வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த சூழலில் எதிர்பாராத ட்விஸ்ட்டுகளும் அரங்கேறத் தொடங்கியிருக்கிருக்கின்றன. தோல்வியையே சந்தித்திடாத மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக தோற்றிருக்கிறது. தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டே இருந்த பெங்களூர் அணி தொடர்ச்சியாக வெல்ல தொடங்கியிருக்கிறது.
நேற்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றிருந்தது. 36 பந்துகளில் 99 ரன்களை அடித்து ஒற்றை ஆளாக பெங்களூர் அணியை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றிருந்தார் சோஃபி டிவைன்.

ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ஸ்நே ராணாதான் டாஸை வென்றிருந்தார். டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தார். டாஸின் போதே இந்த பிட்ச்சில் 160-165 ரன்களை எடுத்துவிட்டாலே நல்ல ஸ்கோராக இருக்கும் எனப் பேசியிருந்தார். ஆக, குஜராத் அணியின் டார்கெட்டாக இருந்ததே 160 ரன்கள்தான் என்பதை இதிலிருந்து நம்மால் புரிந்துக்கொள்ள முடியும். ஆனால், 20 ஓவர்கள் பேட்டிங் ஆடி முடித்த போது குஜராத் அணி எடுத்திருந்ததோ 188 ரன்கள். அதாவது, திட்டமிட்டதை விட 28 ரன்களை அதிகமாக எடுத்திருந்தார்கள். கடந்த போட்டியை போன்றே வோல்வார்ட் இந்தப் போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்திருந்தார். ஆஷ் கார்ட்னர் ஒரு நல்ல இன்னிங்ஸை ஆடி 41 ரன்களை எடுத்திருந்தார். கடைசியில் தயாளன் ஹேமலதாவும் 6 பந்துகளில் 16 ரன்களை எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்திருந்தார். குஜராத் ஜெயண்ட்ஸ் பேட்டிங்கை ஆடி முடிக்கையில் முழு திருப்தியுடனும் பாசிட்டிவிட்டியோடும் முடித்திருந்தது. ஆனால், அந்த நேர்மறை எண்ணமெல்லாம் இன்னிங்ஸ் ப்ரேக் முடியும் வரைக்கும்தான் நீடித்திருந்தது.
189 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூர் அணி களமிறங்கியது. சோஃபி டிவைனும் ஸ்மிருதி மந்தனாவும் ஓப்பனர்கள். இருவருமே சூப்பர் ஸ்டார்கள். ஆனால், இருவருமே இதுவரைக்கும் ஒரு பெரிய தாக்கத்தை விளைவிக்கும் வகையில் ஒரு இன்னிங்ஸை கூட ஆடவில்லை. சோஃபி டிவைன் குஜராத்துக்கு எதிரான முதல் போட்டியில் ஒரு அரைசதம் அடித்திருந்தார். அந்த போட்டியிலும் கூட பெங்களூர் தோற்கத்தான் செய்திருந்தது. அப்படி ஒரு நிகழ்வு மீண்டும் நடக்கக்கூடாது என்பதில் டிவைன் உறுதியாக இருந்தார் போல! தானும் அடித்து வெளுக்க வேண்டும். அணியும் வெல்ல வேண்டும். டிவைனின் இந்த இரு எண்ணமும் ஈடேறும் இன்னிங்ஸாக இது அமைந்தது. தொடக்கத்திலிருந்தே அதிரடிதான்.

ஆஷ் கார்ட்னர் வீசிய இரண்டாவது ஓவரிலேயே 24 ரன்கள். 2 சிக்சர்களையும் 3 பவுண்டரிகளையும் அந்த ஓவரிலேயே டிவைன் பறக்கவிட்டிருந்தார். அந்த ஓவரில் க்ரீஸை விட்டு இறங்கி வந்து பந்துகளை பறக்கவிடத் தொடங்கியவர் அதற்கடுத்தடுத்த ஓவர்களிலும் ரீப்ளே போல அப்படியே இறங்கி வந்து வெளுக்க ஆரம்பித்தார். குஜராத் பௌலர்களால் டிவைனின் ஆட்டத்தில் சிறு தடையைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. சிங்கிள் தட்டி டிவைனுக்கு ஸ்ட்ரைக்கைக் கொடுப்பது மட்டும்தான் ஸ்மிருதி மந்தனாவின் வேலையாக இருந்தது. இறங்கி வந்து பௌலர்களின் தலைக்கு மேல் பந்தை பறக்க விடுவது மட்டும்தான் டிவைனின் எண்ணமாக இருந்தது. 94 மீட்டருக்கெல்லாம் பெரிய பெரிய சிக்சர்களை அடித்து மிரட்டிக் கொண்டே இருந்தார். எப்படி அதிரடியாகத் தொடங்கினாரோ அப்படியேதான் கடைசி வரைக்கும் கூட ஆடியிருந்தார். 36 பந்துகளில் 99 ரன்களை அடித்திருந்தார் இல்லையா? இதில் அவர் எதிர்கொண்ட அந்த 36 வது பந்து ரொம்பவே முக்கியமானது. அந்த பந்தை ஒன்றுமே செய்யாமல் லேசாக தட்டிவிட்டு சிங்கிள் எடுத்து சென்ச்சூரியாக்கியிருக்க முடியும். ஆனால், அந்த பந்திலும் கூட டிவைன் பெரிய ஷாட் ஆடி பவுண்டரி அடிக்கத்தான் விரும்பினார். கிம் கார்த் கொஞ்சம் ஃபுல்லாக வீசிய அந்த பந்தை மிட் ஆஃபை க்ளியர் செய்து பவுண்டரியாக்கும் வகையில் டிவைன் ஒரு ஷாட்டை ஆடினார்.
இவ்வளவு நேரமாக குஜராத் வீராங்கனைகளின் கையில் சிக்காத பந்துகள் இந்த முறை துரதிஷ்டவசமாக சிக்கியது. அஸ்வனி குமாரி அந்த அட்டகாசமாக கேட்ச் செய்து டிவைனை 99 ரன்களில் வெளியேற்றினார்.

பெண்கள் டி20 கிரிக்கெட்டில் வேகமான சதம் அடித்த பெருமையை சோஃபி டிவைன் தன் வசமே வைத்திருக்கிறார். வெல்லிங்டன் அணிக்காக 36 பந்துகளில் சதமடித்திருக்கிறார். அந்த சாதனையை மீண்டும் ஒரு முறை நிகழ்த்திக் காட்டும் வாய்ப்பு அவருக்கு நேற்று கிடைத்திருந்தது. மேலும், அந்த 36 வது பந்தை கொஞ்சம் நிதானமாக எதிர்கொண்டிருந்தால் வுமன்ஸ் ப்ரீமியர் லீகின் முதல் சதம் அடித்த வீராங்கனை எனும் பெருமையும் டிவைனுக்கு கிடைத்திருக்கும். வுமன்ஸ் ப்ரீமியர் லீக் வரலாற்றில் என்றென்றைக்கும் நினைவுகூரப்படக்கூடிய பெயராக டிவைனுடைய பெயர் மாறியிருக்கும். ஆனால், டிவைனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. தனிப்பட்ட சாதனைகளையும் பலன்களையும் கடந்து அணியின் நலனே பிரதானம் என்பதில் டிவைன் தெளிவாக இருந்தார். அணிக்கு ஒரு வெற்றி தேவை.
எதிராளியை இம்மியளவு கூட ஆதிக்கம் செலுத்தவிடாமல் செய்து ஒரு முழுமையான வெற்றியை கொடுக்க வேண்டும். அதுமட்டுமே துவண்டு போயிருக்கும் அணிக்கும் பெரும் தெம்பூட்டும் எனும் சூழலில்தான் டிவைன் இப்படி ஒரு இன்னிங்ஸை ஆடியிருக்கிறார். 'ஒரு ரன்னோ 99 ரன்னோ எனக்கு அதெல்லாம் முக்கியமில்லை. என்னுடைய அணிக்காக நான் இப்படித்தான் ஆட விரும்பினேன். நினைத்ததை போன்றே ஆடிவிட்டேன்' என டிவைன் பேசியிருந்தார். டிவைனின் இந்த இன்னிங்ஸால் பெங்களூர் பெற்றிருக்கும் வெற்றியின் மூலம் அந்த அணி இன்னும் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை தக்க வைத்திருக்கிறது. பெங்களுர் இன்னும் கடைசிக்கட்டத்தில் என்னென்ன ட்விஸ்ட் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.