என்னதான் கிரிக்கெட் டீம் கேமாக இருந்தாலும் தனிநபர்களின் அற்புத இன்னிங்ஸ்களும் சிறந்த ஸ்பெல்களும்தான் அதில் இன்னமும் காட்டம் ஏற்றுகின்றன. அதுவும் சுய லாபத்துக்காக இல்லாமல் அணியின் நலத்திற்காக ஆடப்படும் ஒவ்வொரு ஆட்டமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி காலம் கடந்தும் பேசப்படும்.
கடந்த காலங்களில் பார்டர் கவாஸ்கர் தொடர்களில் அரங்கேறிய அப்படிப்பட்ட சிறந்த ஆட்டங்களின் தொகுப்புதான் இது...
லட்சுமணன் 281:
ஒன்றல்ல ரெண்டல்ல பலமுறை ஆஸ்திரேலியாவை அலறவைத்த அசகாய சூரன் லட்சுமணன். கிட்டத்தட்ட 2500 ரன்களையும் ஆறு சதங்களையும் அவர்களுக்கெதிராக மட்டுமே குவித்தவர். 2001-ல் ஈடன் கார்டனில் மீட்பராக அவர் ஆடிய ஈடற்ற இன்னிங்ஸ் ஆஸ்திரேலியாவை துண்டாடியது.
இந்தியாவினை ஃபாலோ ஆன் ஆக்கியதோடு இன்னிங்ஸ் வெற்றியெனும் கனவில் இறுமாப்புடன் வலம்வந்தது ஆஸ்திரேலியா. 274 ரன்கள் பின்னிலையிலிருந்த இந்தியா கிட்டத்தட்ட எல்லா நம்பிக்கையையும் இழந்திருந்தது. இறந்துவிட்ட ஒருவருக்கு உயிர் கொடுப்பதற்கு இணையான அற்புதத்தை லட்சுமணன் அப்போட்டியில் நிகழ்த்தினார்.
டிராவிட்டுடனான அவரது 376 ரன்கள் பார்ட்னர்ஷிப் சரிவிலிருந்து மீட்டது மட்டுமல்ல சவாலான இலக்கையும் நிர்ணயிக்க வைத்தது.
அவரை வெளியேற்ற ஆஸ்திரேலியா செய்த முயற்சிகள் எதுவுமே கைகொடுக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் நான்கு பௌலர்களை மட்டுமே பயன்படுத்தியிருந்த ஆஸ்திரேலியா இவருக்கெதிராக ஒன்பது பௌலர்களை உபயோகித்தும் இவரை அசைக்கக்கூட முடியவில்லை. ஷாட் செலக்ஷனிலிருந்து டைமிங், பிளேஸ்மெண்ட் என எங்குமே ஆஸ்திரேலியாவுக்கு அணுக்கருவளவுகூட வாய்ப்பினை இவர் விட்டுத்தரவில்லை. கைதேர்ந்த ஓட்டுனர் போல தனது இன்னிங்ஸை எடுத்துச் சென்று 281 மைல்களைக் கடந்து ஆஸ்திரேலியாவின் கூடாரத்தில் மோதி சேதாரமாக்கினார். பயந்து நடுங்கி பின்வாங்கியே பழக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அப்போட்டியில்தான் திருப்பி அடிக்கவும் பழகியது, பயிற்றுனர் லட்சுமணன்.
ஸ்டீவ் ஸ்மித் - 2017 தொடர் :
பார்டர் கவாஸ்கர் தொடரென்றாலே கோலோச்சும் ஸ்மித் அதில் 1742 ரன்களை 72.6 சராசரியோடு குவித்திருக்கிறார். அவரது ப்ரைம் டைமான 2017-ல் இந்தியா அவரிடம் சிக்க நான்கு போட்டிகளில் 499 ரன்களை விளாசி பௌலர்களை சின்னாபின்னமாக்கினார்.
2004-க்குப்பின் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியைக்கூட வெல்லாத ஆஸ்திரேலியா ஒருபுறம், தொடர்ச்சியாக 19 போட்டிகளாக தோல்வியின் முகவரியையே அறியாத இந்தியா மறுபுறம். புனேயில் நடந்த அப்போட்டியின் முடிவை பலரும் முன்கூட்டியே கணிக்க ஸ்மித் என்னும் காரணி சகலத்தையும் மாற்றியது. வாழ்வா சாவா எனக்கேட்ட அஷ்வின், ஜடேஜாவின் சுழலுக்கு மற்றவர்கள் வேண்டுமெனில் சரணடையலாம் ஆனால் ஸ்மித்தின் பேட் மிக அலட்சியமாக ரன்களால் பதிலளித்தது. 109 ரன்கள் 13 ஆண்டுகளுக்குப்பின் இன்னொரு வெற்றியை ஆஸ்திரேலியாவின் கணக்கிலேற்றியது.
ஒன் டைம் ஒண்டராக முடியவில்லை அந்த சதம். மூன்றாவது டெஸ்டில் 178* நான்காவது டெஸ்டில் 111 என நீட்சியுற்றது. மூன்றாவது டெஸ்டில் மறுமுனையில் 9 விக்கெட்டுகள் விழுந்தாலும் ஸ்மித் மட்டுமே தனியாளாக கம்பீரமாக நின்று தனது ராஜ்யத்தை ராஞ்சியில் நிறுவினார்.

அவர் ஆடிய ஒவ்வொரு இன்னிங்ஸும் அவர் குவித்த ஒவ்வொரு ரன்னும் வழக்கமான ஆஸ்திரேலியாவின் அட்டாக்கிங் மனநிலையை பிரதிபலிப்பதாகவே இருந்தது.
கோலி 115 மற்றும் 141:
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 364 ரன்களை இறுதிநாளில் எட்டமுடியுமா என்ற தோனியின் கேள்விக்கு, "முயற்சி செய்தால்தானே நம்மால் முடியுமா என்பதை நாமறிவோம்?" என்பதுதான் கோலியின் பதில். டிரா செய்து அடிபணியும் மனநிலையை அடியோடு நீக்கி வெற்றிக்காக மட்டுமே போராடும் பழக்கத்தை இந்தியாவுக்குள் புகுத்தியவர் கோலி. வீரராகவும் கேப்டனாகவும் ஆஸ்திரேலியாவின் பௌலிங்கை அஞ்சாத நெஞ்சுரத்தோடு அவர் எதிர்கொண்ட விதம்தான் அதேவேட்கையை அணிக்குள்ளும் கடத்தியது.
அவருக்கும் மிட்செல் ஜான்சனுக்குமான வார்த்தைப்போர்களும் பார்வைப் பரிமாற்றங்களும் களத்தின் சூட்டினை அதிகரித்தன. அவரது பவுன்சர் கோலியின் ஹெல்மட்டை பதம் பார்த்தது. ஹ்யூகஸின் மறைவு அச்சமயம்தான் நிகழ்ந்திருந்ததென்பதால் ஆஸ்திரேலியாவேகூட சற்றே கவலைப்பட்டது. கோலியோ எந்த சலனத்தையும் வெளிப்படுத்தவில்லை.

மணிக்கு 150கிமீ வேகத்தில் வந்த பவுன்சர்களைக் கண்டு அஞ்சவில்லை பின்வாங்கவில்லை மாறாக அதில் அநாயாசமாக ரன்களை சேர்த்தார். ஒருகட்டத்தில் ஜான்சனே பவுன்சர் போடுவதை நிறுத்தி பின்வாங்கினார். லயனின் சுழலையும் அழகாக எதிர்கொண்டார். பிழைகளற்ற சிம்பொனி இசையாக கோலிக்கும் அவரது பேட்டுக்குமான ஒத்திசைவு தொடர முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் முறையே 115, 141 ரன்களும் அவரால் அடிக்கப்பட்டது.
2020 வரலாற்று வெற்றிக்கான வித்து அங்கேதான் பயமின்மையாகவும் மாற்று அணுகுமுறையாகவும் இருசதங்களால் விதைக்கப்பட்டது.
அஜித் அகர்கர் 6/41:
பாண்டிங்கின் இரட்டைசதம், கும்ப்ளேயின் 5 விக்கெட் ஹால், 85/4 என்ற நிலையிலிருந்து அணியை மீட்ட டிராவிட்டின் 233 என பலரும் 2003/04 அடிலெய்டு வெற்றியில் ஈர்த்திருந்தாலும் அகர்கரின் 6/41தான் இறுதிக்கட்டத்தில் இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தது.
அத்தொடர் முழுவதுமே தனது லைன் மற்றும் லெந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அகர்கர் புதுப்பந்தினை ஸ்விங் செய்தும் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி தந்தார். அதிலும் பெரும்பாலான குட்லெந்த் பந்துகளோடு ஆங்காங்கே ஷார்ட் மற்றும் ஷார்ட் ஆஃப் லெந்திலும் பந்துகளை உள்சொருகி பேட்ஸ்மேனைக் குழப்பியே விக்கெட்டுகளைத் தனதாக்கினார்.

இரண்டாவது இன்னிங்ஸிலோ 360° பேட்ஸ்மேன் போல தனக்கான அந்த 22 யார்டுகளுக்கு இடைப்பட்ட மொத்த இடத்தையும் ஆக்கிரமித்தார். லாங்கரை காலி செய்த இன்ஸ்விங்கர் பின்வரிசை வீரர்களிடம் கைவரிசை காட்டிய ரிவர்ஸ் ஸ்விங் எல்லாவற்றையும்விட முதல் இன்னிங்ஸில் இரட்டைசதம் கடந்த பாண்டிங்கை செட் செய்து டக் அவுட் ஆக்கியதுதான் போட்டியின் திருப்புமுனை.
ஸ்கொயர் கட் ஆட முயன்று பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்து பாண்டிங் மட்டும் வெளியேற்றப்படாமல் இருந்திருந்தால் இந்தியா அந்த வரலாற்று வெற்றியை சுவைக்காமலே போயிருக்கும். ஆஸ்திரேலியாவில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த ஸ்பெல்லான இதுதான் அதனை சாத்தியமாக்கியது.
ஸ்டீபன் ஓ' கீஃப்:
2017-ல் நடைபெற்ற புனே டெஸ்டின் வெற்றி ஓ' கீஃப் எனப்படும் ஆஸ்திரேலியர் ஒருவரின் மேஜிக் ஸ்பெல்லினால் இயற்றப்பட்டது. முதல் இன்னிங்ஸில், ஒரே ஓவரில் ராகுல், ரஹானே, சாஹா ஆகிய மூவரது விக்கெட்டுகளையும் ஓ' கீஃப் சூரையாடினார். அது தந்த அதிர்ச்சியிலிருந்து இந்தியாவால் வெளிவர இயலவில்லை. டர்ன் ஆன பந்துகள் தள்ளாட வைத்தன என்றால் கோலியை வீழ்த்தியது போன்ற டர்ன் ஆகாத பந்துகள் கூட விஷமத்தோடு விஷத்தையும் சேர்த்தே பயணித்து விக்கெட் வேட்டையாடின. 6/35 என்னும் அவரது தாக்குதல் தான் 105 ரன்களுக்கு இந்தியாவை ஆல்அவுட் ஆக வைத்து ஆஸ்திரேலியாவை 155 ரன்கள் லீட் எடுக்க வைத்தது. அதோடு ஓயவில்லை. இரண்டாவது இன்னிங்ஸிலும் சமாளிக்க முடியாத சவாலாக உருவெடுத்தார்.

ஸ்டார்க்கையும் ஹாசில்வுட்டையும் வேடிக்கை பார்க்க வைத்து ஓ' கீஃப்பும் லயனும் தங்களுக்குள் விக்கெட்டுகளை பங்குபோட்டுக் கொண்டனர். தாங்கள் வீசிய 30 ஓவர்களுக்குள் போட்டியையே முடித்தும் விட்டனர். அதிலும் கோலி, முரளி விஜய், ரஹானே உள்ளிட்ட 6 விக்கெட்டுகளை ஓ' கீஃப் வீழ்த்தியிருந்தார். ஒன்றைத் தவிர மற்ற எல்லாமே எல்பிடபிள்யூவாகவோ ஸ்டம்பை சிதறச் செய்தோ வந்திருந்தது அவரது பௌலிங்கின் திறனை அப்போட்டியில் வெளிப்படுத்தியது.
பும்ரா - 6/33:
2018-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க தனது முதல் தொடர் வெற்றியை இந்தியா ஆஸ்திரேலியாவில் எய்தியது. அதன் பின்புலத்தில் பல வீரர்களது பங்களிப்பும் நிரம்பியிருந்தாலும் புயலாக உருவெடுத்திருந்த பும்ராதான் மிக முக்கியக்காரணி.
மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 443 ரன்கள் குவிக்கப்பட்டதும் தனது பௌலர்களின் மீதான நம்பிக்கையில் டிக்ளேர் செய்தார் கோலி. அங்கேதான் பும்ராவின் ஆட்டம் ஆரம்பம்.
ஷார்ட் பாலில் ஓப்பனரான ஹாரீஸை அனுப்பி முதல் அடியை கொடுத்தார். எனினும் போட்டியின் திருப்புமுனை மார்ஷுக்கு அவர் வீசிய மாயப்பந்துதான். ஆம் உணவு இடைவேளைக்குமுன் இறுதிப்பந்தாக வந்த அந்த ஸ்லோ பால் ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டியையும் இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டு வெற்றியை சாதமாக்கியது. கணிக்கவே முடியாத வகையில் வந்த யார்க்கர் ஸ்லோ பால் மார்ஷின் விக்கெட்டை பறித்து சென்றதுதான் அத்தொடரின் ஆகப்பெரும் ஹைலைட்.

அதன்பின் இன்ஸ்விங்கர் டிராவிஸ் ஹெட்டை காவு வாங்க, லயனை மணிக்கு 146 கிமீ வேகத்தை தொட்ட பவுன்சர் வீழ்த்த, அதேபோன்றதொரு ஷார்ட் பாலை எதிர்பார்த்த ஹாசில்வுட்டின் மேல் இன்ஸ்விங்கர் இடியை இறக்கியது. ஒவ்வொரு விக்கெட்டும் ஒவ்வொரு ரகமாக ஒவ்வொரு லைன் அண்ட் லெந்தில் வந்து மிரட்டியிருந்தது. இந்த ஸ்பெல்லினால் 292 ரன்கள் லீட் எடுத்த இந்தியாவை அதன்பின் ஆஸ்திரேலியாவால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
கோலி தனது தொப்பியைக் கழற்றி பும்ராவுக்கு மரியாதை செய்ததும் இந்த ஸ்பெல்லுக்குத்தான் இந்தியாவுக்கு பும்ரா எத்தகைய புதையல் என்பதை உணர்த்தியதும் இத்தருணம்தான்.
வரவிருக்கும் தொடரிலும் இப்படிப்பட்ட தரமான சம்பவங்களை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இரு தரப்பு பேட்ஸ்மேன்களும் பௌலர்களும் அரங்கேற்றினால் போட்டிகள் ஒரு பக்கமாகவே நகராமல் டெஸ்ட் போட்டிகளுக்கே உரிய எல்லா சுவாரஸ்யமான அம்சங்களையும் படம் பிடிக்கும்.