Published:Updated:

ஸ்டம்பை எட்டி உதைத்தார், பிடுங்கி எறிந்தார்... ஷகிப் அல் ஹசனுக்கு என்னதான் ஆச்சு?

ஷகிப், shakib

சர்ச்சைகளுக்காக ஓர் உயரிய விருது தரப்பட்டால், அதை பலமுறை வாங்கியதற்காய் சரித்திரம் பேசப்போவது ஷகிப் அல் ஹசனைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

ஸ்டம்பை எட்டி உதைத்தார், பிடுங்கி எறிந்தார்... ஷகிப் அல் ஹசனுக்கு என்னதான் ஆச்சு?

சர்ச்சைகளுக்காக ஓர் உயரிய விருது தரப்பட்டால், அதை பலமுறை வாங்கியதற்காய் சரித்திரம் பேசப்போவது ஷகிப் அல் ஹசனைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

Published:Updated:
ஷகிப், shakib
15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிறப்பாக ஆடிக் கொண்டிருப்பவர், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவர், வங்கதேசக் கிரிக்கெட்டின் முக்கிய அடையாளம் எனப் பல சாதனைகளைக் கொண்டிருந்தாலும், சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை, ஷகிப் அல் ஹசனின் கிரிக்கெட் வாழ்வில்.

2015 பங்களாதேஷ் ப்ரீமியர் லீக்கில், அம்பயருடன் விவாதித்ததற்காக ஒரு போட்டியில் விளையாட தடை பெற்றது, இலங்கையுடனான நிடாஸ் தொடரில், பேட்டிங் செய்யும் போது உடானா வீசிய பந்தை, 'நோ பால்' என அறிவிக்காததற்காக அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்தப் போட்டியில் அவருடைய சம்பளத்தில் 25 சதவிகிதத்தை அபராதமாகக் கட்டியதென பல சர்ச்சைகளில் சிக்கியவர்தான் ஷகிப். அவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்னும்படியான ஒரு புகாரில், 2019-ல், ஷகிப் சிக்கினார். முந்தைய போட்டிகள் சிலவற்றில், கிரிக்கெட் சூதாட்டத்துக்காக தான் அணுகப்பட்டதைப் பற்றி ஐசிசி-கோ, குறைந்தபட்சம் பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டுக்கோ கூட தகவல் தெரிவிக்காததற்காக ஷகிப் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்தது‌. இதன் காரணமாக, ஓராண்டு காலம் தடை விதிக்கப்பட்டு, அதன்பின் பங்களாதேஷ் கிரிக்கெட்டில் இணைந்தார்.

தற்போது, இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் தனது உச்சகட்ட உக்கிரத்தை உலகின் பார்வைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் ஷகிப் அல் ஹசன். இதன் எதிர் விளைவாக, ஷகிப்புக்கு எதிராக பல கண்டனக் குரல்களும் சத்தமாக எழுந்துள்ளன.

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்களாதேஷில் தற்போது, டாக்கா ப்ரிமீயர் லீக்கின் இரண்டாவது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உள்ளூர் டி20 லீக், கடந்த வருடம் கொரோனாவினால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு இறுதியில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையை மனதில் நிறுத்தி, அதற்கான தகுதியான வீரர்களை இறுதி செய்வதற்கான களமாக பங்களாதேஷ் கிரிக்கெட் போர்ட் இந்த சீசனை நடத்துகிறது.

இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஒன்றில் ஷகிப் அல் ஹசன் தலைமையிலான மொகமதீன் ஸ்போர்டிங் கிளப் அணி, அபஹானி லிமிடெட் அணிக்கு எதிராக விளையாடியது. முதலில் விளையாடி, 146 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஷகிப்பின் அணி. ஷகிப் 27 பந்துகளில், 37 ரன்களைச் சேர்த்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அபஹானி அணி களமிறங்கிய போதுதான் எதிர்பாராத காட்சிகள் அரங்கேறின.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போட்டியின் ஐந்தாவது ஓவரில், அபஹானி அணியின் கேப்டனான முஸ்ஃபிகூர் ரஹீமுக்கு கடைசிப் பந்தை, ஷகிப் வீசினார். அப்போது, எல்பிடபிள்யூவுக்காக, அம்பயர், இம்ரான் பர்வீஸிடம் அப்பீல் செய்தார். அதை அவர் நிராகரிக்க, கோபத்தில் ஷகிப், கணநேரம் கூடத் தாமதிக்காது, அம்பயருக்கு அருகில் இருந்த ஸ்டம்பை காலால் எட்டி உதைத்தார். இதோடு நிற்கவில்லை அவரது ஸ்டண்டும் ஆக்ஷன் காட்சிகளும்.

அதற்கடுத்த ஓவரிலேயே, ஒரு பந்து மட்டுமே எஞ்சி இருந்த நிலையில் மழை குறுக்கிட, போட்டியை ஒத்தி வைக்க அம்பயர்கள் முடிவு செய்தனர். மிட் ஆஃப் பொஷிஷனில் இருந்த ஷகிப் விரைந்து வந்து, நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த ஸ்டம்புகளைப் பிடுங்கி எறிந்ததோடு, அம்பயர் ரஹ்மானுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இவ்வளவுக்கும், அந்த ஆறு ஓவருக்குள்ளாகவே, மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்த அபஹானி அணி, 31 ரன்களை மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், போட்டி ஷகிப்பின் அணிக்குச் சாதகமாகவே சென்று கொண்டிருந்தது. அப்படியிருக்க, அவ்வளவு ஆக்ரோஷத்தையும், கோபத்தையும் ஷகிப் அல் ஹசன் ஏன் வெளிப்படுத்தி இருந்தார் என்பதே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஷகிப் அல் ஹசன் சர்ச்சை
ஷகிப் அல் ஹசன் சர்ச்சை

இதோடும் அடங்கவில்லை, ஷகிப்பின் ஆத்திரம். டிரெஸ்ஸிங் ரூமிற்குத் திரும்பி வரும் போதும், அபஹானி லிமிடெட் அணியின் பயிற்சியாளரான காலிட் மகமுத்துடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், ஷகிப். அபஹானியின் பயிற்சியாளர் மட்டுமல்ல, மகமுத், பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டின் டைரக்டர் என்னும் முக்கிய பதவியிலும் இருக்கிறார். ஆனால் இது எதுவுமே, ஷகிப்பிற்கு அச்சமயத்தில் நினைவுக்கு வராத வகையில், கோபம் அவரது கண்களை மொத்தமாய் திரையிட்டு மறைத்துவிட்டது.

மழை நின்ற பின், திரும்ப விளையாடி டக்ஸ்வொர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட, ஒன்பது ஓவர்களில், 76 ரன்கள் என்னும் திருத்தி அமைக்கப்பட்ட ஸ்கோரை எட்ட முடியாமல், அபஹானி லிமிடெட் அணி தோற்று, ஷகிப்பின் அணியே வென்றது. எனினும் போட்டி ஏற்படுத்திய பரபரப்பை விட, ஷகிப் அல் ஹசனின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள்தான் மிகப்பெரிய பேசு பொருளாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே போட்டியில் இருமுறை, கோபத்தில் தன்னை மீறி ஷகிப் நடந்து கொண்டுள்ள வீடியோக்கள், சமூக ஊடகங்களில், வைரலாகயுள்ளன. இதனைத் தொடர்ந்து, பல வருடங்களாக, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் ஒரு வீரராக, இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு வீரர், இவ்வாறு நடந்து கொண்டிருப்பது, கிரிக்கெட் உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

மறுபுறம், ஷகிப்பின் ரசிகர்களும் தங்கள் பங்குக்கு விவாதங்களை முன்வைக்கின்றனர். மழையால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போது, அந்த ஓவரில் ஒரு பந்து மட்டுமே எஞ்சி இருந்ததாகவும், அது வீசப்பட்டிருந்தால், அதன்பின் மழையால் போட்டி கைவிடப்படும் சூழ்நிலை வந்தாலும், மொகமதீன் ஸ்போர்டிங் கிளப் அணி, டக்வொர்த் லூயிஸ்படி, வெற்றி பெறும் என்பதாலேயுமே ஷகிப் அவ்வளவு கோபப்பட்டார் என்றும் கூறி இருந்தனர்.

"அவரவருக்கு அவரவர் தரப்பு நியாயங்கள் இருந்தாலும், விதிமுறைகளின்படி விளையாடுவதுதானே விளையாட்டு? அதை முற்றிலும் மறந்து, முறைதவறி நடந்தது எப்படி நியாயமாகும்?", என்ற கேள்வி எதிர் தரப்பால் எழுப்பப்படுகிறது. அம்பயர் தீர்ப்பே தவறாக இருந்தாலும், மூன்றாவது அம்பயரிடம் அப்பீலுக்குச் செல்லலாமே தவிர, வார்த்தைப் போரில் ஈடுபடுவதும், முறையற்று நடப்பதும், விளையாட்டிற்கான மாண்பையே குலைக்கும் செயல் என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக இருக்கிறது.

ஷகிப் அல் ஹசன் சர்ச்சை
ஷகிப் அல் ஹசன் சர்ச்சை

இந்நிலையில், தனது ஃபேஸ்புக் பக்கம் வாயிலாக, தனது செயலுக்காக, வெளிப்படையாகவே, பகிரங்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார் ஷகிப் அல் ஹசன். "என்னுடைய பொறுமையை இழந்து, நான் நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என்னைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர், இப்படி நடந்திருக்கக் கூடாது", என்று தனது செயலுக்காக அவர் மன்னிப்புக் கோரியிருந்தார்.

டாக்கா கிரிக்கெட் அமைப்பின் முக்கிய அதிகாரியான, காஸி இனாம் அஹ்மத், இதைப்பற்றி, "உலகக் கிரிக்கெட்டில் உள்ள விதிகள்தான், இங்கே உள்ளூர் கிரிக்கெட்டிலும் கடைபிடிக்கப்படுகின்றன. மேட்ச் ஜெஃப்ரி மற்றும் அம்பயர்கள் தரப்போகும் இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். அதன் அடிப்படையில், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்", என்று கூறியிருக்கிறார்.

இதிலிருந்து, ஷகிப் இன்னொரு ஒழுங்கு நடவடிக்கையைச் சந்திக்க இருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது.

அதே நேரத்தில், "என் கணவரை வில்லன் போலச் சித்திரிக்க முயற்சி செய்யப்படுகிறது", என ஷகிப்பின் மனைவி உம்மே அஹமத் ஷிஷிர், தனது ஃபேஸ்புக் பக்கத்தின் வாயிலாகக் கூறி இருக்கிறார். மேலும், "இங்கே முக்கிய பிரச்னை பற்றிப் பேசப்படாமல், ஷகிப்பின் கோபமே பெரிதுபடுத்தி, பேசப்படுகிறது, இங்கே பிரதானப் பிரச்னை, ஆன் ஃபீல்ட் அம்பயர்களின், ஒருதலைபட்சமான, கவனக்குறைவான முடிவுகள்தான்" என்று கூறி, தனது கணவரது செயலுக்கு நியாயம் கற்பிக்க முயன்றிருந்தார்.

ஷகிப் அல் ஹசன் சர்ச்சை
ஷகிப் அல் ஹசன் சர்ச்சை

எது எப்படி இருப்பினும், ஆன் ஃபீல்டைப் பொறுத்தவரை, வீரர்களுடைய விளையாட்டுத் திறனோடு சேர்த்து, அவர்களுடைய, மற்ற செயல்களும் உற்று நோக்கப்படும், விவாதிக்கப்படும், அது சில பின்விளைவுகளைக் கூட விளைவிக்கும் என்பது எழுதப்படாத விதிதானே?! ஏற்கெனவே, பலமுறை, அபராதம், போட்டிகளில் விளையாட மாதக்கணக்கில் தடை உள்ளிட்டவற்றை எதிர் கொண்டிருந்தாலும், அதிலிருந்து பாடம் கற்று, தன் தவற்றைத் திருத்திக் கொள்ளாது, அதே தவற்றை மீண்டும் மீண்டும் செய்து, தனது கிரிக்கெட் வாழ்க்கையையே, பிரச்னைக்கு உட்படுத்திக் கொண்டே உள்ளார் ஷகிப் அல் ஹசன்.

இம்முறை தலை தப்பினாலும், எதிர் காலத்தில் வரும் போட்டிகளிலேனும் இதனை நினைவில் கொண்டு ஷகிப் ஆட வேண்டும். அப்படி இல்லாமல் போய், கொதிநிலையை எட்டும் நிலை ஏற்படின், விளைவுகள் இன்னும் மோசமானதாக இருக்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism