Published:Updated:

IND v NZ: வெற்றியோடு தொடங்கிய டிராவிட் - ரோஹித் கூட்டணி... நியூசிலாந்தைத் திணறடித்தது எப்படி?

ரோஹித் சர்மா - டிம் சவுத்தி ( BCCI )

உலகக்கோப்பையில் ஷாகின் ஷா அஃப்ரிடியிடமும் ட்ரெண்ட் போல்டிடமும் இந்தியாவின் டாப் ஆர்டர் சிக்கி சிதைந்திருந்தது. ஆனால், நேற்று ட்ரெண்ட் போல்டை ரோஹித்தும் ராகுலும் நன்றாகவே எதிர்கொண்டனர்.

IND v NZ: வெற்றியோடு தொடங்கிய டிராவிட் - ரோஹித் கூட்டணி... நியூசிலாந்தைத் திணறடித்தது எப்படி?

உலகக்கோப்பையில் ஷாகின் ஷா அஃப்ரிடியிடமும் ட்ரெண்ட் போல்டிடமும் இந்தியாவின் டாப் ஆர்டர் சிக்கி சிதைந்திருந்தது. ஆனால், நேற்று ட்ரெண்ட் போல்டை ரோஹித்தும் ராகுலும் நன்றாகவே எதிர்கொண்டனர்.

Published:Updated:
ரோஹித் சர்மா - டிம் சவுத்தி ( BCCI )
டி20 உலகக்கோப்பையின் சூடு தணிவதற்குள் இந்தியா - நியூசிலாந்து டி20 தொடர் தொடங்கிவிட்டது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. புதிய பயிற்சியாளரான டிராவிட்டும் புதிய கேப்டனான ரோஹித்தும் தங்களின் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியிருக்கின்றனர். இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியிருக்கிறது.

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவே டாஸை வென்றிருந்தார். இதுவே ரசிகர்களுக்கு ஆச்சர்யமான விஷயமாக இருந்தது. கோலிக்கும் டாஸிற்கும் எப்போதும் சரிவராது. இதில், அவரை குறை சொல்ல ஒன்றும் இல்லை என்றாலும், ரோஹித் டாஸை வென்றதே போட்டியை வென்றதை போல மகிழ்ச்சியை கொடுத்ததை மறுப்பதற்கில்லை. ரோஹித் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் புதிய முகமாக வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டிருந்தார்.

உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு என்னவெல்லாம் சாதகமாக நடக்கவில்லையோ அதெல்லாம் இங்கே வரிசையாக நடப்பதை போலவே இருந்தது. ரோஹித் டாஸை வென்றார். முதல் ஓவர் வீசிய புவனேஷ்வர் குமார் பந்தை ஸ்விங் செய்து முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார்.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்
BCCI
புவனேஷ்வர் குமார் வீசிய இன்ஸ்விங்கில் மிடில் ஸ்டம்ப் சிதற டேரில் மிட்செல் டக் அவுட் ஆகியிருந்தார். இந்த விக்கெட்டை பார்க்கும் போது 2013 இல் புவி தனது அறிமுகப்போட்டியில் முதல் பந்திலேயே இதேமாதிரியான இன்ஸ்விங்கில் ஹஃபீஸை போல்டாக்கியது நிச்சயமாக ஞாபகம் வந்திருக்கும்.

நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டை சீக்கிரமே இழந்திருந்தாலும் அடுத்து கூட்டணி போட்ட சாப்மனும் கப்திலும் பெரிய பார்ட்னர்ஷிப் போட்டனர். இருவரும் சேர்ந்து 109 ரன்களை எடுத்தனர். சாப்மன் 50 பந்துகளில் 63 ரன்களை எடுத்திருந்தார். சாப்மன் - கப்தில் கூட்டணியில் பெரும்பாலான பந்துகளை சாப்மனே எதிர்கொண்டார். மிகச்சிறப்பாகவெல்லாம் அவர் ஆடியிருக்கவில்லை. இந்திய பௌலர்கள் அத்தனை பேருக்கு எதிராகவும் கடுமையாகத் திணறினார். ஆனாலும், இவரின் விக்கெட் மட்டும் விழவே இல்லை. நல்ல ஸ்விங் செய்த புவனேஷ்வர் குமாருக்கு பவர்ப்ளேயில் கூடுதலாக ஒரு ஓவரை கொடுத்து, மூன்றாவது ஓவரோடு விலக்கப்பட்ட ஸ்லிப்பை வைத்து அட்டாக் செய்திருந்தால் சாப்மனின் விக்கெட்டை வீழ்த்த அதிக வாய்ப்பு இருந்திருக்கும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நீண்ட நேரமாக நின்ற இந்தக் கூட்டணியை அஸ்வினே பிரித்தார். அவர் வீசிய 14 வது ஓவரில் சாப்மனை சிறப்பாக ஆஃப் ஸ்பின்னில் டீசிவ் செய்து போல்டாக்கினார். அதே ஓவரில் க்ளென் பில்ப்ஸையும் lbw ஆக்கினார். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்கான அஸ்திவாரத்தை அஷ்வின் பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

சிராஜ், தீபக் சஹார் போன்றோரை குறிவைத்து அடித்த கப்தில் 70 ரன்களில் தீபக் சஹாரின் பந்துவீச்சிலேயே அவுட் ஆகி வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 164 ரன்களை எடுத்தது. ஜெய்ப்பூர் மைதானத்தின் சராசரி ஸ்கோர் 163, அதை.விட ஒரு ரன்னை மட்டுமே நியூசிலாந்து அதிகமாக அடித்திருந்தது.

Ashwin
Ashwin
BCCI

இந்திய அணிக்கு டார்கெட் 165. வெங்கடேஷ் ஐயர் ஓப்பனராகி, கே.எல்.ராகுல் நம்பர் 4 க்கு இறக்கப்பட்டு பேட்டிங் ஆர்டரில் எதுவும் மாற்றம் செய்வார்களோ என்கிற குழப்பம் இருந்தது. கடைசியாக உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில்தான் டாப் 3 ஐ தலைகீழாக புரட்டி போட்டு ரோஹித்தை நம்பர் 3 யிலெல்லாம் இறக்கியிருந்தார்கள். அந்த மாதிரியான பரிச்சார்த்த முயற்சிகளுக்கு இங்கே இடம் கொடுக்கவில்லை.

ரோஹித்தும் ராகுலுமே ஓப்பனர்களாக இறங்கினார்கள். இருவருமே சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 5 ஓவர்களிலேயே 50 ரன்களை எடுத்தனர். ராகுல் 15 ரன்களில் சாண்ட்னரின் பந்தில் அவுட் ஆனார்.

ஆனாலும், இந்திய அணியின் சேஸிங் பெரிதாக பாதிப்படையவில்லை. மிடில் ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடினார். ரோஹித் 48 ரன்களில் அவுட்டானாலும் சூரியகுமார் யாதவ் நின்று அரைசதம் அடித்து 62 ரன்களைச் சேர்த்தார். கடைசி 5 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவும் அவுட்டாகிவிட இந்திய அணிக்கு கொஞ்சம் அழுத்தம் கூடியது. 19.4 ஓவர்கள் வரை சென்று ரிஷப் பண்ட் பவுண்டரியோடு ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இந்தப் போட்டியை பொறுத்தவரைக்கும் இந்திய அணிக்கு சில விஷயங்கள் சாதகமாகவும் சில விஷயங்கள் பாதகமாகவும் அமைந்திருந்தது.

ரோஹித் & ராகுல் இவர்கள் இருவரும் கொடுத்த நல்ல தொடக்கம் இந்தப் போட்டியை வெல்ல மிக முக்கிய காரணமாக அமைந்தது. இருவரும் ட்ரெண்ட் போல்டை எதிர்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. உலகக்கோப்பையில் ஷாகின் ஷா அஃப்ரிடியிடமும் ட்ரெண்ட் போல்டிடமும் இந்தியாவின் டாப் ஆர்டர் சிக்கி சிதைந்திருந்தது. ஆனால், நேற்று ட்ரெண்ட் போல்டை ரோஹித்தும் ராகுலும் நன்றாகவே எதிர்கொண்டனர்.

Rohit & Rahul
Rohit & Rahul
BCCI
போல்ட் வீசிய 5 ஆவது ஓவரில் மட்டும் 21 ரன்களை எடுத்திருந்தனர். ரோஹித் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரையும் அடிக்க ராகுலும் ஒரு சிக்ஸரை அடித்திருந்தார். இதற்கு முன் போல்ட் வீசிய 2 வது ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர்.

உலகக்கோப்பையில் போல்ட் இரண்டு விதமாக இந்தக் கூட்டணியை அட்டாக் செய்திருப்பார். கொஞ்சம் லெந்த்தை குறைத்து ஸ்விங் செய்ய முயன்றிருப்பார். ஃபைன் லெக் ஸ்கொயர் லெக் இரண்டையும் வைத்து குட்லெந்த் மற்றும் ஷார்ட் லெந்த்தில் வீசியிருப்பார். அந்த டெலிவரிகள்தான் இருவரையும் தடுமாற வைத்தது.

நேற்று போல்ட் வீசிய இரண்டாவது ஓவரிலும் டீப் ஃபைன் லெக், ஸ்கொயர் லெக் இருந்தன. போல்ட் முழுமையாக ஷார்ட்டாக இல்லாமல் கொஞ்சம் குட் லெந்த்திலேயே வீசிக்கொண்டிருந்தார். இந்த ஓவரில் பேட்ஸ்மேன்கள் இருவருமே பெரிதாக ரிஸ்க் எடுக்கவே இல்லை. விக்கெட் கிடைக்காத விரக்தியில் அடுத்து போல்ட் வீசிய ஓவரில் இன்னும் ஷார்ட்டாக வீசி விக்கெட்டிற்கு முயன்றார். இதைத்தான் ரோஹித்தும் ராகுலும் எதிர்பார்த்திருத்து காத்திருந்ததை போல வைத்து வெளுத்துவிட்டனர். ராகுல் & ரோஹித் இருவருமே புல் ஷாட்டில் சிக்சர் அடித்திருந்தனர். முதல் ஓவரிலேயே ரிஸ்க் எடுக்காமல் போல்ட் தனது லெந்த்தை மாற்றும் வரை காத்திருந்து வேலையை காட்டியது பாராட்டுக்குரியது. கடைசியில் ரோஹித் போல்டின் ஷார்ட் பாலுக்குதான் அவுட்டும் ஆகியிருந்தார். ஆனால், அதற்குள் போட்டி இந்தியா பக்கம் திரும்பிவிட்டது.

சூர்யகுமார் யாதவும் நேற்று சிறப்பாக ஆடியிருந்தார். 40 பந்துகளில் 62 ரன்களை எடுத்திருந்தார். குறிப்பாக, மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டிருந்தார்.

ரோஹித் சர்மா மொத்தமாக 36 பந்துகளில் 48 ரன்களை எடுத்திருந்தார். இந்த 36 பந்துகளை இரண்டாக பிரிக்கலாம். முதல் 18 பந்துகளை பவர்ப்ளேயில் எதிர்கொண்டிருந்தார். அதில் 32 ரன்களை எடுத்திருந்தார். அடுத்த 18 பந்துகளை மிடில் ஓவரில் எதிர்கொண்டிருந்தார் அதில் 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

Rohit Sharma | IND v NZ
Rohit Sharma | IND v NZ
ஸ்பின்னர்களுக்கு எதிராக ரோஹித் அவ்வளவாக அட்டாக் செய்யவில்லை. நின்று நிதானமாகவே ஆடினார். இந்த மிடில் ஓவர்களில் ரன்ரேட்டை விழாமல் பார்த்துக் கொண்டது சூர்யகுமார் யாதவே. சாண்ட்னரை பார்த்து ஆடிவிட்டு ஆஸ்டிலை அடித்து வெளுத்தார். ஸ்வீப், டவுன் தி க்ரவுண்ட் எனத் தடுமாறாமல் ஸ்பின்னர்களை எதிர்கொண்டார்.

இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு பௌலிங் ஆப்சன் இல்லை. ஹர்திக் பாண்டியாவை மட்டுமே நம்பியிருப்பது சரியில்லை என்கிற விமர்சனங்கள் இருந்தன. அதை சரிகட்டும் வகையில் வெங்கடேஷ் ஐயர் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கப்படவில்லை. நியூசிலாந்து பேட்ஸ்மேன்களும் ரொம்பவே அபாயகரமாக எந்த இடத்திலும் ஆடியிருக்கவில்லை. ஆயினும் கப்தில் - சாப்மன் கூட்டணி நின்று 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் போட்டது. இந்தச் சமயத்தில் மற்ற பௌலர்கள் விக்கெட் இன்றி தடுமாறும்போது வெங்கடேஷ் ஐயரை முயன்று பார்த்திருக்கலாம்.

SuryaKumar Yadav | IND v NZ
SuryaKumar Yadav | IND v NZ

இந்தப் போட்டியில் இந்திய ப்ளேயிங் லெவனில் புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், சிராஜ் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். மூன்று பேருமே பவர்ப்ளேயில் மிகச்சிறப்பாக வீசக்கூடியவர்கள். ஆனால், மிடில் & டெத் ஓவர்களில் அந்தளவுக்கு சிறப்பானவர்கள் கிடையாது. ஐபிஎல்-இல் ரஸலை க்ரீஸில் நிற்க வைத்து 5 பால்களை டாட்டாக வீசி தன்னை நிரூபித்திருந்தாலும் பவர்ப்ளேதான் சிராஜுடைய பலம். பவர்ப்ளேயில் சிறப்பாக வீசிவிட்டு டெத் ஓவருக்கு வரும்போது அங்கேயும் சிறப்பாக வீசுவார். ஆனால், நேற்று சிராஜிற்கு பவர்ப்ளேயில் ஒரு ஓவர் மட்டுமே கிடைத்தது. மிடிலில் 2 ஓவர்களும் கடைசியில் ஒரு ஓவரும் வீச வேண்டிய நிலை ஏற்பட்டது. பவர்ப்ளேயில் வீசிய ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த சிராஜ் அடுத்த 3 ஓவர்களில் 34 ரன்களைக் கொடுத்திருந்தார். இந்த மூவரில் ஒருவரை பென்ச்சில் வைத்துவிட்டு ஹர்சல் படேல் அல்லது ஆவேஷ் கானை ப்ளேயிங் லெவனில் சேர்த்தால் நல்ல காம்பீனேஷனாக இருக்கும்.

ரோஹித் & ராகுல் இருவரும் 5 ஓவர்களில் 50 ரன்களை எடுத்ததாலும், சூர்யகுமாரின் மிடில் ஓவர் ஆட்டத்தாலும் தொடக்கத்திலிருந்தே ஆட்டம் இந்தியாவின் கையில்தான் இருந்தது. ஆனாலும், போட்டி கடைசி வரை சென்று பரபரப்பாகவே முடிந்தது. ஒரு கட்டத்தில் நியூசிலாந்து பக்கமும் ஆட்டம் சாய்வது போல தோன்றியது. சரியான ஃபினிஷர் இல்லாமல் போனதே இதற்கு மிக முக்கிய காரணம்.

அணியில் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா இருவருமே இல்லை. இந்நிலையில்தான், ஓப்பனரான வெங்கடேஷ் ஐயரை ஃபினிஷராக மாற்றியிருந்தனர். ஆனால், அவருக்கும் தேவையான நேரம் கொடுக்கப்படவில்லை.

ரோஹித் & வெங்கடேஷ்
ரோஹித் & வெங்கடேஷ்
BCCI
சூர்யகுமார் அவுட் ஆனவுடன் 17-வது ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் இறக்கப்பட்டார். அவர் ஃபினிஷர் ரோலில் ஆடும் வீரர் கிடையாது. நம்பர் 3-4 இல் மிடில் ஓவர்களில் ஆடும் வீரர். அவரால் க்ரீஸிற்குள் வந்த முதல் பந்திலிருந்தே அவரால் அட்டாக் செய்ய முடியாது. ஐபிஎல்-இல் அவரின் அணுகுமுறையையும் ஸ்ட்ரைக்ரேட்டையும் பார்ப்பவர்களுக்கு இது எளிதில் புரியும்.

நேற்றும் 17 வது ஓவரில் உள்ளே வந்தவர் 8 பந்துகளில் 5 ரன்களை மட்டுமே எடுத்து அழுத்தத்தை உருவாக்கிவிட்டார். கடைசி ஓவரில் உள்ளே வந்த வெங்கடேஷ் ஐயர் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து இரண்டாவது பந்தில் அவுட் ஆகிவிட்டார். அதன்பிறகு, ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்து முடித்து வைத்தார். யார் ஃபினிஷர் என்பதில் இந்திய அணி தெளிவாக வேண்டும்.

இவையெல்லாம் குறைகளாக இருந்தாலும் இந்திய அணி வென்றிருப்பதால் பெரிய கவனம் பெறப்போவதில்லை. "உலகக்கோப்பையின் மீதும் ஒரு கண்ணை வைத்திருக்கிறோம். அதற்காக சில முயற்சிகளை செய்து பார்ப்போம். உடனடியாக ரிசல்ட் கிடைக்காது. தொடர் முயற்சிகளால் வேண்டிய ரிசல்ட்டை எட்டுவோம்" என ரோஹித் சர்மா பேசியிருக்கிறார். அதனால் மேற்குறிப்பிட்டவற்றை அந்த முயற்சியின் (?) ஒரு பகுதியாக கூட எடுத்துக்கொள்ளலாம்.