Published:Updated:

இறுதிப் பட்டியலில் ஆறு பேர்... ரவி சாஸ்திரிக்கு டஃப் கொடுப்பது யார்?!

கார்த்திகா ராஜேந்திரன்

தற்போது பதவியில் இருக்கும் ரவி சாஸ்திரிக்கு, இந்த ஐவரில் கடுமையான போட்டியாக இருக்கப்போவது யார்...

Candidates shortlisted for Indian Team Head coach post
Candidates shortlisted for Indian Team Head coach post

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் பதவிக்கு, ரவி சாஸ்திரி உட்பட ஆறு பேரை பிசிசிஐ பரிசீலனை செய்ய உள்ளது. பயிற்சியாளர் தேர்வுப் பணிக்காக முன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையிலான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அதில், முன்னாள் இந்திய அணி வீரர் அனுஷ்மான் கெய்க்வாட், பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் ஷாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு போட்டியாளர்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்கின்றனர்.

பயிற்சியாளர் பதவிக்குப் போட்டியிடுபவர்கள்

டாம் மூடி
மைக் ஹெசன்
ஃபில் சிம்மன்ஸ்
லால்சந்த் ராஜ்புட்
ராபின் சிங்
ரவி சாஸ்திரி

உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும்வரை இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோரின் பதவிக்காலம் 45 நாள்கள் நீட்டிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 2,000 விண்ணப்பங்கள் வந்திருப்பதாக தெரிவித்த பிசிசிஐ, அதிலிருந்து ஆறு பேரை இறுதிசெய்தது. அவர்களிடம் நேர்காணல் நடத்தியபின், பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.

போட்டியில் இருப்பவர்களைப் பற்றிய விவரம்...

டாம் மூடி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான டாம் மூடி, கடந்த 13 ஆண்டுகளாக சர்வதேச, லீக் கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியளித்து வருகிறார். 2005-ம் ஆண்டிலேயே, இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர் தேர்வில் டாம் மூடியின் பெயர் அடிப்பட்டது. ஆனால், அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

இலங்கை அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், 2007 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரை இலங்கை அணியை வழிநடத்திச் சென்றார்.

Tom Moody
Tom Moody
Twitter

டி-20 கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை ஆறு நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு டி-20 அணிகளுக்குப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். குறிப்பாக, ஐ.பி,எல் தொடரின் முதல் சீசனில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்தவர், 2013-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்தார். டாம் மூடி பயிற்சியாளராக இருந்த சமயம், 2016-ல் கோப்பையையும், 2018-ல் இறுதிப்போட்டி வரையும் முன்னேறி ஹைதராபாத் அணி அசத்தியது.

மைக் ஹெசன்

இந்திய கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளர் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் இளையவர் மைக் ஹெசன். நியூசிலாந்தைச் சேர்ந்த இவர், 22 வயதிலேயே பயிற்சியாளர் பணியைத் தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட 20 வருட அனுபவம் பெற்ற மைக், நியூசிலாந்து அணியுடன் மட்டுமே ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். டெஸ்ட், ஒரு நாள், டி-20 என அனைத்து ஃபார்மேட்களிலும் நியூசிலாந்து அணியை உயரத்துக்கு அழைத்துச் சென்றவர்.

நியூசிலாந்து அணிக்குக் கிடைத்த ஆகச்சிறந்த பயிற்சியாளர் மைக் ஹெஸன்!
பிரண்டன் மெக்கலம்

மைக் ஹெஸ்ஸன் பயிற்சியாளராக இருந்தபோது, 2015 உலகக் கோப்பை இறுதிப்போட்டியிலும், 2016 டி-20 உலகக் கோப்பை அரை இறுதியிலும் நியூசிலாந்து அணி விளையாடியது.

ஃபில் சிம்மன்ஸ்

2004-ம் ஆண்டு ஜிம்பாவே அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றிய ஃபில், தொடர்ந்து அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளின் பயிற்சியாளராக இருந்தார். 2011 உலகக் கோப்பையில், பெங்களூருவில் நடந்த போட்டியை இங்கிலாந்து அணியால் எளிதில் மறந்திட முடியாது. 300+ ரன்களை சேஸ் செய்த அயர்லாந்து, இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. கிரிக்கெட் வரலாற்றின் 'major upset win' என்று கருதப்படும் இந்தப் போட்டி நடைபெறும்போது, இவர்தான் அயர்லாந்தின் பயிற்சியாளர்.

Phil Simmons
Phil Simmons

2017 முதல் ஆப்கானிஸ்தான் அணி பயிற்சியாளராக இருக்கும் ஃபில், கத்துக்குட்டி அணியை 2019 உலகக் கோப்பை வரை எடுத்துச் சென்றவர். வெஸ்ட் இண்டீஸை பூர்வீகமாக கொண்ட இவர், இரண்டாவது முறையாக இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.

லால்சந்த் ராஜ்புட்

Lalchand Rajput
Lalchand Rajput

முன்னாள் இந்திய அணி நிர்வாகியான லால்சந்த் ராஜ்புட்டுக்கு, சர்வதேச கிரிக்கெட்டில் பயிற்சியாளராக பெரிய அனுபவம் இல்லை. இவர் டீம் மேனேஜராக இருந்தபோது இந்திய அணி 2007 டி-20 உலகக் கோப்பையை வென்றது. இந்திய அணியைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு பயிற்சி அளித்தார். கடைசியாக, ஜிம்பாவே அணியை ஐசிசி இடைநீக்கம் செய்யும்போது லால்சந்த் ராஜ்புட் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

ராபின் சிங்

Robin Singh
Robin Singh
ரவி சாஸ்திரி தலைமையின் கீழ் இந்தியா அடுத்தடுத்த இரண்டு உலகக் கோப்பை தொடர்கள் மற்றும் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியுடன் வெளியேறியிருக்கிறது. எனவே, 2023 உலகக் கோப்பை தொடருக்குத் தயாராகும் நிலையில், ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது அணிக்கு நன்மை தரும்!
ராபின் சிங்

இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர் ராபின் சிங். U-19 இந்தியா, பெண்களுக்கான U-19 அமெரிக்க அணிகளுக்குப் பயிற்சி அளித்தவர், ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக ஹாங்காங் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தவர், 2007 முதல் 2009-ம் ஆண்டு வரை இந்திய அணியின் supporting staff-ஆக பணியாற்றினார்.

ரவி சாஸ்திரி

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால், கண்டிப்பாக மகிழ்ச்சியடைவேன்
விராட் கோலி

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு முன் கேப்டன் கோலி இப்படி தெரிவித்திருந்தார். 2019 உலகக் கோப்பையில் அரை இறுதியில் இந்திய அணி வெளியேறியதற்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இருப்பினும், கேப்டன் கோலி அவருக்கு ஆதரவு தெரிவித்திருப்பது ரவி சாஸ்திரிக்கு சாதகமாகியுள்ளது.

`எவிக்ட் கோலி... சேவ் சாஸ்திரி!’ – கோலியை கார்னர் செய்யும் மும்பை லாபி

`வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் நேர்காணலுக்குப் பிறகு, தலைமைப் பயிற்சியாளர் குறித்து அறிவிக்கப்படும்’ என கபில் தேவ் தலைமையிலான ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.