Published:Updated:

`இப்போது, எல்கர் ஏன் விரைவில் வெளியேறினார் தெரியுமா?’ - கலாய்த்து தள்ளிய ட்விட்டர்வாசிகள்

முன்னதாக மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரரான டீன் எல்கர், இந்தியாவில் வழங்கப்படும் உணவுகள் தொடர்பாக விமர்சித்திருந்தார்.

எல்கர்
எல்கர்

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய தென்னாப்பிரிக்கா, கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிகளாவது பெற வேண்டும் என முனைப்பில் களமிறங்கியது.

எல்கர்
எல்கர்

வழக்கம்போல் டாஸில் தென்னாப்பிரிக்கா தோல்வியைச் சந்தித்தாலும், நல்ல தொடக்கத்தைக் கண்டது. மயங்க் அகர்வால், புஜாரா, கோலி ஆகியோர் வந்தவுடன் நடையைக் கட்ட தென்னாப்பிரிக்காவுக்கு நம்பிக்கை கிடைத்தது. ஆனால், அந்த நம்பிக்கையை ரோஹித், ரஹானே ஜோடி தவிடுபொடியாக்கியது. ரோஹித் இரட்டை சதம், ரஹானே சதம் ஜடாஜாவின் அரைசதம் என இந்தியா 497 ரன்னில் டிக்ளேர் செய்தது.

முன்னதாக மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னர் தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரரான டீன் எல்கர், இந்தியாவில் வழங்கப்படும் உணவுகள் தொடர்பாக விமர்சித்திருந்தார். அது தொடர்பாக அவர் பேசுகையில், ``இந்திய சுற்றுப்பயணம் என்பது மிக சவாலானது. ஒரு மனிதராகவும் கிரிக்கெட்டராகவும் கடினமாக இருந்தது. இந்தியா போன்ற சிறிய இடங்களுக்கு வரும்போது ஓட்டல்கள் சரியாக இருக்காது. உணவும் நல்ல உணவும் வழங்கப்படவில்லை. இந்தியாவுக்கு வருவதே ஒரு பாடம்” என்றிருந்தார்.

எல்கரின் இந்தக் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் அப்போதே கடுமையான விமர்சனத்தைப் பதிவு செய்தனர். முதலாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த எல்கர், அதற்கு அடுத்த இன்னிங்ஸ்களில், முறையே 2, 4 மற்றும் 48 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் நேற்றுய இன்னிங்ஸில் ஆட்டத்தில் இரண்டாவது பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து இந்திய ரசிகர்கள் சமூகவலைதளங்களில் எல்கரை கலாய்த்து தள்ளினர். ட்விட்டரில் ஒருவர், ``பிசிசிஐ சாமர்த்தியமாகச் செயல்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியில் எல்கர் சதமடித்ததால் அவருக்கு மோசமான உணவை அளித்து எளிதில் வெளியேற்றி விட்டது” எனப் பதிவிட்டிருந்தார்.

மற்றொருவர், ``எல்கர் ஏன் விரைவாக வெளியேறினார் தெரியுமா?? டீ பிரேக்கில் நல்ல டீ எல்கருக்கு வழங்கப்படவில்லை. அதனால் அதுகுறித்து புகார் அளிக்கவே எல்கர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார்” எனப் பதிவிட்டார்.