Published:Updated:

`கிரிக்கெட் கிட்டை எரித்துவிட்டு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்' - ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா வேதனை!

``இப்படியான சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற விரும்பவில்லை'' என சிக்கந்தர் ராசா உருக்கமாகப் பேசியுள்ளார்.

சிக்கந்தர்  ராசா
சிக்கந்தர் ராசா

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ஐசிசி விதிகளை மீறி செயல்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும். நாங்கள் ஆய்வு செய்யாமல் ஜிம்பாப்வே அணியைத் தொடர்ந்து விளையாட அனுமதிக்க மாட்டோம் என ஐசிசி அறிவித்திருப்பது ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஐசிசி
ஐசிசி

லண்டனில் நேற்று நடந்த ஐசிசி கவுன்சில் கூட்டத்தில், விதிகளை மீறி செயல்பட்ட ஜிம்பாப்வே அணியை இடைநீக்கம் செய்வதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையானது உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

ஐசிசி-யின் ஒரு முடிவு எங்களை அந்நியராக்கிவிட்டது. நிறைய மக்களின் வேலைவாய்ப்பை எடுத்துக்கொண்டது. பல குடும்பங்களைப் பாதித்துள்ளது. பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ளது. இப்படியான சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற விரும்பவில்லை ” என உருக்கமான பதிவை ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் சிக்கந்தர் ராசா பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில ஊடகத்தில் பேசியுள்ள சிக்கந்தர் ராசா, `` ஐசிசி-யின் முடிவை கேள்விப்பட்டதும் இதயமே சுக்குநூறாக உடைந்ததுபோல் இருந்தது. உண்மையாக நாங்கள் இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை இப்படி முடிவுக்கு வரும் என நாங்கள் நினைக்கவில்லை. ஒரு வீரர் அல்ல நாட்டில் உள்ள அத்தனை வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது. நான் நினைப்பதுபோல்தான் மற்ற வீரர்களும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். நாங்கள் இங்கிருந்து எங்கு செல்வது எனத் தெரியவில்லை.

நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், எத்தனை நாள்களுக்கு என்ற தகவல் எங்களுக்கு வந்து சேரவில்லை. இரண்டு வருட தடை என்றால் நிறைய வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்படும். நீங்கள் ஜிம்பாப்வேயில் கிரிக்கெட்டை தடை செய்துவிட்டீர்கள். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் எங்கு செல்வது எனத் தெரியாமல் உள்ளனர். நாங்கள் எங்கள் கிரிக்கெட் உபகரணங்களை எரித்துவிட்டு வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியதுதான். இப்போது என்ன செய்வது என்றே எங்களுக்குத் தெரியவில்லை'' எனப் பேசியுள்ளார்.

ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே

ஐசிசி-யின் இந்தக் கடுமையான நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்துவருகிறது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்காக ஏராளமான தொகையை ஐசிசி வழங்கிவருகிறது. இந்தத் தொகைகள் அனைத்தும் முழுவதுமாக கிரிக்கெட்டுக்குப் பயன்படுத்தவில்லை. அரசாங்கம் அந்தப் பணத்தைச் செலவு செய்துள்ளது. தரமான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கவில்லை என்பதே ஐசிசி-யின் வாதமாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைக்காலத்தடையை அடுத்து ஜிம்பாப்வே அணிக்கு வழங்கி வரும் நிதியையும் ஐசிசி நிறுத்தியுள்ளது. ஐசிசி ஆய்வுக்குழு விசாரணைக்குப் பின்னரே ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து தெரியவரும்.