Published:Updated:

Shane Warne: `மரபுகளில் திளைத்து மரபுகளை மீறிய வீரன்!' - நினைவுகளில் வாழும் வார்னே!

ஷேன் வார்னே

ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடாமல் தடையிலிருந்தாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 166 விக்கெட்டுகளை வீழ்த்த அவரால் முடியும். அதுதான்‌ வார்னே!

Published:Updated:

Shane Warne: `மரபுகளில் திளைத்து மரபுகளை மீறிய வீரன்!' - நினைவுகளில் வாழும் வார்னே!

ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடாமல் தடையிலிருந்தாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 166 விக்கெட்டுகளை வீழ்த்த அவரால் முடியும். அதுதான்‌ வார்னே!

ஷேன் வார்னே

சுழலுலக ஜாம்பவான் ஷேன் வார்னே இந்த மண்ணை விட்டு பிரிந்து இன்றுடன் ஓராண்டு கழிந்து விட்டது. பல பேட்டர்களின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வார்னே கடந்த ஆண்டு இதே நாளில் தாய்லாந்தில் இதய கோளாறு காரணமாக காலமானார். அந்த காலத்து ரேடியோ ரசிகர்கள் முதல் இந்தக் காலத்து ஐபிஎல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் வார்னேவே தெரியும்‌. அவரின் சாதனைகள் என கூகுளில் தட்டினால் அலமாரியைத் திறந்ததும் மடித்து வைக்கப்படாத துணிகள் கொட்டுவது போல் பல விஷயங்கள் கொட்டும்.

Warne
Warne
Cricket Australia
லெக்ஸ்டம்புக்கு வெளியே பிச் ஆன பந்து பேட்டிங் பிடிப்பவரின் கால்களுக்கு பின்னாக சென்று ஸ்டம்பில் அடிக்கும் வீடியோக்கள் எல்லாம் இக்கால இளம் தலைமுறைகள் மத்தியிலும் அதிகம் பரிச்சயம்‌தான். ஆனால் வார்னே வெறும்‌ லெக் ஸ்பின்னுக்கான அடையாளம் மட்டும்‌ இல்லை.

வார்னே‌, வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சொற்றொடரில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். வாழ்க்கைக்காகவும் அதன் மகிழ்ச்சிக்காகவும் எதையும் எப்போதும் தியாகம் செய்வதில்லை என்ற கோட்பாடு வார்னே உடையது. கேட்பதற்கு மிகவும் எளிதாக இருந்தாலும் இதை பின்பற்றுவது மிக மிகக் கடினம். இந்தியாவின் பிரித்வி ஷாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதோ உட்கொள்ளக் கூடாத மருந்து பொருள் ஒன்றை எடுத்துக் கொண்டதாக பல ஆண்டுகள் அணியிலிருந்து தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறார் அவர். ஆனால் வார்னேவின் முக்கால்வாசி புகைப்படங்களில் அவர் கைகளில் பீர் இருக்கும். அவரின் கடைசி ஆட்டங்களில் எல்லாம் குட்டி தொப்பையுடன்தான் பந்து வீசினார். ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடை பெற்றவர். பல பெண்களுடன் தொடர்பிலிருந்து அத்தனையும் பத்திரிகைகளில் கசிந்தன.

ஷேன் வார்னே
ஷேன் வார்னே

இந்தக் காலத்தில் இப்படி ஒரு கிரிக்கெட் வீரர் இருந்தால் அவரை எந்த ஒரு அணியும் சேர்த்துக் கொள்ளுமா? இங்கிலாந்து அதிரடி வீரர் அலெக்ஸ் ஹேல்சை இங்கிலாந்து நிர்வாகம் எத்தனை ஆண்டுகள் வனவாசத்தில் வைத்திருந்தது என்பதை இந்நேரம் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இதுதான் தற்கால கிரிக்கெட்.‌ பேட்டிங், பௌலிங் என்று எதில் வித்தைக்காரனாக இருந்தாலும் இந்த உலகம் கட்டி வைத்திருக்கும் ஒழுக்கம் என்ற வரையறைக்குள் வராத வீரரை கிரிக்கெட் தற்போது ஏற்றுக் கொள்ளாது. ஆனால் வார்னே எப்படி இத்தனை ஆண்டு காலம் விளையாடினார்? எப்படி இத்தனை பேட்டிங் வீரர்களின் தூக்கத்தைக் கலைத்துப் போட்டார்? ஒருவேளை அணியில் இருக்கும் அத்தனை பேரும் வார்னேவுக்கு நல்ல பழக்கமா என்றால், கீப்பர் பயிற்சியாளர்‌ என்று‌ பலரிடம் வார்னேவுக்கு வாய்க்கால் தகறாறுகளே இருந்தன.

இப்படி ஒரு வாழ்க்கை முறை இருந்தும் கிரிக்கெட்டில் வார்னே சாதித்து காட்டியதற்கு முக்கிய காரணம் அவரின் தன்னம்பிக்கை. தற்கால டி20 ஆட்கள் போல வார்னேவின் பந்துவீச்சில் அத்தனை வேரியேஷங்கள் எல்லாம் இருக்காது. ரவி பிஷ்னோய் இரண்டு டி20 போட்டிகளில் வீசும் கூக்ளியை தான் வார்னே தனது மொத்த கிரிக்கெட் வாழ்க்கையிலேயே வீசி இருப்பார். பாரம்பரியமிக்க லெக் ஸ்பின் மற்றும் 'flipper' வகை பந்துவீச்சு‌‌தான் அவரின் ஆயுதங்கள். சச்சின் போன்ற வீரர்கள் இறங்கி வந்து அவரது தலைக்கு மேல் சிக்சர்களை பறக்க விட்டாலும் "அடுத்த பந்தில் நீ சிக்குவ பாரு" என்ற விதத்தில் தான் வார்னேவின் எண்ணங்கள் இருக்கும். பந்து வீசும் திசையை உடனே மாற்றுவது, வேறு மாதிரியான பந்துகளை முயற்சி செய்வது எல்லாம் வார்னேவுக்கு அறவே ஆகாது. தனக்கு எது வரும் என்பதைவிட தனக்கு எது வராது என்பதை தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர் வார்னே.

ஷேன் வார்னே
ஷேன் வார்னே

எத்தனையோ வீரர்கள் இது போன்ற வாழ்க்கை முறையில் இருந்தாலும் அவர்களால் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாமல் போயிருக்கிறது. இங்குதான் வார்னே வேறுபடுகிறார். அவரது சொந்த வாழ்க்கை, பழக்கங்கள், அதிலிருக்கும் பிரச்னைகள் எந்த விதத்திலும் தனது கிரிக்கெட்டை பாதிக்காமல் கடைசி வரை பார்த்துக் கொண்டார். ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடாமல் தடையிலிருந்தாலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 166 விக்கெட்டுகளை வீழ்த்த அவரால் முடியும். அதுதான்‌ வார்னே!

கிரிக்கெட்டுக்காக வாழ்க்கையையும் சரி வாழ்க்கைக்காக கிரிக்கெட்டையும் சரி...எதையுமே விட்டுக் கொடுக்காதவர். தனது 51வது வயதில் பிரபல நடிகை மார்கெட் ராபியுடன் கிசுகிசுக்கப்படும் அளவுக்கு உல்லாசமான வாழ்க்கை வார்னே உடையது.
ஷேன் வார்னே குழந்தைகளுடன்
ஷேன் வார்னே குழந்தைகளுடன்
abc

அவர் மறைந்து ஓராண்டு கடந்துவிட்டது. ஒவ்வொரு இளம் வீரர்களும் வார்னே தன்னை எந்த அளவு உற்சாகப்படுத்தினார் என்பதை கூறிக் கொண்டே இருக்கிறார்கள். ரஷித் கான், ஸ்காட் போலண்ட், ரேஹன்‌ அஹமத்‌ எல்லாம் குட்டி உதாரணங்கள். 2005 ஆஷஸ் தொடரில் பீட்டர்சன் வார்னேவை அவ்வளவு எளிதாக சமாளித்து ரன்கள் எடுத்தார்.

2007 ஆஷஸ் தொடருக்கு முன்பாக பீட்டர்சன் எழுதிய புத்தகம் ஒன்றில், வார்னேவால் என்னை மற்றவர்களுக்கு செய்வது போல் காலுக்கு பின் பந்து வீசி ஆட்டமிழக்க செய்ய முடியாது என‌ எழுதியிருந்தார். பீட்டர்சன் அப்போது இளம் ரத்தம். வார்னேவோ தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி தொடரில் விளையாட போகிறார். ஆனால் அந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்டில் சொல்லி வைத்தது போல முதல் பந்திலையே அதுவும் கால்களுக்கு பின் வழியாக பீட்டர்சனை அவுட் ஆக்கினார் வார்னே. இதுதான் வார்னே. கடைசிவரை தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் போராடிச் சாதிப்பவர்.

தற்காலத்தில் உலக சாதனை படைத்த வீரர் ஒருவரிடம் மைக் நீட்டப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். எனக்காக என் தந்தை அதைச் செய்தார்‌, என் பயிற்சியாளர் இதைச் செய்தார், நான் இதற்காக இவ்வளவு தியாகங்கள் செய்தேன்... இப்படித்தான் அந்தப் பேட்டிகள் இருக்கும். ஆனால் 700 விக்கெட்டுகள் என்ற மிகப்பெரிய சாதனையை வார்னே படைத்த போது, "எனக்கு ஒரே நேரத்தில் 55 வோட்கா குடித்தது போல இருக்கிறது" என்று கூறினார். தற்கால ஒழுக்க யுகத்தில் இது போன்ற வார்த்தைகளை எல்லாம் உதிர்க்க முடியுமா? இப்படிச் சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும் பின் விளைவுகளை நினைத்து யாரும் கூற மாட்டார்கள். ஆனால் வார்னே கூறுவார். அதுதான் வார்னே!

ஷேன் வார்னே
ஷேன் வார்னே

வார்னேவின்‌ வாழ்க்கை முறை அனைவருக்கும்‌ பிடிக்கும். ஆனால் அதை அனைவராலும் வாழ்ந்துவிட முடியாது. அதை வாழ்வதற்கு தனி தைரியமும்‌ 200 மடங்கு திறமையும்‌ வேண்டும். இரண்டும்‌ ஒருங்கே அமையப்பெற்ற ‌கடைசி வீரர்‌ என்றால் அது வார்னேதான். கடைசி வரை மகிழ்ச்சியாக இருந்தார். கடைசி காலங்களில் கூட தன்னோடு IPL ஆடிய கம்ரான் கான் என்ன ஆனார் என விசாரித்தார்‌. தாய்லாந்தில் மரித்தார் என்பதால் மரிக்கும் போது கூட மகிழ்ச்சியாகவே இருந்திருப்பார்‌. மரித்த பின்னும்‌ ராஜா போல அரசு மரியாதையுடன்‌ அடக்கம் செய்யப்பட்டார்.

மரபுப் பந்துவீச்சான லெக் ஸ்பின் வீசி, மரபுகளுக்கு அப்பாற்பட்டவராகவே இருந்த கடைசி நபர் வார்னேதான்!