Published:Updated:

CWC22: ஸ்மிருதியின் க்ளாஸ் + ஹர்மன்ப்ரீத்தின் மாஸ் சதங்களால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

HarmnPreet & Smiriti Mandhana ( ICC )

சந்தேகமே இல்லாமல் இந்தப் போட்டியை இந்திய அணிக்கு வென்று கொடுத்தது ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் ஆகியோர்தான். ஆனால், அவர்களுக்கு இணையாக இன்னொரு வீராங்கனையும் பாராட்டப்பட வேண்டும். அவர், யஸ்திகா பாட்டியா.

CWC22: ஸ்மிருதியின் க்ளாஸ் + ஹர்மன்ப்ரீத்தின் மாஸ் சதங்களால் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா!

சந்தேகமே இல்லாமல் இந்தப் போட்டியை இந்திய அணிக்கு வென்று கொடுத்தது ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் ஆகியோர்தான். ஆனால், அவர்களுக்கு இணையாக இன்னொரு வீராங்கனையும் பாராட்டப்பட வேண்டும். அவர், யஸ்திகா பாட்டியா.

Published:Updated:
HarmnPreet & Smiriti Mandhana ( ICC )
உலகக்கோப்பை தொடரில் தங்களின் மூன்றாவது லீக் போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரின் அசத்தல் சதம் மற்றும் ஒட்டுமொத்தமான சிறப்பான பந்துவீச்சு பெர்ஃபார்மென்ஸால் வெஸ்ட் இண்டீஸை இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. இந்தப் பெரிய வெற்றி மூலம் புள்ளிப்பட்டியலிலும் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இந்தப் போட்டியில் மிதாலி ராஜே டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார். இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், பேட்டிங் லைன் அப்பில் மாற்றம் இருந்தது.

ஸ்மிருதி மந்தனா, யஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா என டாப் 3 வீராங்கனைகள் மூவருமே இடதுகை பேட்டர்களாக இருப்பது நியூசிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் பின்னடைவாக அமைந்திருந்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான இந்தப் போட்டியில் தீப்தி சர்மாவை நம்பர் 4 க்கு இறக்கிவிட்டு நம்பர் 3 இல் மீண்டும் மிதாலி ராஜே இறங்கியிருந்தார். கரியரின் கடைசிக்கட்டத்தில் இருப்பதால் என்னுடைய நம்பர் 3 க்கு வேறொரு வீராங்கனையை செட் செய்தே ஆக வேண்டும் எனக்கூறியே மிதாலி ராஜ் தனது ஆர்டரை இறக்கிக் கொண்டிருந்தார்.

யஸ்திகா பாட்டியா
யஸ்திகா பாட்டியா
BCCI

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இப்போது சூழல் காரணமாக மீண்டும் அவரே நம்பர் 3 க்கு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் இந்த திடீர் மாற்றம் நல்ல விளைவுகளையே உண்டாக்கியது. ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத்தின் சதங்களுக்கும் உறுதுணையாக அமைந்திருந்தது.

சந்தேகமே இல்லாமல் இந்தப் போட்டியை இந்திய அணிக்கு வென்று கொடுத்தது ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் ஆகியோர்தான். ஆனால், அவர்களுக்கு இணையாக இன்னொரு வீராங்கனையும் பாராட்டப்பட வேண்டும். அவர், யஸ்திகா பாட்டியா.

பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் கடந்த இரண்டு போட்டிகளாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது பவர்ப்ளே ஓவர்களே.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான அந்த போட்டிகளில் முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளேயில் இந்திய அணி 33, 26 என்றே ஸ்கோர் செய்திருந்தது. இந்த மந்தமான தொடக்கமே நியூசிலாந்துக்கு எதிரான தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான இந்த போட்டியில் அந்த பிரச்னையை யஸ்திகா பாட்டியா தீர்த்து வைத்தார். இந்த போட்டியில் முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளேயில் இந்திய அணி எடுத்த ஸ்கோர் 62-2. ரன்ரேட் 6 க்கும் மேல். இதற்கு காரணம், யஸ்திகாவின் அதிரடியே. யஸ்திகா 21 பந்துகளில் 6 பவுண்டரிக்களுடன் 31 ரன்களை எடுத்திருந்தார். ஷமிலியா கன்னெல், ஹென்றி, மேத்யூஸ் என வீசிய அத்தனை பேரின் பந்துவீச்சையும் லெக் சைடில் மடக்கி அடித்து வெளுத்தெடுத்தார்.

நியுசிலாந்துக்கு எதிராக கடந்த போட்டியில் முதல் 20 ஓவர்களில் இந்திய அணி மூன்றே மூன்று பவுண்டரிக்களோடு 50 ரன்களை மட்டுமே அடித்திருந்தது. அத்தோடு ஒப்பிடும்போது யஸ்திகா பாட்டியாவின் 6 பவுண்டரிகளும் 140+ ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த 31 ரன்களும் எவ்வளவு மதிப்புமிக்கது என்பது புரியும்.
Smiriti Mandhana
Smiriti Mandhana
BCCI

யஸ்திகா இவ்வாறாக ஒரு முனையில் அதிரடியாக ஆடியதால் இன்னொரு முனையில் ஸ்மிருதி மந்தனா அழுத்தமேயின்றி ரிஸ்க் எடுக்க வேண்டிய தேவையில்லாமல் பெரிய இன்னிங்ஸ் ஆடுவதற்கு தன்னை நிலைப்படுத்திக் கொண்டிருந்தார். யஸ்திகா 31 ரன்களில் அவுட் செல்மனின் பந்தில் அவரிடமே கேட்ச் ஆகியிருந்தார். யஸ்திகா அவுட் ஆன பிறகு, அடுத்தடுத்த தங்கள் ஆர்டர்களை மாற்றி இறங்கிய மிதாலியும் தீப்தியும் கூட வேகமாக விக்கெட்டுகளை விட்டிருந்தனர்.

ரன்ரேட் 5 க்கு மேல் இருந்தாலும் 3 விக்கெட்டுகளை வேகமாக இழந்து இந்திய அணி கொஞ்சம் தடுமாறிக் கொண்டுதான் இருந்தது. அந்த சமயத்தில்தான் ஸ்மிருதி மந்தனாவும் ஹர்மன்ப்ரீத் கவுரும் கூட்டணி அமைத்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் ஸ்மிருதி அரைசதம் அடித்து சிறப்பாக ஆடிக்கொண்டிருப்பார். ஆனால், அந்த சமயத்தில் இன்னொரு முனையில் மிதாலி ராஜ் தனது வழக்கமான ஆட்டத்தை ஆட ஸ்ட்ரைக் ரொட்டேட்டே ஆகாமல் ஸ்மிருதி ரிஸ்க் எடுக்க முனைந்து அவுட் ஆகியிருப்பார். அந்த பிரச்னை இந்தப் போட்டியில் ஸ்மிருதிக்கு வரவே இல்லை. அவர் முழுமையாக செட்டில் ஆகி பேட்டை இலகுவாக விட்டு ஆடும் தெம்பை பெரும் வரை அவருக்கு இன்னொரு முனையில் ஒத்துழைப்பு கிடைத்துக் கொண்டே இருந்தது. முதலில் யஸ்திகா அட்டாக்கிங்காக ஆடி மந்தனாவுக்கான வெளியே கொடுக்க, அடுத்ததாக ஹர்மன்ப்ரீத் கவுரும் அதையே தொடர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த போட்டியில் தோற்றபோதும் ஹர்மன்ப்ரீத் கவுர் மட்டும் அரைசதம் அடித்து நல்ல ஃபார்முக்குத் திரும்பியிருந்தார். இந்தப் போட்டியிலும் அதே அளவுக்கு சிறப்பாக ஆடினார். நன்றாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து சில பவுண்டரிக்களையும் அடித்து ஸ்மிருதி அரைசதத்தை கடக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறப்பாக ஸ்கோரை உயர்த்தினார். 66 பந்துகளில் ஸ்மிருதி அரைசதத்தைக் கடந்தார். இதுவரை கொஞ்சம் பொறுமையாக நின்று தன்னை நிலைப்படுத்திக் கொண்ட மந்தனா இதன்பிறகு பேட்டை வீசி வேகமாக ஆட ஆரம்பித்தார். இப்போது ஹர்மன்ப்ரீத் கொஞ்சம் ஆசுவாசம் அடையும் வகையிக் செகண்ட் ஃபிடில் ஆட ஆரம்பித்தார். இருவரும் மிகச்சிறப்பாக ஒருவரை ஒருவர் Complement செய்து கொண்டு நல்ல கூட்டணியை அமைத்தனர்.

நேரம் எடுத்து க்ளாஸாக பேக் ஃபுட்டில் அடித்த கட்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் இறங்கி வந்து பௌலரின் தலைக்கு மேல் சிக்சர் என மந்தனா மாஸும் காட்டினார். ஹர்மன்ப்ரீத்தும் தனது இலகுவான ஸ்டைலில் வலிமையான ஷாட்களை ஆடி அசரடித்தார்.
Smriti & HarmanPreet
Smriti & HarmanPreet
BCCI

இருவரும் இணைந்து 184 ரன்களை அடித்திருந்தனர். இருவருமே சதத்தையும் கடந்திருந்தனர். கடந்த உலகக்கோப்பையிலும் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்திருந்தார். அதேமாதிரி, கடந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அசாத்தியமான முறையில் 171* ரன்களை அடித்திருந்த ஹர்மன்ப்ரீத் ஒருநாள் போட்டிகளில் அதன்பிறகு அடிக்கும் சதம் இதுவே. ஸ்மிருதி மந்தனா 123 ரன்களையும் ஹர்மன்ப்ரீத் 109 ரன்களையும் எடுத்து அவுட் ஆகியிருந்தனர். இவர்களின் இந்த ஆட்டத்தால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 317 ரன்களை சேர்த்திருந்தது.முதல் இரண்டு போட்டிகளிலேயே நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்தை வீழ்த்தி அப்செட்டை நிகழ்த்தியிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியிலும் எதாவது சர்ப்ரைஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

டாட்டின்
டாட்டின்
ICC
எதிர்பார்த்ததை போலவே வெஸ்ட் இண்டீஸின் மேஜிக் வுமன் டாட்டின் நியூசிலாந்துக்கு எதிரான அந்த கடைசி ஓவரை போன்று இங்கிலாந்து எதிரான அந்த அசாத்திய கேட்ச்சை போன்று இங்கும் ஒரு சம்பவத்தை நிகழ்த்த முனைந்தார்.

318 ரன்களை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் 12 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டியிருந்தது. இதற்கு காரணம் டாட்டினின் வெறியாட்டம்.

ஹேலே மேத்யூஸ் மற்றும் டாட்டின் இருவருமே இந்திய பந்துவீச்சை சல்லி சல்லியாக நொறுக்க தொடங்கினார். ஜூலன் கோஸ்வாமி வீசிய ஐந்தாவது ஓவரில் மட்டும் 21 ரன்கள் வந்திருந்து. மேத்யூஸ் தொடர்ந்து 3 பவுண்டரிக்களை அடித்துவிட்டு ஸ்ட்ரைக்கை டாட்டினுக்கு கொடுக்க அவர் மீதமிருந்த இரண்டு பந்துகளையும் பவுண்டரியாக்கி அந்த ஓவரை முடித்து வைத்தார். மிதாலி ராஜும் அந்த ஓவரோடு வேகப்பந்து வீச்சை கட் செய்துவிட்டு ஸ்பின்னர்களுக்கு சென்றார். ஆனாலும் அதிரடி தொடர்ந்தது. 5 ஓவர்களில் 50 ரன்களை கடந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 12 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. 35 பந்துகளில் டாட்டின் அரைசதத்தை தாண்டியிருந்தார். 40 ஓவர்களுக்குள் சேஸிங் செய்து போட்டியை சீக்கிரமே முடித்துவிடுவார்கள் என்ற சூழலே நிலவியது. சேஸிங்கும் 40.3 ஓவர்களிலேயே முடிந்தது. ஆனால், வென்றது வெஸ்ட் இண்டீஸ் இல்லை. இந்தியா!!

Indian Team
Indian Team
BCCI
எந்த பௌலர்கள் முதல் 12 ஓவர்களில் சிதறடிக்கப்பட்டார்களோ அதே பௌலர்களே அடுத்த 12 ஓவர்களுக்குள் போட்டியை இந்தியா பக்கமாக திருப்பிவிட்டனர். முதல் 12 ஓவர்களில் 100-0 என்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த 12 ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியையும் தழுவியது.

சுழன்றடித்த சூறாவளியான டாட்டினை ஸ்நே ராணா தனது சுழலில் அடக்கினார். 46 பந்துகளில் 62 ரன்களை எடுத்த நிலையில் டாட்டின் அவுட்டாகி வெளியேறியிருந்தார். முட்டி போட்டு ஃபைன்/ஸ்கொயர் லெக்கில் அடிக்க முயலும் டாட்டினுக்கு பிரத்யேகமாக அந்த பகுதியில் கூடுதலாக ஒரு ஃபீல்டரை நிறுத்தி மிதாலி ராஜூம் கேப்டனாக ஜொலித்திருந்தார்.

இதன்பிறகு, இந்தியாவிற்கு பெரிதாக எந்த சவாலுமே இல்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வந்து கொண்டே இருந்தது. இன்னொரு முக்கிய பேட்டரான ஹேலே மேத்யூவையும் ராணாவே வீழ்த்தினார். ஜூலன் கோஸ்வாமி உலகக்கோப்பை தொடர்களில் தனது 40 வது விக்கெட்டை வீழ்த்தி உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் எனும் சாதனையையும் படைத்தார். வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. Player of the Match விருது ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட அதை ஹர்மன்ப்ரீத்துடன் பகிர்ந்து கொண்டு மந்தனா புன்னகை பூத்தார். இந்த பார்ட்னர்ஷிப்தான் வெற்றியின் ரகசியமே!

Smriti & HarmanPreet
Smriti & HarmanPreet
BCCI
ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலிலும் இந்திய அணி முதலிடம் பெற்றிருக்கிறது. வெற்றி, முதலிடம் என்பதையெல்லாம் தாண்டி ஒரு அணியாக முழுமையாக இந்திய அணி சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறது. அதுதான் மிகமிக முக்கியம். இது தொடர வேண்டும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism