ் மொமன்ட் அது.

74 பந்துகளில் அரைச்சதத்தைத் தொட்ட தாதா, அடுத்து சதத்தைத் தொட எடுத்துக் கொண்ட பந்துகள் வெறும் 61 மட்டுமே. அதன்பின் 144 ரன்கள் எடுத்தபோது, மேக்கில்லின் பந்தில் ஆட்டமிழந்தாலும், 60-களில் இருந்த அணியின் ஸ்கோரை 329 என கொண்டு வந்து நிறுத்தி விட்டுத்தான் வெளியேறி இருந்தார். இதனால் இந்தியாவால் முதல் இன்னிங்சிலேயே 86 ரன்கள் முன்னிலை பெற முடிந்தது.

இந்தப் போட்டியில், 196 பந்துகளைச் சந்தித்த அவர், 109 பந்துகளை ஃபிரன்ட் ஃபுட் ஷாட்ஸ் மூலமாகவும், 77 பந்துகளை பேக் ஃபுட் ஷாட்ஸ் மூலமாகவும் ஆடி தலா, 83 மற்றும் 61 ரன்களை எடுத்து, தனது ஃபுட் வொர்க் பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு பெரிய பதிலடி கொடுத்தார்.
கங்குலி, லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங்
கங்குலி, லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங்

இரண்டாவது இன்னிங்ஸில் மழை காரணமாக பெரும்பகுதிகள் தடைபட, போட்டி டிராவில் முடிந்தது. அபாயகரமான தோல்வியை நோக்கிச் சென்ற இந்திய அணியை மீட்டு, போட்டியை டிராவாக்கிய பெருமை கங்குலியையே சேரும்!

"ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிலேயே இவர் சோபித்ததில்லை, ஆஸ்திரேலியாவிலா ஜொலிக்கப் போகிறார்" என்றும் "ஷாட் பால் போட்டே கங்குலியைத் தூக்கிடுவாங்கப்பா" என்றவர்களுக்கும், விமர்சனங்களை எல்லாம் பொய்யாக்கி, இந்தப் போட்டியில் கங்குலி சாதித்ததற்கு முக்கிய காரணம் அவரது அர்ப்பணிப்பு.

சரிந்த இடத்திலேயே தனது சாம்ராஜ்யத்தை நிறுவி, தான் சாம்பியன்தான் என்பதை தாதா ஆணித்தரமாக நிருபித்த களம் பிரிஸ்பேன். கடும் பயிற்சியும் முயற்சியும் முடியாததையும் முடித்துக் காட்டச் செய்யும் என்பதற்கு ஒரு சாட்சி. கேப்டனாக மட்டுமில்லாமல் ஒரு பேட்ஸ்மேனாகவும் தனக்கெதிரான விமர்சனங்களுக்கு கங்குலி பதிலடி கொடுத்த போட்டி இது.

இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் நினைவலைகள் தொடரும்.

அடுத்த கட்டுரைக்கு