ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டாவது முறையாக பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்ற இந்திய அணியைத் தலைமை தாங்கி நடத்தியவர் அஜிங்க்யா ரஹானே. முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன அணியை விராட் கோலி இல்லாமல் தலைமை தாங்கி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் மண்ணிலேயே வீழ்த்திய சம்பவத்தையெல்லாம் இந்திய கிரிக்கெட் அவ்வளவு எளிதில் மறந்துவிடாது.

ஆனால் அத்தொடரின் மெல்பர்ன் சதத்திற்குப் பிறகு இன்றுவரையில் ரஹானேவின் தனிப்பட்ட பேட்டிங் எண்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்தியாவில் நடந்த இங்கிலாந்து தொடர், பிறகு இங்கிலாந்து மண்ணில் நடந்த தொடர், நியூஸிலாந்து தொடர், தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடர் என அனைத்திலும் தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதும் அவற்றில் எந்த ஒரு பெரிய ஸ்கோரையும் அடிக்கவில்லை ரஹானே. இளம் வீரர்களுக்கு சீனியர் பேட்டர்கள் வழிவிடும் நேரம் வந்துவிட்டது. ரஹானேவை இனி அணியில் எடுக்கக்கூடாது என பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்த போதிலும் அவரின் தற்போதைய ஃபார்மை கைகாட்டி விலக்கிவிடவில்லை இந்திய அணி.
தன் பழைய ரிதமை எப்படியேனும் மீட்டெடுக்க வேண்டும் என மும்பை அணியுடன் சேர்ந்து ரஞ்சி தொடருக்காக தற்போது ஆயத்தமாகி வருகிறார் ரஹானே. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர் ஆஸ்திரேலியாவில் தான் எடுத்த முடிவுகள் கொடுக்கவேண்டிய பாராட்டுகளை வெறும் சிலர் பயன்படுத்திக்கொண்டார்கள் என பகிரங்கமாக பேசியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் தனக்கு கிடைத்த அனுபவம், தன்னுடைய தற்போதைய ஃபார்ம், வைட்-பால் ஃபார்மெர்டில் இருந்து தான் விலக்கப்பட்டது போன்ற பல்வேறு விஷயங்களையும் மனம் திறந்து பேசியுள்ளார் ரஹானே. அதிலிருந்து சில பகுதிகள்.

“ நான் அணிக்காக இத்தனை ஆண்டுகள் என்ன செய்தேன் என்று எனக்கு நன்றாக தெரியும். அதை நான் யாரிடமும் விளக்கி சொல்ல அவசியமில்லை. அப்படி சொல்லி எனக்கான பாராட்டுக்களை பெறுவது என் குணமும் கிடையாது. ஆம், களத்திலோ அல்லது ட்ரெஸ்ஸிங் ரூமிலோ அணியின் சில முக்கிய முடிவுகளை நான் எடுத்தேன். ஆனால் அதற்கான பலன்களை வேறு சிலர் பயன்படுத்தி அனுபவித்து கொண்டார்கள்.
ஆனால், ஒரு அணியாக அந்த சவால்மிகுந்த தொடரை வென்றதையே நான் பெரிய விஷயமாக பார்க்கிறேன். அந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியானது என் மனதிற்கு எப்போதும் நெருக்கமானது” என்று கூறினார்.

ஒருநாள் அணியில் இருந்து தான் விலக்கப்பட்டது குறித்து பேசியுள்ள அவர் “ சில ஆண்டுகளுக்கு முன்புவரை நான் இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் இரண்டிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தேன். ஆனால், ஒருநாள் அணியிலிருந்து திடீரென கழற்றிவிடப்பட்டேன். அதை பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் இரண்டிலும் நன்றாகவே விளையாடி வந்தேன்” இவ்வாறு கூறினார்.
மேலும் தன் சமீபத்திய ஃபார்ம் குறித்து எழும் விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதில்லை என கூறியுள்ளார் ரஹானே. “ கிரிக்கெட்டை ஆழமாக தெரிந்தவர்கள் இது போன்ற பொதுவான விமர்சங்களை வைக்க மாட்டார்கள். அதற்குள் ஆழமாக போக வேண்டியதில்லை. இத்தனை ஆண்டுகள் நான் இந்திய அணிக்காக ரெட்-பால் கிரிக்கெட்டில் என்ன செய்துள்ளேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். என் பேட்டிங் திறன் மேல் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. மேலும் ஒரு நல்ல கிரிக்கெட்டர் என்னுள் இன்னும் மிஞ்சியிருப்பதை முழுமையாக நம்புகிறேன்” இவ்வாறு கூறினார் ரஹானே.