Published:Updated:

Sachin 50*: சாதனை நாயகன் சச்சினின் மலைக்க வைக்கும் சாதனைகள்!

சச்சின்

50வது பிறந்த நாளைக் காணும் சாதனை நாயகன் சச்சினின் மகத்தான சாதனைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்!

Published:Updated:

Sachin 50*: சாதனை நாயகன் சச்சினின் மலைக்க வைக்கும் சாதனைகள்!

50வது பிறந்த நாளைக் காணும் சாதனை நாயகன் சச்சினின் மகத்தான சாதனைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்!

சச்சின்
1989-ல் 16 வயது இளைஞனாக ஆரம்பித்து கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் சச்சின்.

கிரிக்கெட்டில் பல சாதனைகளை தன் வசமாக்கி கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் எனும் பெருமைகளைப் பெற்றவர். இன்று, அவர் தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி கிரிக்கெட் உலகில் சச்சின் செய்த மகத்தான சாதனைகளைப் பற்றிப் பார்ப்போம்!

* 1995-ல் ரூ.31.5 கோடி மதிப்பிலான ஐந்தாண்டு சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர் சச்சின். இன்றைய ஐபிஎல் காலத்தில் இது அற்பமாகத் தெரியலாம். ஆனால், 28 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இந்திய விளையாட்டு வீரருக்கு இந்தத் தொகை மிகப்பெரியது.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

* செப்டம்பர் 2010-ல், சச்சினுக்கு இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இந்த கௌரவ பதவி பெற்ற முதல் விளையாட்டு வீரரான டெண்டுல்கர், விமானப் பின்னணி இல்லாத முதல் நபர் என்ற பெருமையையும் சேர்த்துப் பெற்றார்.

* பிரையன் லாரா மற்றும் ஷேன் வார்னே ஆகியோரைத் தொடர்ந்து மதிப்புமிக்க 'Madam Tussauds Wax Museum' அருங்காட்சியகத்தில் சச்சினுக்கும் மெழுகுச் சிலை வைக்கப்பட்டது. இந்தப் பெருமையைப் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் சச்சின் ஆவார்.

* நாட்டின் உயரிய குடிமகன் விருதான பாரத் ரத்னா விருதை வென்ற ஒரே கிரிக்கெட் வீரர் இவர்தான். 2014-ம் ஆண்டு இந்த உயரிய விருதை அவர் பெற்றார். இதை மிக இளம் வயதில் (40) பெற்ற ஒரே நபரும் சச்சின்தான்.

* சச்சின் அதிகபட்சமாக 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 என மொத்தம் 664 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

* 664 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், 76 ஆட்ட நாயகன் விருதுகளையும், 20 தொடர் நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.

சச்சின் 200
சச்சின் 200

* ஒருநாள் போட்டிகளில் மிகவேகமாக 10,000 ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில், 11 ஆண்டு மற்றும் 103 நாள்களில் 266 போட்டிகளில் 10,000 ரன்களை எடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் சச்சின். முதல் இடத்தில் விராட் கோலியும், மூன்றாம் இடத்தில் சவுரவ் கங்குலியும் இடம் பெற்றுள்ளனர்.

* டெஸ்டில் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும் என சர்வதேச அளவில் 100 சதங்களை அடித்துள்ளார்.

* 45 போட்டிகளில் 2278 ரன்கள் எடுத்து உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் சச்சின்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை தன் வசமாக்கியவர்.

* ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டைச் சதம் அடித்தவர்.

* 1998-ல் 1894 சர்வதேச ரன்கள் ஸ்கோர் செய்து ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சர்வதேச ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனைப் படைத்தார்.

* ஷார்ஜாவில் சச்சின் 42 ஒருநாள் போட்டிகளில் 1778 ரன்கள் எடுத்துள்ளார்.

* தொடக்க வீரர்களாக சச்சின், கங்குலி இருவரும் இணைந்து மொத்தமாக 8227 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் தொடக்க 136 போட்டிகளில் 21 சத பார்ட்னர்ஷிப்கள் மற்றும் 23 ஐம்பது ரன் பார்ட்னர்ஷிப்கள் உட்பட 6,609 ரன்களைச் சேர்த்து இந்தச் சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.

 சச்சின், கங்குலி
சச்சின், கங்குலி

* ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரே இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்தவர் சச்சின். அவர் இரட்டை சதம் அடித்த அந்தப் போட்டியில் 25 பவுண்டரிகள் அடித்துள்ளார்.

* 1990 முதல் 1998 வரை தொடர்ச்சியாக 185 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

* ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று முறை 99 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அது மட்டுமின்றி 90 ரன்கள் அல்லது அதைத் தாண்டி என்கிற அடிப்படையில் மட்டும் டெஸ்ட்டில் 10 முறையும், ஒருநாள் போட்டுகளில் 17 முறையும் ஆட்டமிழந்துள்ளார்.

* 15 ஆட்டங்களில் 5 அரை சதங்களுடன் 618 ரன்கள் எடுத்து 2010-ம் வருடம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் சச்சின்.

* ரஞ்சி டிராபி, துலீப் டிராபி மற்றும் இரானி டிராபி ஆகிய மூன்றிலும் தான் ஆடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்த ஒரே இந்திய வீரர் சச்சின்தான்.

* சச்சின் டெண்டுல்கர் ஒரு காலண்டர் ஆண்டில் 6 முறை 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். 1997ல் 1000 ரன்களும், 1999ல் 1088 ரன்களும், 2001ல் 1003 ரன்களும், 2002ல் 1392 ரன்களும், 2008ல் 1063 ரன்களும், 2010ல் 1562 ரன்களும் அடித்து சாதனை படைத்துள்ளார்.

* உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக சதம் (6) மற்றும் அரை சதம் (15) அடித்த சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் சச்சின்.

* 1998-ம் ஆண்டில் மட்டும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 9 சதங்களை அடித்துள்ளார் சச்சின்.

* இந்திய விளையாட்டு வீரருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்ற முதல் கிரிக்கெட் வீரர் சச்சின்.

17 வயதில் சச்சின்
17 வயதில் சச்சின்

* 1990-ல் மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிராக ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 119 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்தியாவுக்காக சதம் அடித்த இளம் வீரர் எனும் பெருமையைப் பெற்றார் சச்சின். அப்போது அவருக்கு வயது 17.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சினும் டிராவிடும் இணைந்து 20 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்துள்ளனர்.

* ஒரு நாள் போட்டிகளில் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் சச்சின். 2016 பவுண்டரிகள் இவர் பேட்டிலிருந்து வந்துள்ளன.

* சச்சின் அதிகபட்சமாக 6 முறை உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

* சச்சின் இந்தியாவிற்காக முதல் தர ஆட்டத்தில் விளையாடுவதற்கு முன் ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். செயின்ட் சேவியர்ஸ் vs ஷ்ரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 14 வயது சச்சினும் 16 வயது வினோத் காம்ப்ளியும் ஆட்டமிழக்காமல் 664 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். சச்சின் ஆட்டமிழக்காமல் 326 ரன்களையும், காம்ப்ளி ஆட்டமிழக்காமல் 349 ரன்களையும் எடுத்து அதிக ரன்கள் எடுத்து சாதனை நிகழ்த்தியிருந்தனர். பின்னர், 2006-ல் ஹைதராபாத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் - மனோஜ் குமார் மற்றும் முகமது ஷைபாஸ் ஆட்டமிழக்காமல் 721 ரன் பார்ட்னர்ஷிப்புடன் இந்த சாதனையை முறியடித்தனர்.

 14 வயதில் சச்சின்
14 வயதில் சச்சின்

* 2003 உலகக் கோப்பைப் போட்டியில் 1 சதம், 6 அரை சதங்கள் என 673 ரன்கள் குவித்து சாதனை செய்தார் சச்சின். இது 90ஸ் கிட்ஸ்களின் மனதில் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்.

* டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 சதங்கள் எடுத்த ஒரே வீரர், சச்சின். மொத்தமாக 51 சதங்கள் எடுத்துள்ளார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 9 சதங்கள் அடித்திருக்கிறார் சச்சின்.

* 2012-ல் ஆசியக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராகத் தனது 100-வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார் சச்சின். வேறு எந்த வீரரும் 100 சர்வதேச சதங்களை அடித்ததில்லை.

இதுபோல சச்சின் நிகழ்த்திய சாதனைகளில் உங்களுக்குத் தெரிந்தவற்றை கமென்ட்டில் சொல்லுங்கள். பிறந்த நாள் வாழ்த்துகள் மாஸ்டர் பிளாஸ்டருக்கு!