உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து தற்போது அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இந்திய அனி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அதேநேரம், ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம், இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்துக்கு பின்தங்கியது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே 3, 4 இடங்களில் உள்ளன.

புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணியும், நான்காம் இடத்தில் உள்ள அணியை அரையிறுதியில் எதிர்த்து விளையாடும். இதன்படி ஜூலை 9-ம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. ஜூலை 11ம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன. உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 8 முறை அரையிறுதி போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளன. இந்திய அணி 7 முறை அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது . இந்தப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அரையிறுதியில் மோதும் இவ்விரு அணிகளுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இந்திய அணியை கோலி வழிநடத்துகிறார். நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்ஸன் தலைமையில் விளையாடி வருகிறது . 2008-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, இந்திய அணி கோலி தலைமையில் களமிறங்கியது. அதேபோல் நியூசிலாந்து அணியை கேன் வில்லியம்ஸன் வழிநடத்தினார். அந்தத் தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப்போட்டியில் விளையாடியது. அந்தப்போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்தத் தொடரில் இந்திய அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதனை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள கோலி ரசிகர்கள் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்த உலகக்கோப்பை இந்தியா கைப்பற்றுமா எனப் பதிவிட்டுள்ளனர். 11 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு பேரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் கேப்டன்களாக சந்திக்கின்றனர். வில்லியம்ஸன் தனது பழைய கணக்கை தீர்ப்பாரா இல்லை கோலி ஆதிக்கம் செலுத்துவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 2008 ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வீரர்களில் தற்போதைய உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில், கோலி மற்றும் ஜடேஜா மட்டுமே உலகக்கோப்பை தொடரில் விளையாடி வருகின்றனர். அதேநேரம், நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்ஸன், ட்ரென்ட் பவுல்ட், டிம் சவுதி ஆகியோர் தற்போதைய அணியில் உள்ளனர்.