இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்தது. இந்தத் தொடரில் இந்தியா வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டத்தின்போது இந்திய ரசிகர்கள் சிலர் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஸ்மித்தை விமர்சித்தனர். இதற்கு, கோலி ரசிகர்களை நோக்கி தன்னுடைய எதிர்ப்புகளை தெரிவித்தார்.
இதைக் குறிப்பிட்டுப் பேசிய ஸ்மித், ``உலகக் கோப்பையில் விராட் கோலி செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதைச் செய்ய வேண்டுமென்று அவருக்கு அவசியமில்லை. அவருடைய செயல் மிகவும் அழகானது, பாராட்டத்தக்கது" என்று நெகிழ்ந்து கூறினார்.
கோலியினுடைய விளையாட்டைப் பற்றி தொடர்ந்து பேசிய அவர், ``கோலி, மிகச்சிறந்த வீரர். அவருடைய சாதனைகளே அவரைப் பற்றிச் சொல்லும். ஒருநாள் போட்டி, டி20, டெஸ்ட் என மூன்று வடிவங்களிலும் மிகச்சிறப்பாக விளையாடக்கூடியவர். கிரிக்கெட்டில் பல சாதனைகளை முறியடிப்பார் என்று நினைக்கிறேன். ஏற்கெனவே, ஏராளமான சாதனைகளை முறியடித்துள்ளார். ரன்களை எடுப்பதில் தீரா பசியோடு இருக்கிறார். ரன்களைக் குவிப்பதை அவர் நிறுத்தவே இல்லை. ஆனால், அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரன்களை எடுப்பதை தடுக்க முடியும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
கோலி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் `Spirit of Cricket Award’ என்ற விருதைப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ``எனக்கு விருது கிடைத்தது ஆச்சர்யமாக இருக்கிறது" என்று பேசினார். தொடர்ந்து ஸ்மித்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ``அந்தத் தருணத்தில் ஸ்மித்தின் நிலைமையைப் புரிந்துகொள்ள முடிந்தது. இதுமாதிரியான சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது" என்று கூறினார்.