Published:Updated:

ஷமி, பும்ரா ஆடிய அந்த 20 ஓவர்கள் - வரலாற்றுப் பக்கங்களுக்கான சரித்திர நிகழ்வு!

Mohammad Shami & Jasprit Bumrah ( AP )

பும்ராவின் ஸ்டிரெய்ட் டிரவையும், ஷமியின் கவர் டிரைவையும் வர்ணனையாளர்கள் சிலாகித்துக் கொண்டிருந்தனர். ஹர்ஷா போக்ளேவை விட்டிருந்தால் கவிதையே எழுதியிருப்பார்.

ஷமி, பும்ரா ஆடிய அந்த 20 ஓவர்கள் - வரலாற்றுப் பக்கங்களுக்கான சரித்திர நிகழ்வு!

பும்ராவின் ஸ்டிரெய்ட் டிரவையும், ஷமியின் கவர் டிரைவையும் வர்ணனையாளர்கள் சிலாகித்துக் கொண்டிருந்தனர். ஹர்ஷா போக்ளேவை விட்டிருந்தால் கவிதையே எழுதியிருப்பார்.

Published:Updated:
Mohammad Shami & Jasprit Bumrah ( AP )

20 ஆண்டுகளுக்குப் பிறகு பும்ராவும் ஷமியும் எப்படி இருப்பார்கள்? ஏதேனும் IPL அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராய், ஆலோசகராய் இருக்கலாம். இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஏதோவொரு மொழியில் வர்ணனை செய்துகொண்டிருக்கலாம். இல்லை, டெனிஸ் லில்லி, மெக்ராத் போன்றவர்கள் அலங்கரித்த MRF பேஸ் ஃபவுண்டேஷனின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கலாம். எப்படி இருந்தாலும் நிச்சயம் அவர்கள் ஜாம்பவான்களாகக் கொண்டாடப்பட்டுக்கொண்டிருப்பார்கள். பந்துவீச்சில் பல்வேறு சாதனைகளை உடைத்திருப்பார்கள், புதிய மைல்கல்களை உருவாக்கியிருப்பார்கள், உலகின் மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களின் பட்டியலில் டாப் இடங்களைப் பிடித்திருப்பார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அவர்களிடத்தில் 'உங்களின் மறக்க முடியாத தருணம் எது' என்ற கேள்வியைக் கேட்டால், பேட்ஸ்மேன்களை அசைத்துப் பார்த்த ஸ்பெல்களையோ, ஸ்டம்புகளைப் பதம் பார்த்த டெலிவரிகளையோ அவர்கள் சொல்லமாட்டார்கள். தங்கள் பந்துவீச்சால் இந்தியா பெற்ற வெற்றிகளையோ, அவர்கள் வென்ற விருதுகளையோ சொல்லமாட்டார்கள். தாங்கள் எப்போதும் குறிவைக்கும் பேட்டை, ஆயுதமாய் கையில் ஏந்தி, லார்ட்ஸ் எனும் மாபெரும் போர்க்களத்தில் இங்கிலாந்து பௌலர்களையும், ஃபீல்டர்களையும் பந்தாடிய அந்த 20 ஓவர்கள்... நிச்சயம் அதைத்தான் தங்களின் மறக்க முடியாத தருணமாக இருவரும் சொல்வார்கள். ஏன், எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் ஷமி, பும்ரா என்ற இருவரின் பெயரையும் ஒரு சேரக் கேட்கும்போது நமக்கும் அந்த 20 ஓவர்கள்தான் நினைவுக்கு வரும். இங்கிலாந்து ரசிகர்களால்கூட மறக்க முடியாத ஒரு மகத்தான சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் அவர்கள். அது சம்பவம் இல்லை, சரித்திரம்!

Bumrah tested Anderson with frequent bouncers
Bumrah tested Anderson with frequent bouncers
AP

ஐந்தாம் நாளின் முதல் செஷனில் இந்த இரண்டு பௌலர்களும் பேட்டைப் பிடித்து நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பேட் செய்வது இந்தியாவின் முன்னிலையை அதிகரிக்கும், போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் தாண்டி, பற்றியெறிந்துகொண்டிருக்கும் ஈகோ யுத்தத்தில் கடைசியாகச் சிரிக்கப் போவது யார் என்ற கேள்வியும் இருந்தது. முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனுக்கு பும்ரா பவுன்சர்களாக வீசி அவர் சூடாக, இப்போது பும்ராவைப் பதம் பார்க்கக் காத்திருந்தது இங்கிலாந்து.

மார்க் வுட் 150 கிலோமீட்டர் வேகத்தில் புல்லட்டுகளைக் கையிலிருந்தே எரிந்துகொண்டிருக்கிறார். ராகுல், ரோஹித், புஜாரா என இந்தியாவின் டாப் ஆர்டரை, மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களை திணறடித்து வெளியேற்றியிருந்த வுட்டின் பந்துவீச்சை இப்போது இந்தியாவின் இரு டெய்லெண்டர்கள் எதிர்கொள்ளவேண்டும். தலை, மார்பு, கைகள், இடுப்பு என உறுப்புகள் ஒவ்வொன்றும் இலக்காகின்றன. பும்ராவுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மிருகத்தை இங்கிலாந்து வீரர்கள் தட்டியெழுப்ப, அவருக்குள்ளிருக்கும் அந்நியன் அவதாரத்தைக் கண்டது கிரிக்கெட் உலகம். தொடர்ந்து பவுன்சர்கள் பறக்கின்றன. வார்த்தைகள் பாய்கின்றன.

He can bat & he can bite - Bumrah has other faces
He can bat & he can bite - Bumrah has other faces
AP

கிரிக்கெட்டின் மெக்காவில் அந்த ஈகோ யுத்தம் உச்சம் தொடுகிறது. வாக்குவதாத்தில் ஈடுபடுகிறார்கள் வீரர்கள். பால்கனியில் நின்று வசைபாடிக்கொண்டிருக்கிறார் விராட். பவுண்டரி எல்லையில் நின்று அனைத்தையும் அனுபவத்துக்கொண்டிருக்கிறார் ஆண்டர்சன். நடுவர்கள் மார்க் காஃப், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் இருவரும் குத்துச்சண்டை நடுவர்களைப் போலவே மாறியிருந்தார்கள். வீரர்களைப் பிரித்துவிடுவது, எச்சரிக்கைக் கொடுப்பது, நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பது என லார்ட்ஸ் ஒரு பாக்ஸிங் ரிங்காகத்தான் அவர்களுக்குத் தோன்றியிருக்கும். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அந்த உஷ்ணம் குறைந்தது.

அதுவரை வார்த்தைகளால் பேசிய இந்திய பேட்ஸ்மேன்கள் அதன்பிறகு பேட்டால் பேசத் தொடங்குகிறார்கள். மார்க் வுட் ஓவரை வெளுத்துவாங்குவது என்பதில் தீர்க்கமாகிவிட்டார் பும்ரா. அவர் ஆன் சைட் சுற்ற, பந்து ஆஃப் சைடில் பவுண்டரியானது. அதற்கு பதில் சொல்ல எத்தனித்த மார்க் வுட் ஒரு மரண பவுன்சர் வீச, அது பும்ராவின் ஹெல்மட்டைப் பதம் பார்க்கிறது. சலனமில்லாமல் நிற்கிறார் பும்ரா. ஹெல்மெட்டைக் கழட்டவோ தொட்டுப் பார்க்கவோ கூட இல்லை. தன் பந்துவீச்சில் யாரேனும் கேட்ச் டிராப் செய்தால் சிரிப்பாரே, அப்படியொரு புன்னகைதான். ஆனால், கண்களில் அடுத்த பந்தை பறக்கவிடவேண்டுமென்ற வெறி. Concussion Protocol-காக மருத்துவர் வந்து பரிசோதிக்கவேண்டும் என்ற விதிமுறை இருந்ததால், மருத்துவர் வந்தார். இல்லையெனில், பும்ரா அடுத்த நொடியே பவுண்டரி அடிக்கத் தயாராகியிருப்பார்.

இங்கிலாந்தின் கவனம் பும்ராவின் மீதிருக்க, 'என் மேலையும் focus பண்ணுங்கப்பா' என்று அட்டெண்டன்ஸ் போட்டார் ஷமி. ஆண்டர்சன் பந்துவீச்சில் மிட் விக்கெட் திசையை டார்கெட் செய்தவர், மொயீன் அலியின் சுழலில் சூறாவளியாக மாறினார். ஒன்றும் இரண்டுமாக வந்த ரன்கள் இப்போது பவுண்டரிகளால் மளமளவென உயர்ந்தது. ஜோ ரூட் செய்வதறியாது திகைக்க, முதல் செஷன் முடிவில் 77 ரன்களை எடுத்துவிட்டது இந்த பார்ட்னர்ஷிப். டெஸ்ட் அரங்கில் ஷமி தன் இரண்டாவது அரைசதம் அடிக்க, 30 ரன்கள் அடித்திருந்தார் பும்ரா. ஈடன் கார்டன் பெவிலியனுக்குத் திரும்பிய டிராவிட், லட்சுமண் புகைப்படம்போல், லார்ட்ஸ் பெவிலியனுக்குத் திரும்பிய இவர்கள் புகைப்படமும் இந்திய ரசிகர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது.

மார்க் வுட் தன் அசுர வேகத்தாலும் அதிரடி பவுன்சர்களாலும் மிரட்டினார். ஆல்லி ராபின்சன் தன் ஸ்லோயர் பால்களால் விக்கெட் எடுக்கப் பார்த்தார். சாம் கரண் தன் வேரியேஷன்களால் ஏமாற்றினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் தன் கிளாசிக் ஸ்விங்குகளை வீசி பயமுறுத்தினார். மொயீன் அலி தன் விக்கெட் டேக்கிங் சுழலால் ஜாலம் செய்யப் பார்த்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆயுதத்தைக் கையில் எடுத்தும், ஃபீல்ட் செட்டை டிபென்ஸிவாக, அட்டாகிங்காக மாற்றிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. அந்த ஒரு டெய்லெண்டர்களிடமும் எதுவும் பலித்துவிடவில்லை. சொந்த மண்ணில் அதீத நம்பிக்கையோடு பந்துவீசிய இங்கிலாந்தை இந்த இரு பௌலர்கள் மனதளவில் அப்போதே விழித்தியிருந்தனர்.

Bumrah survived all these scary deliveries
Bumrah survived all these scary deliveries
AP

உணவு இடைவேளை முடிந்து இரண்டாவது செஷனில் ஒன்பது பந்துகளோடு இந்தியா டிக்ளேர் செய்துகொள்ள, 200 முன்னிலையே எதிர்பார்க்காத அணி, 272 என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது. இந்த இரண்டு பௌலர்கள், டெய்லெண்டர்கள் மட்டும் 89 ரன்கள் சேர்த்து இங்கிலாந்தின் வெற்றிக் கனவை தகர்த்தெறிந்தனர். அதன்பிறகு அசத்தலாகப் பந்துவீசியதெல்லாம் வேறு விஷயம். இந்திய பௌலர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்தக் காரணம், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் மனநிலை. தோல்வியடைந்துவிடக்கூடாது என்ற மனநிலையில்தான் அவர்கள் களம் புகுந்தார்கள். வெற்றியை நோக்கி பயணித்திருக்கவேண்டியவர்களை, அந்த நெகட்டிவ் மைண்ட் செட்டில் பேட்டிங் செய்ய வைத்தது, இந்த இரு வீரர்களின் பேட்டிங்தான். அந்த 20 ஓவர்கள்தான்.

வெறுமனே பேட்டைச் சுழற்றி அவர்கள் இந்த ரன்களை எடுத்துவிடவில்லை. அற்புதமாக டிபெண்ட் செய்தனர். டிபென்ஸிவ் ஃபீல்ட் செட் அப்பைப் பயன்படுத்தி சிங்கிள்கள் எடுத்தனர். பும்ராவின் ஸ்டிரெய்ட் டிரவையும், ஷமியின் கவர் டிரைவையும் வர்ணனையாளர்கள் சிலாகித்துக் கொண்டிருந்தனர். ஹர்ஷா போக்ளேவை விட்டிருந்தால் கவிதையே எழுதியிருப்பார். ரூட் வேறு வழியில்லாமல், ஃபீல்டர்களை உள்ளே அழைத்துவந்து அட்டாக் செய்தபோது, தன் ஸ்பெஷல் ஸ்லாக் ஷாட்களை ஆடி கலங்கடித்தார் ஷமி. மொத்தத்தில் அந்த இருவரும் அமைத்தது ஒரு மாஸ்டர்கிளாஸ் பார்ட்னர்ஷிப்.

It's not Laxman & Dravid walking!
It's not Laxman & Dravid walking!
Alastair Grant

'எல்லாம் சரி, இது மிகச் சிறந்த பெர்ஃபாமன்ஸ்தான். ஆனால், இதையே அவர்களின் சிறந்த செயல்பாடு என்று அவர்கள் எப்படிச் சொல்வார்கள்' என்று கேட்கலாம். இந்தியா வெற்றி பெற்றதற்குக் காரணம் என்பதாலும், அசத்தலாக பேட்டிங் செய்ததாலும் மட்டும் இதைக் கொண்டாடிவிடவில்லை. இந்த இன்னிங்ஸ் அரங்கேறியிருக்கும் தருணமும், இடமும்தான் அதிமுக்கியமானது. உலகக் கோப்பைகளுக்கு இணையாக நமக்கு ஒரு முத்தரப்புத் தொடர் நினைவில் இருப்பதற்குக் காரணம் என்ன, கங்குலி தன் டீ ஷர்டைச் சுழற்றியதுதான். அவர் வான்கடேவிலோ, மெல்போர்னிலோ சுழற்றியிருந்தால்கூட இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது. அது ஒரு டிரேட் மார்க் சம்பவம் ஆகக் காரணம், சட்டை சுழற்றப்பட்ட அந்த பால்கனி!

'என் பெயர் அந்த போர்டில் இடம்பெற்றுவிட்டதா என்று தினமும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்' என்கிறார் கே.எல்.ராகுல். இன்றுவரை தான் லார்ட்ஸில் அடித்த சதத்தை நினைத்துப் பெருமை கொள்கிறார் கங்குலி, இந்தியா '83 உலகக் கோப்பை வென்றதை வர்ணிக்கும்போதுகூட, லார்ட்ஸ் பால்கனியில் கபில்தேவ் கோப்பையைத் தூக்கும் தருணத்தைத்தான் நம் முந்தைய தலைமுறை சிலாகிக்கும்.

கிரிக்கெட்டின் மெக்கா, வாடிகன், காசி என அதை எப்படிவேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதுதான் கிரிக்கெட்டின் உறைவிடம். அங்கு நடக்கும் சின்னச் சின்ன விஷயமும் சரித்திரம்தான். வரலாறுதான். காலாகாலத்துக்கும் நாம் கொண்டாடக்கூடியதுதான். 83'ல் கபிலின் கைகள், 2002-ல் கங்குலியின் சட்டை. இப்போது ஷம்ராவின் பேட்கள்!