Published:Updated:

ஸ்பின்னுக்குத் திணறிய இந்தியா; ஐபிஎல் அனுபவம் என்னானது? இலங்கைத் தொடர் எழுப்பியிருக்கும் கேள்விகள்!

SL v IND

பௌலர்களையே பவர்பிளே ஓவர்களில், பேட் எடுக்க வைத்த பெருமையைக் கட்டிக் கொண்டதோடு, இலங்கையை வொய்ட் வாஷ் செய்துவிடலாம் என்று சென்ற இந்திய அணி டி20 தொடரை இழந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஸ்பின்னுக்குத் திணறிய இந்தியா; ஐபிஎல் அனுபவம் என்னானது? இலங்கைத் தொடர் எழுப்பியிருக்கும் கேள்விகள்!

பௌலர்களையே பவர்பிளே ஓவர்களில், பேட் எடுக்க வைத்த பெருமையைக் கட்டிக் கொண்டதோடு, இலங்கையை வொய்ட் வாஷ் செய்துவிடலாம் என்று சென்ற இந்திய அணி டி20 தொடரை இழந்து கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

Published:Updated:
SL v IND
ஒருநாள் தொடரை வென்றதற்கு பிரதி உபகாரமாக, டி20 தொடரை விட்டுத் தருகிறோம் என கங்கணம் கட்டிக் கொண்டதைப் போலத்தான், பந்து ஒன்றில் இருந்து கூட அல்ல, டாஸில் இருந்தே மந்தமாக இருந்தது இந்தியாவின் ஆட்டம்.

இந்தியாவின் பேட்டிங் பலவீனம், முந்தைய போட்டியிலேயே காட்சிப்படுத்தப்பட்டு இருந்ததால், இன்றைய போட்டியில் ஷனகாவே டாஸை வென்றாலும், அவராகவே மனமிறங்கி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென, இருக்கின்ற குலதெய்வத்தை எல்லாம் ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருக்க, டாஸையே தவான்தான் வென்றார்.

"ஆஹா அடித்தது ஜாக்பாட்" என ரசிகர்கள் துள்ளிக் குதிக்க, "பேட்டிங் செய்யப் போகிறோம்" எனச் சொல்லி, அத்தனை பேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் தவான். வழக்கத்திற்கு மாறாக, டாஸைத் தோற்றும் தவானை விட ஷனகாதான் அதிகமாக உற்சாகமானார். ஏனெனில், முந்தைய போட்டியில், பிட்ச் எப்படி பௌலர்களுக்குச் சாதகமாக இருந்தது, சோடை போன இந்திய பேட்டிங் எப்படிச் சுமாராக ஆடியது... என எல்லாம் ஞாபகம் வந்ததுதான் காரணம்.

SL v IND
SL v IND

அது ஏன் கேப்டன் தவானிற்கும், பயிற்சியாளர், டிராவிட்டிற்கும் நினைவில் வரவில்லை என்பதுதான், மில்லியன் டாலர் கேள்வி. ஏனெனில், இந்தியாவின் வீழ்ச்சிக்கான தொடக்கப் புள்ளி, அங்கேதான் வைக்கப்பட்டது. அதன்பிறகு யாருடைய விக்கெட்டை யார் யாரெல்லாம், எப்படி எப்படி எல்லாம் எடுத்தார்கள் என வர்ணிக்கக் கூட முடியாதவாறு, கண்ணாடி மாளிகையாக நொறுங்கியது இந்திய பேட்டிங் வரிசை.

இரண்டாவது போட்டி வேண்டுமெனில், அறிமுகப் போட்டியாக இருந்ததால் பதற்றத்தில் வீரர்கள் திணறி இருக்கலாம், இந்தப் போட்டியில், கண்டிப்பாக மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்ற ஆசை ரசிகர்களிடம் துளிர்விட, அது பேராசை என்பது புரிய, அவர்கள் ஒரிரு ஓவர்கள் மட்டுமே காத்திருக்க வேண்டியிருந்தது. கெய்க்வாட்டோடு களமிறங்கிய தவான், "கேப்டனும் நானே, களப்பலியும் நானே!", என சமீரா வீசி, தான் சந்தித்த முதல் பந்திலேயே வேண்டி விரும்பி ஆட்டமிழக்க, கோப்பையை அங்கேயே கையில் ஏந்தி விட்டது இலங்கை.

பொறுப்பற்ற முறையில் தவானே ஆட்டமிழந்த பின்பு, இளம் படையிடம் என்ன எதிர்பார்த்து விடமுடியும்?! மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழிதானே!? இரண்டு ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தப் பார்ட்னர்ஷிப்பை உடைத்துக் கொண்டு படிக்கல் வெளியேற, 23/2 என இருந்த ஸ்கோர், ஒரு ரன்னுக்கு ஒரு விக்கெட் என்ற கணக்கில் 24/3, பின் 25/4 என மின்னல் வேகத்தில் மாறி, ரசிகர்களை நொடிக்கொரு முறை நெஞ்சைப் பிடிக்க வைத்தது.

பவர்பிளே ஓவர்கள், பவுண்டரிகளைப் பார்க்காமல் படுபாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தன. பிரதான இந்திய அணி வீரர்கள்தான் ஸ்பின்னிற்குத் திணறுவார்கள் என்று நினைத்தால், சி டீம் என்றழைக்கப்படும் இந்த அணி வீரர்கள் கூட ஸ்பின்னிற்குத் திணறியது பேரிடியை இறக்கியது. நல்ல டொமெஸ்டிக் அனுபவம் கொண்ட படிக்கல்லும் கெய்க்வாட்டும் ஸ்பின்னை கணிக்காது, ஆடி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தது ஆச்சர்யத்தை இல்லை அதிர்ச்சியைத்தான் அளித்தது.

SL v IND
SL v IND

மறுமுனையில் சஞ்சு சாம்சனோ, இன்றோடு டி20-ல் இருந்து ஓய்வறித்துக் கொள்கிறேன் என்னும் ரீதியில் ஆட்டமிழந்து சென்றார். தவானுக்குப் பிறகு சீனியர் வீரர்கள் இல்லாத நேரத்தில் தனது முழுப் பொறுப்பையும் உணர்ந்து ஆடாமல் ஹசரங்கா பந்தில் பேக் ஃபுட்டில் போய் லெக் கிளான்ஸ் ஆட முயல, பிளம்ப் முறையில் எல்பியூ ஆனார். இனிமேல் தனக்கும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல் டக் அவுட் ஆகிச் சென்றார்.

ராணாவும் புவனேஷ்வரும், நான்கு ஓவர்கள் தாக்குப் பிடித்ததே, பெருஞ்சாதனை என ஆறுதல்பட்டுக் கொள்ளும்படியாகத்தான் இருந்தது இந்திய பேட்ஸ்மேன்களின் திறன். பிறகு, பல வருஷமாக இந்திய அணியில் இடம்பிடிக்க காத்திருந்த ராணாவும் ஆட்டமிழக்க, இந்த ஜென்மத்தில் அதைப் பார்க்கவே கூடாதென ஒவ்வொரு இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களும் நினைக்கும், அந்த வலி தரும் '36' என்னும் எண், கண்களைக் கலங்க வைத்தது.

இதன்பிறகு இணைந்த புவனேஷ்வர் - குல்தீப் கூட்டணி மட்டும், ஆல்அவுட் மட்டும் ஆகிவிடக் கூடாதென விடாப்படியாய் நின்றது. எனினும், புவனேஷ்வரும் ஆட்டமிழக்க, அடுத்த இரு விக்கெட்டுகளும் சில பந்துகளிலேயே விழுந்துவிட, குல்தீப் யாதவ் மட்டுமே, மறுமுனையில், பொறுமையாக ரன் எடுக்க இறுதியாக, 81 ரன்களை மட்டுமே, இந்தியா சேர்ந்திருந்தது.

அதிகமான பந்துகளைச் சந்தித்தவராக, புவனேஷ்வர் இருந்தார் எனில், அதிக ரன்களை எடுத்தவராக குல்தீப்தான் இருந்தார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாருமே இதைவிட அதிகப் பந்துகளையும் சந்திக்கவில்லை, ரன்களையும் எடுக்கவில்லை. களமிறங்கிய பத்து வீரர்களில், ஏழு பேர் ஒற்றை இலக்கத்தோடே வெளியேறியதுதான் உச்சகட்ட வேதனையே. அதுவும், சுழல் பந்துகளை எதிர்கொள்ளவே தெரியாததைப் போல், பிறந்த நாள் பரிசாக ஹசரங்காவுக்கு நான்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, ஸ்பின்னிற்கும் எங்களுக்கும் எட்டடி தூரம் என நடையைக் கட்டியதுதான் வேதனையிலும் வேதனை.

SL v IND | இந்தியா
SL v IND | இந்தியா

இவ்வளவு பெரிய கட்டமைப்பைக் கொண்ட அணி, டிராவிட் போன்ற ஓரு கோச்சைக் கொண்ட அணி, ஸ்பின் பந்துகளுக்குத் திணறுவதைப் பார்த்த போது ஐபிஎல் ஆட்டங்களைக் கண்டு மட்டும் இந்த வீரர்களை இண்டர்நேஷனல் கிரிக்கெட்டிற்கு அனுப்பி விடக்கூடாது என மற்றுமொரு முறை, அறைந்தது போல் தெளிவாக விளக்கிச் சென்றனர்.

களத்தில் 10 ஓவர்கள் தாக்குப் பிடித்தால் கூட எடுத்து விடக் கூடியதைத்தான், இலங்கைக்கான இலக்காக இந்தியா நிர்ணயித்தது. ஃபெர்ணான்டோவோடு, மினோட்டும் இறங்கி வர, புவனேஷ்வர் ரவுண்ட் த விக்கெட்டில் வந்து தொடக்கத்திலேயே மிரட்டினார். அதே போல், வருண் சக்ரவர்த்தியையும் இரண்டாவது ஓவரிலேயே, தவான் கொண்டு வந்துவிட்டார். எனினும், ராகுல் சஹார் வீசிய பவர் பிளேயின் இறுதி ஓவர்வரை, விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல், இலங்கை போராடியது. எனினும், ஃபெர்ணான்டோவுக்கு, ராகுல் சஹார் வீசிய பந்தை, அவரிடமே திரும்பிக் கொடுத்து, அவர் ஆட்டமிழந்தார். போன போட்டியைப் போலவே, தான் பிடித்த அற்புதமான கேட்ச் வாயிலாக, விக்கெட் கணக்கைத் தொடங்கினார், ராகுல் சஹார்.

ஃபெர்ணான்டோ, வெகு சீக்கிரமாகவே ஆட்டமிழந்திருந்தாலும், இன்னொரு ஓப்பனர், மினோட்டோ, இலக்கை எட்டும் வரை போராடுவேன் என்பது போல் ஆடிக் கொண்டிருந்தார். ரன்களை அதிரடியாக அடித்து எதுவுமில்லை, இலக்கு குறைவே என்பதால் அது தேவையும் இல்லை. அந்தக் கட்டத்தில்தான் ராகுல் சஹார், அடுத்த தாக்குதலை நிகழ்த்தினார். துல்லியமான லைனில் வந்த பந்து, மினோட்டை, எல்பிடபிள்யூ ஆக்கி வெளியேற்றியது. ஒரு முனையில் நின்று, ராகுல் சஹார் மட்டும் அடைய முடியாத கரையை அடைய, ஒற்றைத் துடுப்பாக போராடிக் கொண்டிருந்தார்.

இதன்பின், போன போட்டியின் கதாநாயகன், தனஞ்செயா, சமரவிக்ரமாவோடு, அந்த 82-ஐ துரத்தி ஒட ஆரம்பிக்க, இந்திய பௌலர்களால், அவர்களது வெற்றியை, தள்ளிப் போடவும், தாமதப்படுத்தவும் முடிந்ததே ஒழிய, தடுக்க முடியவில்லை. அற்புதமான ஒரு பந்தால், சமரவிக்ரமாவை, போல்டாக்கி அனுப்பின ராகுல் சஹார், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். எல்பிடபிள்யூ, போல்ட், காட் அண்ட் பௌல் என வகைக்கொரு விக்கெட்டுகளால், அவர் மட்டுமே, ஒன் மேன் ஷோ காட்டி இருந்தார்.

SL v IND
SL v IND

இறுதியாக, 14.3 ஓவர்களிலேயே, இலக்கை அடைந்த இலங்கை, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியில் வென்று, 2-1 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. ஐந்து டி20 தொடர்களை தொடர்ச்சியாக இழந்து தவித்த இலங்கைக்கு, இந்த வெற்றி, மாபெரும் நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது.

டி20 உலகக் கோப்பையை மனதில் நிறுத்தி நடத்தப்படும் தொடர் எனச் சொல்லப்பட்டிருந்தாலும், அது முழுக்க வெற்றி பெறவில்லை. ராகுலின் சிறப்பான பந்து வீச்சும், குல்தீப் மறுபடியும் ஃபார்முக்குத் திரும்பியதும், அழைத்து வந்த வீரர்கள் எல்லோரையும் ஆட வைத்துக் கூட்டுப் போவதையும் மட்டுமே, பெரிய சாதனையாக, செய்து கொண்டுள்ளது இந்தியா.

கொரோனாவால் முக்கிய வீரர்கள் விளையாட முடியாமல் போனது, இந்தியா 'சி' டீமான ஒரு அணியோடு களம் காணும் சவாலான சூழ்நிலை உருவானது என எதுவுமே இந்தியாவுக்கு சாதகமாக நகரவில்லை.

SL v IND
SL v IND

பந்தயத்துக்குப் புதுக் குதிரை என்றாலும், அது பந்தயத்துக்காகப் பழக்கப்பட்ட குதிரைதானே? அடித்துப் பிடித்து ஓடி தன்னை நிரூபிக்க வேண்டிய குதிரைகள், நம்பிக்கை இன்றி பின்தங்கி, இலக்கை எட்ட முடியாது தோல்வியைத் தழுவியதோடு, ஜாக்கி முதல் பயிற்சியாளர் வரை, எல்லோரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியுள்ளன.

ஒரு தொடர் பல கேள்விகளுக்கும், விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளது. வெற்றியை விட தோல்வி கற்றுத் தரும் பாடம்தான், தாமதமாக பலமடங்கு பயனளிக்கும். பார்க்கலாம்! இந்தியா, இத்தோல்வியில் இருந்து என்ன கற்று வருகிறது என்று!