நடப்பு ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே அணியின் செல்லப் பிள்ளையாகவே மாற்றியிருக்கிறார் மதிஷா பதிரனா.
தோனி உள்பட பல முன்னணி வீரர்களும் ரசிகர்களும் பதிரனாவைப் பாராட்டி வருகின்றனர். பதிரனாவுக்கு மலிங்காவின் பவுலிங் ஸ்டைல் இருப்பதால் எல்லோரும் ‘குட்டி மலிங்கா’ என்று அழைக்கின்றனர்.

கடந்த 30 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இருந்தது. கடைசி மூன்று பந்தை அடித்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சிக்கந்தர் ராசா அன்றைய ஆட்டத்தில் பதிரனாவை எதிர்கொண்ட அனுபவம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
பதிரனா ஆட்டம் குறித்து பேசிய சிக்கந்தர் ராசா, “பதிரனா ஒரு தரமான திறமைசாலி. மலிங்காவை எதிர்கொள்வது என்பது கடினமான ஒன்றுதான். ஆனால் அன்று பதிரனாவை எதிர்கொள்வது அதைவிட சற்று கடினமாக இருந்தது. ஏனென்றால் மலிங்காவின் கை பக்கவாட்டிலிருந்து வரும். பதிரனாவின் கை இன்னும் கீழ் திசையில் இருந்து வருகிறது. பதிரனா மிகவும் தந்திரமாக விளையாடுகிறார்.

சிஎஸ்கேவுக்கு எதிரான அன்றைய ஆட்டத்தில் 145 கி.மீ வேகத்தில் பந்தை வீசியிருந்தார். அவர் வீசும் பந்தை எதிர்கொண்டு விளையாடுவதே மிக கடினமாக இருந்தது. ஆனால் கடவுளின் புண்ணியத்தால் என்னால் அந்தக் கடைசி மூன்று பந்தை அடிக்க முடிந்தது” என்று கூறியிருக்கிறார்.