Published:Updated:

சிக்ஸர் ஷெஃபாலி: பெண்கள் கிரிக்கெட்டின் வரலாற்றையே மாற்றி எழுதும் டீனேஜ் புயல்!

முதல் போட்டி என்கிற எந்தவிதமான பயமும் தயக்கமும் இல்லாமல் ஷேவாக் போல அடித்து நொறுக்கினார். பௌலர்களின் தலைக்கு மேல் பவுண்டரிகளை அடித்து நொறுக்கினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மொத்த கிரிக்கெட் உலகமும் 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' இறுதிப்போட்டியை எதிர்பார்த்து காத்திருக்க, மழை ஆடிய ஆட்டத்தில் அத்தனை பேரும் அப்செட். ஏமாற்றத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் அதே இங்கிலாந்தில் வைத்து சம்பவம் செய்து கொண்டிருக்கிறார் இந்திய வீராங்கனை ஷெஃபாலி வர்மா.

எம்.எஸ்.தோனி படத்தில் பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் தோனி வெளுத்து வாங்க, ஒரு சிறுவன் பள்ளிக்கு ஓடி வந்து 'மஹி கலக்குறான்... மஹி கலக்குறான்' எனச் செய்தியை பரப்ப, மாணவர்கள், ஆசிரியர்கள் அத்தனை பேரும் தோனியின் ஆட்டத்தைக் காண மைதானத்தில் ஆஜராகிவிடுவார்கள். இதேபோன்றதொரு நிலைதான் நேற்று சமூகவலைதளங்களிலும் இருந்தது. கிரிக்கெட் விரும்பிகள் அத்தனை பேரும் அடைமழையில் இந்தியா vs நியூசிலாந்து போட்டியை எதிர்பார்த்து காத்திருக்க, திடீரென 'ஷெஃபாலின்னு ஒரு சின்ன பொண்ணு ஷேவாக் மாதிரி இங்கிலாந்து பௌலர்களை அடிச்சு நொறுக்குறாளாம்' எனச் செய்தி பரவ மொத்த கூட்டமும் இந்தியா-நியூசிலாந்து போட்டியை மறந்து பெண்கள் கிரிக்கெட் பக்கம் ஃபோகஸை திருப்பினர்.

ஷெஃபாலி வர்மா
ஷெஃபாலி வர்மா

2014-க்குப் பிறகு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து இந்திய பெண்கள் அணி மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்பியுள்ளது. முதல் போட்டியே இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் வைத்தே நடத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் போட்டிதான் இப்போது இங்கிலாந்தின் பிரிஸ்டோலில் நடைபெற்று வருகிறது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 396 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக 396 ஐ கடந்து லீட் எடுப்பதெல்லாம் சாத்தியமே இல்லை என்கிற மனநிலையே இருந்தது. ஆனால், ஓப்பனர்களாக இறங்கிய ஸ்மிருதி மந்தனாவும் ஷெஃபாலி வர்மாவும் ஆடிய ஆட்டம் இங்கிலாந்தையே கொஞ்சம் பயமுறுத்திவிட்டது. ஸ்மிருதி மந்தனா தன்னுடைய வழக்கமான க்ளாஸ் ஆட்டத்தை ஆட, ரசிகர்களை வெகுவாக ஆச்சர்யப்படுத்தியது ஷெஃபாலி வர்மாதான். காரணம், இதுதான் அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி. ஆனால், அவர் ஆடிய விதத்தை பார்க்கும் போது அப்படி தெரியவே இல்லை.

முதல் போட்டி என்கிற எந்தவிதமான பயமும் தயக்கமும் இல்லாமல் ஷேவாக் போல அடித்து நொறுக்கினார். கேட் க்ராஸ், பிரன்ட், நடாலி ஸ்கீவர், ஸ்ரப்சோல் என இங்கிலாந்தின் பௌலர்கள் எல்லாருமே நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள். ஆனால், அதையெல்லாம் ஷெஃபாலி ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பௌலர்களின் தலைக்கு மேல் பவுண்டரிகளை அடித்து நொறுக்கினார்.

ஷெஃபாலியை ஆரம்பத்திலிருந்து பார்த்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும். அவர் ஒரு பயங்கரமான ஹார்ட் ஹிட்டர். எல்லா பந்துகளையும் ஏரியலாக ஸ்லாக் செய்து பவுண்டரியை க்ளியர் செய்ய வேண்டும் என்றே நினைப்பார். இதுதான் அவருடைய அடையாளமாகவும் இருந்தது. டி20 போட்டிகளில் பவர்ப்ளேவுக்குள் இந்திய அணி அதிக ரன்களை எடுப்பதற்கும் ஷெஃபாலியின் இந்த அணுகுமுறைதான் காரணமாக இருந்தது. கடந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறுவதற்கும் ஷெஃபாலியின் இந்த அதிரடியான ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது.

ஷெஃபாலி வர்மா
ஷெஃபாலி வர்மா
Zac Goodwin | AP

ஏறக்குறைய ஒரு டி20-க்கான பேட்டர் என்கிற முத்திரை ஷெஃபாலியின் மீது விழுந்திருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் அதையும் முறியடித்து காண்பித்தார் ஷெஃபாலி. தன்னால் ஸ்லாக் மட்டுமல்ல, க்ளாஸான ஷாட்களையும் கூட ஆட முடியும் என்பதை நிரூபித்தார். ஸ்பின்னர்களின் பந்துகளை பாயின்ட்டுக்கும், கல்லிக்கும் இடையில் நிறைய கட் ஷாட்களை ஆடி பவுண்டரி அடித்தார். ராகுல் ட்ராவிட்டின் சாயலும் தாக்கமும் இந்த ஷாட்டில் இருந்ததை உணர முடிந்தது. வெறுமென ஹார்ட் ஹிட்டிங்கை மட்டுமே நம்பியிருக்கும் பேட்டர்களால் இந்த ஷாட்டை சரியாக டைம் செய்யவே முடியாது. ஆனால், ஷெஃபாலி இந்த ஷாட்டை முயன்ற போதெல்லாம் துல்லியமாக டைமிங் செய்தார். இதன்மூலம், தன்னை ஒரு மூன்று ஃபார்மேட்களுக்குமான ப்ளேயர் என்பதை நிரூபித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்மிருதி மந்தனாவும் ஷெஃபாலியும் முதல் இன்னிங்ஸில் 167 ரன்களுக்கு கூட்டணி போட்டனர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷெஃபாலி சதமடிப்பார் என நினைக்கையில் 96 ரன்களில் கேட் க்ராஸ் பந்துவீச்சில் பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் ஆனார். ஷெஃபாலியால் 96 ரன்களிலிருந்து உருட்டி உருட்டி பாதுகாப்பாக சதத்தை கடந்திருக்க முடியும். ஆனால், அது ஷெஃபாலியின் ஸ்டைல் கிடையாது. பயமறியா அஞ்சா நெஞ்சம்தான் அவரின் அடையாளம்.

இந்த 96 ரன் இன்னிங்ஸே ஷெஃபாலியை உச்சத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அத்தனை பேரும் ஷெஃபாலியை கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். பாராட்டுக்களை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் மிஷன் இன்னும் முடியவில்லை என இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயாராகினார் ஷெஃபாலி.
ஷெஃபாலி வர்மா
ஷெஃபாலி வர்மா
Zac Goodwin | AP

முதல் இன்னிங்ஸ்களில் ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி கூட்டணியே 167 ரன்களை எடுத்திருந்த போதும் இந்திய அணி 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஃபாலோ ஆன் ஆனது. 165 ரன்கள் பின்னடைவு. இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றிக்கு தூபம் போட, முடிந்தால் என்னை வீழ்த்தி அணியை ஆல் அவுட் ஆக்குங்கள் என்கிற தீர்க்கத்தோடு ஷெஃபாலி க்ரீஸுக்குள் வந்தார். முதல் இன்னிங்ஸில் 152 பந்துகளில் 96 ரன்கள் எடுத்திருந்தார் ஷெஃபாலி. இந்த முறை அப்படியெல்லாம் ஆடினால் வேலைக்கு ஆகாது என்பதால் ஒரு டி20 போல கற்பனை செய்து கொண்டு முரட்டுத்தனமாக அட்டாக் செய்தார். பிரன்ட் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு ஃப்ளிக் மூலம் பவுண்டரி அடித்த ஷெஃபாலி தொடர்ந்து பிரன்ட்டை அட்டாக் செய்து கொண்டே இருந்தார். முதல் இன்னிங்ஸ் போல் அதிகமாக ஸ்லாக் ஷாட்கள் ஆடாமல், கொஞ்சம் க்ரவுண்டடாகவே ஆடினார் ஷெஃபாலி. முதல் இன்னிங்ஸில் கட் ஷாட் என்றால் இந்த முறை கவர் டிரைவ். கேத்ரின் பிரன்ட், ஷரப்சோல் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் 4 பவுண்டரிகளை அடித்தார். இதில் செம க்ளாஸான மூன்று கவர் டிரைவ்களை அடித்திருந்தார்.

WTC இறுதிச்சுற்று: கோலியா வில்லியம்சனா... யாருக்கு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை?

கேத்ரின் பிரன்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான காலகட்டத்தில் ஷெஃபாலி பிறந்திருப்பாரா என்பதே சந்தேகம்தான். ஷெஃபாலி 68 பந்துகளில் 55 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இன்றைய நாளில் ஷெஃபாலி தொடர்ந்து ஆடி அதிரடியாக சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷெஃபாலி வர்மா
ஷெஃபாலி வர்மா
Zac Goodwin | AP

ஹரியானாவில் கபில்தேவின் ஊரில் பிறந்தவர்தான் ஷெஃபாலி வர்மா. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஆண்களுக்கு மட்டுமே பயிற்சியளிக்கப்படும் அகாடமியில் பல சிரமங்களுக்கிடையே கிரிக்கெட் பயின்று முட்டி மோதி இந்திய அணிக்கு 15 வயதிலேயே அறிமுகமானார்.

பெண்கள் கிரிக்கெட் வரவேற்பு இல்லாமல் இருக்க அதன் சுவராசியமற்ற தன்மையும் ஒரு காரணம். அதை ஷெஃபாலி வர்மா இப்போது உடைத்து வருகிறார். கோலிக்காகவும் வில்லியம்சனுக்காகவும் காத்திருந்த ஒரு கூட்டத்தை ஒரே இன்னிங்ஸ் மூலம் அப்படியே பெண்கள் கிரிக்கெட் பக்கம் அவரால் திருப்ப முடிகிறது. இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கான ஒரு வெளியை ஷெஃபாலி உருவாக்கிவிடுவார் என்கிற நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு