Published:Updated:

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பரிந்துரை... ஐபிஎல் விவகாரத்தில் அமைதிகாக்கும் பிசிசிஐ!

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் பெரும் விருந்தளித்து வரும் ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2020 போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதாகக் கடந்த 16ம் தேதி அறிவித்தது. ஒத்திவைக்கத்தானே பட்டுள்ளது இன்னும் ரத்தாகவில்லையே என ரசிகர்கள் நெஞ்சில் எஞ்சியுள்ள நம்பிக்கைக்கு உறுதியூட்டும் வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முன்வந்திருக்கிறது. இதற்கு முன்பு சில ஆண்டுகளில் பல்வேறு காரணங்களுக்காக பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்தியிருக்கிறது.

பிசிசிஐ
பிசிசிஐ

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இந்தப் பரிந்துரை குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து எந்த அதிகாரபூர்வ கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர், `ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்று பரிந்துரை செய்த இலங்கை கிரிக்கெட் வாரியம், அதற்கான திட்டங்கள் எதையும் பிசிசிஐயிடம் விளக்கவில்லை. மேலும், இதுகுறித்து இன்னும் வெளிப்படையாக எதுவும் பேசப்படவில்லை’’ எனக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமான ஊராடங்கால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடங்கல் மற்றும் இதர காரணங்களுக்காக இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக காலவரையின்றி நிறுத்திவைத்துள்ளது. நாட்டில் இந்த நிலைமை மாறும் பட்சத்தில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ஐபிஎல்
ஐபிஎல்

2009ம் ஆண்டு பொதுத்தேர்தல் காரணமாகப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டன. 2014ம் ஆண்டு உள்நாட்டில் ஐபிஎல் நடத்த முடியாமல் போனதால், ஐக்கிய அரபு எமிரேஸில் போட்டிகள் நடைபெற்றன. 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் இந்தச் சூழ்நிலை நிலவியபோது பிசிசிஐ போட்டிகளைத் திறம்பட நிர்வகித்து நடத்திக்காட்டியது.

2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் முதலிய காரணங்களால் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியாமல் போனது. அப்போது வெளியூர்களுக்குச் சென்று ஆதரவளித்த நம் ரசிகர்களுக்கு, இந்த ஆண்டு ஐபிஎல் ஏமாற்றத்தை தருமா அல்லது இலங்கையில் நடைபெறும் போட்டிகளை தொலைக்காட்சியில் காணும் பாக்கியமாவது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஐபிஎல்
ஐபிஎல்

மேலும், ஐபிஎல் போட்டிகளில் முதலீடு செய்துள்ள அணி உரிமையாளர்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்குத் தொலைக்காட்சியில் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் நிவாரணமும் கிடைக்கும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு