Published:Updated:

SL v IND: தவறான ஷாட்களுக்கு அவுட்டான தவானின் படை, சொதப்பிய சகாரியா - தொடரை வெல்ல என்ன செய்யவேண்டும்?

SL v IND
SL v IND ( twitter.com/BCCI )

முன்கள வீரர்கள் இல்லாத நிலையில், அனுபவமற்றவர்களின் அணிவகுப்புதான் என்றாலும், தவிர்த்திருக்கக் கூடிய ஒரு தோல்வியை வேண்டி விரும்பிப் பெற்றுள்ளது இந்திய அணி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

க்ருணாலுக்குக் கொரோனா, வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர், போட்டி ஒருநாள் தள்ளிப் போகிறது... என அடுக்கடுக்கான விரைவுச் செய்திகளோடு, தற்போது இந்தியாவின் தோல்வியும் சேர்ந்துள்ளது.
"எங்களிடம் விளையாடப் பதினோரு வீரர்களே உள்ளனர். அந்த பதினோரு வீரர்களுடனும் களமிறங்குகிறோம்", என்று போட்டிக்கு முன்பு அளித்த பேட்டியில் சொல்லி இருந்தார் டிராவிட். இதற்கு முன்பு, இதே போன்றதொரு இக்கட்டான நிலைமையை காயங்களால் ஆஸ்திரேலியத் தொடரில் சந்தித்தது இந்தியா. தற்போது, கொரோனாவால் அது மீண்டும் ஒருமுறை நிகழ்ந்திருக்கிறது.

கடைசியாக விளையாடிய 14 டி20 போட்டிகளில், ஒன்றில் மட்டுமே வென்றிருக்கும் இலங்கையை, அறிமுக வீரர்கள் நால்வர் உள்ளிட்ட புதுமுகங்களோடு சந்திக்க தவான் களமிறங்கினார். தராசின் தட்டில் வைத்துப் பார்த்தால், தற்போது எப்படிப் பார்த்தாலும் இலங்கையை விட இந்தியாவின் தட்டு சற்றே மேலிருப்பதால் நிரூபிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்திய இளம்படை சாதித்தால் அது காலத்துக்கும் கொண்டாடப்படும் வெற்றியாக அமையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

பௌலிங்கில் கூடப் பரவாயில்லை எனும் அளவு இந்திய பேட்டிங் லைன் அப், சர்வதேச அரங்கில் அனுபவமற்றதாக இருந்தது. எனினும், அவர்களது ஐபிஎல் ஆட்டங்கள் கண்டிப்பாகக் கைகொடுக்குமென்ற கருத்தும் நிலவியது. இருந்தாலும், வெறும் 5 பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்துக் கொண்டு, வெற்றி எப்படிச் சாத்தியமாகும் என்ற பயத்தோடே தொடங்கியது இந்தியன் இன்னிங்க்ஸ்.

SL v IND
SL v IND
twitter.com/BCCI

ஓப்பனிங் ஸ்பாட்டுக்கு யாரை இறக்குவது என்ற முந்தைய குழப்பம் இப்போதும் நீடித்தது... ஆனால், வேறு வகையில்! ஒரு வழியாக தவானுடன் களமிறங்க, சிஎஸ்கேயில் சில போட்டிகளில் தன்னை நிரூபித்த கெய்க்வாட் கிடைத்தார்.

தவானின் டி20 அனுபவம், 1719 ரன்கள் என்றால் இந்தப் போட்டியில், விளையாடிய மற்ற இந்திய வீரர்களின் மொத்த டி20 ரன்களின் கூடுதலே, 164தான் என்பதால், தவானின் தலையில் கூடுதல் சுமை சேர்ந்தது. ஒருநாள் போட்டிகளில், இளைஞர்களிடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்து விட்டு நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்து வேடிக்கை பார்த்த தவான், இப்போட்டியில் பொறுப்புணர்ந்து நின்று ஆடினார். கெய்க்வாட்டும் பக்க பலமாக நின்றாலும், பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்ததால் ரன் ரேட் 7ஐ சுற்றியே வட்டமிட்டது. எனினும், விக்கெட் விழாதது இந்தியாவுக்குக் கூடுதல் வலிமையாகப் பார்க்கப்பட்டது.

இந்தப் பார்ட்னர்ஷிப், அபாயக் கட்டத்தை நோக்கி தங்களை நகர்த்துவதை உணர்ந்து ஷனகாவே பந்தைக் கையிலெடுத்தார். அந்த ஓவரில், லெந்த்தை மாற்றி மாற்றி வீசி நான்கு ரன்களை மட்டுமே கொடுக்க, கெய்க்வாட்டுக்கு வீசப்பட்ட கடைசிப் பந்து ஷார்ட் பாலாக, அதை புல் ஷாட் ஆக்க அவர் முயன்றார். ஆனால், அது டாப் எட்ஜாகி, பனுகாவிடம் கேட்சாகி, விக்கெட் வீழ்ச்சியின் தொடக்கத்துக்கான அடித்தளம் அமைத்தது.

அடுத்தாக இணைந்த தவான் - படிக்கல் கூட்டணி, ஐந்து ஓவர்கள் நீடித்தது. ஒருபுறம் களம் கை கொடுக்கவில்லை என்றாலும், மறுபக்கம், விக்கெட் விழக் கூடாதென்ற அதீத கவனம் அவர்களை டிஃபெண்டிங் மோடுக்கு மாற வைத்து, அந்த 5 ஓவர்களில் 12 டாட் பால்களை ஆட வைத்தது. அதிலும் படிக்கல், அவருடைய இயல்பான ஆட்டத்தை ஆடவே இல்லை. தவானுடனான பார்ட்னர்ஷிப்பில் கூட, படிக்கல்லிடமிருந்து ஒரு சிக்ஸர் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி வந்திருந்தது.

தவானைத் துரத்தியே ஆக வேண்டுமென முடிவு செய்த ஷனகா, 'இடக்கை ஆட்டக்காரர் + ஆஃப் ஸ்பின்னர் = விக்கெட்' என்னும் பழைய சூத்திரத்தில், ஆஃப் ஸ்பின்னர் என்னும் இடத்தில், தனஞ்செயாவைப் பிரதியிட, அதற்கு விக்கெட் என்னும் விடையாக தவான் கிடைத்தார்.
SL v IND
SL v IND
twitter.com/BCCI

முக்கிய அச்சாணியே கழன்று விழ, அடுத்து இறங்கிய சாம்சனோ, நங்கூரம் இடவும் இல்லை, அடித்து ஆடவுமில்லை. படிக்கல் பாயிண்டில் அடித்த ஒரு பவுண்டரியைத் தவிர, வேறு எதுவும் சிறப்பாக நடக்கவில்லை. இறுதியாக, ரன் ஏறாமல் பிரஷர் ஏற, பந்தைக் கணிக்கத் தவறிய படிக்கல், அதற்குப் பலியாக தனது ஆஃப் ஸ்டம்பைக் கொடுத்து வெளியேறினார். அவரே போன பின் எனக்கென்ன வேலை என்பதைப் போல் சாம்சனும், தவறான ஷாட்டால் ஸ்டம்பைப் பறிகொடுக்க, 17 ஓவர்கள் முடிவில், 107 ரன்களே வந்திருந்தன.

ராணாவோடு, புவனேஷ்வர் கை கோக்க, அதன் பின் சைனி வந்து சேர்ந்தார். இறுதி மூன்று ஓவர்கள், டெத் ஓவர்கள் என்னும் சாமுத்ரிகா லட்சணம் எதுவுமின்றி, வொய்டாய்க் கணக்கிட்டு, அம்பயர் அன்போடு அளித்த ஐந்து ரன்களைத் தவிர்த்து, ஒரு பெரிய ஷாட்டைக் கூடப் பார்க்காமலே முடிவுக்கு வந்தது. வெறும், 133 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது இந்தியா. ஒட்டுமொத்த இந்திய இன்னிங்க்ஸிலும், ஏழு பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் மட்டுமே வந்திருந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"பேட்ஸ்மேன்களுக்குப் பஞ்சம்" என, ஏழு பௌலர்களோடு களமிறங்கிய அணியிடம் இருந்து, இதைத்தானே எதிர்பார்க்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், தற்கொலைக்கு இணையான சில பேட்ஸ்மேன்களின் ஷாட்கள்தான், "சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு, இவர்கள் இன்னும் தயார் இல்லை!" என்று புரிய வைத்தது.

இவ்வளவு சொற்ப ரன்களை டிஃபெண்ட் செய்வதெல்லாம், முழுமையான அணிக்கே கடினம் என்னும் போது, ஓர் உருவமே இல்லாத அணி, வெற்றியைச் சுவைப்பது குதிரைக் கொம்பே என்பது முதல் கட்டப் பார்வையிலேயே புரிந்தாலும், அதிசயங்களால் நிரம்பியதுதானே டி20! எனவே எதுவும் நடக்கலாம் என்ற நம்பிக்கையோடே இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது.

ஃபெர்ணான்டோ, மினோட் பேட்டோடு இறங்க, முதல் ஓவரை வீசிய புவனேஷ்வர் ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து, அட்டகாசமாய் ஆரம்பித்தார். ஆனால், "தடுக்கவும் செய்வோம், கொடுக்கவும் செய்வோம்" என அதற்கடுத்த ஓவரே, சகாரியா, இரண்டு அடுத்தடுத்த பவுண்டரிகளை வாரிக் கொடுத்தார்.

SL v IND
SL v IND
twitter.com/BCCI

எனினும், தனது இரண்டாவது ஓவரிலேயே, ஃபெர்ணான்டோவை ஆட்டமிழக்கச் செய்து, இலங்கைக்கு சவால் விடுத்தார் புவனேஷ்வர். "விட்டேனா பார்!" என இதற்குப் பாப விமோசனம் செய்வதைப் போல் சகாரியா, அதற்கடுத்த ஓவரில் மேலும் இரண்டு பவுண்டரிகளைத் தர, புவனேஷ்வர் தடுத்ததெல்லாம் சகாரியா பந்திலிருந்து தரப்பட்டது. ரன்களைத் தொடர்ந்து கசிய விட்டுக் கொண்டே இருந்த சகாரியாவுக்கு நான்கு ஓவர்கள் முழுமையாக அளிக்கப்பட்ட நிலையில், ஏன் சைனிக்கு ஒரு ஓவர் கூட தரப்படவில்லை என்பது தவானுக்கே வெளிச்சம். அப்படித் தரப்பட்டிருந்தால், அது போட்டியின் போக்கை நிச்சயமாக மாற்றி இருக்கும். சைனியை ஃபீல்டிங் செய்யக்கூடிய வீரராக மட்டுமே தவான் பயன்படுத்தினார்.

விக்கெட்டுக்காக வருண் வருவிக்கப்பட, அவருக்கு பவுண்டரி வரவேற்பளித்தார் சமரவிக்ரமா. அடுத்த ஓவரில் இறங்கிய இன்னொரு ஸ்பின்னரான ராகுல் சஹாருக்கும் அதே மரியாதைதான். ஆறு ஓவர்களிலேயே, ஆறு பவுண்டரிகளை அடிக்க விட்டுவிட்டது இந்தியா. எனினும், சமரவிக்ரமாவின் விக்கெட்டை வீழ்த்தி, சிறு நம்பிக்கையை கண்களில் காட்டினார் வருண்.

அந்த மொமண்டத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என தவான், குல்தீப்பைக் கொண்டு வர, அவரது பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. எனினும், இந்த ஓவரில், எல்பிடபிள்யூவில் வெளியேறி இருக்க வேண்டிய ஷனகாவுக்கு, ரிவ்யூவுக்குப் போகத் தவறிய இந்தியா, வாய்ப்பைத் தவறவிட்டு, தோனியை நினைவூட்டி பெருமூச்சு விடவைத்தது. இதோடு, புவனேஷ்வரின் பந்தில் கிடைத்த ஒரு கேட்ச் வாய்ப்பைத் தவற விட்டது, பல மிஸ் ஃபீல்டிங்கள் செய்தது என இந்தியா தங்களது தோல்விக்கான பொருளுரையை, தானே எழுதிக் கொண்டிருந்தது.

பத்து ஓவர்கள் கடந்த நிலையில், பாதிக் கிணற்றில், முக்கால் பங்கை, இலங்கை தாண்டி இருந்தது. எனவே ஸ்பின்னர்களை வைத்து தொடர்ந்து தாக்கிக் கொண்டிருந்தார் தவான். உயிரைக் கொடுத்து பௌலர்கள் வீச, கேட்ச் டிராப்களை கணிசமாகக் கணக்கில் வரவு வைத்துக் கொண்ட இந்தியா, வெற்றியிலிருந்து, வெற்றிடம் நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது.

குல்தீப் எடுத்த பனுகாவின் விக்கெட், சற்றே இந்திய ரசிகர்களை தலையைத் தூக்கிப் பார்க்க வைத்ததென்றால், அவர் வீசிய இன்னொரு ஓவரில் வந்து சேர்ந்த 15 ரன்கள், நிமிர்ந்த தலைகளைத் திரும்பவும் தொங்க வைத்து விட்டன.

SL v IND
SL v IND
twitter.com/BCCI

6 ஓவர்களில் 46 ரன்கள் என இலக்கு இலங்கையின் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்க, இந்தியக் கப்பல் அங்கேயே மூழ்கத் தொடங்கியது. ஹசரங்கா மற்றும் மெண்டீஸ் என அதற்கடுத்தும் சீரிய இடைவேளையில் இந்தியா விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், தனஞ்சயா மட்டும் ஆட்டமிழக்காமல், ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தார். இதற்கும் மேல் இலங்கை, முடிந்தளவு ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்து கொண்டே இருந்ததும், அவர்களது வெற்றிக்கு வழிவகுத்தது.

இறுதி இரண்டு ஓவர்களில், இலங்கைக்கு 20 ரன்கள் தேவைப்பட, புவனேஷ்வரை நம்பி 19-வது ஓவர் தரப்பட்டது. அந்த ஓவரில், கருணாரத்னே அடித்த அந்த ஒரு சிக்ஸரோடே போட்டியே முடிந்து விட்டது. கடைசி ஓவரில் எட்டு ரன்கள் தேவைப்பட, வெற்றி ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில், சம்பிரதாயத்துக்காக சகாரியா அதனை வீசினார்.

TNPL: சொதப்பிய சேலம், சேஸிங்கில் ஜொலித்த ஜெகதீசன் - முதல் வெற்றியை பதிவு செய்த சூப்பர் கில்லீஸ்!

முதல் பந்தில் ஒரு ரன் வர, இரண்டாவது பந்தை அம்பயர் வொய்ட் என்று சொல்ல, சாம்சனும் "விக்கெட் கீப்பிங்கா, விலை என்ன?!" என ஒரு ரன்னை வாரி வழங்கினார். அடுத்த இரண்டு பந்துகளும், தலா இரண்டு ரன்களைப் பெற்றுக் கொள்ள, அதற்கடுத்த பந்தில் தனஞ்சயா அடித்த சிங்கிள், இலங்கையை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்ததுடன், 1-1 என தொடரைச் சமன் செய்து, மூன்றாவது போட்டிக்கும் உயிர் கொடுத்துள்ளது. தனஞ்சயாவின் ஒரு விக்கெட் இந்தியாவுக்கு வில்லனாக மாறி இருந்தது.

தற்கொலை ஷாட்களை இந்திய பேட்ஸ்மேன்கள் ஆடி, விக்கெட்டுகளை இனாமாக வழங்காமல் இருந்தால், இன்னமும் சில ரன்கள் இந்தியாவின் கணக்கில் ஏறி இருந்தால், 9-ஐ தாண்டி இருந்த சகாரியாவின் எக்கானமி குறைந்து இருந்தால், தவான் சைனியைப் பயன்படுத்தி இருந்தால், கேட்ச்சுகள் கச்சிதமாகப் பிடிக்கப்பட்டு, மிஸ் ஃபீல்டிங்குகள் என்பதற்கு அர்த்தமே தெரியாமல் போய் இருந்தால், இந்தியாவுக்கு வெற்றி வசப்பட்டிருக்கும்.
SL v IND
SL v IND
twitter.com/BCCI

இந்த நிலையில், "இந்தியா, கடைசி ஓவர் வரை, போட்டியைக் கொண்டு வந்ததே பெரிய விஷயம்" என ஒரு தரப்பு நியாயங்களைக் கற்பிக்க, இன்னுமொரு தரப்போ, தவறுகளைச் சுட்டிக் காட்டி, குற்றப் பத்திரிகை வாசித்து வருகிறது. இன்னமும் ஒரு தரப்போ, "காயம் என்று சைனியும் வெளியேறிய நிலையில், அடுத்த போட்டிக்கு, அந்த இடத்தை நெட்பௌலர்கள் நிரப்புவார்களா?!" என அலசி ஆராய்ந்து கொண்டுள்ளது.

"இருந்தால், ஆனால்", என்னும் விளக்கங்களும், சமாளிப்புகளும் முதல் முறை கிட்டும் தோல்விக்கு வேண்டுமென்றால் ஏற்றுக் கொள்ளப்படும். இரண்டாவது முறை, அதற்கு மதிப்பே இருக்காது. எனவே இந்தத் தோல்வியை, இருட்டடிப்புச் செய்ய, அவசியத் தேவை, 'டி20 தொடர் வெற்றியே!' என்பதை உணர்ந்து, அதைக் கையிலேந்தும் உறுதியோடு, இன்று இந்தியா களம் காண வேண்டும்.

எது எப்படியோ, இலங்கையின் தோல்வி முகத்திரையை மாற்ற வரமளித்து உதவும் மீட்பராக, வள்ளலாக, இந்தியா இச்சுற்றுப் பயணத்தில் வலம் வருகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு