Published:Updated:

`கண்ணாடியைப் பதம் பார்த்த சிக்ஸர்கள்' - குளோபல் டி-20 போட்டியில் மிரட்டிய மாலிக்!

ராம் பிரசாத்

கனடாவில் நடைபெற்றுவரும் குளோபல் டி-20 கிரிக்கெட் தொடரில் சர்வதேச வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

ஷோயப்  மாலிக்
ஷோயப் மாலிக்

கனடாவில் குளோபல் டி-20 கிரிக்கெட் லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. யுவராஜ், கிறிஸ் கெய்ல், அப்ரிடி, சோயப் மாலிக், டும்னி, ரஸல் போன்ற சர்வதேச வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடி வருகிறார். `யுனிவர்சல் பாஸ்’ கெயல் இந்தத் தொடரில் மிரட்டி வருகிறார். வான்கூவர் நைட்ஸ் மற்றும் பிரம்ப்டன் வுல்வ்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் அடித்த சிக்ஸர்கள் ஸ்டேடியத்தின் கண்ணாடிகளைப் பதம் பார்த்தன.

மைதானம்
மைதானம்

பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் 2019 உலகக் கோப்பை தொடரின்போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்துதான் தற்போது குளோபல் டி-20 கிரிக்கெட் தொடரில் வான்கூவர் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனும் அவர்தான்.

வான்கூவர் நைட்ஸ் மற்றும் பிரம்ப்டன் வுல்வ்ஸ் அணிக்கு எதிரான போட்டிகள் 16 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த வான்கூவர் நைட்ஸ் அணியில் சோயப் மாலிக் மற்றும் ரஸலின் அதிரடியால் 16 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியின்போது சோயப் மாலிக் அடித்த இரண்டு சிக்ஸர்கள் மைதானத்தில் இருந்த அறையின் கண்ணாடிகளைப் பதம் பார்த்தன. 13-வது ஓவரில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் சோதியின் பந்துவீச்சில் கவர் திசையில் ஒரு சிக்ஸர் விளாசினார். அந்தப் பந்து நேராக அங்கிருந்த அறையின் கண்ணாடியில் விழுந்தது. இதில் கண்ணாடி உடைத்தது. 16-வது ஓவரில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வகாப் ரியாஸ் பந்துவீச்சை பாய்ன்ட் திசையில் ஒரு சிக்ஸர் விளாச, அங்கிருந்த கண்ணாடிகளும் உடைந்தன.

இந்தப்போட்டியில் சோயப் அடித்த 3 சிக்ஸர்களில் இரண்டு கண்ணாடிகளைப் பதம் பார்த்தன. இந்த இலக்கை விரட்டிய பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணியில் காலின் முன்ரோவை தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. அந்த அணி 103 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.