Published:Updated:

`3 முறை தற்கொலை சிந்தனை; 24 மணிநேரமும் நண்பர்கள் காவல்!' -முகமது ஷமி சொன்ன சீக்ரெட்

முகமது ஷமி
முகமது ஷமி

நான் ஏதாவது செய்துவிடுவேன் என்று என் குடும்ப உறுப்பினர்கள் கவலைப்பட்டனர். அந்த நேரத்தில் என்னால் கிரிக்கெட்டைப் பற்றி எதுவும் செய்ய முடியவில்லை.

லாக்டெளனால் பிரபலங்கள் வீட்டுக்குள் முடங்கியிருக்கின்றனர். இருப்பினும் தங்கள் ரசிகர்களை வலைதளங்கள் மூலமாக சந்தித்து வருகின்றனர். வீடியோ காலில் யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா, பும்ரா போன்ற கிரிக்கெட் வீரர்கள் பேசி அரட்டை அடித்து வருகின்றனர். சமீபத்தில் யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதேநேரம் ரோஹித் ஷர்மா, பும்ரா பேசும்போது இந்தி தொடர்பான சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் ரோஹித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஷமி ஆகியோர் வலைதளம் மூலம் உரையாடியுள்ளனர்.

ஷமி
ஷமி

அப்போது சில வருடங்கள் முன்பு தன் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையின்போது தனக்கு நேர்ந்த சில கஷ்டமான விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார் ஷமி. அதில், ``அந்தக் காலகட்டத்தில் எனது வாழ்க்கையிலும் தனிப்பட்ட நெருக்கடி ஏற்பட்டது. நீங்கள் அதை நம்பமாட்டீர்கள். அப்போது மூன்று முறை தற்கொலை செய்துகொள்வது குறித்து சிந்தித்தேன். நான் ஏதாவது செய்துவிடுவேன் என்று என் குடும்ப உறுப்பினர்கள் கவலைப்பட்டனர். அந்த நேரத்தில் என்னால் கிரிக்கெட்டைப் பற்றி எதுவும் செய்ய முடியவில்லை.

இளம் பெண்ணுக்கு மதிய வணக்கம்! - மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் முகமது ஷமி

எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது என்று என் குடும்பத்தினர் எனக்குப் புரியவைத்தனர். அதே நேரத்தில் என் சகோதரர் எனக்கு நிறைய ஆதரவளித்தார். எனது 2-3 நண்பர்கள் என்னுடன் 24 மணிநேரமும் தங்கியிருந்தார்கள். அந்தக் கட்டத்திலிருந்து மீள கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும்படி என் பெற்றோர் கேட்டுக்கொண்டார்கள். வேறு எதையும் பற்றி யோசிக்க வேண்டாம் என்றனர். அதன்பிறகே நான் பயிற்சியைத் தொடங்கினேன். டெஹ்ராடூனில் உள்ள ஓர் அகாடமியில் சேர்ந்தேன்" என்று ஷமி கூறினார்.

முகமது ஷமி - பும்ரா
முகமது ஷமி - பும்ரா

முகமது ஷமிக்கும் அவரின் மனைவி ஹசின் ஜாஹாவுக்கும் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் கருத்து மோதல் ஏற்பட்டது. ஷமியின் மீது சூதாட்டப் புகார், வரதட்சணைக் கொடுமை, பிற பெண்களுடன் தொடர்பு எனப் பல்வேறு புகார்களை ஷமியின் மனைவி தெரிவித்தார். அதன் காரணமாக இந்திய அணியில் அவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. குடும்பப் பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பின்னர் விசாரணைக்குப் பிறகு அவர் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

அடுத்த கட்டுரைக்கு