Published:Updated:

`கங்குலியிடம் கிடைத்த சப்போர்ட்.. தோனி, கோலியிடம் கிடைக்கவில்லை!’ -யுவராஜ் வேதனை

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

`கொரோனா குறித்த அச்சம் வேண்டாம்... புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆரம்பத்தில் நான் மிகவும் பயந்தேன். ஆனால் சரியான மருத்துவ ஆலோசனை காரணமாக மீண்டு வந்தேன்” - யுவராஜ்

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதிலும் யுவராஜ் சிங்-க்கு எப்போதும் இடம் உண்டு. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்து தற்போது தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செயவிட்டு வருகிறார். கங்குலி இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் போது அணிக்குள் நுழைந்தவர் யுவராஜ். 2000 -ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அறிமுகமாகி, ராகுல் டிராவிட், ஷேவாக், கம்பீர், தோனி, கோலி எனப் பல கேப்டன்கள் தலைமையில் இந்திய அணிக்காக ஆடியுள்ளார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்
twitter

சில சீனியர் வீரர்களின் ஓய்வுக்குப்பின் தோனி தலைமையிலான இந்திய அணியின் சீனியர் வீரராக இருந்து மேட்ச் வின்னராகப் பல நேரங்களில் ஜொலித்திருக்கிறார். தோனி தலைமையில் இந்திய அணி இரு உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. அந்த இரு தொடர்களிலும் யுவராஜின் பங்கு மிக முக்கியமானது. அதிலும் 2011 -ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் யுவராஜ் பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கலக்கியிருப்பார்.

யுவராஜ் சிங் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் ஊடகத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். தனது ஆரம்பகால கிரிக்கெட் குறித்து பேசுகையில், ``ஐ.பி.எல் கிரிக்கெட் எல்லாம் இல்லாத காலத்தில் அணிக்கு வந்தவன் நான். அப்போதெல்லாம் கிரிக்கெட் ஸ்டார்களை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்து வந்த எனக்கு திடீரென்று அவர்களுடன் பயணிக்கும் வாய்ப்பு. அவர்கள் அருகிலே நான் அமர்ந்திருந்தேன். எனக்கு அவர்கள் மீது பெரும் மரியாதை இருந்தது. அவர்களிடமிருந்து நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறேன்.

 சச்சின் - யுவராஜ்
சச்சின் - யுவராஜ்
Twitter|@RSWorldSeries

எப்படிச் செயல்பட வேண்டும். ஊடகத்தினரிடம் எப்படிப் பேச வேண்டும் என எல்லாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான். ஆனால் இன்று அணியில் இருப்பவர்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே வயதைக் கொண்டவர்கள் என்பதால் அது போன்ற வாய்ப்புகள் இளம் வீரர்களுக்குக் கிடைப்பதில்லை” என்றார்.

தொடர்ந்து தான் விளையாடிய கேப்டன்கள் தொடர்பாகப் பேசிய யுவி, ``நான் கங்குலி தலைமையில் நிறைய ஆடியிருக்கிறேன். அவரிடமிருந்து எனக்கு நிறையவே சப்போர்ட் கிடைத்தது. அதன் பின்னர் மகி(தோனி) கேப்டன் பொறுப்புக்கு வந்தார். கங்குலி மற்றும் தோனி இடையே ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது சற்றுக் கடினமானது. ஆனால், எனக்கு கங்குலி தலைமையில் விளையாடிய போது கிடைத்த அனுபவங்கள் அழகான நினைவுகளாக மனதில் இருக்கிறது. அதற்கு காரணம் அவர் எனக்குத் தந்த சப்போர்ட் என நினைக்கிறேன். தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ அப்படியான சப்போர்ட் எனக்குக் கிடைத்தது இல்லை” என்றார்.

யுவராஜ் சிங்
யுவராஜ் சிங்

மேலும் கொரோனா வைரஸ் தொடர்பாகப் பேசிய யுவராஜ், ``மக்கள் கொரோனா காரணமாகப் பலியாகும் தகவல்கள் கவலை தருகிறது. கொரோனா மிக வேகமாகப் பரவுகிறது. மக்கள் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அச்சப்படக்கூடாது. அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுகுங்கள். மருத்துவர்களின் அறிவுரையில் தெளிவு கிடைக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆரம்பத்தில் நான் மிகவும் பயந்தேன். ஆனால் சரியான மருத்துவ ஆலோசனை காரணமாக மீண்டு வந்தேன். இன்று சமூக வலைதளங்களில் பலர் வதந்திகளைப் பரப்புகிறார்கள். உண்மையான தகவல்களை தெரிந்துகொண்டால் நிச்சயம் பயப்பட வேண்டி இருக்காது” என்றார் தெளிவாக...

அடுத்த கட்டுரைக்கு