Published:Updated:

சமிந்தா வாஸ்... சத்தமில்லா யுத்தங்கள் பல செய்தவன்! அண்டர் ஆர்ம்ஸ் - 12

சமிந்தா வாஸ் ( ஹாசிப் கான் )

ஒரு பெளலர் மிகத்திறமையாகப் பந்துவீசும்போது பல நேரங்களில் அவருக்கு விக்கெட் விழாது. ஆனால், இன்னொருமுனையில் பெளலிங் போடும் பெளலருக்கு விக்கெட் விழும். நல்ல பெளலரின் பந்துகளை அடிக்க முடியாமல் தடுத்தாடிவிட்டு, எதிர்முனையில் அடிக்க ஆசைப்படும்போது பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழப்பார்கள்.

சமிந்தா வாஸ்... சத்தமில்லா யுத்தங்கள் பல செய்தவன்! அண்டர் ஆர்ம்ஸ் - 12

ஒரு பெளலர் மிகத்திறமையாகப் பந்துவீசும்போது பல நேரங்களில் அவருக்கு விக்கெட் விழாது. ஆனால், இன்னொருமுனையில் பெளலிங் போடும் பெளலருக்கு விக்கெட் விழும். நல்ல பெளலரின் பந்துகளை அடிக்க முடியாமல் தடுத்தாடிவிட்டு, எதிர்முனையில் அடிக்க ஆசைப்படும்போது பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழப்பார்கள்.

Published:Updated:
சமிந்தா வாஸ் ( ஹாசிப் கான் )
90'களில் யாராலும் வீழ்த்த முடியாத அணியாக இலங்கை எழுந்த நிற்க அந்த அணியின் கூட்டு உழைப்பே காரணம். பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே அட்டகாசமான வீரர்களைக் கொண்டிருந்தது இலங்கை. மெக்ராத், கில்லெஸ்பி, அம்புரோஸ், வால்ஷ், டொனால்ட், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் என வேகப்பந்து வீச்சாளர்கள் பலரும் கோலோச்சிய அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் மிகப்பெரிய ஆயுதமாக இருந்து, இலங்கைக்குப் பல வெற்றிகளைத் தேடித்தந்த மிக முக்கியமான வீரர் சமிந்தா வாஸ்.

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கும் பெளலர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேன் திறமையாக விளையாடி ரன்கள் அடித்தால் அந்த ரன்கள் மொத்தமும் அவருக்குத்தான் கிடைக்கும். ஆனால், ஒரு பெளலருக்கு அப்படியில்லை. ஒரு பெளலர் மிகத்திறமையாகப் பந்துவீசும்போது பல நேரங்களில் அவருக்கு விக்கெட் விழாது. ஆனால், இன்னொரு முனையில் பெளலிங் போடும் பெளலருக்கு விக்கெட் விழும். நல்ல பெளலரின் பந்துகளை அடிக்க முடியாமல் தடுத்தாடிவிட்டு, எதிர்முனையில் அடிக்க ஆசைப்படும்போது பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழப்பார்கள். அப்படி தன் திறமையான பந்துவீச்சால் முத்தையா முரளிதரன் உட்பட இலங்கையின் பல பெளலர்களுக்கு விக்கெட் கொடை வழங்கியவர் சமிந்தா வாஸ்.

Chaminda Vaas
Chaminda Vaas
ICC

அணிக்குள் இவர் இருக்கும் இடமே தெரியாது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கே உரிய மிரட்டல் உடல்மொழி எதுவும் இவரிடம் இருக்காது. இடது கை பந்துவீச்சாளரான சமிந்தாவின் பந்துகள் அவ்வளவு துல்லியமாக இருக்கும். ஒரு ஓவரின் ஆறு பந்துகளையுமே அச்சுபிசகாமல் ஒரே லைன் அண்ட் லென்த்தில் அவரால் வீச முடியும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் வாசிம் அக்ரமிடம்கூட இந்தத் துல்லியம் சில நேரங்களில் மிஸ் ஆகும். ஆனால், வாஸுக்கு எப்போது பிசிறு தட்டாது. இன்ஸ்விங், அவுட்ஸ்விங், இன்கட்டர் என அவ்வளவு வேரியஷேன்கள் காட்டுவார். சச்சின், லாரா, மார்க் வாக், அன்வர், கிறிஸ்டன் என 90'களின் டாப் பேட்ஸ்மேன்கள் அத்தனை பேருமே வாஸின் பந்துவீச்சை அவ்வளவு கவனமாக எதிர்கொள்வார்கள்.

9 முறை!
சச்சினின் விக்கெட்டை அதிகமுறை வீழ்த்தியவர்களில் ஒருவர் சமிந்தா வாஸ். 9 முறை சச்சினின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார்.

இவரது பெளலிங் ஆக்‌ஷனில் எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. சீரான வேகத்தில் ஓடிவந்து துல்லியமாகப் பந்துவீசுவார். இவரின் ஓப்பனிங் ஸ்பெல்களை எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக அடித்தததாக நினைவேயில்லை. 1994-ல் இலங்கை அணிக்குள் வந்தவர் வாஸ். சென்னை எம்ஆர்எஃப் பேஸ் ஃபவுண்டேஷனில் டென்னிஸ் லில்லியின் கீழ் பயிற்சிபெற்றவர். ஆரம்பத்தில் இவரது பெளலிங்கை அடித்து வெளுப்பார்கள். விக்கெட்டுகள் எதுவும் எடுக்காமல் 10 ஓவர்களுக்கு 60 ரன்களுக்கு மேல் கொடுத்தவர்தான் சமிந்தா வாஸ். ஆனால், 95-ல் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிராக நியூஸிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிதான் சமிந்தா வாஸூக்கு அணிக்குள் நிரந்தர இடத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. நேப்பியரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் வாஸ்.

இலங்கையின் 1996 உலகக்கோப்பை வெற்றியில் சமிந்தா வாஸின் பங்கு மிக முக்கியமானது. இந்த உலகக்கோப்பையில் முன்பே சொன்னதுபோல கூட்டுழைப்புதான் இலங்கைக்கு உலகக்கோப்பையை வென்றுதந்தது. வாஸ், முரளிதரன் எனத் தனிப்பட்ட முறையில் எந்த பெளலருமே அதிக விக்கெட்டுகளை எடுக்கவில்லை. ஆனால், ரன்களை அதிகம் கொடுக்காமல் விக்கெட்டுகளை சரியான இடைவெளிகளில் வீழ்த்தினார்கள். அதற்கு சமிந்தா வாஸின் பெளலிங் மிக முக்கியக் காரணம்.

Chaminda Vaas
Chaminda Vaas
ICC

1996 உலகக்கோப்பையில் பெரும்பாலான போட்டிகளில் வாஸின் எக்கானமி ரேட் 3 - 4 ரன்களுக்குள்தான் இருக்கும். அவரது ஸ்பெல்லில் நிச்சயம் ஒரு மெய்டன் ஓவர் இருக்கும். டெல்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சச்சின் 137 ரன்கள் அடித்தார். ஆனால், வாஸின் பந்துகளை அவர் கைவைக்கவே இல்லை. இந்தப் போட்டியில் மட்டும் வாஸின் 3 ஓவர்கள் மெய்டன் ஆகின. அதேப்போல் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியிலும் சித்துவின் விக்கெட்டைத் தூக்கி இந்தியாவின் சரிவைத் தொடங்கி வைத்தார் வாஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முக்கியமான விக்கெட்டான மார்க் வாகின் விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ரன்குவிப்பை அப்படியே தடுத்துநிறுத்தினார்.

1999 உலகக்கோப்பையில் பயங்கர சொதப்பல் ஆட்டம் ஆடியது இலங்கை. அப்போதும் இலங்கைக்கு ஒரே ஆறுதல் வாஸின் பெளலிங்தான். 2001-ல் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வாஸ் எடுத்த 8 விக்கெட்டுகள்தான் இன்றுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனை. வெறும் 19 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார் சமிந்தா வாஸ். அன்றையப் போட்டியில் மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளையும் வாஸே வீழ்த்தியிருப்பார். ஆனால், வாஸுக்கு எதிர்முனையில் பந்துவீசிய முத்தையா முரளிதரன் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்துவிட 10 விக்கெட் சாதனை மிஸ் ஆனது. இந்தப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டும் எடுத்தார் வாஸ்.
ஹாட்ரிக்கில் சாதனை!
2003 உலகக்கோப்பை வாஸின் கரியரில் மிக முக்கியமானது. வங்கதேசத்துக்கு எதிரானப்போட்டியில் முதல் ஓவரின் முதல் மூன்று பந்துகளிலுமே மூன்று விக்கெட்டுகள் எடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையையும் இதுவரையிலும் வேறு யாராலும் நிகழ்த்த முடியவில்லை.

இந்த முதல் ஓவரின் ஐந்தாவது பந்திலேயே இன்னொரு விக்கெட்டையும் எடுத்து முதல் ஓவரை 5 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என முடித்தார் வாஸ். இந்தப் போட்டியில் மட்டும் 6 விக்கெட்டுகள் வாஸுக்கு கிடைத்தது. 2003 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை சென்றது இலங்கை. அந்த உலகக் கோப்பையில் அதிகபட்ச விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வாஸ்தான். 10 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் வாஸ். 2007 உலகக்கோப்பையில் இலங்கை இறுதிப்போட்டியில் விளையாடி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த உலகக் கோப்பையில் வாஸின் அதே 23 விக்கெட்டுகளை முரளிதரன் எடுத்துவிட்டாலும் வாஸும் 13 விக்கெட்டுகள் எடுத்தார். எக்கானமி ரேட்டும் மிகச்சிறப்பு.

இலங்கையின் உலகக்கோப்பை ஸ்பெஷலிஸ்ட்டான சமிந்தா வாஸை ஓய்வுபெற்ற பிறகும், 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு அணிக்குள் அழைத்துவந்தது இலங்கை நிர்வாகம். ஆனால், வாஸ் அந்தப் போட்டியின் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடியிருக்கிறார் சமிந்தா வாஸ். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். அதேப்போல் 2005-ல் சென்னையில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியும் வாஸின் கரியரில் முக்கியமானது.

கிரேக் சேப்பல் இந்தியாவின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று, கங்குலி கேப்டன்ஸியில் இருந்து வெளியேற்றப்பட்டு, ராகுல் டிராவிட் இந்தியாவின் கேப்டனாகப் பொறுப்பேற்று விளையாடிய முதல் போட்டி இது. மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 11 ஓவர்கள் மெய்டன் வீசினார் சமிந்தா வாஸ். நான்காவது நாளின் கடைசி ஓவரை மெய்டனாக வீசிவிட்டு ஐந்தாவது நாளைத் தொடங்கிய சமிந்தா வாஸ் தொடர்ந்து 10 ஓவர்கள் மெய்டனாக வீசினார். டிராவிட், சச்சின், லட்சுமணன் என மூவராலுமே வாஸின் பந்துகளை அடிக்கமுடியவில்லை. அன்று மொத்தமாக 21 ஓவர்கள் வீசி அதில் 14 மெய்டன் ஓவர்கள் போட்டு, கம்பீர், ஷேவாக், டிராவிட், கும்ப்ளே என நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் வாஸ்.

Chaminda Vaas
Chaminda Vaas
ICC

1994-ல் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான சமிந்தா வாஸ் தொடர்ந்து சிறப்பாகப் பந்து வீசியும் அவரால் ஒரே போட்டியில் 5 விக்கெட்கள் எடுக்கமுடியவில்லை. ஆறு ஆண்டுகள் கழித்துத்தான் அதுவும் இந்தியாவுக்கு எதிராகத்தான் 5 விக்கெட் ஹால் எடுத்தார் சமிந்தா. ஷார்ஜாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ் சிங், வினோத் காம்ப்ளி என டாப் 4 பேட்ஸ்மேன்களை வீழ்த்திய வாஸ், கடைசியாக ஜாகிர் கானின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 14 ரன்களை மட்டுமே கொடுத்து வாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியப் போட்டி அது. இந்தியா அன்று 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

திடீர் திடீரென பேட்டிங்கிலும் கலக்கக்கூடியவர் சமிந்தா வாஸ். வங்கதேசத்துக்கு எதிராக 2007-ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சதமும் அடித்திருக்கிறார்.

டெஸ்ட்டில் 355 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 400 விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார். சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்த அளவுக்கு விக்கெட்டுகள் எடுப்பது என்பது மிகப்பெரிய சாதனை. ஆசிய பிட்ச்களில் சத்தம் இல்லாமல் பல யுத்தங்கள் புரிந்த சமிந்தா வாஸ் எக்காலத்திலும் கொண்டாடப்பட வேண்டியவர்.